மிர்தாதின் புத்தகம் –“பயணம்-பணயம்"
ஒரு கதை சொல்லலாக, ஒரு பெரும் நாவலை படித்து உரையாற்றுகிற உரையாடலாக இல்லாமல் ஒரு நாவல் வழியாக, ஒரு பெரும் கதையாடல் வழியாக, ஒரு இலக்கியத்தின் வழியாக மனித வாழ்வின் மகத்துவமான ஒன்றை தேடி அலைகிற ஒன்றை கண்டெடுப்பதற்குரிய வழிகாட்டலை செய்வதற்கு இலக்கியவாதியாக இருக்கிற எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெரும் இலக்கியவாதிகளும்
மறை ஞானிகளும் கூட தாம் படைக்கிற படைப்புகளின் வழியாக இந்த உலகம் வைத்திருக்கிற, இந்த உலகம் சரி என்று நம்பிக் கொண்டிருக்கிற இந்த உலகின் ஒவ்வொரு மனிதனும் சென்று அடைவதற்காக, செல்ல வேண்டும் என்று காத்திருக்கிற ஒன்றை நோக்கி தம் படைப்புகள் வழியாக ஏதாவது ஒன்றை செய்து விட வேண்டும் என்கிற அடிப்படையில் ஒரு முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் படைக்கப்பட்ட பல்வேறு படைப்புகளின் வழியாக நாம் ஒன்றை பார்க்கிறபோது எல்லா படைப்புகளை விடவும் மிகுந்த நுட்பமான, மிகுந்த நெருக்கமான தம் முயற்சி எங்கும் விரயமாகாமல் பார்த்துக் கொள்கிற ஒரு கலை நேர்த்தியோடு உருவாயிருக்கிற பெரும் படைப்பு மிருதாத்தின் புத்தகம்.
மிர்தாத்தின் புத்தகம் இலக்கியம் என்கிற
தளத்தில் இருந்து நகர்ந்து, ஒரு படைப்பாளியின் படைப்பு நிலையிலிருந்து நகர்ந்து, ஒரு படைப்பை ஒரு நபர் எவ்வாறு உருவாக்கி இருக்கிறார் என்கிற நிலையிலிருந்து நகர்ந்து மிர்தாத் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் என்ன செய்ய வேண்டும் என்கிற மிக அடிப்படையான ஒன்றை மிர்தாதின் புத்தகம் வழியாக மிகெய்ல் நைமி படைக்க முயற்சித்திருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஒரு காட்டு வழியாக நடந்து போகிற ஒரு இளைஞனின் பயணம் என்று இந்த கதையை நாம் துவங்கலாம். பயணக் கதைகள் இலக்கியங்களில் புதிதல்ல. பயண இலக்கியம் என்று சமூகம் இலக்கியத்திற்கு ஒரு வகையை வைத்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் பயணம் குறித்து விரிவான பாடல்கள் “ஆற்றுப்படை” என்று தமிழ் இலக்கியத்தில் இருந்திருக்கின்றன. தமிழ் இலக்கியத்திற்குள் ஆற்றுப்படை எனும் இலக்கிய வடிவம் பயணம் மேற்கொள்கிறவருக்கு ஒரு அரசரிடம் ஒரு பெரும் மகாபிரபுவிடம் தனக்கு தேவையை கேட்பதற்காக, தன் தேவையை சொல்வதற்காக ஒரு புலவன், ஒரு வறியவன் செல்வதும் சென்ற பின்பு அங்கு என்ன நடந்தது என்பதை சொல்வதுமான இலக்கிய வடிவத்தை ஆற்றுப்படை என்று தமிழ் இலக்கியங்களில் பாடி வைத்திருக்கின்றன. ஆற்றுப்படை என்பது ஒரு மனிதனினுடைய பொருள் குறித்த தேடலை, பொருள் குறித்தான கவியை, பொருள் கொடுத்தவரினுடைய மேன்மையை சொல்லுகிற தன்மையோடு உருவாக்கப்பட்டிருக்கிற கவிகளாக இருந்திருக்கின்றன.
ஆற்றுப்படை என்கிற
அந்த இலக்கிய வடிவத்தின் சாராம்சத்தோடு தமிழ் இலக்கியம் வைத்திருக்கிற பயண இலக்கிய வடிவத்திலேயே மிகெய்ல் நைமி பயணத்தை தொகுத்து இருக்கிறார்.
