மிர்தாதின் புத்தகம் –“பயணம்-பணயம்"
இளைஞன்
கையில் உணவுக்காக ரொட்டித் துண்டுகள் ஏழு மட்டும் அல்ல, இளைஞன் போர்த்தி இருக்கிற உடைகளும் அடுத்த காட்சியில் வடிவமைக்கப்படுகிறது. இளைஞனின் உடைகளை அங்கு இருக்கிற ஒரு வயதான மூதாட்டியும் அவருடைய இளையப் பேத்தியும் பறித்துக் கொள்கிறார்கள். வயதான மூதாட்டி அந்த இளைஞனை பார்த்தவுடன் சொல்கிறார், “நீ நிர்வாணமாக நிற்கிறாய்; அங்கே ஒருவன் வந்திருக்கிறான். அவன் ஆடையை பறித்துக் கொண்டு, உன் நிர்வாணத்தை நீ மறைத்துக் கொள். உன் நிர்வாணத்தை எடுத்துக்கொண்டு அவன் கலங்கமில்லாமல் தன்னை மாற்றிக் கொள்ளட்டும்” என்று குறிப்பிடுகிறார்.
ஆடைகள்
என்பது மிடுக்கின் அடையாளமாக, செல்வாக்கின் அடையாளமாக, இன்று பார்க்கப்படுகிறது. எப்போதும் அப்படி ஒரு பார்வை ஆடைகளின் மீது இருக்கின்றன. இன்றைய சமூக நிகழ்வில் கூட, இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் உரையாடுகிற போது ஆள் பாதி, ஆடை பாதி என்று வழக்கம் சமூகத்தில் இருந்ததாக ஒரு உரையாடல் வடிவமுண்டு. ஆடைகள் அத்தனை சமூகத்திற்கு நெருக்கமானவை. சமூகமாக வாழ்கிற மனிதனுக்கு ஆடைகளினுடைய அடையாளம், ஆடைகளினுடைய பகிர்வு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிற ஒரு பண்பாட்டு புரிதலில் இருந்து, ஒரு பண்பாட்டு திட்டமிடலில் இருந்து ஆடைகள் எவ்வாறாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது.
ஆடைகள் வெறுமனே பண்பாடு என்கிற தளத்திலிருந்து நகர்ந்து, ஆடைகள் மனிதனினுடைய சொத்தாக பார்க்கப்படுகிறது. சொத்தாக இருக்கிற ஆடைகளை ஒரு மனிதன் கழட்டி எறிகிற, கையில் இருக்கிற எல்லா பொருட்களையும் கழட்டி எறிகிற ஒரு நுட்பமான ஆன்ம தேடலை குறிப்பிடும்படியாக ஆடைகளையும் அதன் பின் அவன் கையில் இருந்து பறிக்கப்படுகிற அவனது கைத்தடியையும் மிகெய்ல் நைமி பதிவு செய்கிறார்.
ஒவ்வொரு
மனிதனும் ஆன்ம தேடலோடு நகர்கிறபோது ஒவ்வொரு மனிதனும் ஆன்ம தேடலை நோக்கி நகர்கிறபோது ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கிற ஒன்றை கண்டடைய நகர்கிற போது எவையெல்லாம் அவனுக்கு புறத்திலேயே தடையாக இருக்கின்றன என்று பார்த்தோம் என்றால், வகைப்படுத்தினோம் என்றால் சமூகம் கொடுத்திருக்கிற, அமைப்பு முறைகள் கொடுத்திருக்கிற, கோட்பாடுகள் கொடுத்திருக்கிற, அரசியல் பின்னணி கொடுத்திருக்கிற, மத நம்பிக்கைகள் கொடுத்திருக்கிற எல்லாமும் ஒரு மனிதன் தன்னளவில் உள்ளே தேடுவதற்கு தடையை உருவாக்கி வைத்திருக்கிறன. ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னாலும் ஒரு மனிதன் தேடுவதற்கு முன்பு அவன் கலைய வேண்டியது அவன் உடல் அளவில் இருக்கிற தேடலை. பசியாக, தாகமாக, தேவையாக, இச்சையாக இருக்கிற ஒவ்வொன்றையும் ஒரு மனிதன் கடந்து போக வேண்டியது அவசியம் என்று ஒரு இறைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு பரிந்துரையாக இருக்கிறது.
ஒரு இலக்கியம் போல் வடிவமைத்திருக்கிற மிகெய்ல் நைமினுடைய வார்த்தைகளில் அவை இலக்கிய தன்மையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் பயணத்தை துவங்குகிறான். அந்தப் பயணத்தின் துவக்கத்தில் அவனது உணவு பறிக்கப்படுகிறது. உடல் சார்ந்த இச்சைகள் பறிக்கப்படுவது அல்லது உடல் சார்ந்த தேவைகளும் இச்சைகளும் கடந்து செல்ல வேண்டிய குறியீடாக அவற்றை முன் வைக்கிறார்.
தன் கையில் இருக்கிற தனது நிர்வாண தன்மையை கலைந்து போடுவதற்குரிய எல்லா நுட்பங்களையும் ஒரு மனிதன் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவனது தேடல் அதை உள்ளிட்டதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாக ஆடைகளை கலைந்து போடச் செய்கிறார். ஒரு மனிதனின் சொத்து, ஒரு மனிதன் பற்றி இருக்கிற சொத்து என்று குறிப்பிடும் போது எந்த சொத்தும் மனிதனை பற்றி இருக்கின்றனவா அல்லது மனிதன் சொத்தை பற்றி இருக்கிறானா என்ற ஒரு ஜென் பார்வையில் மிர்தாத்தினுடைய புத்தகம் பயணிக்கிறது.
ஒரு ஜென் கதை ஒன்று உண்டு. ஒரு ஜென் குரு ஒருவர், ஜென் கதைகள் தத்துவத்தை ஒரு வரியில் சொல்வதில் பிரபல்யமானவர். பிரசித்தி பெற்றவை. ஜென் ஒருவர்
ஒரு கதையை விவரிக்கிறார். ஒரு ஆட்டு இடையன் ஆட்டை கையில் கட்டிக்கொண்டு தன் கையில் இருக்கிற கயிறை ஆட்டின் கழுத்தில் கட்டிக்கொண்டு கயறைப் பிடித்துக் கொண்டு அந்த ஆட்டு இடையன் ஒரு வழியில் நடந்து செல்கிறான். அந்த வழியில் போகிற அந்த ஜென்குரு அந்த காட்சியை கவனித்து விவரிக்கிறார். எல்லோர் பார்வையிலும் ஆடு அவன் கையில் கட்டப்பட்ட கயிறின் வழியாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறது. இது பொதுவான சமூகப் பார்வை. ஆடு அவனது சொத்து. ஆடை அவனே வாங்குகிறான். அவனே வளர்க்கிறான். அவனே அறுப்பதற்கு தயார் செய்கிறான். அவனே அழைத்துச் செல்கிறான். இது நமது பார்வை. நாம் இப்படியான சமூக பார்வையில் பார்க்கிறோம்.
ஜென் குரு, ஆடு அவனது சொத்து. அந்த சொத்து அவன் கையை விட்டு போய் விடக்கூடாது என்று தன்னோடு இணைத்து வைத்திருக்கிறான். ஆடு நகர்கிறபோது வேகமாக இழுக்கிறான். ஆடு என்கிற சொத்து அவனை இழுக்கிறது. சமூகப் பார்வையில் ஆடு என்கிற சொத்தை ஒரு மனிதன் இழுத்துச் செல்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் ஜென் பார்வையில், தியானப்பார்வையில், ஆன்மீகப் பார்வையில் சொத்து மனிதனை இழுத்துக் கொண்டிருக்கிறது.
பேராசிரியர் முரளி என்கிற தத்துவ பேராசிரியர் ஒருவர், தத்துவங்கள் குறித்து சமகாலத்தில் நிறைய பதிவுகளை பதிவு செய்பவர். அவர் நகைச்சுவையாக ஒரு குறிப்பை தன் உரையில் வெளிப்படுத்துவார். முற்காலத்தில் மனிதர்கள் வீடு கட்டினார்கள். இப்போது வீடுகள் மனிதர்களை கட்டிக் கொண்டிருக்கிறது என்று. இது ஒரு தேர்ந்த தத்துவ பார்வையோடு பார்க்கிற நுட்பமான உரை. இன்று வைத்திருக்கிற அத்தனை அடமானங்களும் அணுகுமுறைகளும் ஒரு மனிதன் உருவாக்குகிற சொத்துக்கள் வழியாக ஒப்பிட்டு பார்க்கிறபோது முற்காலத்தில் மனிதர்கள் பொருள்களை உற்பத்தி செய்தார்கள். கட்டி வைத்தார்கள். இன்று அந்த பொருள்கள் மனிதர்களை கட்டி எழுப்புகிறது. அந்த பொருள்களே மனிதர்களை வழிகாட்டுகிறது. அந்த பொருட்களே மனிதர்களை இயங்கச் செய்கிறது. இப்படி ஒரு ஜென் பார்வையோடு, தத்துவ பார்வையோடு, தியான பார்வையோடு மிகெய்ல் நைமியினுடைய கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருஆன்ம
தேடலில் ஒரு பயணத்தை தொடங்குகிற ஒரு பயணி அவன் உடல் கடந்து ,இச்சைகள் கடந்து நகர்கிற நகர்வின் வழியாக கடந்து செல்கிறபோது அந்த தேசத்தினுடைய எல்லா குறியீடுகளையும் அவன் இழந்து, எல்லா பண்பாட்டு சாயல்களையும் அவன் கீழிறக்கி, தன்னை நிர்வாணமாக மாற்றிக் கொண்டு, கலங்கமின்மையை சூட்டிக்கொண்டு, தன் கையில் இருக்கிற எல்லா சொத்துக்களையும் தூக்கி எறிந்து விட்டு, பிறருக்கு பறி கொடுத்துவிட்டு ஒரு அமைதியான ஏதும் செய்வதற்கில்லாத சமூகம் வைத்திருக்கிற எந்த மனநிலைக்கு பொருத்தம் இல்லாத முழுக்க இயலாமைக்கு உட்பட்ட ஒரு மனிதனாக, ஒரு குழந்தையாக தூக்கி எறியப்படுகிற தன்மையோடு அந்த கதையினுடைய முற்பகுதி துவங்குகிறது.
அந்த மனிதன், அந்த இளைஞன் பெரும்பாடுகளுக்கு மத்தியில் ஒரு ஆடு, ஆட்டு இடையன், ஆட்டு கூட்டத்தில் ரொட்டி துண்டுகளை பறிகொடுக்கிறான். பின்பு ஒரு முதிய பெண்ணிடம் அவளது பேத்தியிடம் தன் ஆடைகளை பறிகொடுத்து நிர்வாணமாகிறான். ஒரு வயதான தம்பதியிடம் தன் கையில் இருக்கிற ஒற்றை சொத்தான கைக்கோலை கொடுத்து காத்திருந்து ஏமாற்றமாய் விடைபெறுகிறான். தொடர்ந்து எல்லாவற்றையும் இழக்கிறான். சமூகம் கொடுத்த எல்லாவற்றையும் இழக்கிறான் என்று மிகெய்ல் நைமி பதிவு செய்கிறார்.
சமூகம்
கொடுத்த பண்பாடு கொடுத்த அடையாளமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் கொடுத்தவற்றை நீங்கள் பணயம் வைத்து கழட்டி வைப்பதன் வழியாகவே நீங்கள் ஆன்மீக பயணத்தை நகர்த்த முடியும் என்பது மிகெய்ல் நைமினுடைய படைப்பின் வழியாக நாம் படித்துக் கொள்ள முடிகிறது.
மிர்தாத்தின் புத்தகத்திற்குள் நுழைவதற்கு முன் வாசலில் குறிப்பு செய்தியாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் தத்துவ தேடலோடு இந்த புத்தகத்தை படித்தால் இந்த புத்தகத்தினுடைய ஆழமும் அகலமும் வேறு. ஒரு சிறுகதை போல் இந்த புத்தகத்தை நீங்கள் படித்தால் அதுவும் ஆசீர்வாதமாக உங்களுக்கு அமையக்கூடும். ஆனால் தத்துவ தேடலோடு இந்த புத்தகத்திற்குள் நுழைகிற போது ஒவ்வொரு வாக்கியமும் வேறு ஒரு பொருளோடு தத்துவ தேடல் உள்ளவர்களுக்கு விளக்கிச் சொல்லப்படும் முகமாகவே இந்த புத்தகத்திற்குள் நாம் பயணிக்க முடிகிறது.
சொத்து
உள்ளவன் பற்றிக் கொள்வதை விட சொத்தே சொத்து உள்ளவனை பற்றி கொள்கிறது என்று இலக்கியப்பூர்வமாக கவிதைகள் போல வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நெடும் பயணம் செல்கிற ஒருவன் ஏழு ரொட்டி துண்டுகளோடு வருவது முட்டாள்தனமானது என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு வாக்கியத்திற்குள்ளும் மிகெய்ல் நைமி தேடல் உள்ள ஒரு மனிதனுக்கான அடையாளங்களாக ஒரு இளைஞனினுடைய பாடுகளை பதிவு செய்கிறார்.
இன்னிசை
மிகுந்த குழலோசையோடு இந்த முதல் பகுதி பயணிக்கிறது. ஆடுகளின் சத்தத்திற்குள் இந்த முதல் பகுதி பயணிக்கிறது. இளமையான இளம் யுவதியும் இளம் இளைஞனும் தம் வாழ்வை கொண்டாடுகிற அத்தனை மகத்துவத்தையும் ஒரு முதியவர்கள் கொண்டாடுவது போல ஒரு சோலைக்குள் காட்சிகள் பயணிக்கின்றன. எல்லாவற்றிற்குள்ளும் சமூகமாக நாம் பழகி வைத்திருக்கிற ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தை, இன்னொரு பரிமாணத்தை வார்த்தைகளின் வழியாக அடையாளப்படுத்திக் கொண்டே மிகெய்ல் நைமினுடைய மிர்தாத்தின் புத்தகத்தினுடைய முதல் பாகம் நம்மை அழைத்துச் செல்கிறது.
பெரும்பாடுகளுக்குப் பிறகு அந்த இளைஞன் அந்தக் குகை வாசலில் வீசி எறியப்படுகிறான். அப்போது அந்தக் குகை வாசலுக்குள் அதுவரை ஒளிந்திருந்த ஒரு நபர் அவன் கண்ணில் படுகிறார். அவர் அப்போதுதான் பேசத் துவங்குகிறார். உனக்காகத்தான் காத்திருந்தேன் என்று அப்போது பேச துவங்குகிறார். அவர் பல நூறு ஆண்டுகளாக வாய்மொழி கட்டப்பட்டிருந்தார். அந்தக் கட்டுகள் இந்த இளைஞனை பார்த்தவுடன் அவிழ தொடங்கியது. இந்த இளைஞனுக்காகவே அவர் காத்துக் கொண்டிருந்தார். சமூகம் கொடுத்திருக்கிற எல்லா இச்சைகளையும் தூக்கி எறிந்து விட்டு எல்லா அடையாளங்களையும் தூக்கி எறிந்து விட்டு நிர்வாணமாக சொத்துக்களை தூக்கி எறிந்து விட்டு வெறும் மனிதனாக குகை வாசலில் விட்ட ஒரு மனிதனை, குகை வாசலில்
வீழ்ந்த ஒரு மனிதனை தத்துவத் தேடலோடு காத்திருந்த ஒரு முதியவர் கைநீட்டி வரவேற்பதற்காக காத்திருந்ததாக சொல்கிற முதியவர் மிகுந்த இன்முகத்தோடு வரவேற்கிறார்.
கதை அடுத்த இடத்திற்கு நகர்கிறது. இப்போது மிர்தாத்தை சந்திப்பதற்கு இன்னும் தத்துவமான வேகத்தோடு மிர்தாத்தை சந்திப்பதற்கு மிர்தாத்தினுடைய செய்திகளை அறிந்து கொள்வதற்கு அந்த இளைஞன் அந்த குகையின் பெரியவரோடு ஒரு உரையாடலை துவங்குகிறார். அந்தப் பெரியவர் மிர்தாத்தினுடைய புத்தகத்தை மிர்தாத்தினுடைய மொழியை இந்த இளைஞனுக்கு எல்லாவற்றையும் இழந்து வந்த எல்லாவற்றையும் பணயம் வைத்து வந்த அந்த இளைஞனுக்கு பரிசாக கொடுப்பதற்குரிய வேலைகளைச் செய்ய துவங்குகிறார். கதை தொடர்ந்து நகர்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஆன்மீகமாக, ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் தத்துவமாக, நமக்குத் தெரிந்த அதே வார்த்தைகளில் நமக்குத் தெரிந்த அதே வாக்கிய அமைப்புகளில் புதிய பரிணாமத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இந்த கதை நகர்கிறது.
தொடர்ந்து பேசுவோம்.....
No comments:
Post a Comment