Wednesday, September 20, 2023

வாழ்விற்கு உதவும் அறிவு -பகுதி 1/உரையாடல் 3 -----சிவ.கதிரவன்

 

                                                வாழ்விற்கு உதவும் அறிவு


www.swasthammadurai.com


குழந்தைகள் மீது குறிப்பாக வளரிளம் குழந்தைகள் மீது இப்படியான ஒரு ஏற்பாடு என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதை உடைப்பதற்கு ஒரு குழுவாக ஒரு தனி மனிதன் இயங்குகிறான் என்றால் அவனும் இந்த சமூகத்திற்கு நேர் எதிரான வேறொரு திட்டத்தோடு  இயங்குகிற தன்மையோடு இருப்பதையும் பார்க்க முடிகிறது. இப்படியான இரண்டு நேர் எதிரான மனநிலையும் இரண்டு நேர் எதிரான செயல்பாட்டு முறையும் இரண்டு நேர் எதிரான நிகழ்ச்சி நிரல்களும் சமூகத்தினுடைய நேர் எதிரான  பகுதிகளேயோழிய அது சமூகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சரியான பகுதி அல்ல. இப்படியான பார்வை அல்ல. அவை ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தை மெய்ப்பொருளாக வைத்திருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு இணக்கமாகவோ பிணக்காகவோ ஒரு செயல் திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த வகையிலேயே செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் கிருஷ்ணமூர்த்தியின் அறிவு குறித்த மாணவர்களோடு உரையாடுகிற ஒரு உரையாடல் என்பது புதிய பரிமாணத்தோடு நமக்கு வெளிப்படுகிறது.

கிருஷ்ணமூர்த்தி சமூகத்திற்குள் இருக்கிற நேர் எதிரான எந்த நிலையில் இருந்தும் இந்த உரையாடலை செய்யவில்லை. கிருஷ்ணமூர்த்தி சமூகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு துல்லியமான பிரத்தியேகமான பார்வையோடு இந்த உரையாடலை செய்கிறார். அவரிடம் இந்த உரையாடல் வழியாக நாம் ஏதோ ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம் என்றால் சமூகத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிற சமூகத்தின் சாயல் ஏதும் இல்லாத ஒன்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உரையாடலின் வழியாக அவர் கற்றுக் கொடுக்கிற இந்த உரையாடல் மாணவர்களுக்காக பேசப்படுகிற உரையாடல்  என்றாலும் கூட அவர் கற்றுக் கொடுக்கிற ஒன்று நேர் எதிராக என்ற பேதம் இல்லாமல், தனி ஒருவனாக சமூகத்தின் பார்வைக்கு  அப்பாற்பட்டவனாக சமூகத்தின் சாயல் ஏதும் இல்லாதவனாக துல்லியமான நிலைப்பாட்டோடு துல்லியமான செயல்பாட்டோடு இயங்குகிற ஒன்றை நாம் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான பரிந்துரைகளை அவர் உள்ளே வைக்கிறார்.

தன்னை நோக்கி ஒரு மனிதன் பார்த்துக் கொள்வதற்குரிய சமன்பாடுகளை குறிப்பிடுகிறார். எங்கிருந்து சிக்கல் துவங்குகிறது என்று வடிவமைத்து சொல்கிறார். இவை எல்லாமும் மாணவர்களுக்காக சொல்லப்பட்டது அல்ல. ஒரு மனிதன் சமூகத்தை துல்லியமாக எடை போட்டு பார்ப்பதற்குரிய பண்பும் பக்குவமும் உள்ள ஒரு மனிதன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். இந்த அனுபவ பகிர்வின் வழியாகவே இந்த உரையாடல் விரிகிறது. எந்த இடத்திலும் ஒரு வலுவான நெருக்கடியான நெறிமுறையை அவர் பரிந்துரைக்கவில்லை. ஒவ்வொரு உரையாடலுக்குள்ளும் ஒவ்வொரு சொற்றொடர்க்குள்ளும் அவர் முன் வைக்கிற உரையாடல் தன்மை என்பது, சாராம்சம் என்பது சமூகத்திற்கு வெளியில் நின்று ஒன்றைப் பார்ப்பதற்கு முயற்சி செய்கிறார்.

எப்போதும் சமூகத்தை  விடவும் ஒரு தனி மனிதனுடைய அகப்பகுதி, தனிமனிதனுடைய உள்ளார்ந்த செயல்பாட்டு அதிர்வு மதிப்பிற்குரியது. எப்போதும் சமூகத்திற்கு அப்பாற்பட்டு தனிமனிதனுடைய பார்வையை விரிவாக்க முடியும் என்கிற பல்வேறு அம்சங்களில் அவரது உரையாடல் உள்ளடக்கமாக கற்பிக்கப்படுகிறது. அது அப்படியான கற்பித்தத்தை நாம் ஏற்றுக் கொண்டு அப்படியான அவரது பரிந்துரையை நாம் ஏற்றுக் கொண்டு அந்தப் பார்வையோடு பார்க்கிற தன்மையில் இருப்போம் என்றால் மிக நிச்சயமாக குழந்தைகள் மீது  பார்க்கப்படுகிற பார்வை நல்ல நேர்த்தியான மதிப்பு மிக்க பார்வையாக  அவை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியான ஒன்றை நாம் தொடர்ந்து பேசுவதற்குரிய செயல்பாடுகள் தொடர்ந்து  பேசுவதற்குரிய கூடுகைகள் நிகழ்த்துவதன் வழியாக மட்டும் இவை  சாத்தியமல்ல.

எல்லா நிகழ்விலும் கூடுகைக்கு அப்பாற்பட்டு எல்லா நிகழ்வுகளிலும் ஒரு மனிதனுடைய அகப்பார்வையை தாமே பார்த்துக் கொள்வதற்குரிய செயல்பாடுகளுடன்  தாமே பார்த்துக் கொள்வதற்குரிய முனைப்போடு இயங்குகிற ஒரு மனிதன் தன்னைப் பார்த்துக்  கொள்வதற்கு முயற்சிக்கிற ஒரு பேரமைதியான ஒரு செயல்பாட்டு முறை தேவைப்படுகிறது. இதுதான் எந்த மனிதனையும் குறிப்பாக குழந்தைகளை சரியாக புரிந்து கொள்வதற்குரிய மிக முக்கியமான செயல்முறை. மிக முக்கியமான தேவையான செயல்முறை. இந்த செயல் முறையை இப்படியான ஒரு பார்வையை, இப்படியான ஒரு கல்வி முறையை, இப்படியான ஏதோ ஒன்றை இந்த சமூகம் எங்கிருந்து துவங்குவது என்று நாம் பார்க்கிறபோது இத்தகைய செயல் முறையை குழந்தைகள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளாக நமக்குள் வைத்திருக்கிறார்கள். சமூகம் சார்பில்ல்லாமல் குழந்தைகள் இயங்குகிறார்கள் என்று ஒரு புதிய பார்வையை தற்போது நாம் பார்க்கிறோம். நான் நண்பர்களோடு பேசிப் பார்க்கிறபோது கிருஷ்ணமூர்த்தி முன் வைக்கிற சமூக சாயல் இல்லாத ஒரு தரத்தை எங்கிருந்து துவங்குவது என்று நாம் சிந்திக்கிற போது அந்த சமூக சார்பில்லாத தரம், அந்த சமூக சார்பில்லாத மேன்மை, சமூக சாயல் ஏதும் இல்லாத செயல்பாட்டு முறை குழந்தைகளிடமிருந்து துவங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு உரையாடலை நாம் கேட்க முடியும். அப்படி தோற்றத்தில் பார்க்கிற போது அதற்கு  வாய்ப்பிருக்கிறது  அந்தக் கருத்து ஏகத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது. குழந்தைகள் சமூக சார்பு இல்லாதவர்களாக சமூகத்தினுடைய செயல்பாட்டு நிரல்களுக்கு பொருந்தாதவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தி அறிவு பற்றி பேசுகிறபோது சேகரிக்கப்பட்ட அறிவில் இருந்து விடுபடுவதற்கு பெரும் பரிந்துரைகளை அவர் செய்கிறார்.

அறிவு என்பது சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட அறிவியல் இருந்து அறிவிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அந்த பரிந்துரையின் அடிப்படையில் பார்க்கிறபோது குழந்தைகள் அறிவை சேகரிக்காத மட்டத்தில் இருக்கிறார்கள். குழந்தைகள் அறிவை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வளர்ச்சிப் பாதையில் இந்த சமூகம் சமயத்தின் வழியாக, கல்வியின் வழியாக, இன்ன பிற அரசியல் நிலைப்பாடுகளின் வழியாக, சமூகத்தில் காணப்படுகிற ஏராளமான சமூக நெறிப்படுத்துதல் வழியாக அந்த குழந்தைகளுக்கு அறிவை சேகரிப்பதற்க்கான வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த குழந்தைகளும் அறிவை சேகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த அறிவை சேகரித்த ஒரு பெரும் மனிதராக குழந்தை வளர்ந்து நிற்கிற போது இந்த சமூகத்தினுடைய  சேகரிப்பு அறிவின் காரணமாக அந்த மனிதன் சமூக சாயல் இல்லாமல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு நிற்பதற்குரிய இடத்தை தவறவிடுகிறார் என்று கிருஷ்ணமூர்த்தியின் பார்வையில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.  அத்தகைய தவறவிடப்பட்ட பகுதியை  மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு  இந்த சமூகம் தந்திருக்கிற சேகரிக்கப்பட்ட அறிவில் இருந்து விடுதலை பெறுவதே சரியான நெறிமுறை சரியான வழிமுறை என்று கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைக்கிறார். இன்னும் கிருஷ்ணமூர்த்தி போன்ற வெவ்வேறு தத்துவ ஞானிகளும் பரிந்துரைக்கிறார்கள். இந்தப் பரிந்துரை நியாயமானது.

குழந்தைகளுக்கு எந்த விதமான சமூக சாயலும் இல்லை என்பதற்கு காரணம் குழந்தைகள் சமூகத்தில் இருக்கக்கூடிய அறிவை சேகரிக்கவில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அறிவை சேகரிக்காமல் வைப்பார்கள் என்றால் அவர்கள் எப்போதும் ஞானிகளாகவே இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் திறந்த மனதோடு இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் புதிய ஒன்றை தேடுவதற்கும் புதிய ஒன்றை உருவாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்களாக தொடர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சமூகத்தில் இருந்து சேர்ப்பதற்கு உரிய சமூக அறிவை தம்முள் இணைப்பதற்குரிய தம்முள் கோர்த்துக்கொள்வதற்குரிய வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்களா என்ற தர்கபூர்வமான விவாதத்தை நாம் தவிர்ப்பதற்கு இல்லை. அந்த விவாதத்தை நாம் கடந்து போக முடியாது. குழந்தைகள் வளர்கிறபோது குழந்தைகள் சமூக சாயல் ஏதும் இல்லாமல் வெறுமனே வெள்ளை காகிதமாக இருக்கிறபோது  தர்கபூர்வமாக சமூகம் அவர்களது மேல் ஒன்றை படைக்கிறது. ஒன்றை அழுத்துகிறது. ஒன்றாக நெறிப்படுத்துகிறது. இந்த நெறிப்பாடுகள் பின்னாளில் அந்த குழந்தைகளுக்கு தொடந்த துயரத்திற்குரியதாக மாறுகிறபோது கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவ வழிகாட்டிகள் இந்த சேகரிக்கப்பட்ட அறிவிலிருந்து விடுதலை பெறுவதே உன்னை பழைய குழந்தை போல, பழைய நிலைக்கு மாற்றுவதற்குரிய சரியான நெறிமுறை, சரியான வழி என்று பரிந்துரைக்கிறார்கள். நிஜமும் அதுதான்.

குழந்தைகள் எப்போதும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள். இந்த உற்சாகத்திற்கு காரணம் இந்த அவர்களது எழுதப்படாத வெள்ளைத் தன்மை. அழுத்தப்படாத, நெறிப்படுத்தப்படாத பண்பு. சமூகம் அவர்களை இன்னும் நெறிப்படுத்த துவங்கவில்லை. தர்கபூர்வமாக வளர்ச்சிப் போக்கில் இந்த நெறிப்படுத்த முடியாத நிலை அந்த  குழந்தைகளுக்கு தொடருமா  என்பதுதான் நம் கேள்வி. இன்று நெறிப்படுத்தப்பட்ட நபர்களே, நெறிப்படுத்தப்பட்ட அறிவிலிருந்து விடுதலை பெறுவது தான் அந்த குழந்தைத்தனத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான வழி என்று நம்மால் விவாதிக்க முடியும். ஆனால் குழந்தைகளைப் பற்றி பேசுகிற போது இந்த புதிய உரையாடலில், புதிய வகைப்பட்ட செயல்பாட்டு அணுகு முறையில் குழந்தைகள் உண்மையாகவே மெய்யாகவே அவர்கள் உள்ளத்தில் கலங்கமற்று படைப்புத்திறனோடு செயல்பாட்டு உற்சாகத்தோடு இருக்கிறார்கள் என்பதை நாம் எப்போதும் மறுப்பதற்கு இல்லை. மறுப்பதற்கு தேவையையும் இல்லை. அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அது நிஜம். ஆனால் அவர்களது வளர்ச்சிப் போக்கில் அவர்களுக்கு அறிவு சேகரிக்கப்படுகிறது. அறிவு சேகரிக்கப்படுவதற்கான உடலியல் கூறுகள் அவர்களுக்கு இருக்கின்றன. அறிவு சேகரிக்கப்படுவதற்கான உணவு அவர்களுக்கு கிடைக்கின்றன. இவற்றின் வழியாக தர்கபூர்வமான வாய்ப்பாக அவர்களுக்கு அறிவு சேகரிக்கப்பட்டு கொண்டே இருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இருக்காது. தொடர்ந்து அவர்களுக்கு அறிவு சேகரிக்கப்படும். அவர்கள் அறிவை சேர்த்துக் கொண்டே செல்வார்கள். இந்த அறிவை சேர்த்துக் கொண்டே செல்கிறபோது,  அறிவு மலை போல் குவிந்து நிற்கிறபோது சேகரிக்கப்பட்ட அறிவே அவர்களுக்கு துயரமாக மாறி நிற்கும் என்கிற நிஜத்தில் இருந்து மீண்டும் அவர்கள் குழந்தையாக மாறுவதற்கு செய்ய வேண்டியது என்ன, செயல்பாடு என்ன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பகுதியாகவே இருக்கிறது. இன்று குழந்தைகள் குறித்த இடம் அது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...