மிர்தாத் புத்தகத்தின் உள்ளடக்கம்
மிர்தாதின் பரிந்துரை இந்த தனி மனிதனினுடைய அகமாற்றம் என்பதே சமூகத்தினுடைய பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்கிற ஒரு கோட்பாட்டை நமக்கு உணர்த்துகிறது. சமூக முழுவதும் கூட்டமாக நிறுத்தி வைத்து மிர்தாத் உரையாடலை செய்யவில்லை. சமகாலத்தில், வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது போல சமூக மாற்றம் தான் தனி மனிதனினுடைய துயரங்களுக்கும் மகிழ்விற்கும் காரணம் என்கிற கோட்பாட்டினுடைய சாராம்சத்தில் மிர்தாதின் உரையாடல் அமையவில்லை. மிர்தாத் துவங்குகிற இடம் குழுவிடம். சீர்திருத்தமும் அன்பும் மகிழ்வும் துவங்குகிற இடம் மிர்தாதைப் பொறுத்த அளவில் தனிமனிதனின் அகநிலை. எந்த ஒரு தனி மனிதன் அகநிலையில் புரிதலோடு, நிதானத்தோடு, பண்போடு நிற்கிறானோ அவனே சமூகத்தினுடைய எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் மருந்திட வல்லமை உடையவராக மாற முடியும் என்று மிர்தாதின் வழி நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமூகம் என்பது தனி மனிதனினுடைய அகமாற்றத்திலிருந்து வளர்ச்சியடைவது விரிவடைவது என்று மிர்தாதினுடைய உரையாடல் துவங்குகிறது. இது ஆய்வு அடிப்படையில் சரி தவறு என்கிற ஒப்பீட்டிறகுள் நாம் செல்வது பொருந்தாது. சமூகம் செல்கிற பாதை ஒன்றாக இருக்கிறது. சமூகம் சொல்கிற தத்துவங்கள் ஒன்றாக இருக்கிறது. சமூகம் பரிந்துரைக்கிற பரிந்துரைகள் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உலகை அன்பால் வெல்ல முடியும், அன்பே உலகை வெல்வதற்குரிய எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று துவங்குகிற மிர்தாத் சமூகத்திலிருந்து துவங்கவில்லை. அன்பிற்காக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிற தனிமனிதர்கள் சிலரிடமிருந்து துவங்கினார். இப்படித்தான் மிர்தாதின் உரையாடல் துவங்குகிறது.
அன்பை போதிக்கிற, அன்பை பின்பற்ற வேண்டும் என்கிற பலருக்கும் மிர்தாதினுடைய போதனை சமூகம் சார்ந்ததாக இல்லாமல் தனிமனிதனினுடைய அகசெம்மை,
அகசீரமைப்பு சார்ந்ததாக இருக்கும் என்றால் அவற்றைப் பின்பற்றுவதன் வழியாக நல்லதொரு நிலைக்கு, அன்பை புரிந்து கொள்வதற்கு, அன்பை பரப்புரை செய்வதற்கு, அன்பை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அன்பு என்பது கொடுக்கப்படுவது அல்ல, அன்பு என்பது ஒரு பொருள் போல் இருப்பதல்ல. அன்பு நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அது நிரம்பி வழிந்து, வெளிச்சம் போல, ஒளிச்சுடர் போல, ஒளிச்சுடரிலிருந்து கசிகிற வெளிச்சம் போல பரவும் வல்லமை உடையது. எல்லா தத்துவ ஞானிகளும் அன்பை அப்படித்தான் வர்ணிக்கிறார்கள். புத்தர் அப்படித்தான் வர்ணிக்கிறார். மகாவீரர் அப்படித்தான் வர்ணிக்கிறார். கிருஷ்ண பரமாத்மா அப்படித்தான் வர்ணிக்கிறார். அன்பு குறித்து பேசுகிற தத்துவ விசாரணை செய்கிற எல்லோரும் அன்பு பொருள் போல இருப்பது அல்ல என்று பிரகடனப்படுத்துகிறார்கள். அன்பு பகிர்ந்து கொடுப்பதற்குரியது. அது நீங்கள் நிரம்பி நிற்கிற வழியில், நீங்கள் நிரம்பி நிற்கிற வேளையில் உங்களிடம் இருந்து கசிவது. அதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த கசிவை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அத்தகைய வல்லமை கொண்டது அன்பு. அத்தகைய குணம் கொண்டது அன்பு. அந்த பெரும் வளர்ச்சியும் நிரம்பிய நிலையும் எங்கிருந்து துவங்கப்பட வேண்டும் என்றால் தனிமனிதனிடமிருந்து துவங்கப்பட வேண்டும். தனிமனிதனிடமிருந்து துவங்கப்படுகிற அன்பு தனி மனிதனிடமிருந்து துவங்கப்படுகிற அன்பிற்குரிய செயல்பாடு தொடர்ந்து விரிவடைவதற்கு, தொடர்ந்து மேன்மையடைவதற்கு, தொடர்ந்து செயல் ஊக்கம் பெறுவதற்கு அவர்கள் துவங்க வேண்டிய இடம் சமூகத்தில் இருந்து அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் தம்மளவில் இருக்கிற களைப்பை, தம்மளவில் இருக்கிற பலகீனங்களை, தம்மளவில் இருக்கிற பிற்போக்குத்தனங்களை களைவதன் வழியாக, தூக்கி எறிவதன் வழியாக, சிக்கலின்றி நகர்ந்து வருவதன் வழியாக, முழுமையாக அன்பை போதிக்க அன்பை பகிர்ந்து கொடுக்க வாய்ப்புள்ளவர்களாக மாறுகிறார்கள். அன்பு அப்படியான செயல் ஊக்கத்தோடு, குணாம்சங்களோடு இருக்கிறது என்பது நாம் பார்க்கிற நிஜமான தத்துவ கோட்பாடு.
அன்பு குறித்து உண்மையிலேயே நமக்கு ஏதும் தெரியாது என்பது சமூக நிஜம். நாம் அன்பை பற்றி பேசுவோம். ஆனால் அன்பு என்றால் என்னவென்று தெரியாது. தத்துவ ஆய்வாளர் ஒஷோ ஒரு இடத்தில் குறிப்பிடுவார், அன்பைப் பற்றி பேசுகிறபோது அவர் குறிப்பிட்டு சொல்கிற மிக முக்கியமான சொல் “உங்களுக்கு நீச்சலை பற்றி தெரியும், நீச்சலை பற்றி பக்கம் பக்கமாக உரையாட முடியும். ஆனால் எவ்வாறு நீச்சல் அடிப்பது என்பதோ, நீச்சல் என்றால் என்ன என்பதோ உங்களால் சொல்ல முடியாது. அப்படித்தான் அன்பு இன்று இருக்கிறது. நாம் அன்பை பற்றி நிறைய படித்து வைத்திருக்கிறோம். நாம் அன்பை பற்றி நிறைய கேள்விப்பட்டு வைத்திருக்கிறோம். நாம் அன்பை பற்றி நிறைய ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம். நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொண்டு வைத்திருக்கிறோம். ஆனால் அன்பு என்றால் என்ன என்று நமக்கு தெரியாது. அன்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருக்கிற போது நாம் சில கறைகளை துடைத்து விட வேண்டியே உள்ளது. பல கறைகளை கடந்து விட வேண்டி உள்ளது. நமக்கு தடையாய் இருக்கிற தேக்கமாய் இருக்கிற பலவற்றை பல செயல்முறைகளை உடைத்து மீண்டும் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. அதற்கான தகுந்த புத்திசாலித்தனமும் அதற்கான தகுந்த அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சிக்கிற போது அவற்றில் வெற்றி அடைகிற போது நாம் துறவிகளாக மாறி நிற்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த உலகில் இருக்கிற எல்லாமும் போதும் என்கிற நிலை வருகிற வரை நாம் உலகிற்கு பொதுவாக இருக்கிற, பொது தேவையாக இருக்கிற அன்பைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. அப்படித்தான் மிர்தாத் கூறுகிறார். நீங்கள் உலகில் இருக்கிற எந்த பொருள் மீதும் பற்று இல்லாதவர்களாக, புரிதல் குறைபாடு இல்லாதவர்களாக இருந்து விடக்கூடாது. இந்த உலகில் இருக்கிற எல்லா பொருள்கள் மீதும் எல்லா அமைப்புகள் மீதும் எல்லா கோட்பாடுகள் மீதும் எல்லா செயல்முறைகள் மீதும் போதுமான புரிதல் உங்களுக்கு வேண்டும். போதுமான புரிதல் ஏற்பட்ட பிறகு நீங்கள் தேடுகின்ற மிக முக்கியமான ஒன்றை இந்த கோட்பாடுகளும் செயல்முறைகளும் உலக நியதிகளும் உங்களுக்கு தந்து விடுவதில்லை என்பதை காண்பீர்கள். எந்த ஒன்றையும் செய்வதற்கில்லை என்கிற இடத்திற்கு வந்து சேருவீர்கள். நீங்கள் வந்து சேர்ந்த பின்பு எந்த ஒன்றையும் செய்ய வேண்டாம் செய்வதற்கு எதுவும் இல்லை என்று முடிவு செய்த பிறகு உங்களுக்குள் துறவு துவங்குகிறது. துறவு என்பது எவற்றையும் செய்யாமல் இருப்பது அல்ல. எவற்றையும் செய்வதற்கு அவசியம் இல்லாமல் இருப்பது. அந்த நிலையில் இருக்கிற போது நீங்கள் தவற விட்டுக் கொண்டிருந்த ஒன்றை, நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற ஒன்றை எல்லாவற்றின் மீதும் செய்து பார்த்து நிறைவில்லாத நிறைவை குறித்த ஒன்றை உங்களோடு பேசுவதற்கு மிர்தாத் தயாராக இருக்கிறார். அதற்குப் பெயர் அன்பு.
ஏன் இத்தனை காலம் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீங்கள் சிந்திக்கிற போது, பார்க்கிறபோது பற்றும் தடையும் தேக்கமும் அன்பை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு குறுக்கே சுவர் போல நிற்கிறது. துறவு மனநிலை இல்லாத காரணத்தினால் பொருள்கள் மீதும் தேவைகள் மீதும் பயணித்துக் கொண்டிருக்கிற எண்ணங்களினால் உங்களால் மிர்தாத் கொடுக்கிற, மிர்தாத் போன்ற மறை ஞானி கொடுக்கிற ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணமாக இருப்பது நம்மைச் சுற்றி இருக்கிற, உங்களைச் சுற்றி இருக்கிற எளிய ஒன்றின் மீது உங்கள் கவனம் விரயமாவதால் உங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு உங்களை சுற்றி இருக்கிற எளியவற்றின் மீது விழிப்பு பெற்றவர்களாக நீங்கள் மாறுகிறபோது மிர்தாத் கொடுக்கிற செய்தி உங்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக மாறும். உங்களது துறவு அனுபவம் முறையாக நிகழவில்லை என்றால் பொருளாதார கோட்பாடுகளின் வழியாக பெரும் தத்துவ மேதைகளிடம் நீங்கள் ஏமாந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமயக் கோட்பாடுகளின் வழியாக பேசுகிற சமய கருத்துக்கள் உங்களை ஏமாற்றி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இலக்கியங்களைப் படித்து நீங்கள் ஏமாந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் உலகில் இருக்கிற அலங்காரங்களின் வழியாக, ஆசைகளின் வழியாக, ஆபரணங்களில் வழியாக, அபிலாஷங்களின் வழியாக உங்களது வாழ்வை விரயமாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் முழுமையாக துறவு மேற்கொள்ள வேண்டும். இந்த உலகில் நீங்கள் அனுபவம் பெறுவதற்கு பொருட்களே இல்லை என்கிற அளவிற்கு உங்களது துறவு நிலை உயர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மிர்தாத் கூறுகிற மெய்ஞானம் குறித்து ஏதாவது ஒன்றை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியும் என்ற இந்த மிர்தாதின் உரை வழியாக நாம் பார்க்க முடிகிறது.
துறவிகளை அவர் தேர்வு செய்கிறார். நீங்கள் எப்போதெல்லாம் துறவியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் மிர்தாத் உங்களோடு பேசுவார். இதுவரை நீங்கள் செய்த, நீங்கள் பார்த்த பார்வையின் நோக்கம் என்ன என்று உங்களுக்கு விளக்குவார். அப்படித்தான் இந்த புத்தகத்தில் விளக்கிக் கொண்டிருக்கிறார். இந்த புத்தகத்தின் வழியாக மிர்தாத் விளக்குகிற செய்திகள் அப்படித்தான் இருக்கிறது. இதுவரை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தது சமூகத்தின் பார்வை. உங்கள் பற்றாக்குறையின் பார்வை. இதுவரை நீங்கள் பேசிக் கொண்டிருந்தது, சமூகத்தின் பேச்சு. உங்கள் பற்றாக்குறையின் பேச்சு. எவ்வாறு நீங்கள் இருக்கிறீர்களோ அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் .எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்களோ அவ்வாறு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறு நீங்கள் கேட்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்பது நிஜமாகவே உங்கள் ஆன்மா அல்ல. நிஜமாகவே உங்களது உயிர் துடிப்பு அல்ல. சமூகம் உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிற, சேர்த்து கொடுத்திருக்கிற சேகரிக்கப்பட்ட அறிவு.
நான் ஆண் என்றோ, நான் பெண் என்றோ உங்களுக்குள் புகட்டியது சமூகம். நான் இனம் என்றோ, நான் மதம் என்றோ உங்களுக்குள் புகட்டியது சமூகம். சமூகம் தொடர்ந்து சேகரிக்கப்பட்ட அறிவின் வழியாக உங்களுக்கு ஒன்றை புகட்டிக் கொண்டே இருக்கிறது. சமூகமாக புகட்டிக் கொண்டிருக்கிறது. மதமாக புகட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் கோட்பாடுகள் வழியாக புகட்டிக் கொண்டிருக்கிறது. பண்பாடு, கலை, இலக்கியம் என்று வெவ்வேறு வகைகளில் சமூகம் உங்களுக்குள் ஏதாவது ஒன்றை புகட்டிக் கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் என்கிற நிலை கடந்து, சமூகம் புகட்டிக் கொண்டே இருக்கிறது என்பதில் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அதுதான் உங்களை பார்க்க வைக்கிறது. அதுதான் உங்களை பேச வைக்கிறது.
ஒரு உணவை நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் உங்கள் சமயம் உங்களுக்கு கொடுத்த கோட்பாடு அது. ஒரு நீரை நீங்கள் அருந்துவதில்லை என்றால் உங்கள் சமூகம் கொடுத்த கோட்பாடு அது. ஒரு மனிதனை நீங்கள் உறவு பாராட்டுவீர்கள் என்றால் உங்கள் அரசியல் கோட்பாடு கொடுத்த அறிவு அது. இவ்வாறு சமூகமும் அரசியல் கோட்பாடுகளும் மதங்களும் இன்னும் பிற சாராம்சம் கொண்ட வெவ்வேறுபட்ட வகைகளுமாக நீங்கள் சேகரிக்கப்பட்ட அறிவின் வழியாகவே நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். அறிவின் வழியாகவே கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். சேகரிக்கப்பட்ட அறிவின் வழியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அந்த குழுவினரிடம், துறவிகளிடம் பேச்சை துவங்குகிறார். அப்போது இந்த குழுவும் துறவிகளும் பதில் உரைக்க துவங்குகிறார்கள் என்று அந்த புத்தகத்தினுடைய அத்தியாயம் தொடர்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment