Wednesday, July 12, 2023

மிர்தாதின் புத்தகம் - உரையாடல் 3//படைப்பு – படைப்பாளி - வாசகர் / பகுதி- 3/சிவ.கதிரவன்

                                    படைப்பு – படைப்பாளி - வாசகர்

www.swasthammadurai.com


 படைப்பு என்பது காலம் காட்டுகிற கண்ணாடி. பிரச்சினைகளை பேசுகிற பிரசங்க நிலைப்பாடு என்கிற நிலையில் இருந்து தற்காலிகங்கள் எல்லாவற்றையும் உடைத்து விட்டு நிரந்தரமான இருத்தலை, இருப்பை, இயற்கையை, எப்போதும் பொருந்துகிற பொருத்தப்பாட்டை, எல்லோருக்கும் உள்ளுணர்வை கீறுகிற கீறலை செய்கிற குறிப்பு படைப்பு. இத்தகைய படைப்பாக படைப்புகள் இருக்கின்றனவா என்று பார்க்கிற புத்திசாலித்தனம் நமக்கு தேவைப்படுகிறது. நாம் படிக்கிற இலக்கியங்களுக்குள் இப்படி ஒன்று இருக்கும் என்றால் அது மிக முக்கியமான வேலையை செய்யும். அது வாசிப்பவரை செம்மைப்படுத்தும். வாசிப்பவருக்கு படைப்பு என்பது என்ன என்று தெரிந்திருந்தால் எந்த ஒன்றையும் கொடுத்து அவரிடம் படைப்பு என்று ஏமாற்றி விட முடியாது.

தரமான படைப்பாளிகளை உருவாக்குகிற பொறுப்பு வாசகருக்கு உண்டு என்கிற நியாயம் சரி என்றால் வாசகர்கள் யார் படைப்பாளி? எது படைப்பு? என்று புரிந்து வைத்திருக்கும் வரை இது சாத்தியம். ஒரு வாசகருக்கு, வாசிப்பவருக்கு எது சரியான படைப்பு என்று தெரிந்திருந்தால் போலியான படைப்பை கொண்டு வாசகரை வென்று விட முடியாது. சரியான படைப்பாளி யார் என்று தெரிந்திருந்தால் தவறான ஒருவர் தான் படைப்பாளி என்று வாசகரை வென்று விட முடியாது. ஆக, படைப்பும் படைப்பாளியும் மிகச்சிறந்த வகையில் இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணங்கள் என்ன என்று நாம் புரிந்து கொள்வதன் வழியாக மட்டுமே மிர்தாத் போன்றதொரு மெய் உணர்வை விளக்குகிற புத்தகத்திற்குள் செல்வது நமது பணிவு சார்ந்தது. அது நியாயமானது. அப்படித்தான் செல்ல வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

ஒரு படைப்பை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். படைப்பு என்பது இயற்கையின் ஆழமான பகுதிகளை உங்களுக்கு அறிந்த வார்த்தைகளின் வழியாக உங்களுக்கு அறியாத ஒன்றை அறிமுகம் செய்வது. அது உங்களுக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். உங்களோடு இணைவதாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகளை மெய்ப்பிப்பதாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை இலக்குகளை நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். உங்களை துணுக்குற செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஒன்றாக, இயற்கையான ஒன்றாக, இருத்தலாக ஒன்றாக, உங்கள் மையத்தை தொடுகிற ஒன்றாக ஒரு படைப்பு இருக்க வேண்டும். அப்படியான படைப்பு மிர்தாத்தின் புத்தகம். அப்படியான படைப்பே சிறந்த படைப்பு. இப்படி ஒரு படைப்பை படைக்கிற படைப்பாளி எப்படியானவர் என்பது மிக முக்கியமான அடுத்த பகுதி.

நீங்கள் படைப்பாளியை புரிந்து கொள்வது என்பது படைப்பிற்குரிய அத்தனை முக்கியத்துவத்தையும் உட்கொண்டவராக, ஏற்றுக் கொண்டவராக, பார்க்கிற ஒருவராக, தானே தன்னை கரைத்துக் கொள்கிற ஒருவராக படைப்பாளி நம் முன்னே தெரிய வேண்டும். அல்லது தெரியாமல் இருக்க வேண்டும். படைப்பை வைத்தே தமிழ் இலக்கியங்களில் படைப்பாளிகளை சொல்வதுண்டு. பெரும்பாலும் சங்க இலக்கியங்களில் அந்தப் பாடலை வைத்தே பாடல் எழுதியவரின் பெயரைச் சொல்லுவார்கள். படைப்பை வைத்தே படைப்பாளியை சொல்வார்கள்.  அப்படியான இலக்கிய - மெய்யியல் வரலாறு  தமிழ் பேசுகிற தமிழ் இலக்கிய உலகத்தில் உண்டு. படைப்பு முதன்மையானதாக இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. சிறந்த படைப்புகளே அங்கு இருக்கிற படைப்பாளிகளை அடையாளப்படுத்துகிறது. சிறந்த படைப்பு வழியாகவே படைப்பாளிகள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பெரும் புலவர்கள் தமது பெயரை எழுதி வைக்காமலேயே மறைந்திருக்கிறார்கள். அவர்களின் பாடல் வழியாகவே, அவர்களின் செய்யுள்களின் வழியாகவே அவரது பெயர் செய்யுளின் வழியாகவே அவரது பெயராக பதியப்பட்டு இருக்கிறது. இப்படியான ஒரு இலக்கிய வரலாறு தமிழ் சமூகத்தில் இருக்கிறது. இன்றளவும் இருக்கிறது.

ஆக, படைப்பு என்பது படைப்பாளியை உருவாக்குகிறது. படைப்பாளி படைப்பை உருவாக்குகிறார் என்கிற நிலையில் இருந்து படைப்பு படைப்பாளியை உருவாக்க முடியும் என்கிற நியாயத்தோடு நாம் பார்க்கிற போது சிறந்த படைப்பாளி யார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். சிறந்த படைப்பாளி என்பவர் படைப்பை தன் வழியாக, தான் படைப்பது அல்ல. தன் வழியாக படைப்பது. தன் வழியாக படைத்துக் கொள்பவர் சிறந்த படைப்பாளி.

தன் அறிவையும் தன் அனுபவத்தையும் படைக்கிறது படைப்பாக, எழுத்தாக, இலக்கணமாக, இலக்கியமாக என்று வலம் வருகிறது. எனது படைப்பு இது என்று ஒரு எழுத்தாளர் தம் புத்தகத்தை  அறிமுகப்படுத்துகிறார். அவர் புத்தகம் முழுவதும் வாசிக்கிற போது வேறுவேறு இடங்களில் படித்த, சேகரித்த, செய்திகளை ஒற்றை புத்தகத்திற்குள் சுருக்கி அவரது நடையில் அதை மேம்படுத்தி என்னிடம் அதைக் காட்டி கேட்கிறார். புத்தகத்தை படித்தவுடன் தெரிந்து விட்டது. இந்த புத்தகம் வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட செய்தி என்று. இது படைப்பு அல்ல.  இது அகராதி போன்ற ஒரு சேகரிப்பு நூல். இன்று இருக்கிற பெரும்பாலான புத்தகங்கள் சேகரிப்பு நூலாகவே இருக்கின்றன. சேகரிப்பு நூல்கள் படைப்பு ஆகாது. சேகரிப்பு நூல்களை நீங்கள் படைப்பு என்று கொண்டாடினாலும் கூட படைப்பு ஆகாது.

ஒரு விஞ்ஞானி சூரியனை பற்றி ஒரு உண்மையை கண்டுபிடித்த போது சூரியன் உலகைச் சுற்றுகிறதா? உலகம் சூரியனை சுற்றுகிறதா என்கிற விவாதம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததுபூமியின் நிலையானது மற்ற எல்லாமும்  பூமியை சுற்றி வருகின்றன என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலம். அந்த விஞ்ஞானி இல்லை, சூரியன் மையமாக இருக்கிறது பூமியும் மற்ற சில கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன என்று முதல் வாதத்தை சபையில் ஏற்றினார். அப்போது இருந்த அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் கொந்தளித்தார்கள். கோவம் அடைந்தார்கள். எப்போதும் விஞ்ஞானிகளுக்கு எதிராக, அறிவியலுக்கு எதிராக, புத்திசாலிகளுக்கு எதிராக ஆட்சியாளர்களும் சமகாலத்தில் வாழ்பவர்களும் கோபம் கொள்வதும் எரிச்சலாவதும் இயல்பாகவே இருந்திருக்கிறது. அப்போதும் அது நடந்தது. பூமி மையமாக இருந்து கொண்டு மற்ற எல்லாமும் பூமியை சுற்றுகின்றன என்று உலகம் கருதிக் கொண்டிருந்த வேளையில் ஒரு மனிதன் சூரியன் மையமாக இருக்கிறது. மற்றவை யாவும் அவற்றை சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான கருதுகோள்களை முன்வைத்த போது இந்த உலகம் அவரை குற்றவாளியாக பார்த்தது. சமகாலத்தில் இருந்தவர்கள் அவர் மீது எரிச்சல் கொண்டார்கள். அவரை தண்டனை கூட்டில் நிறுத்தி விசாரிக்கிறபோது அவர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, பூமி எப்படி சுற்றுகிறது என்று விவரித்து கூறுமாறு சொன்னபோது அவர் மீண்டும் சொன்னார் பூமி சூரியனை சுற்றுகிறது என்று.

இது மதத்திற்கு எதிரானது. பண்பாட்டிற்கு எதிரானது என்று அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அவர் மீது எரிச்சல் பட்டார்கள். தண்டனைக்கு உள்ளாக்குவோம் என்று மிரட்டினார்கள். நீங்கள் தண்டனைக்கு உள்ளாக்கினாலும் நீங்கள் எரிச்சல் பட்டாலும் நீங்கள் பூமி மையமாக இருக்கிறது, சூரியன் சுற்றுகிறது என்று கூறினாலும் நானும் அதையே சொன்னாலும் இறுதியாக இருக்கிற நிலைபெறுகிற உண்மை எப்போதும் சூரியன் மையத்தில் இருக்கிறது. மற்றவைகள் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று கடைசியாக அவர் சொன்னதாக ஒரு குறிப்பை நான் படித்திருக்கிறேன். அப்படித்தான் மையமாக இருக்கிற விஷயங்கள் மீது உண்மையின் மீது ஒரு படைப்பாளி, ஒரு படைப்பு உண்மையாகவே போற்றுதல் கடந்து, உரையாடல் கடந்து, நாம் புனிதப்படுத்துகிற புனிதங்கள் கடந்து உண்மையாகவே அவை உள்ளிருக்கின்றன. அவ்வாறே இருக்கின்றன.

…தொடர்ந்து பேசுவோம்….

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...