Monday, July 17, 2023

கல்வி – இலக்கும் இலக்கணமும் - உரையாடல் - 5 / சிவ.கதிரவன்

                                     கல்வி – இலக்கும் இலக்கணமும்

www.swasthammadurai.com


மற்ற கல்வி முறைகள விட இந்திய கல்வி முறையில், காந்தியத்தின் கல்வி முறையும் காந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் காந்தியை ஒற்றியும் மறுத்தும் பேசியவர்கள் சற்று அகவுணர்வை தொட்டு பேசுகிற கல்வி முறையை உருவாக்கினார்கள். இது மிக முக்கியமான  கல்வியில் இந்திய சூழலில் ஏற்பட்ட மாற்றம்.

என் அகவுணர்வு, நான் தருவதை பெற்றுக் கொள்ள வேண்டும். நான் உன்னை எதிர்க்க மாட்டேன். உன்னிடம் சண்டை போட மாட்டேன். உன் உணர்வு தாக்கப்படும் என்பது எனக்கு தெரியும். உனக்கும் அக உணர்வு இருக்கிறது என்கிற கணக்கை வைத்துக்கொண்டு என் அகஉணர்வினுடைய பாதுகாப்பையும் என் அகவுணர்வினுடைய மேன்மையையும் இறுகப் பற்றிக் கொண்டு உன் உணர்வின் மீது அதிர்வை தருகிற ஒரு கல்வி முறையை என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று ஒரு வரையறையை காந்திய சமூகம் இந்திய சூழலில் முதல் முதலில் விதைத்தது. இது மிகுந்த முக்கியமான கல்வி வரலாற்றில் திருப்புமுனை.

பின்னாளில் இந்த அகவுணர்வு குறித்த  உரையாடலுக்குரிய மிக முக்கியமான துவக்க புள்ளி காந்திய கல்வி முறை. அகவுணரோடு நாம் பேச வேண்டும் என்று இன்று பேசுகிறோம். ஹோம் ஸ்கூலிங் என்று வரையறுக்கிற போது   ஜான் ஹோல்ட் என்று பேசுகிற போது மரியம் மாண்டிசோரி என்று பேசுகிறபோது இன்ன பிற குழந்தைகளை மையமாக வைத்து உளவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பேசுகிறபோது எல்லா உரையாடலுக்குள்ளும் இருக்கிற மிக முக்கியமான சாராம்சமான செய்திக் குறிப்பு குழந்தைகளின் அகவுணர்வை நாம் பார்க்க வேண்டும். மதிக்க வேண்டும் என்று.

இத்தகையாக அகவுணர்வை பார்க்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று நாம் திட்டமிடுகிற போது இதற்கு துவக்க புள்ளியை கல்விக்குள் மிகப்பெரிய திருப்புமுனையாக மிக சிறிய அளவில் துவக்கி வைத்த கல்வி முறை  காந்தியினுடைய கல்வி பரிந்துரை. ஒரு மனிதனினுடைய அகவுணவில் இருந்து கல்வியை உருவாக்க முடியும். இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அகிம்சை என்கிற தன்மையை அவர் உருவாக்கினாலும் கூட அதற்குள் அக உணர்வு குறித்த ஒரு சிறிய அதிர்வை நாம் தவிர்க்க முடியாமல் பார்க்கத்தான் வேண்டும். இது வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கல்விப் புரட்சி என்று நான் சொல்ல முடியும். வேறு யாரும் இப்படி ஒரு முயற்சியை செய்யவில்லை. அகவுணர்வை தானே நின்று கொள்கிற நிலைப்பாட்டை தானே நிற்க வேண்டும் என்கிற நினைவூட்டலை காந்தி தான் முதன் முதலில் தன் கல்வி கோட்பாடில் மிக தைரியமாக முன்வைத்தார் என்று என்னால் திருத்தமாக சொல்ல முடியும்.

பின்னாளில் இந்தக் கல்வி முறை அப்படியே விரிகிறது. உலகம் முழுவதும் விரிகிறது. காந்தியினுடைய அகிம்சை கோட்பாடுகளை உலகம் முழுவதும் ஏற்கத் துவங்குகிறார்கள்.  காந்தியினுடைய அகிம்சை கோட்பாடை வாழ்வியல் கோட்பாடாக ஏற்கத் துவங்கிய பின் பெரும் போராட்டங்கள் அகிம்சை வழியில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்று நெல்சன் மண்டேலா வரை நாம் ஆய்வுகளை ஆவணங்களை பார்க்க முடிகிறது.

சமூக புரட்சியில், அரசியல் புரட்சியில் மாற்றங்களை பார்க்க விரும்புகிற எவரும் காந்தியை ஏற்று கொள்கிறார்கள் என்று உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள்  காந்தியினுடைய கல்வி முறை என்று வருகிற இப்போது அவர்கள் காணாமல் போகிறார்கள் என்கிற உண்மையையும் பார்க்க முடிகிறது. காந்தியை பற்றி படிக்கிற இன்று போற்றுகிற மிகச் சிறந்த ஆய்வுரைகளை பார்க்கிற போது காந்தியினுடைய 150வது ஆண்டுக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. உலகம் முழுவதும் நிகழ்ந்தது. அஙகு  பேசப்படுகிற பலரும் காந்தியினுடைய அகிம்சையை பல்வேறு பதிவுகளாக வெளியிட்டார்கள். உலகில் மிகப் புரிந்த, மிகப் புனிதமான, மிக உயர்ந்த என்று பல்வேறு  கருத்தாக்கங்களையும் புனிதத் தன்மைகளையும் அலங்கரிக்கிற பேச்சில் காந்தியினுடைய அகிம்சை கோட்பாடுகளை விவாதிக்கப்பட்டன. அவையே சிறந்தவை என்று  முன்வைக்கப்பட்டன. எல்லாமும் சரி தான். காந்தியின் கல்வி குறித்து யாராவது பேசுவார்களா என்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒருவரும் காந்தியின் கல்வி குறித்து பேசவில்லை. ஏனென்றால் காந்தியின் கல்வி துவங்கிய இடம் மனிதனின் அகவுணர்வு என்று எனக்கு தெரிந்தது.

மனிதனின் அகவுணர்வு என்று பேசுகிற ஒரு இடத்தை கல்வி குறித்து திட்டமிட்ட, முன்னோரு திட்டமிட்ட, இன்றும் திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் கணக்கில் வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது.  இவர்கள் திட்டம் வேறு என்று  நான் பார்க்கிறோம். கல்வியை எவ்வாறு மையப்படுத்துகிறார்கள் என்று பார்க்கிறோம். கல்வியை எவ்வாறு வணிகம் ஆக்குகிறார்கள் என்று பார்க்கிறோம். இவற்றையெல்லாம் கடந்து இவற்றிற்குள் ஒரு சிக்கலான முடிச்சை முன்பே போட்டு வைத்த ஒரு சிறு துளி பணியை காந்தி செய்து இருக்கிறார். அவரது காந்தியின் கல்வி முறையின் வழியாக சாத்தியமாகியிருக்கிறது. காந்தியினுடைய எல்லா கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்ட உலக நாடுகள், அமைதியை விரும்புகிற உலக நாடுகள், காந்தியினுடைய கல்வியை நிறுத்தி வைத்திருக்கின்றன என்பது காந்திய கல்வியை சரியாக பார்க்கிறார் என்பதற்குகான அடையாளம்.

இந்த உலகம் முழுக்க இருக்கிற கல்வி விவரங்கள் பேசப்படுகிற போது காந்தியின் கல்வி முறையை அவர்கள் பேசுவதில்லை என்பதற்கு காரணம் காந்தி சுயமரியாதையை ஒரு மனிதனினுடைய அகவுணர்வை தொட்டு இருக்கிற ஒன்றை கல்வியாக மாற்ற முடியுமா என்று முயற்சித்து பார்த்தவர். அந்த வகையில் காந்தியினுடைய கல்வி முறை அடிப்படையில் இருக்கிற எல்லாவற்றையும் தகர்த்து வேறொரு தளத்திற்கு அந்த பாடத்திட்டத்தை உருவாக்கி வைத்தது. அந்த செயல்பாட்டுக் கல்வி முறையை உருவாக்கி வைத்தது. இந்த உருவாக்கம் தான் கல்வியினுடைய உட்சபட்ச வளர்ச்சி.

ஆக, நண்பர்களை கல்வி குறித்து விவரிக்கப்பட்ட எல்லா விவரங்களிலும் வரலாற்று ஆய்வுகளின் வழியாக ஒரு மனிதனின் பதற்றத்தை அறுவடை செய்கிற கல்வி முறை காந்தியில் நிறைவு செய்கிற போது காந்தியில் நிறைவடையும்போது அகவுணர்வைத் தொட்டு அசைக்கிற ஒன்றாக முடிகிறது. நீங்கள் கல்வியை பதற்றத்தில் துவங்குகிறீர்கள். ஒருவேளை நிறைவு செய்ய வேண்டும் என்று இந்த சமூகம் கல்வி குறித்து கருதினால் அது  அகவுணர்வில் நிறைவு செய்ய வேண்டும் என்றுதான் கல்வியை நாம் முடிக்க முடியும். பதற்றத்திற்குள் நிகழ்த்தப்பட்ட அடுத்த நிகழ்வு அடுத்த செயல்பாடுகள் எல்லாமும் அங்கு உளவியலாக வெளிப்படுகிறது. கல்வியின் குழந்தை பருவம் குறித்து வெளிப்படுகிறது. குழந்தைகள் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று வெளிப்படுகிறது. இவை எல்லாமும் கல்விக்குள் நடந்த வரலாற்று காலங்களில் சமமாக நடந்த வேறு ஒரு பகுதி வேலைகள்.

1800 களில் கல்வி எவ்வாறு பார்க்கப்படுகிறது என்று கல்வி குறித்த வரலாறை பார்க்கிற போது, படிக்கிற போது அதற்கு இணையான இன்னொரு பக்கத்தில் கல்வியை எவ்வாறு கற்பித்து கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் குறித்த உளவியல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் கல்வி குறித்து பேசுகிற போது இன்னொரு புறம் கல்வியை கற்பித்தல் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன  என்பதை நாம் இணைத்த்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. இது இரண்டாவது பகுதியாக நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கல்வியை பார்க்கிறபோது கல்விக்குள் இருக்கிற உளவியலை பார்த்து பேசுகிற ஒரு ஆய்வு மனிதனினுடைய பதற்றத்தை நீக்க வேண்டும் என்று செய்யப்பட வேண்டிய முயற்சிகள் மனிதருடைய பதற்றத்தை  நீக்குவதற்கு பதிலாக இந்த கல்வி  முறைக்குள் மனிதனை எவ்வாறு பொருத்துவது என்று ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. நீண்ட குறிப்புகள், நீண்ட ஆவணங்கள், நீண்ட வரலாற்று பதிவுகள் எல்லாவற்றிலும் கல்விக்கு நிகழ்த்தப்பட்ட, கல்விக்குள் நிகழ்த்தப்பட்ட உளவியல் வன்முறைகளாக நான் பார்க்கிறேன்.

ஆய்வு செய்தது உண்மை. கல்வி குறித்தும் குழந்தைகள் குறித்தும் ஆய்வு செய்தது உண்மை. கல்வியாளர்களும் உளவியலாளர்களும் கூடிக்கூடி பேசியது உண்மை. இவையெல்லாமும் எதற்காக இருந்தது என்றால் குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது அன்றி, பார்ப்பதற்காக இல்லாமல் குழந்தைகளை எவ்வாறு கற்க வைப்பது என்று பார்ப்பதாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். பின்னாளில் நான் படிக்க நினைத்த மிக அற்புதமான புத்தகம் ஜான் ஹோல்டின் குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என்கிற புத்தகம். ஜான் ஹோல்டின் குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என்ற புத்தகத்தை பார்க்கிறபோது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் ஒரு கல்விக் கூடத்தில் என்று விரிவாக விவாதித்தவர் ஜான் ஹோல்ட்.

ஜான் ஹோலினுடைய புத்தகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை நான் படித்து என் சிறிய வாசிப்பு எல்லையில் நான் படித்தவரை ஜான் ஹோல்டுக்கு முன்பு கல்வியை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விவாதித்த வரலாற்று குறிப்புகளும் ஆவண குறிப்புகளும் தான் நிரம்பி வழிகின்றன. இதை விடுத்து, இதை மாற்றி குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர். குழந்தைகளிலிருந்து கல்வியை எவ்வாறு பார்ப்பது. குழந்தைகளுக்கு உண்மையிலேயே கல்வி தேவைப்படுகிறதா என்று ஒரு புதிய விவாதத்தை கிளப்பிய, உருவாக்கிய ஒரு மிகப்பெரும் பணியை செய்தவர் ஜான் ஹோல்ட். ஜான் ஹோல்டினுடைய புத்தகம் முதலிலேயே அப்படித்தான் துவங்குகிறது. வலது மூளை, இடது மூளை என்று இந்த நவீன அறிவியல் குழந்தைகளின் மூளையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த காலத்தில் ஜான் ஹோல்டு வலது மூளை, இடது மூளை செயல்பாட்டை முற்றிலுமாக நிராகரிக்கிறார். குழந்தைகளுடைய செயல்பாடு வலது மூளை, இடது மூளை என்று வகுக்கப்படுவதற்கு காரணமே இல்லை என்று முற்றிலுமாக புறக்கணிக்கிறார். புறக்கணிப்பு என்பது ஏதோ கண்டு கொள்ளாமல் இல்லை. ஏதோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதில்லை. முழுக்க அந்த குழந்தையினுடைய அகவுணர்விற்கு இணையான வேறுவேறு கதைகளை, வேறுவேறு சான்றுகளை வேறு வேறு உவமைகளை உள்ளடக்கமாக கொண்டு அந்த புத்தகத்தில் துவங்குகிறபோதே முன்வைக்கிறார் வலது மூளை, இடது மூளை உள்ளிட்ட குழந்தைகள் மீது நடத்தப்படுகிற எல்லா ஆய்வுகளும் குழந்தைகளுக்காக நடத்தப்படுபவை அல்ல. மாறாக கல்வி முறைக்காக நடத்தப்படுகிற ஆய்வுகள் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். மிக முக்கியமான நூல் அது. மிக முக்கியமான ஜான் ஹோல்டின் பதிவு அது. ஜான் ஹோல்ட் செய்த வேலையினுடைய நோக்கத்தினுடைய மிக முக்கியமான மணிமகுடம் என்று நான் பார்க்கிறேன். அவ்வளவு மிக முக்கியமான நூலது, பதிவு அது.

ஏனென்றால் கல்வி குறித்து ஒரு பதற்றம் மனிதனுக்கு நிலவுகிறது அந்தப் பதற்றத்தை நீக்குவது தான் கல்வியினுடைய நோக்கம் என்று பார்ப்பதற்குரிய யாரும் இங்கு இல்லை. எல்லோரும் கல்வி பற்றிய அக்கறைப்படுகிறார்களே ஒழிய, கல்வி எதற்காக இயங்குகிறது என்று அக்கறைப்படுகிறார்கள். கல்வி எப்படி இயங்க வேண்டும் என்று அக்கறைப்படுகிறார்கள். கல்விக்குள் உள்ளாகிற ஒரு கரும்பு சக்கையைப் போல் குழந்தைகள் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அக்கறைப்படுபவர்கள் யாரும் இல்லை என்று எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அவ்வளவு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆக கல்விக்குள் முதன்முதலாக ஒரு அதிர்வை ஏற்படுத்திய காந்தியினுடைய கல்வி முறைக்கு பிறகு அகவுணர்வை பரிசீலிக்க வேண்டும் என்று காந்தியினுடைய கல்வி முறைக்குப் பின்பு அகவுணர்வின் மீது ஏறி நின்று சத்தம் போட்டு கத்திய குரல் ஜான் ஹோல்டின் குரல்.

ஜான் ஹோல்ட் நடந்த எல்லா உளவியலையும் மறுக்கிறார். ஜான் ஹோல்ட்  குழந்தையினுடைய எல்லா குமாரப் பருவ விவகாரங்களையும் புறக்கணிக்கிறார். இளங்குமாரப் பருவ விவகாரங்களை புறந்தள்ளுகிறார். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு குமாரப் பருவம், இளங்குமாரப் பருவம், முன் குமாரப் பருவம், பின் குமார பருவம் என்று இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கிற எல்லா கருத்தாடல்களையும் உடைக்கிற ஒரு ஆவணக் குறிப்பை ஜான் ஹோல்ட் வெளியிடுகிறார். இப்போது ஜான் ஹோல்டை ஹோம் ஸ்கூலிங் என்ற வரையறைக்குள் சுருக்கி பார்க்கிற ஒரு மனோபாவம் சமூகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று வேறொரு ஆபத்தில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உளவியல் ஆய்வுகளை பார்க்கிற போது குழந்தைகள் குறித்த உளவியல் ஆய்வுகளை பார்க்கிற போது முழுக்க முழுக்க செய்யப்பட்ட எல்லா ஆய்வுகளும் எல்லா செயல்பாட்டு ஆய்வுகளும் எல்லா வரலாற்று ஆய்வுகளும் கல்விமுறை இருக்கிறது. யாருக்காக இருக்கிறது என்பதை பற்றி பேசவில்லை. கல்விமுறை எதற்காக இருக்கிறது என்பதை பற்றி பேசவில்லை. கல்விமுறை இருக்கிறது. அதற்குள் குழந்தைகளை எவ்வாறு பொருத்த வேண்டும் என்று பேசுகிறது. இந்த வகையின் வழியாகவே கல்வியை பார்க்க வேண்டிய அவசியத்தில் ஒரு வரலாறு நம்மை நிர்பந்தித்து கொண்டே இருக்கிறது. இப்படித்தான் கல்வி பார்க்கப்பட்டது.

ஆசிரியர்களும் மாணவர்களும் இடையே எப்படி உறவாட வேண்டும் என்ற உரையாடலை உளவியல் ரீதியாக உருவாக்குவது என்ற ஒரு அபத்தம் நிலவியது. ஒரு மனிதனோடு இவ்வாறு உறவாட வேண்டும் என்று உளவியலினுடைய மாமேதைகள் வகுத்திருக்கிறார்கள். உளவியலினுடைய பெரும் பெரும் ஆய்வாளர்கள் வகுத்திருக்கிறார்கள் என்று குறிப்புகளை நாம் பார்க்கிறோம். ஒரு மனிதனோடு பேசுகிற உரையாடலை உளவியல் அடிப்படையிலா பேசுவது என்று ஒரு கேலியான பகுதியை நாம் பார்க்கிறோம். அது முற்றிலும் புறம்பானது, ஆபத்தானது. அப்படி செய்துவிட முடியாது.

இரண்டு மனிதர்கள் உளவியல் குறிப்புகளை வைத்துக்கொண்டு இன்னொரு மனிதரோடு பேசினால் அது எவ்வளவு கேலியாக இருக்கும். என் மனைவியோடு, என் காதலியோடு நான் உளவியல் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசினால் என் காதலில் என்ன உண்மை இருக்கும். என் மாணவனோடு உளவியல் குறிப்போடு நான் பேசினால் என் கற்றலில் என்ன மேன்மை இருக்கும். என் கற்பித்தலில் என்ன நியாயம் இருக்கும். என்ன உண்மை இருக்கும். ஒரு உண்மையை தொலைத்து விடுவதன் வழியாகவே உளவியலின் அடிப்படையில் மாணவர்களை அணுக முடியும். ஒரு உண்மையை கொலை செய்து விடுவதன் வழியாகவே காதலை பேசும்போது உண்மையான காதலை கொலை செய்து விட்டு தான் நான் உளவியல் குறிப்புகளை வைத்துக் கொண்டு என் காதலியோடு பேச முடியும். உளவியல் குறிப்புகள் உண்மையை கொலை செய்து விடும். நீங்கள் பேசுகிற அனுபவத்திலிருந்து, பேசிப் பார்த்த அனுபவத்திலிருந்து ஒற்றை உளவியல் வடிவத்தோடு நீங்கள் உறவாட முடியும். உரையாட முடியும். ஆனால் முன் திட்டமிடப்பட்ட உளவியல் குறிப்புகளை வைத்துக்கொண்டு நீங்கள் காதலிப்பீர்கள் என்றால், நீங்கள் சமைப்பீர்கள் என்றால் நீங்கள் பரிமாறுவீர்கள் என்றால் நிச்சயமாக அதில் அன்பும் உண்மையும் எப்போதும் இருக்காது. இத்தகைய வேலையை கல்விக் கூடத்தில் செய்வதற்கு உளவியல் குறிப்புகளை தயாரித்துக் கொண்டிருந்த ஒரு காலத்தை கல்வி வரலாறு கடந்து வந்திருக்கிறது. இதற்குள் நிறைய நிறைய கல்வியாளர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். அனைவரும் கல்விக்கூடங்களை எவ்வாறு செம்மைப்படுத்துவது. கல்வி கூடத்திற்குள் எவ்வாறு குழந்தைகளை பொருத்துவது என்று உருவாக்கப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்டிருக்கிறது.

 ஒரு கல்வி உளவியலாளர் ஒரு கூற்றை முன்வைக்கிறார், கல்வி சாலைக்குள் கற்பவர், கற்கும் முறைகள், கற்கும் சூழ்நிலைகள் இதுதான் அவர் முன்வைத்த அதிர்வான ஒரு குறிப்பு இது. உளவியல் அடிப்படையில் ஒரு வகுப்பறைக்குள் என்னவெல்லாம் நிகழ்கிறது என்று பார்த்த ஒரு ஆய்வாளரினுடைய ஆய்வு குறிப்பு இது. ஒரு வகுப்பறைக்குள் கற்பவர் இருக்கிறார். அதற்குள் கற்கும் முறைகள் இருக்க வேண்டும். கற்கும் சூழ்நிலை இருக்க வேண்டும். இவை மூன்றும் இருந்தால் அது சிறந்த கல்வியாக மாறிவிடும். இந்த சிறந்த கல்வி பதற்றத்தை உருவாக்குகிற, பதற்றத்திற்கு தீனி போடுகிற, பதற்றத்தை மாறவிடாமல் பார்க்கிற வகுப்பறைக்கு தேவையான ஒன்று. ஆனால் இதற்குள் இருக்கிற கற்பவரை நாம் என்னவாக பார்க்கிறோம். கற்பிப்பவரை என்னவாக பார்க்கிறோம் என்று எந்த விவாதமும் கிடையாது. கற்பவர் இதற்காக கற்க வேண்டும். கற்பிப்பவர் இதற்காக கற்பிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கை தவிர வேறு எதுவும் இல்லாத கல்வி முறையை கல்வியாளர்களும் உளவியல் ஆய்வாளர்களும் உளவியல் மேதாவிகளும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்க முடிகிறது. இப்படியான வரலாற்று வழியில் உளவியல் என்பது கல்விக்கான, உளவியல் என்பது மிகுந்த நகைப்புக்குரியதாக இருக்கிறது.


…தொடர்ந்து பேசுவோம்…


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...