Sunday, October 1, 2023

மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்-உரையாடல் 6//பகுதி2///சிவ.கதிரவன்

                                     மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்

www.swasthammadurai.com

இந்திய மரபில், கிழக்கத்திய மரபில் செய்யுள் பாக்களின் வடிவமைப்பில் சொற்களின் கூட்டாக செய்திகள் பதிவு செய்யப்படவில்லை. ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மரபில் எழுதப்பட்ட செய்யுள்களும் மந்திரங்களும் புராதனக் கவிதைகளும் மறை சார்ந்த, மறை அல்லாத இலக்கியங்களும் பெரும்பாலும் பேச்சு தொகுப்பாக, உரையாடல் தொகுப்பாக இருப்பதில்லை. அவை சூத்திரங்களாகவும் மந்திரங்களாகவும் செய்யுள் தொகுப்பாகவும் இருக்கின்றன. செய்யுள் தொகுப்பில் நாம் ஒற்றை வாக்கியத்திற்குள் ஒற்றை அடிக்குள் பன்முகம் பார்க்க முடியும். வெவ்வேறு வகையான பொருள்களை  எடுத்துக் கொள்ள முடியும். ஒற்றைச் செய்யுளில், ஒற்றை வாக்கியத்தில், ஒரு அடியில் நாம் பெற்றுக் கொள்வதற்கு நிறைய செய்திகளை உள்ளடக்கமாக வைத்திருக்கிற தன்மையோடு சூத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு பெயர்தான் செய்யுள்கள் அல்லது கவிதைகள் அல்லது சூத்திரங்கள் அல்லது இந்த தொகுப்பை தாண்டி இருக்கிற வேறொரு வடிவம். இந்த வடிவம் இந்த வடிவத்திற்கான அமைப்பு முறை, இந்த வடிவத்திற்குரிய சொற்றொடர் வேகம் இவை  எல்லாமும் வெறுமனே  ஒலிக் குறிப்பினுடைய தொகுப்பு மட்டுமல்ல. இவை ஒலிக் குறிப்பின் வழியாக குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட சேர்மானத்தில், குறிப்பிட்ட அடர்த்தியில் ஒலிக் குறிப்பின் வழியாக வெவ்வேறு செய்திகளை வெவ்வேறு சூத்திரங்களை வெவ்வேறு நுட்பங்களை மனித சமூகத்திற்கு சொல்வதாக மிர்தாத் வழி மிகெய்ல் நைமி மிர்தாதின் புத்தகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படியான சூத்திரங்களாக இந்த புத்தகம் நிரம்பி இருக்கிறது.

 சூத்திரம் நிரம்பிய புத்தகமாக, கவித்துவம் மிக்க வார்த்தைகள் நிரம்பிய புத்தகமாக, செய்யுள் அடர்த்தியுள்ள வாக்கியங்கள் நிரம்பிய புத்தகமாக, மிர்தாதின் புத்தகம் இருக்கிறது. இத்தகைய அடர்த்தியோடு மிர்தாதின் புத்தகம் இருக்கிறது என்கிற முன் தயாரிப்பின் வழியாகவே மிர்தாத் கூற வருகிற, மிர்தாத் பகிர்ந்து கொள்ள விரும்புகிற, மிர்தாத் சொல்ல நினைக்கிற ஒன்றை நம்மால் பார்ப்பதற்கும்  கேட்பதற்கும் செய்து  பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

சொற்களின் தொகுப்பை இலக்கியங்களின் தன்மையோடு ஒரு தினசரி செய்தித்தாளை, வார பத்திரிகையை வாசிப்பது போல நாம் வாசித்துக் கடப்பதற்கு செய்வோம் என்றால் மிர்தாதின் புத்தகத்திற்கு செய்கிற மரியாதை அல்ல அது. ஏனென்றால் செய்தித்தாளையும் தினசரி பத்திரிகைகளையும் இந்த மனித மனம் தன் தனிமையில் இருந்து, சோர்வில் இருந்து, தான் தாங்கி நிற்க முடியாத அழுத்தத்திலிருந்து தன்னை திருப்பிக் கொள்வதற்காக வாசித்து பழகி இருக்கின்றன என்று உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

மெய்யியல் பேசுகிற நவீன மெய்யியல் கோட்பாட்டாளர்களும் மனம் தன் தனிமையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக புத்தகங்களை வாசிக்கிறது என்று திட்டவட்டமாக சுட்டிக் காட்டுகின்றனர். ஆக,  நாம் வாசிக்கிற வாசிப்பு என்பது  தேடி வாசிக்கிற பழக்கம் என்பதிலிருந்து தவறி, தேடி வாசிக்கிறோம் என்கிற நோக்கத்தில் இருந்து வழி மாறி நமக்குள் இருக்கிற தனிமையும் நமக்குள் இருக்கிற சோர்வையும் நமக்குள் இருக்கிற தடுமாற்றத்தையும் பார்ப்பதற்கு தவிர்த்துக் கொண்டு பார்ப்பதற்கு பயந்து கொண்டு பார்க்க கூடாது என்கிற ஒருமுகமாக நம்மை திருப்பிக் கொண்டு செய்தி தாளை மேய்கிறோம், செய்தித்தாளை வாசிக்கிறோம் அல்லது இன்ன பிற வாசிப்பிற்குரிய வாக்கியங்களை கையில் எடுக்கிறோம். இது நவீன உளவியல் திட்டவட்டமாக பதிவு செய்து வைத்திருக்கிற மிக முக்கியமான குறிப்பு. இது வாசிப்பு அல்ல. இப்படியான வாசிப்பு, வாசிப்பு வகையில் வராது. வாசிப்பு சற்று ஆழமான தேடுவதற்குரிய தயாரிப்போடு நகர்வது. நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற ஒன்றை, சொல்லிக் கொண்டிருக்கிற ஒருவரோடு இணைப்பதற்க்குரிய களம் வாசிப்பு.

நீங்கள் மெய்யியலைத் தேடிக் கொண்டிருந்தால் மெய்யியலைச் சொல்லிக் கொண்டிருக்கிற ஒருவரோடு உங்களை வாசிப்பு இணைக்கும். நீங்கள் இலக்கியத்தை தேடிக் கொண்டிருந்தால் இலக்கியத்தை தந்து கொண்டிருக்கிற ஒருவரோடு உங்களை வாசிப்பு இணைக்கும். நீங்கள் ஆன்மீகத்தை தேடிக் கொண்டிருந்தால் ஆன்மீகத்தை தந்து கொண்டிருக்கிற ஒருவரோடு  உங்களை வாசிப்பு இணைக்கும். நீங்கள் கலை, இலக்கியத்தை, பண்பாட்டுச் சூழலை, பூலோக நிலப்பரப்பு சார்ந்த கணிதவியல், அறிவியல் உள்ளிட்ட எந்த ஒன்றையும் நீங்கள் தேடிக் கொண்டிருப்பீர்கள் என்று சொன்னால் அவற்றைத் தந்து கொண்டிருக்கிற ஒருவரோடு உங்களை  இணைப்பதற்குரிய கள ஏற்பாட்டை வாசிப்பு செய்யும் .அப்படியான கள ஏற்பாடு தான் வாசிப்பு.  மெய்யியல் தேடுகிற ஒருவருக்கு, மெய்யியல் தந்து கொண்டிருக்கிற ஒருவர் என இருவரும் சந்திக்கிற சந்திப்பு மையம் நிகழ வேண்டும். அதற்குரிய வாசிப்பு களமாக சில முன் தயாரிப்புகளோடு வாசிப்பு என்பது என்ன என்கிற புரிதலோடு நாம் செல்ல வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் வாசிப்பு என்பது உங்களது தேடலை தந்து கொண்டிருக்கிற ஒருவரை நோக்கி நகர்த்துகிற செயல்பாட்டிற்கு இசைவானதாக பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒரு வாசிப்பினுடைய நுணுக்கங்களை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். மிர்தாதின் வார்த்தைகள் வாசிப்பிற்குரியவை. மிர்தாதின் வார்த்தைகள் தப்பித்து செல்வதற்குரியவை அல்ல. நீங்கள் தப்பித்து கொள்வதற்குரிய சாகசங்களின் பாற்பட்டு நீங்கள் மிர்தாதை வாசிப்பீர்கள் என்று சொன்னால் மிர்தாத் உங்களுக்கு உதவி செய்வதில்லை. இன்னும் நுட்பமாக நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மிர்தாதினுடைய வார்த்தைகள் சூத்திரங்கள் போல் இருக்கின்றன. நீங்கள் தேடும் போது மட்டும் தான் ஒற்றை வாக்கியத்திற்குள் ஒற்றை சொற்றொடருக்குள் நூறுநூறு பொருள்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் நூறு பொருள்களை கண்டுபிடிப்பதற்க்குரிய தன்மையோடு உங்களை தயாரித்து வைத்திருந்தால் தேடலுக்குரிய வேகத்தில் நீங்கள் இருந்தால், மிர்தாத் பேசுகிற ஒற்றைச் சொற்றொடர் 100 சொற்றொடர்க்குரிய சமமான கனத்தோடு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். மிகுந்த முக்கியமான பரிந்துரை இது.

மிர்தாத் கதையை துவங்கி சொல்கிறவர்கள் மிர்தாத் புத்தகத்தை விதவிதமாக, வெவ்வேறு விதமாக விளக்கம் அளித்து சொல்கிறவர்கள் மிர்தாதைப் போற்றி விமர்சனம் செய்பவர்கள் என்று எல்லோரும் புத்தகத்தை அவரவருக்குரிய  அர்த்தங்களோடு, பொருளோடு நம் முன் வைக்கின்றனர். எல்லாமும் பொருத்தமாகவே இருக்கிறது. பேராசிரியர் ஒருவர் மிர்தாதின் புத்தகத்தை படித்துக்கொண்டு ஏழு ஆண்டுகள், ஏழு திரைகள் என்று ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இந்திய மெய்யியல் கோட்பாட்டில் இருக்கிற ஏழு ஜென்மங்கள் என்கிற பொருளோடு மிர்தாதின் காத்திருப்பின் காலமாக ஏழு ஆண்டுகள் பொருந்தி போகிறது என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார். பொருத்தமாக இருக்கலாம். பொருந்தி போவதற்கு வாய்ப்பும் கூட இருக்கலாம். இந்திய மெய்யியல் கோட்பாடுகள் சொல்கிற ஏழு என்கிற குறியீடு மிர்தாத் காத்திருப்பாக இருக்கிற ஏழு என்ற குறியீடோடு பொருந்தலாம். அந்தப் பேராசிரியரினுடைய ஆய்வு சரியாக கூட இருக்கலாம். இந்த தேடலும் மிர்தாதின் வார்த்தையும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஏழு என்பதற்குரிய குறியீடை வேறொன்றாக நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எந்த மனிதனும் 100 விதமான மனிதன், 100 விதமான சிந்தனைகளோடு ஒற்றை வார்த்தையை மிர்தாதின் வழியாக தேடினால் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கிற சிந்தனைகளுக்கு மிர்தாத் விடை அளிக்கிற சொல் அடர்த்தியை தன் வாக்கியத்தில் வைத்திருக்கிறார் என்கிற தரத்தை நாம் வாசிப்பின் வழியாகவே  பார்க்க முடியும். வாசிப்பு என்பது என்ன என்பதை தெரிந்து கொள்வதன் வழியாகவே  பார்க்க முடியும்.

ஆகவே மிர்தாதை நீங்கள் வாசிப்பதற்கு முன்பு வாசிப்பு என்பது என்ன என்கிற தரம் குறித்து உங்களுக்கு ஒரு போதுமான பார்வை அவசியமாகிறது என்று நான் கருதுகிறேன். வாசிப்பு என்பது தேடுகிற ஒருவரை, தந்து கொண்டிருக்கிற ஒருவரோடு சந்திக்கச் செய்கிற வாய்ப்பு. தந்து கொண்டிருக்கிற ஒருவரை தேடுகிற ஒருவரோடு கொண்டு இணைக்கிற முயற்சி. இதுதான் வாசிப்பிற்கு நான் கருதுகிற இலக்கணம். இத்தகைய தன்மையோடு வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகச் சரியாக மிர்தாதின்  புத்தகத்திற்கு பொருந்திச் செல்லும். இப்படியான பொருத்தங்களோடு நம் வாசிப்பு  நிகழ வேண்டும் என்கிற அம்சத்தில் நிகழும் என்றால் மிர்தாத் காத்திருந்த ஏழு ஆண்டுகளும் கலகலப்பான அந்த கூடாரத்தில் அந்த துறவிகள் தங்கி இருந்த மடத்தில், ஒரு இரவு நேரத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிற போது நான் என்கிற வார்த்தை குறித்து ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. நான் என்றவுடன் நமக்கு நான் என்ற சொல்லுக்கு பின்னால் இருக்கிற கற்பனைகளும் திருப்பங்களும் நம்மை பற்றி நமக்கு இருக்கிற அபிப்ராயங்களும் வெளிப்படும்.

நான் என்றவுடன் நான் யார் என்று நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேனோ நான் யார் என்று ஒரு தனி மனிதன் தன்னை என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அது நான். நான் என்பது ஒரு தனி மனிதன் தன்னை பற்றி வைத்திருக்கிற விருப்பம். நான் என்பது ஒரு தனி மனிதன் தன்னைக் குறித்து வைத்திருக்கிற கற்பனை.

நான் என்பது ஒரு தனி மனிதன் தன்னைப் பற்றி வைத்திருக்கிற ஆசை. நான் என்பது ஒரு தனி மனிதன் தன் குறித்து தானே உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம். இத்தகைய நான் என்கிற வேறுவேறுபட்ட தனிமனித அபிப்பிராயங்களையும் தனிமனித குறியீடுகளையும் தனி மனித விருப்பங்களையும் தனிமனித கொஞ்சல்களையும் ஏக்கங்களையும் உள்ளடக்கமாக வைத்திருக்கிற நான் என்கிற சொல்லை எந்த தனி மனிதனும் விட்டுவிட வேண்டும். எந்த தனி   மனிதனும் தூக்கி சுமக்க கூடாது. நான் என்பது நிஜமாகவே ஒன்று இருக்கிறது. அது அன்பின் பாற்பட்டு கண்டுகொள்ள முடியும் என்கிற நோக்கத்தை மையமாகக் கொண்ட அந்த துறவு மடத்தில் இந்த நோக்கத்தில் இருந்து விலகிச் சென்ற எட்டு துறவிகளும் நான் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமை குரு நான் என்கிற நிஜமான நிலையிலிருந்து வழி தவறி, நான் என்கிற அபிப்பிராயங்கள் மீது, கற்பனைகள் மீது கவனம் இல்லாமல் நான் என்கிற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது எட்டு நபரில் ஒருவர் கேட்கிறார், நான் என்கிற சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நமது சபை சட்டத்தின்படி நான் என்கிற சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் நீங்கள் நான் என்று மீண்டும் மீண்டும் அந்த சொல்லை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சொல்லிற்கு மிகப் பொருத்தம் இல்லாத, ஆபத்தான, அன்பிற்கு நேர்எதிரான பொருள் இருக்கிறது என்று.

எனவே நான் என்கிற சொல்லை நீங்கள் பயன்படுத்துகிற போது மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைவூட்டும் விதமாக ஒரு மனிதன் சொல்கிறார். அந்த எட்டு நபரில் ஒருவர் சொல்கிறார். அப்போது தலைமை குரு ஏளனமாக அவர் சொல்லினுடைய பொருளை உள்வாங்காமல் நான் என்கிற சொல்லை யார் உருவாக்கி இருக்கிறார்கள். நான் என்கிற சொல்லை தவிர்ப்பதற்கு, தவிர்த்து சரியான சொல்லை பயன்படுத்துவதற்குரிய கட்டளையை யார் பிறப்பித்திருக்கிறார்கள் என்று விவாதத்தை நகர்த்துகிறார். இந்த துறவு மடத்தினுடைய ஆதித் தந்தையாக இருக்கிற நோவா என்பவர் தான் நான் என்கிற சொல்லை தவிர்ப்புச் சொல்லாக நமக்கு முன்மொழிந்திருக்கிறார் என்று அந்த கூட்டத்தில் விவாதம் நடக்கிறது. நான் என்ற சொல் பயன்படுத்தக் கூடாத சொல். ஆன்மீகம் பேசுகிறவர்கள், மெய்யியல் பேசுகிறவர்கள், தத்துவங்கள் பேசுகிறவர்கள், பணிவு குறித்து பேசுகிறவர்கள் யார் ஒருவரும் நான் என்கிற சொல்லை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என்பது மறை சட்டம்.

நான் என்கிற சொல்லை பயன்படுத்துவது என்பது மெய்யியல் கோட்பாடுகளின் படி, ஆன்மீக கோட்பாடுகளின் படி தவிர்க்கப்பட வேண்டியது. அது தடை செய்யப்பட்டது. இந்த வகையிலேயே இந்த நினைவூட்டல் நடக்கிறது. அது  தலைமை குருவிற்கு பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. பொருட்படுத்தவும் இல்லை. அவர் நோவாவின் சட்டத்தை மறுதலித்தது மட்டுமல்லாமல் நோவாவின் ஆதித் தந்தை இங்கே இருக்கிறார். நோவாவிற்கு உபதேசித்த கடவுள் திருமகனார் இங்கே இருக்கிறார். அவர் நான் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்போம் என்று விவாதத்தை ஏளனமாக மிர்தாதை நோக்கி திருப்புகிறார்.

தொடர்ந்து பேசுவோம்...


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...