Sunday, October 1, 2023

மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்-உரையாடல் 6//பகுதி 1///சிவ.கதிரவன்

மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்

www.swasthammadurai.com


பேச்சு என்பது சமூக வளர்ச்சியில் மனிதனினுடைய உரையாடல் மேல் நிலையில் நாம் காண்கிற ஒரு பிரதிபலிப்பு. இன்று நாம் பேச்சு என்பதை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சினுடைய வடிவங்கள், அமைப்பு முறைகள் சமூகத்திற்கு சமூகம் மாற்றமடைந்து கொண்டிருந்த நிலையிலேயே இருந்திருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தொடர்ந்து அவ்வாறே இருக்கக்கூடும்.

மனித சமூகம் பேச்சு என்கிற நடைமுறையை துவங்கிய நிலை என்பது என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது, புரிந்து கொள்வதன் வழியாக மிர்தாதின் உரையாடலை புரிந்து கொள்வது என்பது உதவியானதாக எடுத்துக்கொள்ள முடியும்.

 சமூகத்தில் வாழ்கிற மனிதன், காடுகளில் வாழ்ந்த மனிதன், நில அமைப்புகளில் வாழ்ந்த மனிதன், குகைகளில் வாழ்ந்த மனிதன், விவசாய நிலங்களில் வாழ்ந்த மனிதன், நவீன தொழில் நிறுவனங்களின் கீழ் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட மனிதன் என்று எல்லாவித மனிதர்களும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தாம் என்ன நினைக்கிறோம் என்பதை பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கு பேச்சு என்கிற கருவியை பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் மொழிகள் இன்றும் சமூகத்தில் நிலவி வருகின்றன. ஆயிரக்கணக்கான மொழிகள், சொற்கள் இருந்து எழுதுவதற்கு வடிவங்கள் இல்லாமல் இருக்கிற மொழிகளாக இருக்கின்றன. நூற்றுக்கணக்கான மொழிகள் சொற்களும் எழுத்துக்களும் இருந்து பேசுவதற்கு நபர்கள் இல்லாமல் அழிந்துப் போய் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் முன்பாக, ஆதியாக, சாராம்சமாக ஒரு மனிதன் தான் நினைப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொள்வதற்குரிய ஏதோ ஒன்றை தனக்குள் வைத்திருக்கிறார் என்பது பேச்சு துவங்குகிற இடம். பேச்சு அப்படித்தான் துவங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தாம் என்ன நினைக்கிறோம் என்பதை பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கருவியாக பேச்சு இருந்திருக்கிறது.  ஒலிக்குறிப்பு இருந்திருக்கிறது. அதற்கு முன்பு சைகைகள் இருந்திருக்கின்றன. அதற்கு முன்பு ஓவியங்களாக குறியீடுகளை வரைந்த வளர்ச்சி நிலையும் இருந்திருக்கிறது. இப்படி இன்றைய பேச்சினுடைய மூலமாக ஒலிக் குறிப்புகளும் ஒலிக்குறிப்புகளின் மூலமாக ஒரு தனி மனிதன் தம் மனவடிவத்தை மன எண்ணத்தை வெளியில் இருப்பவரோடு பகிர்ந்து கொள்வதற்குரிய கருவியாக பேச்சு அமைந்திருக்கிறது.

பேச்சு என்பது வெளிப்படையான வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல. வார்த்தைகளின் தொகுப்பிற்குள் பேச்சை பயன்படுத்துகிற ஒவ்வொரு மனிதனும் வார்த்தை தொகுப்பை கூட்டி சொல்லுகிற ஒவ்வொரு மனிதனும் தனக்குள் என்னவாக இருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்ளும் வகையிலேயே பேச்சு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நவீன உரையாடல் குறித்த உளவியல் ஆய்வுகளும் உரையாடல் ஆய்வுகளும் பேச்சின் வடிவத்தை வெவ்வேறு விதமாக ஆய்வு செய்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஆய்வுகளில், ஆவணங்களில் பார்க்கிற போது பேச்சு எவ்வாறெல்லாம் பயணிக்கிறது என்று நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. உளவியல் மாமேதை சிக்மன் ஃப்ராய்டினுடைய உளவியல் குறித்த ஆய்வுகளில், வெளிப்பாடு - பேச்சு என்பது மிக முக்கியமான குறிப்பிடத் தகுந்த பகுதி. அவரைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வாளர்களுக்கு பின்பு லகான் போன்ற உளவியல் ஆய்வாளர்கள் உளவியலின் வெளிப்பாடு மொழியியலின் அமைப்பு முறை என்று உளவியலிற்கும் மொழியியலிற்கும் பேச்சிற்கும் இடையே இருக்கிற உறவுகளைப் பற்றிய  உளவியல் ஆய்வுகளை உளவியல் பகுப்பாய்வுகளை செய்திருக்கிற ஆவணங்களை நாம் பார்க்க முடிகிறது.

இவ்வறாக மனிதனின் உள்ளத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்குரிய அம்சங்களோடு பேச்சு என்பது காலங்காலமாக இருந்திருக்கிறது என்பதை நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பேச்சினுடைய வளர்ச்சி என்பதும் மொழியியல் ஆய்வு என்பதும் தனித்தனியாக என்று வாசிப்பிற்குரிய இடத்தில் இருக்கின்றன. ஆனால் மொழி இப்படித்தான் இருந்திருக்கிறது. மொழியின் துவக்கம் இப்படித்தான் இருந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மொழிகளும் இந்த வகைப்பட்டு தான் உருவாகி இருக்கின்றன. காலத்தின் பாற்பட்டு, பருவ நிலையின் பாற்பட்டு, நிலப்பரப்பின் பாற்பட்டு, மனிதனினுடைய பண்பு வளர்ச்சியின் பாற்பட்டு, உரையாடல் செய்ய வேண்டிய தேவையின் பாற்பட்டு விதவிதமான காரணங்களின் பாற்பட்டு மனிதனினுடைய உள வெளிப்பாடு பேச்சாக இருந்திருக்கிறது. இது உளவியல் குறித்து, பேச்சு குறித்து தர்கபூர்வமான பார்வை.

திருவிவிலியத்தில்வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்று ஒரு குறிப்பு இருக்கிறது.ஆதியிலே வார்த்தை இருந்தது. அது தேவன் இடத்திலே இருந்தது. அது தேவனாகவே இருந்தது என்று திருவிவிலிய குறிப்பு ஒன்றை நாம் வாசிக்க முடிகிறது. வார்த்தை, சொற்கள் இவை எல்லாமும் தேவனின் பாற்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன என்று இன்னொரு மெய்யியல் கோட்பாடுகளின் வழியாக நான் புரிந்து கொள்வதற்கு, விவாதித்து பார்ப்பதற்கு வேறொரு பகுதி காத்திருக்கிறது. இது மெய்யியல் கோட்பாடுகளின் வழியாக நாம் புரிந்து கொள்வதற்குரிய தளம்.

முன்பு சொன்ன தர்கபூர்வமான மனிதனினுடைய வளர்ச்சி பூர்வமான பகுதியாக பேச்சுகள் ஒன்றாகவும் மெய்யியல் கோட்பாடுகளின் வழியாக இருக்கிற பேச்சின் வளர்ச்சி நிலை ஒன்றாகவும் நான் பார்க்க முடிகிறது. இன்றும் இவை இரண்டு வேறு தளங்களாக நம் கண் முன்னே இருக்கின்றன. ஆன்மீகம், மெய்யியல் பேசுகிறவர்கள் குறிப்பாக கிறிஸ்துவ  திருவிவிலியம் மறை நூற்களை பின்பற்றுபவர்கள் வார்த்தை சொற்கள் ஆதியிலே தேவன் இடத்தில் இருந்து வரப்பெற்றவை என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

 மொழியியல் ஆய்வுகளை தர்கபூர்வமாக அணுகி பார்ப்பவர்கள் வார்த்தைகளையும் சொற்களையும் மனித இனத்தினுடைய வளர்ச்சி நிலையாக, வளர்ச்சி கருவியாக பார்க்கின்றனர். இந்த இரண்டிற்கும் பொதுவான மையம் ஒரு தனி மனிதனினுடைய வெளிப்பாட்டு கருவியாக  பேச்சு இருக்கிறது. ஆனால் மிர்தாதினுடைய உரையாடல் என்பது தர்கபூர்வமான உரையாடலாக வார்த்தை கோர்வைகளாக ஒலிக் குறிப்பின் சேர்மானமாக மட்டும் இல்லை. அவை மிக நுட்பமான ஒரு பிணைப்பாக உருவாக்கப்படுகிறது. மிர்தாத் பேச துவங்குகிற புத்தகம் முழுவதும் மிர்தாதின் பேச்சு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கிற ஒலிக் குறிப்புகளின் வாக்கியங்களில் உரையாடல்களில் கவிதைகளில் நாம் பார்க்கிறபோது முழுவதும் அவை சேகரிக்கப்பட்ட சேர்மானமாக தொகுக்கப்பட்ட உரையாடல் வடிவம் மட்டுமல்ல. அவை ஒரு சூத்திரம். நீங்கள் பேச்சு என்பது மனித மனதின் வெளிப்பாடு என்ற நிலையில் உங்களுக்கு பேச்சு என்கிற  கருவியை புரிந்து கொள்ள முடியும். சொல் என்ற வெளிப்பாட்டு கருவியை புரிந்து கொள்ள முடியும். ஆனால் சூத்திரங்கள் அப்படியானவை அல்ல. சூத்திரங்கள் ஒற்றை சேர்மானத்தில் பன்முக அடையாளங்களை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை. 

தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...