Friday, October 13, 2023

மிர்தாத் புத்தகத்தின் உள்ளடக்கம் - மிர்தாதின் புத்தகம் - சிவ.கதிரவன்/ பகுதி 1

 

மிர்தாத் புத்தகத்தின் உள்ளடக்கம்

www.swasthammadurai.com


மிர்தாதின் புத்தகம் என்கிற புத்தகத்தை தேடி, அந்த கிராமத்து இளைஞன் ஒரு செங்கத்துப் பாதையின் வழியாக இடர்பாடுகளை மீறி பல்வேறு பணயங்களைக் கடந்து, ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்கிறார். மேற்கொண்டு அவர் வெற்றிபெறுகிற இடம், வந்து சேருகிற இடம் மிர்தாதின் புத்தகம் கிடைப்பதற்கு உரிய அரிய இடமாக இருக்கிறது. அந்த மிர்தாதின் புத்தகத்தை பல ஆண்டுகாலம் காத்திருந்த அந்த மடாலயத் துறவி அந்த இளைஞனுக்கு பரிசளிக்கிறார். மிர்தாதே உன்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று அவரிடம் கூறுகிறார். இப்படி கூறி தன் வாழ்நாளை அதோடு நிறைவு செய்து கொள்வதாக குறிப்பிட்டு கல்லாகிப் போகிறார். பின்பு அந்த மடாலத்தினுடைய துறவியாக தம்மை அறிமுகம் செய்து கொண்ட தலைமைத் துறவியின் பரிந்துரையின் பெயரில், பரிசளிப்பின் பெயரில் அந்த இளைஞன் மிர்தாதின் புத்தகத்தை வாசிக்க துவங்குகிறார்.

மிர்தாத் நீண்ட காலம் காத்திருந்த பிறகு தாம் பேசியது குறித்து அந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அந்த இளைஞன் வாசித்துக் கொண்டிருக்கிறான். மிர்தாத் அந்த பதிவுகளில் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். தாம் ஏன் காத்திருந்தோம், தாம் ஏன் இங்கு வந்து சேர்ந்தோம் என்று விரிவாக உரையாடுகிறார். இந்த உரையாடலின் வழியாக அங்கு அதுவரை இருந்த பலவீனமான பிற்போக்கான பல்வேறு வகைப்பட்ட மடாலயத்திற்கு எதிரான, அந்த கிராமத்திற்கு எதிரான, இயற்கைக்கு எதிரான பிரபஞ்சத்திற்கு எதிரான, பல்வேறு அம்சங்களை தன் உரையின் வழியாக தகர்க்கிறார். இப்படித்தான் மிர்தாதினுடைய உரையாடல்  துவங்குகிறது.

ஏன் பெரும் தகர்ப்பை மிர்தாத் செய்ய வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மடாலயம் உலகத்தூய்மையை வற்புறுத்துகிறது. வலியுறுத்துகிறது. உலகத் தூய்மை அன்பால் வருவதற்குரியது. அன்பே உலகத் தூய்மையை உருவாக்கும் என்று கூறுகிற மறைக் கோட்பாட்டை உள்ளடக்கமாக வைத்துச்   செயல்படுகிற மடாலயம் அது. அந்த மடாலயத்தை துவங்கியவர்கள் இறைவனின் பெயரால் இறைவனின் வழிகாட்டுதலால், வழிகாட்டுதலின் காரணமாக அந்த மடாலயத்தை துவங்கினார்கள் என்று நம்பிக்கையும் வரலாற்று குறிப்பும் காணப்படுகிறது. இத்தகைய மேன்மையும் துல்லியமான நிலையும் கொண்ட அந்த மடாலயம் காலத்தின் போக்கில், சமூக மாற்றத்தின் வழியாக தான் கொண்டிருந்த மைய நீரோட்டத்தை விட்டு வழக்கமான பிற்போக்குத்தனங்களை கையில் ஏந்தி பயணிக்கிற  மடாலயமாக மாறிக்கொண்டிருக்கிற  வேளையில் மிர்தாத் அந்த மடாலயத்திற்கு வருகை தருகிறார். இதன் காரணமாகவே அந்த பிற்போக்குத்தனங்களை முறியடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அன்பை, உலகத்தின் நேசத்தை, தனி மனிதனின் உளத் தூய்மையை வலியுறுத்திச் சொல்வதற்குரிய அம்சங்களை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிற மடாலயத்தின் கோட்பாடுகளை நினைவூட்டுவதற்காக மிர்தாத்  வந்ததும் பேச துவங்கியதும் நிகழ்கிறது.

