மிர்தாத் துறவிகளுக்கு மட்டுமே பேசுகிறார்
நகைச்சுவையாக துறவு பற்றி பேசுபவர்களுக்கான கதைகள் நிறைய இருக்கின்றன. இங்கே அமர்ந்து கொண்டு நீங்கள் தத்துவத்தை தேடிக் கொண்டு உங்கள் சிந்தனை வேறொரு புறத்தில் இருக்கும் என்றால் நீங்கள் எங்கு சிந்திக்கிறீர்களோ, எதை நோக்கி சிந்திக்கிறீர்களோ அதுதான் உங்கள் சிந்தனையின் மையம் என்று குறிப்புகளை தத்துவ விசாரணையில் நீங்கள் பார்க்க முடியும். அப்படி எந்த தன்மையும் துறவிகளுக்கு இருக்காது. துறவிகள் எல்லாவற்றையும் அனுபவித்து இருப்பார்கள். துறவிகள் இனி அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பார்கள். புத்தர் அப்படித்தான் நின்றார். எல்லா பயிற்சிகளையும் எல்லா அனுபவங்களையும் முடித்து விட்டார். இனி புத்தருக்கு இந்த உலகத்தில் செய்து பார்ப்பதற்கு, அனுபவமாக பார்ப்பதற்கு எந்த பொருளும் இல்லை. புத்தர் முழுமையான அனுபவப்பெற்ற நபராக நிற்கிற போது புத்தர் ஞானமானார் என்று ஞானம் பற்றிய கதை இருக்கிறது. அப்படிதான் துறவிகள் இருக்க முடியும்.
முன்பும் பின்பும் எதுவும் இல்லாத நபராக யார் இருக்கிறாரோ அவரே துறவி. பதஞ்சலி மாமுனிவர் யோகாவை துவங்குகிற போது ‘இப்போது’ என்ற வார்த்தையை சொல்லி துவங்குகிறார். ‘இப்போது யோகா துவங்குகிறது’ என்று சொல்லி துவங்குகிறார். ‘இப்போது’ என்பது துறவிகளுக்கு தான் சாத்தியம். இப்போது என்பது முன்பும் பின்பும் இல்லாதது. இப்போது என்பது நேற்றும் நாளையும் இல்லாதது. இப்போது என்பது ஆசையும் அனுபவமும் இல்லாதது. இப்போது என்பது வெறுமையாக இருப்பது. வெறுமையாக இருப்பது என்பது பூத்து விடுவதில்லை. வெறுமையாக இருப்பது காய்த்து விடுவதில்லை. வெறுமையாக இருப்பது என்பது மந்திரம் போல் கனிந்து விடுவதில்லை. வெறுமையாக இருப்பது என்பது எல்லா அனுபவங்களையும் எல்லா கொண்டாட்டங்களையும் எல்லா பற்றுதல்களையும் செய்து பார்த்த பின்பு அதன் மீது வந்து நிற்கிற பண்பட்ட நிலை, பக்குவம் அடைந்த நிலை. இந்த வெறுமையான நிலைக்குப் பெயர் தான் துறவு. அப்படியான துறவு நிலையை இவர்கள் எய்துவதற்க்கு, இவர்கள் மேற்கொள்வதற்கு ஏழு ஆண்டுகள் காத்திருந்தார் மிர்தாத். இந்த ஏழு ஆண்டுகள் காத்திருந்த மிர்தாத், இவர்கள் இப்போது துறவு நிலையை எய்திருக்கிறார்கள் என்று அவர்கள் பேச்சின் வழியாக கண்டு கொள்கிறார். தலைமைச் சீடரின் ஏளனமான பேச்சு. எட்டு சீடர்கள் இருக்கிறார்கள் மிர்தாத்தை சேர்த்து 9 பேர். எட்டு சீடர்களில் ஒருவர் தலைமை. அந்த தலைமைச் சீடரை மிர்தாத் இறுதி நாளில் அந்த இடத்தில் விட்டு செல்கிறார். மற்ற ஏழு சீடர்களையும் அழைத்து செல்கிறார். அப்படித்தான் செல்கிறது கதை.
சீடர்கள் என்றால் அனைவருமே சமமான, இணையான தன்மையில் தான் இருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் ஏழு பேரை அழைத்துக் கொண்டு ஒரு தலைமைச் சீடரை விட்டு செல்வதற்கான காரணம் என்ன. சமாதம் என்பது அவரது பெயர். அவர்தான் தலைமைச் சீடர். சமாதத்தை ஏன் விட்டுச் செல்ல வேண்டும். விட்டு செல்கிறார். அவர் தான் தலைமைச் சீடர். ஏழு பெரும் பணிவானவர்கள். ஒருவர் தலைமையானவர். ஒருவர் ஆணவமானவர். ஆணவமான அவர்தான் மிர்தாத்துடன் பேச்சை துவங்குகிறார். ஆணவமானவர்கள் தான் தலைமை நிற்க முடியும். தலைமைச் சீடர்களுக்கு ஆணவம் இருக்கும் என்பது மட்டுமல்ல. உண்மையிலேயே இது தலைகீழாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய கோட்பாடு. யார் தலைமை ஏற்பார். ஆணவமிக்கவர் தலைமை ஏற்பார். ஆணவம் இல்லாதவர்கள் தலைமை ஏற்பதில்லை. அந்த வகையில் ஏழு சீடர்களும் பணிவானவர்கள். ஒருவர் ஆணவமானவர். அவர் தலைமையை ஏற்றுக் கொள்கிறார். அந்த தலைமையின் அடிப்படையில் ஏழு சீடர்களின் உரையாடலின் அடிப்படையில் இவர்கள் எட்டு பேரும் முழுக்க கொண்டாட்டத்தில், கேளிக்கைகளில் துறவு நிலையை நோக்கி நகர்ந்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மிர்தாத் உணர்த்திய வார்த்தைகளின் வழியாக அவர்கள் பேசிய பேச்சின் வழியாக இப்போது இவர்கள் துறவை எய்திருக்கிறார்கள். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பற்றை கலைந்து விட்டு அன்பை நோக்கி நகர்வதற்குரிய காத்திருப்போடு இருக்கிறார்கள் என்கிற குறிப்பு அவர்களின் ஏளனப் பேச்சின் வழியாக பார்க்கிறார். அப்போது அவர் பேச துவங்குகிறார். இந்த காத்திருப்புக்கான காலம் 7 ஆண்டுகள்.
துறவிகளினுடைய துறவு நிலைக்கான ஆயத்த காலம் ஏழாண்டுகள். துறவிகள் எல்லாவற்றையும் அனுபவமாக பார்த்து கழித்து கைவிடுவதற்கான காலம் ஏழு ஆண்டுகள். ஏழு ஆண்டுகள் என்பது அந்த துறவிகளினுடைய மிக முக்கியமான காலம். அவர்கள் அப்போதுதான் துறவிகளாக மாறிக் கொண்டிருந்த நேரம். மிர்தாத்தின் வருகை என்பது அவர்கள் இன்னும் வேகமாக, இன்னும் நுட்பமாக, இன்னும் சூட்சமமாக துறவு நிலையை நோக்கி நகர்த்தி இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அந்த வகையில் ஏழு ஆண்டுகள் மிர்தாத் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் கொண்டாட்டங்களை வேடிக்கையாக கடந்து சென்று இருக்கிறார். எப்போதும் மௌனமாக இருந்திருக்கிறார். அவர்களது வேடிக்கைகளிலும் கேளிக்கைகளிலும் நழுவி துறவு நிலையை அவர்கள் பெற்றுக் கொள்கிற போது வார்த்தை வெளிப்பாட்டின் வழியாக மிர்தாத் முதல்முறையாக பேசத் துவங்குகிறார். அவர்கள் இதுவரை அனுபவித்த அனுபவமே அவர்களது பார்வை என்று அவர்களைப் பற்றி பேசுகிறார். மிர்தாத்தினுடைய முதல் பேச்சு இப்படித்தான் துவங்குகிறது.
மிர்தாத், அவர்கள் இதுவரை பேசி வந்த பேச்சை பற்றி பேசுகிறார். மிர்தாத் அவர்கள் இதுவரை கடந்து வந்த அனுபவங்களை குறிப்பிடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டி பேசுகிறார். அவர்களுக்குள்ளே இருக்கிற தத்துவ தேடலுக்கும் அவர்கள் அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளி பற்றி பேசுகிறார். இப்படித்தான் ஒரு துறவியை, துறவு நிலை நோக்கி நகர்த்தி துறவு நிலையில் நிற்பதை தெரிந்து கொண்டு துறவிலிருந்து அடுத்த நிலை நோக்கி அவர்களை நகர்த்துவதற்கு, அன்பை நோக்கி அவர்களை நகர்த்துவதற்கு மிர்தாத்தினுடைய பேச்சு துவங்குகிறது. மிர்தாத்தினுடைய
பேச்சு துவக்கத்தை ஒருவர் தொடர்ந்து குறிப்பெடுக்கிறார். இந்த குறிப்புகளை உள்ளடக்கிய மிர்தாத்தினுடைய விரிவான தத்துவ பேச்சு மிர்தாத்தின் புத்தகமாக மிகெய்ல் நைமியால் வடிக்கப்படுகிறது.
இந்த மிர்தாத்தின் பேச்சு துவங்கிய இடம் மிக நிறைவான, வாழ்வை பற்றி எல்லாவற்றையும் அனுபவித்து, பரலோகம், பூலோகம் என்கிற பாகுபாடுகள் கருத்தியல்கள் கடந்து ஒரு மனிதன் நிறைவான துறவு நிலையை நோக்கி நடந்து நிற்கிற போது, மிர்தாத் கேட்பதற்குரிய ஆளாக பார்க்க முடியும். மிர்தாத் அப்போது தான் கேட்பதற்குரிய நபராக இருக்கிறார்.
மிர்தாத்தினுடைய புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு நிறைய பேர் வேலை செய்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கிற மிக முக்கியமான மிகப் பிரபலமான ஒரு புத்தக நிறுவனம், ஒரு பதிப்பக நிறுவனம் வேலை செய்து இருக்கிறது. பிரபல்யமான கவிஞர் ஒருவரை மொழிபெயர்ப்பதற்கு அது பணித்து இருகிறது. அந்த நிறுவனத்தில் அந்த கவிஞரை சுற்றியுள்ள நிறுவனத்தில் பணி புரிகிற பலரும் மிர்தாத்தை முழுமையாக கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து இருக்கிறார்கள். இவ்வளவு முயற்சிக்குப் பிறகு மிர்தாத் பற்றிய பல்வேறு உரையாடல் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மிர்தாத் எல்லோரையும் கேட்கும் நபராக மாற்றிவிடவில்லை. எல்லோரும் மிர்தாத்தை கேட்டு விட முடியாது. மிர்தாத் அப்படியேல்லாம் உள்ளே வருவதற்க்குரியவர் அல்ல. ஒரு மனிதன் மிர்தாத்தை அப்படி ஒன்றும் உள்ளே அழைத்து விடவும் முடியாது. மிர்தாத்திற்குள் இருக்கிற பேரழகு அது.
யார் ஒருவர் எல்லாவற்றையும் அனுபவமாக பார்க்கிறாரோ, அனுபவத்தின் வழியாக எல்லாவற்றையும் பார்க்கிறாரோ அவர்தான் மிர்தாத்தை கேட்பதற்குரிய தகுதியோடு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார் என்பது மிர்தாத்தின் புத்தகம் வழியாக நான் பார்க்கிற யதார்த்தம்.
மிர்தாத் கதை போல் இருக்கிறது என்பதற்கு நிறைய உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் மிர்தாத் மிர்தாத்தின் புத்தகம் போல் இருப்பதை கேட்பதற்கு தனியான ஆயத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் மிர்தாத்தை மிர்தாத்தின் வழியாகவே படிக்க வேண்டும் என்றால் நீங்கள் துறவியாக இருக்க வேண்டும். நீங்கள் துறவியாக இருப்பதற்கு நோக்கம் நீங்கள் அன்பை நோக்கி நகரும் தன்மையோடு அன்பை நோக்கி நகர்கிற நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்பது ஒரு புறம். அன்பை நோக்கி நகர்வதற்குரிய ஆற்றல் உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த வல்லமை உள்ளும் புறமுமாக உங்களுக்குள் நிரம்பி வழிய வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து, கடந்த கால செயல்பாடுகளில் இருந்து, உங்களை விடுவித்து கொண்டவராக, உங்களை நிறைத்துக் கொண்டவராக, உங்கள் விடுதலையை நோக்கி நகரும் தைரியம் கொண்டவராக நீங்கள் மாறுகிறபோது உங்களுக்கு ஆற்றலும் அன்பும் எங்கு செலவு செய்வது, எங்கு செலவு செய்யாமல் இருப்பது என்கிற புரிதல் ஏற்படும். அந்த புரிதலின் வழியாக நீங்கள் நிரம்பிய வல்லமை கொண்டவராக இருப்பீர்கள். அந்த வல்லமையின் வழியாக நீங்கள் அன்பை பரப்ப முடியும். அந்த நிலைக்குப் பெயர் துறவு.
இந்த துறவு நிலைக்கு நீங்கள் வருகிற போது தான் மிர்தாத்தின் சத்தம் உங்களுக்கு கேட்கும். மிர்தாத் பேசுவது உங்களுக்கு புரியும். ஏனென்றால் எப்போதும் மிர்தாத் துறவிகளுக்காக பேசுகிறார். அன்பை நோக்கி நகர்பவர்களுக்காக பேசுகிறார். அனுபவத்திலிருந்து தம்மை உரித்துக் கொண்டு தம்மை மேம்படுத்திக் கொண்டு நகர்கிற எல்லோருக்குமாக பேசுகிறார். யார் ஒருவரும் மிர்தாத்தை எளிமையாக கேட்டு விட முடியாது. மிர்தாத்தை பற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் தைரியமும் அன்பும் பற்றின்மையும் உள்ளடக்கமாகக் கொண்ட துறவு நிலை தான் மிர்தாத்தினோடு பயணிப்பதற்க்கான
மிக முக்கியமான தகுதி.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment