Saturday, September 30, 2023

மிர்தாதின் புத்தகம்--மிர்தாத் துறவிகளுக்கு மட்டுமே பேசுகிறார் - உரையாடல் 5//பகுதி 2///சிவ.கதிரவன்

                             மிர்தாத் துறவிகளுக்கு மட்டுமே பேசுகிறார்

www.swasthammadurai.com

துறவுக் கூடம் பெரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற குறிப்பை நாம் படிக்க முடிகிறது. துறவு என்பது செல்வ செழிப்போடு இருக்கிறதா, செல்வ செழிப்போடு இருக்கிற ஒன்றோடு தொடர்புடையதா என்றால் நாம் இன்று நம்முன் இருக்கிற துறவுகள் அப்படியான துறவுகள் அல்ல. ஆக, துறவு என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது. துறவு பற்றி மிர்தாத் தன் புத்தகத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. துறவிகளை வழிநடத்துகிறார். துறவிகள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  துறவிகளை வழி நடத்துகிறார். துறவிகள் எவ்வாறு வாழ வேண்டும் என்று குறிப்புகளை கொடுக்கவில்லை. ஒரு பொதுவான உரையாடலை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். புரிதல் பற்றிய உரையாடல். முழுவதும் புரிதல் பற்றி உரையாடல். வழங்குகிற, வழங்கப்படுகிற என்ற எந்த நெறிமுறை கோட்பாடுகளும் அவரது உரையாடலில் இல்லை. எல்லாமும் புரிதலை நோக்கி உரையாடல்.

ஆக, எந்த வகையில் துறவை தீர்மானிப்பது என்று பார்க்கிறபோது இந்த துறவிகள் எதற்காக இந்த துறவு கூடத்தில் கூடியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்ப்பதன் வழியாக இவர்களது துறவு எப்படியானது என்று நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த துறவிகள் துறவு கூடத்திற்குள் அன்பை போதிப்பதற்காக கூடியிருக்கிறார்கள். இந்திய மரபில் துறவு எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று பார்க்கிற போது இந்திய மரபிற்குள் குறிப்பாக வெவ்வேறு சமய மரபுகளுக்குள் தன் பிறப்பை ஏழுஏழு ஜென்மங்களாக தொடர்ந்து பிறந்து வந்த பிறப்பை நிறுத்திக் கொள்வதற்காக துறவு மேற்கொள்ளப்படுகிறது. பரலோக ராஜ்யத்தை அடைவதற்காக துறவு மேற்கொள்ளப்படுகிறது. இறையாட்சியை எட்டுவதற்காக துறவு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாண நிலையை அடைவதற்காக துறவு மேற்கொள்ளப்படுகிறது என்று துறவு மேற்கொள்ளப்படுவதற்குரிய காரணங்களை அந்தந்த துறவு மேற்கொள்ளும் நெறிமுறைகள், வரையறைகள் தொகுத்து வைத்திருக்கின்றன. இத்தகைய துறவு மேற்கொள்ளும் காரணத்திற்காக மிர்தாத்தினுடைய மிர்தாத் சென்றிருக்கக்கூடிய துறவு கூடம் இருக்கிறதா என்றால் இந்த துறவு கூடத்தின்  நோக்கம் அன்பை போதிப்பது. இங்கே இருக்கிற ஒன்பது துறவியறும் நோவாவின் காலத்தில் இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களின் பணி அன்பை போதிப்பது, அன்பை பகிர்ந்து கொடுப்பது, அன்பை கற்றுக் கொடுப்பது. சமூகத்திற்கு எல்லா வழிகளிலும் அன்பின் பாற்பட்ட முன்மாதிரிகளாக இருப்பதே அவர்களது பணி. அந்த வகையில் இந்த ஒன்பது பேரும் மிர்தாத் உட்பட்ட 9 பேரும் அன்பை போதிப்பதற்காக இந்த துறவு கூடத்தில் கூடியிருக்கிறார்கள் என்று நாம் இந்த கதையின் வழியாக பார்க்க முடிகிறது.

இவர்களது முதன்மையான பணி அன்பை போதிப்பது. அன்பை போதிப்பதற்கு மிகுந்த ஆற்றல் தேவை. இந்த உலகில் என் பார்வையில் எப்போதும் அச்சம் இல்லாமல் இருந்த ஒரு தத்துவ மறை ஞானி இயேசு கிறிஸ்து என்று நான் கருதுகிறேன்.

ஒரு நீண்ட காலம் அவரது வாழ்க்கையில் நிறைய பயணங்களை செய்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையோடு அவரது வரலாற்றை புரட்டிப் பார்க்கிறபோது, படித்துப் பார்க்கிறபோது அவரது செயல்பாடுகள் அவரை எவ்வளவு ஆற்றல் மிக்கவராக, தைரியமிக்கவராக, நம்பிக்கைமிக்கவராக பார்க்க முடிகிறது என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு மனிதன் அவன் பேசுகிற எல்லா உரையாடல்களிலும் பயப்படாதீர்கள் என்று  பரிந்துரைக்கிறார். நம்பிக்கையை பரிந்துரைக்கிறார். இயேசு கிறிஸ்து அப்படி பரிந்துரைத்த நபர். எப்போது பேசினாலும் பயப்படாதீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்வதாக, இயேசு கிறிஸ்து சொல்லியதாக அவரைப் பற்றிய கட்டுரைகளில் குறிப்புகளில் நான் படித்திருக்கிறேன்.

300க்கும் அதிகமான இடங்களில் பயப்படாதே என்று அழுத்தமான வார்த்தையை இயேசு கிறிஸ்து சொல்லியதாக இப்போதும் திருவிவிலியத்தில் நாம் பார்க்க முடியும். 300 முறைகளுக்கு மேலாக பயப்படாதே பயப்படாதே பயப்படாதே என்று  திருவிவிலியம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சிகளாக பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் அவை.

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை பார்த்து, சமூகத்தை பார்த்து பயப்படாதே என்று சொல்வதற்கு முதலில் அவன் தைரியமான மனிதனாக இருக்க வேண்டும். அவன் தைரியமான மனிதனாக இருப்பதற்கு அவன் உண்மையிலேயே தைரியமான மனிதனாக இருக்கிறானா என்பதை எப்படி பரிசோதிப்பது? மனிதர்களுக்கு அன்பை போதிப்பதற்காக மறை மார்க்கத்தை போதிப்பதற்காக கன்னி மரியாளின் வழியாக பிறந்த ஒரு மனிதன் ஒரு இளம் குமாரன் வளர்ந்து, வாலிபனாகி, தம் இறை செய்திகள் வழியாக மக்களை கவர்கிறபோது தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறான். அந்த தண்டனை காலத்தில் ஐந்து, ஆறு போர் வீரர்கள் சேர்ந்து சுமப்பதற்குரிய சிலுவையை தன் தோளில் தாங்கிக் கொள்கிறார். தரைத்தளமாக இல்லாமல் தரைத் தளத்திலிருந்து மிக உயரமான மலைப் பகுதியை நோக்கி நடந்து செல்வதற்குரிய, வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிற மலைச் சரிவின் வழியாக ஏழு, எட்டு பேர் தூக்குகிற சிலுவையை சுமந்து கொண்டு மலைச்சரிவின் கீழிருந்து மேலாக தான் ஒருவனாக ஏறி செல்கிற உடல் பலம் உள்ள ஒரு மனிதன். எப்போதும் ஒருவரையும் கடிந்து பேசாத மனிதன். இந்த ஏழு பேர், எட்டு பேர் சேர்ந்து தூக்குகிற அளவிற்கு கணம் கொண்ட சிலுவையை, மரச்சிலுவையை தன் தோளில் தனி ஆளாக சுமந்து கொண்டு கீழிருந்து மேல் நடக்கிற எல்லா அடிகளிலும் சுற்றி குற்றம் சாட்டப்பட்ட காரணத்திற்காக சாட்டையால் அடிக்கப்படுகிற அடிகளை வாங்கிக் கொண்டு மேல்நோக்கு நகர்கிற வலு இருக்கிற மனிதன்.

நாம் நினைத்து பார்த்தால்  மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். எட்டு பேர் சேர்ந்து தூக்குகிற சிலுவையை தூக்குவதற்கு யாருக்கு தைரியம் இருக்கும். யாருக்கு உடலில் பலம் இருக்கும். அதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். அந்த கனமான சிலுவையை நீங்கள் தூக்கிக் கொண்டு செல்கிற போது உங்களை யாராவது தாக்கினார்கள் என்றால் உங்களது பலம் சரியக்கண்டு சிலுவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி அந்த சூழலை நீங்கள் சமாளிக்க வேண்டும். இது தரைத்தளமாக இருந்தால் சிக்கலாக இருக்காது. இது தரையில் இருந்து மேல் நோக்கி நடந்து செல்ல வேண்டும். ஒரு நீண்ட பயணத்தில் கனமான சிலுவையை ஊர் சூழ அடி வாங்கிக் கொண்டு நடந்து செல்கிற ஒரு மனிதன் நிச்சயமாக உடலில் வழுவும் நெஞ்சுறமும் கொண்ட மனிதனாக இருக்க தான் முடியுமென்று நான் நம்புகிறேன்.

தனிப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மீது இருக்கிற பற்றாக நீங்கள் புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு மனிதனினுடைய வாழ்க்கை வரலாறில் அவற்றை நேர்மையாக பரிசீலித்து பார்க்கிறபோது ஒரு மனிதனினுடைய பலம் ஒரு மனிதனினுடைய ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்பதை அவனது வாழ்வியல் சாட்சிகளே நமக்கு காட்டுகின்றன. அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையை நமக்கு காட்டுகின்றன. அப்படி வாழ்க்கை முறை வழியாக பார்க்கிற போது கனத்த மரக்கட்டையை, சிலுவையாக சுமந்து கொண்டு தரையில் இருந்து அடி வாங்கிக் கொண்டு மேல் நோக்கி நகர்ந்து நடந்து செல்கிற ஒரு மனிதன் எளிமையான ஆற்றல் இல்லாத மனிதனாக இருந்து விட வாய்ப்பே இல்லை. அவன் நிச்சயமாக வலிமையான மனிதனாக இருக்க வேண்டும். நிச்சயமாக ஆற்றல் மிகுந்த மனிதனாக இருக்க வேண்டும். ஆற்றலும் வலிமையும் இருக்கிற ஒரு மனிதனால் மட்டும் தான் அன்பாக இருக்க முடியும் என்பது இயேசு கிறிஸ்துவின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

யார் இந்த உலகில் அன்பாக இருப்பார்கள். நிறைந்த ஆற்றலும் நிறைந்த வலிமையும் யாருக்கு இருக்கிறதோ அவரே அன்பாக இருப்பார். அவர் ஒருவருக்கு தான் அன்பாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் எப்போதெல்லாம் அன்பை இழக்கிறோமோ அப்போதெல்லாம் ஆற்றல் குறைவாக இருக்கிறோம் என்று பொருள். ஆற்றல் குறைவாக இருப்பவர்கள், உடலில் வலுவில்லாமல் இருப்பவர்கள், மனதில் வலுவில்லாமல் இருப்பவர்கள் அன்பாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது ஒரு உளவியல்  கோட்பாடு.

நீங்கள் அன்பாக இருக்க விரும்பினால் உள்ளத்திலும் உடலிலும் முழுமையான  நிறைவான வலுவோடு இருப்பீர்கள் என்றால் நீங்கள் அன்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியான அன்பை மொழி பாடமாக .கணித பாடமாக படித்து விட முடியாது. எப்போது அன்பை படிக்க முடியும். நிறைய அனுபவங்கள் வேண்டும். நிறைய அனுபவங்கள் தருகிற வழிகாட்டலில், நிறைய அனுபவங்கள் தருகிற நெறிமுறைகளில் நிறைய அனுபவங்கள் வழியாக நீங்கள் கற்றுக் கொள்கிற போது அனுபவங்களே உங்களை வழி காட்டுகின்றன. செம்மைப்படுத்துகின்றன.

நல்ல அனுபவத்தோடு நீங்கள் இருக்கிறபோது அன்பான நபராக நீங்கள் மலர்வீர்கள். அன்பு அப்படித்தான் உங்களுக்குள் விரியும். அப்படித்தான் விரிவதற்கு வழி இருக்கிறது. ஆக, அன்பு உங்களுக்கு பெருக வேண்டும் என்றால் நீங்கள் ஆற்றலோடு வலிமையோடு இருக்க வேண்டும். ஆற்றலும் வலிமையும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ஆற்றலையும் வலிமையையும் எங்கும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும். நீங்கள் ஆற்றலையும் வலிமையும் எங்கும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்கே செலவு செய்வது, எங்கே செலவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆக ஒன்றை எங்கே செலவு  செய்வது, எங்கே செலவு செய்யாமல் இருப்பது என்று பார்க்கிற போது குறிப்பாக உங்கள் ஆற்றலை பரிசீலிக்கிற போது, எடை போட்டு பார்க்கிறபோது நீங்கள் எல்லாவற்றைப் பற்றியும் முழுமையான அறிவும் போதுமான அனுபவமும் வைத்திருந்தால் மட்டும் தான் எங்கு செலவு செய்வது, எங்கு செலவு செய்யாமல் இருப்பது, உங்கள் அன்பையும் உங்கள் ஆற்றலையும் உங்கள் அறிவையும் உங்கள் வல்லமையையும் எங்கெல்லாம் செலவு செய்யலாம். எங்கெல்லாம் செலவு  செய்ய முடியாது என்று ஒரு முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்கள் எங்கும் செலவு செய்வார்கள். அனுபவம் இல்லாதவர்கள் எங்கும் விரயம் செய்வார்கள். விரையம் செய்பவர்கள் செலவு செய்பவர்கள் அனுபவம் இல்லாததன் வழியாகவே அவற்றை நிகழ்த்துகின்றனர். அனுபவம் கொண்டவர்கள் செலவு செய்வதில்லை. ஆற்றலை செலவு செய்வதில்லை, அனுபவம் கொண்டவர்கள் வல்லமையை செலவு செய்வதில்லை. எவற்றையும் செலவு செய்வதில்லை. அவர்களுக்கு தெரியும்.

அனுபவத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது. அனுபவத்தை நீங்கள் சமூகத்தில் நடக்கிற பொருளாதாரத்தின் வழியாக, விளையாட்டுகளின் வழியாக, கூடிக் களைவதின் வழியாக, கொண்டாடி திளைப்பதன் வழியாக பெற்றுக் கொள்ள முடியும். எல்லாவற்றையும் அனுபவமாக, கூடி கலைந்து செலவு செய்து அவற்றில் ஏற்பட்ட விளைவுகளை பரிசீலித்து, சுவீகரித்து அவற்றிலிருந்து ஒன்றை கற்றுக்கொண்டு, இவற்றிற்கெல்லாம் நாம் செலவு செய்வதற்கு அவசியமில்லை. இவை எல்லாம் கடந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளவை என்று பார்க்கிற இடம் வரை இந்த வேலை நடந்து கொண்டே இருக்கும்.

இன்னும் நான் உங்களுக்கு எளிமையாக சொல்ல விரும்புகிறேன். நிறைய ஆடைகள் வாங்கி குவித்த ஒருவருக்கு மட்டுமே ஆடைகள் மீது மோகம் குறையும். நிறைய பணக்குவியலில் வாழ்ந்து பழகிய ஒருவருக்கு மட்டுமே பணத்தைப் பற்றிக் கொண்டிருக்கிற பற்றுதல் குறையும். எந்த ஒன்றும் உங்களை விட்டு விடுபடுவதற்கு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த ஒன்றைப் பற்றி முழுமையாக நீங்கள் ஏதாவது ஒன்றை செயல்படுத்தி அனுபவித்து பார்த்திருக்க வேண்டும். இப்படியான பார்வையில் மட்டுமே அந்த பொருளிலிருந்து அந்த செயல்பாட்டிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள முடியும். அப்படித்தான் விடுவித்தல் நடக்கிறது. அந்தப் பொருளைப் பற்றி போதுமான புரிதல் உங்களுக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அந்த பொருளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி போதுமான புரிதல் எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் அந்த அனுபவத்தை நீங்கள் சரியாக பார்ப்பீர்கள். இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒன்றைப் பற்றிய  புரிதலோடு, அனுபவத்தை சரியாகப் பார்க்கிற பார்வையோடு நகர்ந்து நிற்பதற்கு மிகுந்த வளமையும் மிகுந்த சீமான்தனமும் பொருட் குவியலும் தேவைப்படுகிறது.

இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட எட்டு நபர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட என்று கருதி கொண்டிருக்கிற எட்டு நபர்கள் அந்த துறவு குடிசையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொன்னும் பொருளும் குவிகின்றன. எல்லாவற்றையும் கேளிக்கைகளாக கொண்டாடுகின்றன. எல்லாவற்றையும் கொண்டாட்டமாக கழிக்கின்றன. எல்லாவற்றையும் செலவு செய்கின்றன. எல்லாவற்றின் மீதும் அவர்களுக்கு தெளிவான அனுபவம் குவிகிறது. பொருளை பற்றி கொள்வதற்கு, பொருள் பற்றி எல்லாமும் கிடைக்கின்றன. ஆடு, மாடுகள் கிடைக்கின்றன. விளையாடுவதற்கு மணி கற்கள் கிடைக்கின்றன. ஊர்மக்கள் தருகிற உணவுப் பொருட்கள் இவர்களுக்கு போதும் போதும் என்று இருக்கிறது. சுவையான உணவு, சுத்தமான படுக்கையறை, வண்ணமயமான உடைகள் , எல்லாவற்றிலும் நிறைவாக இருக்கிறார்கள். முழுமையான நிறைவிற்குப் பிறகு, எல்லாவற்றையும் கொண்டாடி கழித்து விட்டோம் என்ற நிலைக்கு பிறகு ஏதோ ஒன்று இவர்களுக்கு திகட்டலாக இருக்கிறது. ஏதோ ஒன்று இவர்களுக்கு தடுமாற்றமாக இருக்கிறது. அப்படித்தான் எல்லாவற்றையும் கடந்து, அனுபவித்து, கொண்டாடிக் கழித்த ஒருவனுக்கு மிச்சம் இருக்கிற தடுமாற்றமான பகுதியில் தான் தத்துவம் தேவைப்படுகிறது.  அப்போதுதான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகம் தேவைப்படுவதற்குரிய மிக முக்கியமான புள்ளி, துவக்கம், செயல்பாடு இதுதான்.

நீங்கள் எல்லாவற்றின் மீதும் போதுமான அனுபவமும் புரிதலும் உள்ள நபராக நீங்கள் மாறி நிற்கிற போது மட்டுமே உங்களுக்கு ஆன்மீகம் தேவைப்படும். அல்லது இவற்றை ஏதும் அனுபவிக்காமல், கொண்டாடாமல், கடந்து செல்லாமல் இருப்பீர்கள் என்றால் ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு இவற்றையெல்லாம் அனுபவிப்பீர்கள். சமகாலத்தில் அப்படி ஒரு விமர்சனத்தை நான் பார்க்கிறேன். கொண்டாடி களிப்பில் எல்லாவற்றையும் அனுபவமாக பார்க்காதவர்கள் ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு இவற்றை செய்கிறார்கள் என்று பார்க்கிறேன். ஆன்மீகம் அப்படி இருப்பதல்ல. தத்துவம் அப்படி இருப்பதில்ல. எல்லாவற்றையும் பார்க்கிற அனுபவத்தை ஒரு மனிதன் உள்ளே வைத்திருக்கிற போது தான் எல்லாமும் பார்த்த பின்பும் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது என்று தேடுகிற போது தான் தத்துவம் அவனுக்குள் இறங்க துவங்குகிறது அல்லது தத்துவத்தை நோக்கி அவன் நகரத் துவங்குகிறான். புத்தருக்கு அப்படித்தான் நடந்தது. புத்தன் பார்க்காத செல்வம் அல்ல. புத்தனுக்கு கொண்டாடுவதை தவிர வேறு வேலையே இல்லை. எல்லாவிதமான வாய்ப்பும் புத்தனுக்கு வழங்கப்படுகிறது. எல்லாவிதமான கேளிக்கைகளும் புத்துனுக்கு கிடைத்தன. ஆனாலும் புத்தன் நிறைவில்லாத ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான். 

போதிதர்மருக்கு அது நடந்தது. இந்திய சமூகத்தில் பலருக்கும் அது நடந்திருக்கிறது. அது நிறைவான நபர்களுக்கு தான் நடக்கிறது. எல்லாவற்றையும் அனுபவமாக, கொண்டாட்டமாக, கேளிக்கையாக அனுபவித்து கழித்தவர்களுக்கு தான் அது நடக்கிறது. அப்படி எல்லா பொருட்களையும் பற்று இல்லாமல் கொண்டாடிக் கழித்து, கேளிக்கையாக கழித்து, நிறைவுறும் வரை கழித்து விட்டு நிமிர்ந்து ஏதோ ஒன்று குறைகிறது என்று பார்க்கிற நபர் தான் துறவி. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பவன் தான் துறவி. எல்லாவற்றையும் செய்து முடித்து நிறைவில்லாமல் அகத்தில் தடுமாற்றத்தோடு இருப்பவன் தான் துறவி.  எல்லாவற்றையும் பற்றிக் கொள்ளாதவன் துறவி அல்ல. பற்றுவதற்கு தேவை இல்லாதவன்  துறவி. எல்லா போகங்களையும் அனுபவிக்காதவன் துறவி அல்ல. அனுபவம் செய்வதற்கு தேவையில்லாதவன் துறவி. இப்படியான துறவியை உருவாக்குவதற்கு இயல்பாகவே அந்த துறவு மடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழு ஆண்டுகள் செல்வம் குவிகின்றன. அங்கு இருக்கிற எட்டு பேரும் செல்வத்தின் வழியாக கொண்டாடி  கழிக்கின்றார்கள். எட்டு பேரும் தாம் சேர்த்திருக்கிற செல்வத்தின் வழியாக எல்லாவற்றையும் அனுபவமாக பார்க்கின்றனர். எல்லாமும் அனுபவமாக பார்த்து நிறைவு செய்கிற ஒரு நாளில் ஏதோ ஒன்று குறைகிறது என்று விவாதம் தொடங்குகிறது. அப்போது கேலியாக மிர்தாதை அழைக்கிறார்கள். மிர்தாத் அப்போது பேசத் துவங்குகிறார். இதுநாள் வரை மிர்தாத் காத்திருந்ததற்கு காரணம், இவர்கள் எல்லோரும் முழுமையான துறவிகளாக மாற வேண்டும் என்பதற்காக.

மிர்தாதினுடைய பேச்சு துவங்குகிறது. மிர்தாத் துறவிகளை நோக்கி பேசத் துவங்குகிறார். மிர்தாத் தேர்வு செய்த துறவிகள் நாம் முன் வைத்திருக்கிற துறவிகள் அல்ல. நாம் பார்க்கிற, படித்த துறவிகள் அல்ல. நிஜமான  துறவிகள். இந்த உலகம் வைத்திருக்கிற எல்லாப் பொருள்கள் மீதும் எல்லா வசதி வாய்ப்புகள் மீதும் எல்லாவற்றையும் அனுபவமாக கேளிக்கையாக, கொண்டாட்டமாக கழித்து முடித்த துறவிகள்.  கழித்து முடித்தவர்கள் துறவிகளாகத்தான் இருக்க முடியும். துறவிகள் கழித்து முடித்தவர்கள்தான். எல்லாவற்றையும் பற்றிக் கொண்டு, சிந்தனைக்குள் அவற்றைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருப்பவர்கள் துறவிகள் அல்ல.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...