மிர்தாத் அவரது உரையை துவங்குகிற போது மடாலயத்தின் அடிப்படை செயல்பாடுகளை எங்கிருந்து துவங்குவது? எங்கிருந்து மேம்படுத்துவது? எவ்வாறு ஒழுங்கு செய்வது என்று  பரிந்துரைகளோடு துவங்கவில்லை. சமூகத்தில் ஒன்றை சரி செய்ய வேண்டும் என்று கருதுகிற போது, சமூகத்தில் ஒன்றை நெறிப்படுத்த வேண்டும் என்று கருதுகிற போது அந்த நெறிப்பாடுகள் சமூகத்தில் இருந்து துவங்குவதாக நம் மனம் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறது. செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது.

உலக அளவில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய சீர்திருத்தங்கள் யாவும் சமூக சீர்திருத்தங்களாகவே இன்று இருப்பதனால் நாம் தொடர்ந்து சமூகத்தின் வழியாக, சமூக சீர்திருத்தத்தின் வழியாக, சமூக மாற்றத்தின் வழியாக அன்பை, வன்முறை அற்ற சமூக அமைப்பை, மனிதனுடைய அக தூய்மையை தீர்மானிக்க முடியும், உருவாக்க முடியும் என்று நம்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையிலேயே நம்பிக் கொண்டும் இருக்கிறோம். உண்மையிலேயே அப்படித்தான் ஒரு தனி மனிதனினுடைய அக அமைதியும் உள்ளத் தூய்மையும் சமூக சீர்திருத்தத்தின் வழியாக சாத்தியமாகிறதா என்றால் மிர்தாத்தின் பார்வையில் அப்படியல்ல. மிர்தாத்  சமூக மாற்றத்தின், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தை வேறொரு முனையில் இருந்து துவங்குகிறார். மிர்தாத் சமூக மாற்றத்தையும் தனிமனிதனினுடைய அகத்தூய்மையையும் துவங்குகிற இடம் சமூகமாக இல்லை. மிர்தாத் துவங்குகிற புள்ளி இன்று சமூகம் சீர்திருத்தம் நிகழ்வதற்கு அடிப்படையாக வைத்திருக்கிற கருவிற்கு நேர் எதிரானது. சமூக சீர்திருத்தம் எங்கிருந்து துவங்க வேண்டும் என்று சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறதோ, அந்த  புள்ளிக்கு நேர் எதிரானது.

இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்த இயக்கவாதிகள் சமூகத்தினுடைய பிற்போக்குத்தனங்களிலிருந்து சமூக சீர்திருத்தத்தை துவங்கினார்கள். எளிய மக்கள் இறைவழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று சமூக சீர்திருத்தம் இயங்கி இருக்கிறது.  சமயங்கள், சமயக் கோட்பாடுகள் எல்லா மனிதர்களையும் சமமாக நடத்தினாலும் சமயத்தை மையமாக வைத்து இயங்குகிற சிறு கூட்டம் எல்லா மனிதர்களையும் சமமாக நடத்துவதில்லை என்று சமூக சீர்திருத்தங்கள் உருவாகி இருக்கின்றன. நிகழ்ந்திருக்கின்றன.

ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின், ஒரு குழுவின், ஒரு சமூக செயல்பாட்டு அமைப்பின் சுதந்திரத்தை அனுமதிக்காத சமூக நெறிமுறைகள் உடைக்கப்பட வேண்டும் என்று சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஒரு ஆட்சி அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும் என்று சமூகப் புரட்சிகள், சமூக சீர்திருத்தங்கள் வெவ்வேறு கோட்பாடுகளின் கீழ் நடந்திருக்கின்றன. இந்திய சுதந்திரத்தில் அப்படியான பாத்திரத்தை காந்தியடிகள் செய்வதாக வரலாறு ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது.

இந்திய சமூகம் பிளவுற்று இந்திய ஆட்சி அதிகாரம், இந்திய நிர்வாக அமைப்பு, இந்தியன் அல்லாத வேறு ஒரு தலைமையின் கீழ் நடந்து கொண்டிருந்தபோது இந்திய சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்று முன்னெடுத்த காந்தியக் கோட்பாடு சமூகத்திலிருந்து துவங்கியது. சமூக மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் துவங்கியது.

பெருமகனார் வள்ளலாரின் கோட்பாடுகள் சமூக சீர்திருத்தமாக வரையறுக்கப்படுவதற்கான காரணம் அவரது கோட்பாடுகள் தனிமனிதனினுடைய ஆன்மீகத் தேடல் சமூகரீதியில் மேம்படுத்தப்படுவதன் வழியாக  விளையும் என்று அவரது பார்வையில் அவரது பரிந்துரையில் இருந்ததால் சமூக சீர்திருத்த இயக்கமாக அவர் உருமாற்றம் அடைய வேண்டிய பாதையில் நகர்ந்தார். இன்னும் நிறைய சமூக சீர்திருத்தவாதிகள் இந்தியச் சூழலில், இந்திய தத்துவ பரப்பில், இந்திய சமூக சீர்திருத்த பரப்பில் வளர்ந்திருக்கிறார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். வரலாற்றிற்கு அப்பாற்பட்ட சமூக சீர்திருத்தவாதிகளும் மனிதன் சுதந்திரமாக, மகிழ்வாக, சமதர்மமாக, சமத்துவமாக வாழ்வதற்கு சமூகம் தான் மாற்றம் அடைய வேண்டும் என்று போராடி, வலியுறுத்தி, பரிந்துரைத்து தன் வாழ்நாளை நிறைவு செய்தவர்கள். இப்படியான தனிமனிதனினுடைய மகிழ்வு சமூகத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று இந்திய சுழலில் செயல்பட்டவர்கள் ஏராளம்.

உலக அளவில் தத்துவ விசாரணைகளில், தத்துவ செயல்பாடுகளில்  சமூக மாற்றம் தான் ஒரு மனிதனினுடைய எல்லாவற்றையும் தீர்மானிக்க வல்லமையுடையது என்ற பெரும் கோட்பாட்டை வகுத்துக் கொடுத்த மாபெரும் மேதைகள்  ஏங்கல்ஸ் மற்றும் காரல் மார்க்ஸ். காரல் மார்க்ஸ், பெடரிக் ஏங்கல்ஸினுடைய சமத்துவம் நிறைந்த கோட்பாடுகள் சமூகம் மாறுவதன் வழியாகவே நிறைவேற்ற முடியும் என்று வலியுறுத்துகின்றன. இப்போதும் நாம் பார்க்க முடியும்.

ஆக, பின்பு சமூகம் குறித்து தத்துவங்களை விளக்கியவர்கள் தனி மனிதனினுடைய மகத்துவத்தை பேண வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லோரும் மாற்றம் என்பது சமூகத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த காரணத்தினால் கருதிக் கொண்டிருக்கிற காரணத்தினால் மாற்றங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் சமூகமே என்று இன்றும் ஒரு பொது மனநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் மகிழ்வாக இருப்பதற்கு யார் காரணம் சமூகம் காரணம். ஒரு மனிதன் துயரமாக இருப்பதற்கு யார் காரணம் சமூகம் காரணம். சமூகம் மாற்றப்படுவதன் வழியாகவே மனிதனின் மகிழ்வும் துயரமும் தீர்மானிக்கப்படுகிறது என்று உலகம் முழுவதும் இன்றும் போற்றப்படுகிற காரல் மார்க்ஸினுடைய கோட்பாடு மதிப்பிற்குரியதாக இருக்கிறது. இந்த சமூகம் மாற்றம் தான் ஒரு மனிதனினுடைய மகிழ்வையும் துயரத்தையும் தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கிறது என்று மார்க்ஸ் உள்ளிட்ட தத்துவஞானிகளும் வள்ளலார் உள்ளிட்ட ஆன்மீக போதனையாளர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் துவங்குகிற இடத்திலிருந்து மிர்தாத் துவங்கவில்லை. மிர்தாத் துவங்குகிற இடம் சமூகம் சார்ந்தது அல்ல. மிர்தாத் மடாலயத்திற்குள் இருக்கிற பிரபஞ்சம் முழுவதும் அழிக்கப்பட்டு பிரபஞ்சம் முழுவதும் மறு உருவாக்கம் செய்வதற்காக ஒரு குழுவை  தீர்மானித்து, ஒரு குழுவை உருவாக்கி வைத்திருந்த   இறை வழிகாட்டுதலின் பெயரால் தொடர்ந்து நடந்து வருகிற, நிகழ்ந்து வருகிற அந்த மரபு சார்ந்த மடாலயத்திற்குள் இருக்கிற ஒரு சிறு குழுவிடம் மாற்றம் குறித்து மிர்தாத் பேசுகிறார்.

மிர்தாதினுடைய பேச்சு முறை சமூகம் சார்ந்தது அல்ல. மிர்தாதினுடைய நேர் எதிரான வேறுபாடு இது.  மிர்தாத் நேர் எதிராக வேறுபடுகிறார். சமூகம் எவ்வாறு இருக்கிறது என்கிற எல்லா நிலைக்கும் நேர் எதிரான தளத்தில் மிர்தாத்  நிற்கிறார். ஒரு மனிதன் மகிழ்வாக வாழ்வதற்கு சமூகம் தான் காரணம் என்று நம்பிக் கொண்டிருக்கிற, பின்பற்றிக் கொண்டிருக்கிற ஒரு பெரும் கூட்டத்திற்கு நேர் எதிரான திசையில் நேர் மாற்றான திசையில் மிர்தாத் தம் உரையாடலை துவங்குகிறார். நலமாக இருப்பதற்கு அன்பாக இருப்பதற்கு இந்த குழுவில் இருந்து குழுவிற்குள் இருக்கிற ஒவ்வொரு தனி மனிதனின் மனநிலையில் இருந்து மாற்றம் ஏற்பட வேண்டும், புரிதல் ஏற்பட வேண்டும் என்று மிர்தாத் தம் உரையாடலை துவங்குகிற போது துவங்குகிறார்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...