மிகெய்ல் நைமி வரைந்திருக்கிற பயணம் என்பது ஒவ்வொரு மனிதனும் கடந்து, நடந்து செல்வதற்குரிய அத்தனை அவசியத்தையும் உள்ளடக்கிய பயணமாக இருக்கிறது. இந்த பயணத்தில் ஒரு இளைஞன் பயணிக்கிறார். இந்த இளைஞன் மலை உச்சியில் முன்னொரு காலத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட 9 நபர்கள் தங்கி இருக்கிற அந்த குகை வாசல் நோக்கி பயணிக்கிறான். வழியில் செல்கிற பாதை முழுவதும் அவன் அந்த பயணத்தை நிறைவு செய்ய முடியாத அளவிற்குரிய எல்லா வேலைகளையும் பார்க்கிற, தடையாய் இருக்கிற நிகழ்வுகளை சந்திக்கிறான். இந்த நிகழ்வுகள் என்ன செய்கின்றன? இந்த நிகழ்வுகள் என்ன சொல்கின்றன? இந்த நிகழ்வுகளின் வழியாக இலக்கிய வடிவம் மனிதனுக்கு சொல்வது என்ன, என்கிற வகையில் மிகெய்ல் நைமி இந்த புத்தகத்தை வரைகிறார். படைக்கிறார். இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவார்த்த, ஆன்மீக தேடல் உள்ள, ஆத்ம தேடல் உள்ள, தத்துவ தேடல் உள்ளவர்களுக்கு ஒரு வார்த்தையாகவும் நிகழ்வாகவும் இயல்பான மனிதர்களுக்கு தத்துவ தேடல் இல்லாதவர்களுக்கு இலக்கியப் பரப்பில் மட்டும் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு வேறொரு வார்த்தை குவியலாகவும் புரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த இலக்கியத்திற்குள் மிக நுட்பமான அழகே அதுவாகத்தான் இருக்கிறது. இந்த இலக்கியத்தை, இந்த கதையாடலை இந்த பயணம் செய்கிற செயல்பாடுகளை ஒரே வார்த்தையில், ஒரே வாக்கியத்தில், ஒரே சொற்றொடரின் வழியாக நாம் வாசித்து பார்க்கிறபோது அந்த சொற்கள், அந்த சொற்றொடர், வாக்கிய அமைப்பு முறை ஒன்றை மட்டும் குறிப்பிடாமல் தெரிந்த ஒன்றின் வழியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றிற்கு நம்மை நகர்த்தி விடுகிற கோணத்தை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது.
ஏழு ரொட்டி துண்டுகளை, வழி பயணத்திற்காக, உணவு தேவைக்காக வழிப்பயணத்தில் கொண்டு செல்கிற ஒரு இளைஞனுக்கு வழிப்பயணத்தில் செல்கிற போது ஏழு ரொட்டி துண்டு என்பது என்னவாக இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு இன்னொரு இடத்திற்கு செல்கிற போது ஏழு ரொட்டித் துண்டுகள் போதுமானவை. ஆனால் இந்த இளைஞன் ஒரு செங்குத்து மலைத்தொடரில் நடந்து செல்கிறபோது வழிப்பயணம் செல்கிற இளைஞராக இருந்தால் ஏழு ரொட்டி துண்டுகள் போதுமானது. ஆனால் நீ மற்றவர்களைப் போல வழி பயணத்திற்கு வந்தவன் அல்ல. எனவே நீ ஏழு ரொட்டி துண்டுகள் கொண்டு வந்திருக்கலாமா என்று ஒரு உரையாடலை மிகெய்ல் நைமி உள்ளே வைத்திருக்கிறார்.
அந்த இளைஞன் அப்போது கேட்கிறான், நான் பயணம் செல்கிற போது ஏழு ரொட்டி துண்டுகள் எனக்கு அவசியம் இல்லையா என்று என்று கேட்கிறபோது இந்த பயணத்தை நீ முன்னெடுக்கிற நபராக இருக்கிற பட்சத்தில் நீ கொண்டு வர வேண்டியது ஏழு ரொட்டித் துண்டுகள் என்கிற எண்ணிக்கை அல்ல. நீ ரொட்டித் துண்டு ஏதும் இல்லாமல் வந்திருக்க வேண்டும் என்று அந்த உரையாடலுக்குள் நுட்பமான தேடல் மிகுந்த ஒரு செய்தியை மிகெய்ல் நைமி இளைஞன் வழியாக பதிவு செய்கிறார். ஏழு ரொட்டித் துண்டோடு நீங்கள் பயணத்தை மேற்கொள்கிற போது உங்களுக்கு தெளிவான பயணம் குறித்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கும். தெளிவான பயணம் குறித்த திட்டம் என்பது முழுக்க உங்கள் பாதுகாப்பு கருதி, உங்களது பசி அறிந்து, உங்களது இயல்பு நிலை அறிந்து, உங்களுக்கு தேவையான உங்களுக்கு நினைவில் இருக்கிற எல்லா அம்சங்களையும் கணக்கில் வைத்துக் கொண்டு திட்டமிடப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஒரு பயணத்திற்கு தேவையான உணவை நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்வீர்கள் என்பது வழக்கமான பயண நடைமுறை.
ஆனால் இந்தப் பயணம் அப்படியான பயணம் அல்ல. மலை உச்சியில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் அனுப்பப்பட்ட 9 பேர் கொண்ட குழு அங்கே இருக்கிறது. ஒன்பது பேர் கொண்ட குழுவில் எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவர் மட்டும் அங்கே காவல் இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்கு இங்கிருந்து ஒரு இளைஞன் செல்கிறான். அந்த இளைஞன் ஏகதேசம் ஒரு ஆன்ம நிலைமையை தேடி செல்கிறவன். இறைவனின் பிரதிநிதிகளை பார்க்க செல்கிறவன். அவன் இறைவன் பற்றி, ஆன்மா பற்றி, தத்துவம் பற்றி தெரிந்த எல்லாவற்றையும் கைவிட்டு செல்கிறவன். இந்த சமூகத்தில் இருக்கிற எல்லா திட்டங்களையும் எல்லா செயல்பாடுகளையும் எல்லா அறிவு நிலைகளையும் கடந்து கைவிட்டு நகர்கிற நகர்வாக அவனது பயணம் இருக்கிற காரணத்தினால் இந்த சமூகம் வைத்திருக்கிற திட்டமிடப்பட்ட ஏழு ரொட்டித் துண்டு என்பது வழி உணவுக்காக போதாது என்கிற நுட்பமான தத்துவ செய்தியை மிகெய்ல் நைமி பதிவு செய்கிறார்.
நீங்கள்
தேடுகிற தேடல் உங்கள் பசி கடந்து, உங்கள் தேவை கடந்து, உங்கள் திட்டம் கடந்து இருக்கும் என்றால், இருக்க வேண்டும் என்பது தத்துவத்தினுடைய தேடல் போக்கு. நீங்கள் தேடுகிற எல்லாமும் உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இல்லை என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி நவீன உரையாடல் வடிவத்தில் தத்துவங்களை பகிர்ந்து கொடுக்கிற ஜே. கிருஷ்ணமூர்த்தி வரையறுப்பதுண்டு. நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்த கருத்துக்களில் இருந்து மட்டுமே உருவாக்கப்படுகின்றன. உங்கள் தேடல் இல்லை உங்களுக்கு தெரிந்த வகைகளுக்குள்ளேயே தீர்மானிக்கப்படுகின்றன என்று தத்துவ ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் குறிப்பிட்ட அம்சத்தோடு இந்த செய்தியை நாம் பார்க்க முடிகிறது.
நாம் தேடுகிற ஒவ்எவொன்றும் நம் திட்டமிட்ட பயணித்திலேயே திட்டமிட்ட வடிவத்திலேயே திட்டமிட்ட திசை வழியிலேயே இருந்து விடுகின்றன. அப்படி இருப்பது போன்று நாம் பார்த்தும் கொள்கிறோம். ஆனால் மலை உச்சியில் இருக்கிற, இறைவனின் பிரதிநிதியை, இறைவனின் கூடாரத்தை இறைவனின் நோக்கி பயணம் செய்கிற திட்டத்தோடு ஒருவர் நகர்கிறார் என்றால் இந்த சமூகம் வைத்திருக்கிற பசியும் சமூகத்தில் பழகி இருக்கிற சிந்தனையும் கண்ணோட்டமும் போதுமானது அல்ல. உடைபட வேண்டியது என்று இந்த கதையின் வழியாக, துவக்கத்தின் வழியாக அந்த வாசலுக்கு அழைத்துச் செல்கிற இந்த இளைஞனுக்கு, மிர்தாத்தை சந்திப்பதற்கு செல்கிற இளைஞனுக்கு, தேவதூதர்களை சந்திக்க செல்கிற இளைஞனுக்கு வழிகாட்டப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment