மிர்தாத் துறவிகளுக்கு மட்டுமே பேசுகிறார்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மிர்தாத் பேசத் துவங்குகிறார். ஏழு ஆண்டுகள் என்பது ஒன்பது பேர் தங்கி இருக்கிற ஒரு வளாகத்தில், ஒரு சிறிய குடிலுக்குள் மிக நீண்ட காலம். மிர்தாத் கதையினுள் நாம் இருக்கிற, பயணிக்கிற, தெரியப்படுகிற எல்லாவற்றிலும் நுட்பமான சூத்திரங்களை மிகெய்ல் நைமி வைத்திருக்கிறார். அந்த வகையில் ஏழு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். 9 பேர் மட்டுமே தங்கி இருக்கிறார்கள். மிர்தாத் ஏழு ஆண்டுகள் பேசவில்லை.
ஏன் மிர்தாத் 7 ஆண்டுகள் பேசவில்லை என்பது மிகுந்த கவனத்திற்குரியது. துறவிகளிடம் பேச வேண்டும் என்பது மிர்தாத்தின் திட்டம். நாம் அந்த கதையை வாசிக்கிறபோது மிர்தாத் துறவிகளோடு பேசுகிறார். அந்த துறவு கூடத்திற்கு வந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு துறவிகளோடு தன் முதல் பேச்சை துவங்குகிறார். இந்த ஏழு ஆண்டு கால நேரத்தில் மிர்தாத் காத்திருந்ததற்கான காரணம் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு துறவிகள் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமானது.
துறவு என்று எல்லா தத்துவங்களிலும் மேற்கோள் காட்டப்படுகின்றன. துறவு என்பதற்கு எல்லா தத்துவங்களும் தமது பண்பாட்டு அடிப்படையில் வரையறைகளை வைத்திருக்கின்றன. துறவு என்பது எல்லாவற்றையும் தவிர்த்து நிற்பது; புறக்கணித்து நிற்பது; எவற்றோடும் பற்றுக் கொள்ளாமல் இருப்பது என்கிற பொது வரையறையை நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
துறவு என்பது பற்றி ஒரு தீர்க்கமான பார்வை, ஆழமான பார்வை இருந்தால் மட்டுமே துறவிகள் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். துறவிகள் பற்றி நாம் முடிவுக்கு வந்த பிறகு தான் மிர்தாத் ஏன் துறவிகளோடு ஏழு ஆண்டுகள் கழித்து பேசினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். துறவு என்பது அடையாளங்களால் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. சில அடையாளங்களை வைத்துக்கொண்டு துறவை இன்று நாம் புரிந்து கொள்கிறோம், காண்கிறோம்.
குறிப்பிட்ட வகையிலான சிகை அலங்காரமும் உடை அலங்காரமும் இருக்கிறது என்பது துறவுக்கான ஒரு அடையாளம். இந்திய சமூகத்தில் கிழக்கத்திய சமூகத்தில் நிறைய துறவு அடையாளங்களை நாம் பார்த்திருப்போம். இந்தியச் சூழலில் குறிப்பிட்ட வண்ணத்தில் ஆடை அணிந்த நபர்களை துறவியர் என்று வகைப்படுத்துவதுண்டு. புத்த மறை மார்க்கத்தில் தனது சிகை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டவர்கள் துறவு மேற்கொள்பவர்கள். குறிப்பிட்ட வண்ணத்தில் ஆடையை குறிப்பிட்டு தன்மையில் அணிந்தவர்கள் துறவிகள் என்று அழைக்கப்படுவதுண்டு.
தத்துவ தேடல்கள் எந்த ஆடையும் போடாதவர்கள் துறவிகள் என்று மகாவீரரின் பரிந்துரையில் சொல்வதுண்டு. மகாவீரர் உருவாக்கிய வழிகாட்டு அமைப்பு முறைகளில், நெறிமுறைகளில், தத்துவ கோட்பாடுகளில் மகாவீரர் சில வழிமுறைகளை முன்வைக்கிறார். அந்த வகையில் துறவை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். கிறிஸ்தவ துறவு முறை ஒன்றாக இருக்கிறது. மொத்த உடலும் வெள்ளை அங்கியால் போர்த்திக் கொண்ட கிறிஸ்தவ துறவு முறை இருக்கிறது. கிறிஸ்துவத்தில் பெண்களுக்கு குறிப்பிட்ட முறையிலான அங்கிகளோ ஆடைகளோ துறவுக்கான அடையாளமாக தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறு துறவிற்குரிய அடையாளமாக உலகம் முழுவதும் ஆன்மீக, தத்துவ தேடல் இருக்கிற அமைப்பு முறைகள், நெறிமுறைகள் அடையாளங்களை வரையறுத்து வைத்திருக்கின்றன.
இந்த வகைப்பாடுகளில் இருந்து துறவு என்பதை நாம் முடிவு செய்துவிட முடியுமா என்றால் அப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ஒரு மார்க்கம் துறவு என்று வரையறுத்து வைத்திருக்கிற நெறிமுறைகளோடு இன்னொரு மார்க்கம் நேர் எதிராக மாறுபடுவதை பார்க்க முடியும். ஒரு தத்துவ குழு, தத்துவத்தை தேடுகிற ஆன்மீக குழு துறவு என்று வரையறுத்து வைத்திருக்கிற ஒன்றை இன்னொரு ஆன்மீகத் தேடலை கையில் வைத்திருக்கிற குழு மறுத்துவிடுகிறது. இப்படி துறவு என்பதற்கு துறவுக்குள் இருக்கிற ஒவ்வொருவரும் நேரேதிரான காரணங்களையும் வரையறைகளையும் வைத்திருக்கிற சூழலில் துறவு என்பதற்கு எங்கிருந்து பொருள் கொள்வது என்பது நம்முன் இருக்கிற மிக முக்கியமான கேள்வி. ஆனால் துறவைப் பற்றி தெரியாமல் மிர்தாத் கூறுகிற துறவிகளை பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது. துறவைப் பற்றி தெரியாமல் மிர்தாத் ஏன் ஏழு ஆண்டுகள் காத்திருந்தார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. துறவு பற்றி தெரிந்த ஒருவர் மட்டுமே மிர்தாத்தினுடைய மௌன காலத்தை புரிந்து கொள்ள முடியும்.
7 ஆண்டுகள் மிர்தாத் காத்திருந்தார்
என்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். துறவு என்பது இந்த அடையாளங்களுக்குள் இருக்கிறதா என்றால் இந்த அடையாளங்களுக்குள் வெளிப்படுகின்றன. ஆனால் இந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு துறவு என்று நாம் முடிவெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆக, துறவு என்பது என்ன என்று தேடுகிற போது எல்லா இலக்கியங்களிலும் எல்லா செய்யுள்களிலும் எல்லா தத்துவ ஆன்மீக தளங்களிலும் பார்க்கிறபோது நெறிப்படுத்துகிற, நெறிப்படுத்தப்படுகிற வகைமைகளிலேயே துறவு என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. துறவு என்பது அப்படியான வரையறைகளுக்குள் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நெறிப்பாடுகளில் இருந்து ஒப்பிடுகிற போது அவை ஒன்றோடு ஒன்று ஒத்துப் போவதில்லை. எது உண்மையான துறவு என்று அவரவர் பாவனைகளில் அவரவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இருக்கிறது.
மிகெய்ல் நைமியினுடைய இந்த பெரும் கதையாடலுக்குள் மிர்தாத் துறவை எங்கிருந்து பார்க்கிறார் என்று புரிந்து கொள்வதற்கு அவரே சில குறிப்புகளை வைத்திருக்கிறார். மிர்தாத் அந்த துறவு கூடத்திற்கு வந்த பிறகு மிகுந்த செல்வ செழிப்போடு, வளமையோடு அந்த துறவுக் கூடம் மேன்மையுறுகிறது. வளர்ச்சி அடைகிறது. பொன்னும் பொருளும் உடைமைகளும் பொக்கிஷமுமாக வந்து குவிகிறது என்று மிகெய்ல் நைமி மிர்தாத்தின் வருகைக்குப் பின்பு துறவுக் கூடத்தின் வளர்ச்சியை குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment