இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்
மிர்தாதின் புத்தகம் - ஒரு இலக்கிய படைப்பின் ஊடாக, தத்துவ தேடலை கண்டுபிடிப்பதற்குரிய வாய்ப்புகளோடு வாசலாக அமைந்திருக்கிறது. சொற்களின் வழியாக அவை ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளக்கூடிய யாரொருவருக்கும் மிர்தாதின் புத்தகம் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கும். தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.மிர்தாத் எவ்வாறாக இருக்கிறார்? எவ்வாறாக இருந்திருக்கிறார் என்பது குறித்து ஒரு சுருக்கமான அறிமுகம். இந்த அறிமுகம் கடந்த உரையாடலில், கடந்த கூடுகையில் நாம் செய்திருந்தோம். மிர்தாத்தின் வாழ்வை மிர்தாத்தின் செயலை, மிர்தாத் சமூகத்திற்கு வழங்கி இருக்கிற பங்களிப்பை அழுத்தமாக திருத்தமாக நாம் மென்மேலும் நுணுக்கமாக புரிந்து கொள்வதற்கு வேறு வேறு நேரங்களில் மிர்தாத்தினுடைய பின்னணியை, மிர்தாத்தினுடைய வாழ்வியலை,மிர்தாத்தினுடைய பங்களிப்பை சிறுசிறு துண்டுகளாக பேசித்தான் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
மிர்தாத் ஒரு நிறைவான மனிதன். ஒரு புத்தரைப் போல, ஒரு இயேசு கிறிஸ்துவைப் போல இன்னும் இந்த சமூகம் முழுவதும் பேரன்பால் நிரம்பி வழிவதற்கு பாடுபட்ட தத்துவங்களை அள்ளி வீசிய பெரும் தத்துவ பெருமகனார்கள் போல மிர்தாத் நிறைவான மனிதர். அந்த நிறைவான மனிதரை சந்திப்பதற்கு மிக முக்கியமான தகுதி தேடுபவராக நாம் இருக்க வேண்டும்.
இன்று சமூகத்தில் மெய்யியல் கோட்பாடுகளின் வழியாக தேடல் என்பது உரையாடப்படாத பகுதியாக இருக்கிறது. மெய்யியல் கோட்பாடுகள் தேடலை ஒருவிதமாகவும் சமூகம் வைத்திருக்கிற சமகால பொருளாதாரப் பின்னணி, சமூக உறவு நிலைகள் தேடுதலை ஒருவிதமாகவும் புரிந்து வைத்திருக்கின்றன. பரப்புரை செய்கின்றன.
ஆக, தேடல் என்பது என்ன என்பதிலிருந்து நாம் யாரைத் தேடுகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். எவ்வாறு தேடுகிறோம் என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியும். எங்கிருந்து துவங்குவது என்பதை நாம் ஏற்பாடு செய்வதற்கு உகந்ததாக மாறிக் கொள்ள முடியும். அந்த வகையில் மிர்தாத் இந்த சமூகம் வைத்திருக்கிற வரையறைகளுக்கு அப்பால் தேடக்கூடியவர். இவரைத் தேடுகிறவர் தமக்கு இருக்கிற பொருளாதார நிபந்தனைகளின் பாற்பட்டு தேடுவதற்கு அவசியம் இல்லை. தேடுவதற்கு அவசியம் இல்லை என்பதன் முழுமையான பொருள் விரிவான பொருள் - சமூகம் வைத்திருக்கிற மனப்போக்குகளில் இருந்து மிர்தாத்தை தேடி செல்ல முடியாது. ஒருவேளை சமூகம் வைத்திருக்கிற மனப் போக்குகளிலிருந்து மிர்தாத்தை தேடுகிறவருக்கு மிர்தாத் கிடைப்பதும் இல்லை. மிர்தாத் தன்னை தேடும் மனிதனுக்கு சேரும் இடமாக விளங்குகிறார். யார் ஒருவர் தன்னை தேடுகிறாரோ, யார் ஒருவர் தனக்குள் தேடுகிறாரோ, யார் ஒருவர் தன்னை உரித்துக் கொண்டு தேடலை துவங்குகிறாரோ அவர் வந்து சேர்கிற இடம் மிர்தாத்தாக இருக்கிறது. அவரே மிர்தாத்தாக மாறிப் போகிறார் என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
மிர்தாத் அத்தகைய அடர்த்தியான தேடலுக்கு சொந்தக்காரர். தேடுதலின் நிறைவிடம். தேடுதலின் துவக்க புள்ளி. தேடுதலுக்கான புரிதல். தேடுதலும் தேடப்படுதலும் ஒன்றே சந்திக்கிற ஒற்றை புள்ளி மிர்தாத். இது ஒரு கவித்துவமான உரையாடல் என்கிற தளத்தில் இருந்து இந்த வார்த்தைகள் ஏற்படுத்துகிற பெரும் அதிர்வின் வழியாக மிர்தாத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. மிர்தாத்துக்குள் இருக்கிற ஒவ்வொரு வார்த்தை வெளிப்பாடும் மிர்தாத் சொல்லுகிற ஒவ்வொரு வாக்கிய அமைப்பும் அவை வார்த்தைகளுக்குள் மட்டும் நின்று விடுவதில்லை. சமூகம் வைத்திருக்கிற சொற்றொடர் பொருளில் மட்டும் அவை பொருந்தி தன்னை முடித்துக் கொள்வதில்லை. அடர்ந்து விரிகிறது. நுணுக்கமாக பயணிக்கிறது. நுண்ணிய பல செய்திகளை நமக்கு பகிர்ந்து அளிக்கிறது. அத்தகைய பேரன்புக்கு பெரும் புரிதலுக்கு சொந்தமாய் இருக்கிற எல்லா அம்சங்களையும் மிர்தாத்தும் மிர்தாத்தின் புத்தகமும் உள்ளடக்கமாக கொண்டிருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு ஆசிர்வாதத்தோடு பருக முடியும்.
திருவிவிலியத்தினுடைய ஆதியகமத்தில் ஒரு புனைக் கதை இருக்கிறது. உலகில் பாவங்கள் பெருகி இருக்கிற நிலையில் உலகம் முழுவதும் அன்பை பொழிய வேண்டும் என்று இறைவன் பரமபிதா தீர்மானிக்கிறார். அப்போது அந்த ஊரில் இருக்கிற அப்போது வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் மிகுந்த நேர்மையான ஒருவரை மிகுந்த பக்திமானை மிகுந்த புரிதல் கொண்ட ஒருவரை இறைவன் பரமபிதா தேர்வு செய்கிறார். பரமபிதாவின் தேர்வு அன்றாடம் வழிபாட்டிற்கு செல்பவர் என்கிற அடிப்படையில் அமையவில்லை. பரமபிதாவின் தேர்வு அன்றாட இறை மந்திரத்தை ஜெபிக்கிற நபர்களுக்கு பொருந்துவதில்லை.
தன்னளவில் நேர்மையாக, தன்னளவில் நிதானமாக இருக்கிற கீழ்படிதல் உள்ள ஒருவனை சமூகத்தின் கருதுகோளுக்கு சமூகக் கோட்பாடுகளுக்கு பணியாது தானே நேர்மையாகவும் தானே கீழ்ப்படிதலுமாக இருக்கிற ஒரு நபரை தேர்வு செய்கிறார். அந்தத் தேர்வுக்குரிய நபர் நோவா. நோவாவை பரமபிதா தேர்வு செய்கிறார். நோவாவோடு உரையாடுகிறார். பரமபிதாவினுடைய திட்டத்தை, விருப்பத்தை நோவாவின் வழியாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அடையாளத்தை பரமபிதாவிற்கு உள்ளெழுகிற எல்லாவற்றையும் நோவாவிடம் பகிர்ந்து அளிக்கிறார்.
உலகில் அன்பு தேவைப்படுகிறது. உலகில் நேர்மை தேவைப்படுகிறது. உலகில் கண்ணியத்தன்மை தன்மை தேவைப்படுகிறது. உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு இன்னும் இன்னும் ஏராளமாக தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறன. அவற்றையெல்லாம் நிறைவு செய்வதற்கு, அவற்றை எல்லாம் உண்டாக்குவதற்கு ஒரு விளையாட்டை செய்ய வேண்டி இருக்கிறது என்று நோவாவிற்கு பரமபிதா சில செய்திகளை கொடுக்கிறார். அந்த வகையில் நோவாவின் கீழ் படிதலுக்கு இணங்க, பரமபிதாவின் விருப்பத்திற்கு இணங்க ஒரு பெரிய மரக்கப்பலை குறிப்பிட்ட நீளமும் அகலமுமான மரக்கப்பலை பரம பிதாவின் வார்த்தையின் அடிப்படையில் அடுக்குகள் அமைக்கப்பட்டு ஒரு பெரிய மரக்கப்பல் தயாராகிறது.
பரமபிதாவின் திட்டம் நோவாவும் அவரது குடும்பத்தாரும் உள்ளிட்ட எட்டு பேர் அந்த மரக்கப்பலில் குடியமர்வது. அந்த மர கப்பலுக்குள் நோவாவின் குடும்பத்தை தவிர உலகில் இருக்கிற எல்லா பறவைகளிலும் விலங்குகளிலும் ஒவ்வொரு ஜோடி ஆணும் பெண்ணுமாக அந்தக் கப்பலுக்குள் குடி அமர்த்தப்படுவது இரண்டாவது கட்டம். பின்பு இவர்கள் உண்பதற்கான தானியங்களையும் உணவுப் பொருட்களையும் சேகரித்து வைத்துக்கொள்வது மூன்றாவது. இவ்வாறாக ஒரு கப்பல் நீண்ட நாள், கப்பலில் இருக்கிற மனிதர்களும் உயிரினங்களும் வெளியே வருவதற்கு எந்த தேவையும் இல்லாத வகையில் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது.
ஒரு பெரிய கப்பல் உருவாக்கப்படுகிறது. அந்தக் கப்பலுக்குள் நோவா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் எட்டு பேர் உள்ளே குடியமர்த்தப்படுகிறார்கள். அவரோடு விலங்குகளும் பறவைகளும் வகைக்கு ஒன்றாக ஜோடிகள் இணைக்கப்பட்டு கப்பலுக்குள் குடியமர்த்தப்படுகின்றன. அவர்களுக்குரிய தானியங்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகின்றன. கப்பல் பூட்டப்படுகிறது. இறைவன் திட்டத்தின்படி , பரம பிதாவின் திட்டத்தின் படி உலகில் அன்பை பாதுகாக்க, பேரன்பை பொழிவதற்கு தீமைகளை அழித்துக் கொள்வதற்கு உலகம் முழுவதும் பெரும் மழையை பரமபிதா உருவாக்குகிறார்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment