Sunday, August 6, 2023

வாழ்விற்கு உதவும் அறிவு -பகுதி 1/உரையாடல் -1 -----சிவ.கதிரவன்

 

வாழ்விற்கு உதவும் அறிவு

www.swasthammadurai.com


வணக்கம் இன்றைய நூல் அறிமுக உரையாடலில் ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின்” வாழ்விற்கு உதவும் அறிவு” என்கிற புத்தகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகறிந்த தத்துவ ஆய்வாளர். நவீன மனிதனுக்குரிய சிந்தனை நுட்பங்களை நேர்மையாக பகுப்பாய்விற்கு உட்படுத்தி, வளமான மனித சமூகத்திற்கு வழிகாட்டும் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டவர். அன்னாரின் பல்வேறுபட்ட உரையாடல்களில் அவர்கள் மாணவர்களோடு நடத்திய உரையாடலில் உள்ளடக்கமாக இந்த புத்தகம் உருவாகி இருக்கிறது. மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த உரையாடலுக்குள் உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளார்ந்து சிக்கலாக இருக்கக்கூடிய பல்வேறுபட்ட மன உணர்வுகள், மனக்குமுறல்கள் உரையாடல் பொருளாக பேசப்படுகிறது. இந்த புத்தகத்தினுடைய உள்ளடக்கம் குறித்தும் ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்த உரையாடல் வழியாக, மாணவர்கள் வழியாக சமூகத்திற்கு சொல்கிற செய்திகள், செயல்பாடுகள் குறித்தும் இந்த நூல் அறிமுக நிகழ்வில் ஐயா. சிவ கதிரவன் அவர்கள் தமது பகிர்வை முன் வைக்கிறார்கள். இந்த உரையாடல் நிகழ்வில் அவர்களின் நூல் அறிமுக உரைக்கு உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி.

 நண்பர்களே வணக்கம்,

 ஜே. கிருஷ்ணமூர்த்தியினுடைய “வாழ்விற்கு உதவும் அறிவு” என்கிற புத்தகம்  குறித்து உரையாடலை என் பார்வையை  உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த புத்தகத்தில் உள்ளடக்கமாக ஆசிரியர்களுடன் நடந்த உரையாடல், மாணவர்களுடன் நடந்த உரையாடல் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தியினுடைய இரண்டு வேறுபட்ட உரையாடகளை  வைத்திருக்கின்றனர். இந்த புத்தகம் வாசிப்பதற்கு இலக்கிய வட்டத்தில், இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில், தத்துவ ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில், கல்வி அறிவு என்கிற குழந்தை வளர்ப்பு மீது ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு அதிர்வை உரையாடலை நிகழ்த்தி விடக் கூடிய வல்லமையோடு இருக்கிறது. இந்த புத்தகத்தை பொருத்த அளவில் நான் இந்த புத்தகம் குறித்து பேசுவதற்கு மூன்று அம்சங்கள் வழியாக இந்த புத்தகத்தை அணுகுவதற்கு நான் விரும்புகிறேன்.

ஒன்று - இந்த புத்தகத்தில் திருமிகு ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தி இருக்கிற உரையாடல், அதன் உள்ளடக்கம். மற்றொன்று ஜே. கிருஷ்ணமூர்த்தியும் இந்த சமூகமும் இருக்கிற இடைவெளி உள்ள பகுதி. மூன்றாவது இந்த புத்தகத்தை வாசிக்கிற ஒரு நபர் என்னவாக பார்க்கிறார், என்னவாக இருக்கிறார் என்பது குறித்த உரையாடல். 

இந்த மூன்று தனித்தனியான, ஒருங்கிணைக்க வேண்டிய அம்சங்களோடு இந்த புத்தகத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அவ்வாறு தான் பார்க்கிறேன். இந்த புத்தகத்திற்குள் முழுமையான ஒரு பகுதி மாணவர்களை உள்ளடக்கமாகக்  கொண்ட பகுதி. இன்னொரு பகுதி எதிர் வரிசையில் அமர்ந்து இருக்கிற ஆசிரியர்களின் உரையாடலை உள்ளடக்கமாக கொண்டிருக்கிற பகுதி. இந்த இரண்டு பகுதிகளில் முதலில் மாணவர்களை உள்ளடக்கமாக  கொண்டிருக்கிற ஒரு முழுமையான  மாணவர்கள் அவர்கள் மீது இருக்கிற பார்வை, அவர்களினுடைய கல்வி  குறித்த உள்ளடக்கம் என்கிற ரீதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தியினுடைய உரையாடலை உங்களோடு விமர்சனப்பூர்வமாக  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

மாணவர்கள் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி உரையாடலை துவங்குகிறபோது வழக்கமான உரையாடலை நாம் பார்க்கிற பார்வையில் புதிய புதிய பரிமாணங்களை அவர் நமக்கு பகிர்ந்து அளிக்கிறார் என்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் மாணவர்கள் என்று கிருஷ்ணமூர்த்தி பேதத்தோடு இந்த உரையாடலை நிகழ்த்தவில்லை என்பதை நாம் பார்க்க முடிகிறது. முதன்மையாக நான் சொல்லியது போல ஜே. கிருஷ்ணமூர்த்தினுடைய உரையாடலின் உள்ளடக்கம் என்கிற முதல் பகுதியில் நான் செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இந்த புத்தகத்தை வாசிக்கிறபோது இந்த புத்தகம் கொடுத்த உரையாடலில் ஈடுபடுகிற போது கிருஷ்ணமூர்த்தியும் மாணவர்களும் என்றவுடன் கிருஷ்ணமூர்த்தி - மாணவர்கள் என்கிற இரண்டு வேறு கருத்தாக்கங்கள், இரண்டு வேறு பார்வை வாசிப்பவருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படியான பார்வையோடு திருமிகு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த உரையாடலை நிகழ்த்தவில்லை. ஒரு சமூக மனிதனின் வளர்ச்சி அடைந்து நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற  மனநிலையில் இருக்கிற மனிதனின் மனதிற்குள் ஏற்படுகிற எழுச்சியான, பிற்போக்கான, பலகீனமான  பகுதிகள் மீது கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாடல் செய்கிறார். அவரது உரையாடலும் அவர் சந்திக்கிற கேள்விகளும் மாணவர்களின் பாற்பட்ட கேள்விகளாக நாம் சுருக்கி விட வாய்ப்பில்லை. முழுக்க கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாடலினுடைய உள்ளடக்கங்கள் அனைத்திலும் கேள்வி கேட்பவரின் நிலையில் இருந்து அந்த உரையாடலை சந்திக்கவில்லை. இந்த உரையாடலின் உள்ளடக்கமாக உளவியல் நகர்வாக என்ன இருக்கிறது என்கிற அம்சத்தில் இருந்து  உரையாடலுக்குள் தொடர்ந்து நகர்ந்து செல்கிறார் என்று பார்க்க முடிகிறது. அப்படித்தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன்.

ஏனென்றால் உரையாடல் என்றவுடன் மாணவர்கள் குறித்த உரையாடல் என்கிறபோது அல்லது பொதுவாக சீடர்கள் இராமகிருஷ்ண  பரமஹம்சரினுடைய புத்தகங்கள் இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷி என்பவருடைய புத்தகங்கள் இருக்கின்றன. இன்னும் வேறுபட்ட சமகாலத்தில் வெவ்வேறு ஆன்மீகவாதிகள், தத்துவவாதிகள் என்று தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கிற பல்வேறு புத்தகங்களை நாம் காண்கிற போது உரையாடல் என்பது ஒரு தீர்க்கதரிசியாக அமர்ந்து கொண்டு அவரது பக்தர்களை சந்திக்கிற சந்திப்பில் உரையாடப்படுகிற உரையாடலாக, எழுதப்படுகிற கேள்வி பதிலாக அவை அமைந்திருக்கின்றன. ஆனால் அத்தகைய எந்த உரையாடலும் நாம் பார்க்கிறபோது அந்த உரையாடலினுடைய உள்ளடக்கத்தை பார்க்கிறபோது பெரும் சக்தியும் அறிவும் கொண்ட ஒருவர்  கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். எதுவும் அறியாத ஒருவர் கேள்விகளை தொடுக்கிறார் என்கிற அளவிலேயே இந்த உரையாடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் இப்போதும் புத்தகங்களில் பார்க்க முடியும்.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஒரு தேர்ந்த தத்துவ விசால பார்வை கொண்டு ஒருவர் அப்படியான ஒரு உரையாடலை எப்போதும் நடத்துவதில்லை என்பதை இந்த புத்தகம் மட்டுமல்ல, கிருஷ்ணமூர்த்தியின் அல்லது கிருஷ்ணமூர்த்தி போன்ற வேறுபட்ட தத்துவ ஆய்வாளர்களினுடைய உரையாடல் வழியாக நாம் பார்க்க முடியும். அப்படித்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இரண்டு நபர்கள் பேசிக் கொள்கிறார்கள். தேர்ந்த அறிவாளி ஒருவரும் எதுவும் தெரியாத ஒருவதும் பேசிக்  கொள்கிறார்கள் என்கிற எந்த சாராம்சமும் குறியீடாக இந்த புத்தகத்திற்குள் இந்த உரையாடலுக்குள் வந்துவிடா வண்ணம் கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல் கேள்வி பதில் என்பது முறையாக நகர்கிறது என்றால் அது ஒரு நகர்வு. நகர்கிறது என்பதை பார்க்க முடிகிறது. இந்த நகர்வு திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல் வழியாக இப்படியான நகர்வில் தான்  நகருமா என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும் ஒரு நேர்த்தியான உரையாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த உரையாடலில் மிக முக்கியமான இரண்டு அம்சங்களை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். மாணவர்களுக்கு ஏதும் தெரியாது என்கிற குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது என்கிற சமூக மனநிலையை கிருஷ்ணமூர்த்தி உடைத்து நகர்கிறார். கிருஷ்ணமூர்த்தி போன்ற ஒரு மெய்ஞானி தத்துவ ஆய்வாளர் ஒருவரை  பார்க்கிறபோது எந்த ஒருவரையும் பார்க்கிறபோது பார்க்கப்படுகிற நபருக்கு என்ன இருக்கிறது, என்ன தெரியும்  என்கிற எந்த பேதமும் இல்லாமல் பார்க்கிற விசாலமான பார்வையோடு மாணவர்களை கிருஷ்ணமூர்த்தி பார்க்கிறார். உரையாடுகிறார். இது முழுக்க சமூக மனநிலைக்கு நேர் எதிரான, முழுவதும் அப்பாற்பட்ட ஒரு நிலைப்பாடு. சமூகத்தில் இருக்கிற ஒவ்வொரு துறை சார்ந்தவர்களையும் ஒவ்வொரு வயது ஒத்தவர்களையும் ஒவ்வொரு குழுவில் இருக்கிறவர்களையும் அரசியல் பின்புலம் கொண்டவர்களையும் நாம் பார்க்கிறபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  குணமோ தரமோ வடிவமோ நம்மை அறியாமல் கொடுக்கப்படுகிற ஒரு சமூகப் பார்வை இருக்கிறது.  இந்த மொழி பேசுகிறவர்களுக்கு இப்படியான சிறப்பு குணங்களும் பலகீனங்களும் இருக்கும் என்று நான் பார்ப்பதுண்டு. பார்த்திருக்கிறேன். இந்த உணவு உண்பவர்களுக்கு இப்படியான உடல் பலமும் செயல்பாட்டு முறையும் இருக்கும் என்று அப்படியான சில பிற்போக்கான அல்லது அறியாமையான பகுதிகளை என்னுள் நான் வைத்திருந்ததுண்டு. பலரும் அப்படி இருப்பதை நான் பார்த்ததும் உண்டு. இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்கள் இப்படித்தான்   இருப்பார்கள். இவர்களுக்குள் இப்படியான சிந்தனை முறை தான் இருக்கும் என்கிற பல்வேறுபட்ட பிற்போக்கான, அறியாமையான சமூக  மனநிலையை வைத்துக்கொண்டு சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது அப்படியான மனநிலையோடு சமூகம் படித்துக் கொண்டிருக்கிற போது, பார்த்துக் கொண்டிருக்கிற போது இந்த சமூகத்திற்குள் நடத்தப்படுகிற உரையாடலில் கேள்வி பதில் நிகழ்வில் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஒரு அறிவாளி மெய்ஞானி, தத்துவ ஆய்வாளர் இப்படியான எந்த பார்வையும் இல்லாமல் குழந்தைகள் என்றவுடன், மாணவர்கள் என்றவுடன் அவர்கள் மீது சமூக பார்வை ஏதும் இல்லாமல் ஒரு நிறைவான ஒரு வாஞ்சையான பார்வையோடு ஒரு உரையாடலை செய்கிறார் என்பது ஒரு மிகுந்த மதிப்பிற்குரியதாக பார்க்க முடிகிறது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...