Thursday, October 19, 2023

மிர்தாதின் புத்தகம் – “நான் பற்றி” - பகுதி 1 - சிவ.கதிரவன்


மிர்தாதின் புத்தகம் – “நான் பற்றி

www.swasthammadurai.com


மிர்தாத் துறவிகள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். மிர்தாதினுடைய துறவிகளுடனான உரையாடல் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்விற்கான சூத்திரங்களை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது.

நாம் எல்லோரும் நம்மை அறிமுகம் செய்து கொள்கிற போதுநான் அல்லதுநாம் என்று அறிமுகம் செய்து கொள்கிறோம். ‘நான் என்கிற சொல்லை வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு பொருள்களில் வேறுபட்ட உள்ளடக்கங்களோடு நாம் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். நான் என்றால் என்ன? நான் என்பது ஒரு சமூக நிலையில் நம்மைச் சுற்றி இருக்கிற  நபர்களோடு தொடர்பு கொள்கிற நிலையில், பிறரோடு நம்மை பிரித்து சொல்கிற ஒரு உள்ளடக்கமான கருத்து நான் என்கிற சொல்.

உங்களிலிருந்து நான் வேறுபட்டவன் என்பதில் நான் இருக்கிறது. உங்களிலிருந்து வேறுபட்டவன் என்று ஒருவர் சொல்கிறபோது அந்த தனிநபர் நான் என்கிற சொல்லை உள்ளிட்டு குறிப்பிடுகிறார். தத்துவ பரப்பில் நான் என்கிற சொல் ஒரு தனி மனிதனினுடைய உள்ளடக்கத்தை மட்டுமல்லாமல் அந்த தனி மனிதன் தொடர்ந்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களை குறிப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது.

மிர்தாதின் வார்த்தைகளை நாம் கோர்த்து படிக்கிற போது, மிர்தாதின் சொற்களை நாம் பேசிப் பார்க்கிறபோது சமூக மனநிலை என்பதிலிருந்து நகர்ந்து, சமூகத்தில் இருக்கிற எல்லா அம்சங்களையும் வேறொரு தளத்தில் சமூகத்திற்கு அப்பாற்பட்டிருக்கிற ஒரு தளத்தில், ஒரு கருத்தியலில் நாம் புரிந்து கொள்வதற்கு தேவையும் ஆர்வமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒன்றை பகுத்தறிய வேண்டும் என்கிற விஞ்ஞானபூர்வ பார்வையோடு பேசுகிறபோது ஒரு மனிதன் சமூகத்திலிருந்து வெளியில் செல்வதற்கு வாய்ப்பில்லை என்கிற அளவில் உரையாடல்கள் முடிவுக்கு வந்துவிடும். உண்மையிலேயே ஒரு மனிதன் சமூகத்திலிருந்து வெளியில் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால் சமூக தளம் என்கிற வகையில் வாய்ப்பில்லை.

மனிதன் சமூகமாக இயங்குகிற போது, மனிதன் குழுவாக இயங்குகிற போது, மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்குகிற போது சமூகத் தளம் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சமூக தளத்தை விட்டுவிட்டு ஒரு மனிதனின் உரையாடல் அமைவதற்கு வாய்ப்பே இல்லை.

உளவியல் ஆய்வாளர்கள் உளவியல் குறிப்புகளை சமூக விளக்கங்களிலிருந்து மேம்படுத்துகின்றனர். சமூக வழக்கங்களை மையப்படுத்தி முன்வைக்கின்றனர். சமூகம்  -உரையாடல், சமூகம் - மொழி வெளிப்பாடு என்கிற அளவிலேயே ஒரு வெளிப்பாடு என்பது, ஒரு சொல் என்பது, ஒரு சொற்றொடர் என்பது இருந்து கொண்டே இருக்கிறது என்பது சமூகத்திற்குள் நிலவுகிற, உரையாடலுக்குள் நிலவுகிற சார்பு நிலை. சமூகமும் உரையாடலும் தனிமனிதனும் உரையாடலும் சமூகப் பின்புலத்தோடு நகர்கிற சார்பு நிலை வடிவமாக எல்லா உரையாடல்களும் அமைந்து விடுகின்றன.

நான் என்று ஒரு மனிதன் சொல்கிற போது தன்னை பற்றி சமூகத்தின் வழியாக தனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிற தெரிவுகளின் வழியாக தனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிற விளக்கங்களின் வழியாக தான் கொண்டிருக்கிற கருத்துநான் என்று கருதப்படுகிறது.

எல்லா மனிதர்களுக்கும் ஒரே வகையான உடல் அமைப்பு அந்த மனிதனின் பிறப்பு வழித்தோன்றல் வேறுபாடுகளைத் தவிர கிடைக்கப்பெற்று இருக்கிறது. எல்லா தனிமனிதர்களும் மனிதர் என்கிற வகையில் அறிவியல் குறிப்புகள், உடலியல் குறிப்புகளை முன்வைத்து நாம் பகுத்துப் பார்க்கிறபோது எல்லா மனிதர்களும் ஒரே வகையான உடல் அமைப்பை, உடல் இயங்கும் முறையை சற்று ஒத்து இருக்கிற செயல்பாட்டு முறையை வைத்திருக்கின்ற உடலை பெற்றிருக்கின்றார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஒழுங்கமைவோடு உடல் அமைப்பை பெற்றிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவில் தலைமுடி இருக்கும் என்றால் தலைமுடியில் இருந்து குறிப்பிட்ட அளவு இடைவெளியில் கண்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் அதற்கு கீழே வாய் இருக்கிறது. கழுத்து, மார்பு என்று இடுப்பு தொடர்ந்து கால்கள் வரை ஒரு ஒழுங்கமைவில் எல்லா மனிதர்களுக்கும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அல்லது உயிரியல் வளர்ச்சி அடிப்படையில் உடல் அமையப்பெற்று இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் விலங்குகளுக்கும் இப்படியான உடல் வளர்ச்சி முறை இருக்கத்தான் செய்கிறது. எல்லா விலங்குகளுக்கும் இப்படியான உடல் வளர்ச்சி முறை இருக்கிறது.

விலங்குகளுக்குள் இருக்கிற வாழ்நிலைச் சார்ந்த வேறுபாடுகளின் வழியாக விலங்குகள் பகுக்கப்பட்டாலும் விலங்குகளின் உடல் வளர்ச்சி முறை, உடல் இயங்கும் முறை சற்று ஒப்பயிருப்பதை காண முடிகிறது. ஆனால் விலங்குகளை விடவும் ஒரு மனிதன் என்று தன்னை கருதிக் கொள்கிற ஒருவருக்கு இன்னொரு தனி மனிதனுக்கும் தனக்குமாய்  இருக்கிற வேறுபாடை உடல்நிலை என்கிற தளத்திலிருந்து கடந்து, நான் என்கிற இன்னொரு தளத்தை பார்க்கிற, பார்க்க முடிகிற ஒரு கருத்தியலோடு இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த கருத்தியல் சமூக முழுவதும் தன்னைப் பற்றி தனக்கு இருக்கிற அபிப்பிராயங்கள், கருத்துக்கள் வழியாக கூடிக் கொண்டு, சேர்ந்து கொண்டு  குவிந்திருக்கின்றன என்பதை தத்துவ பரப்பில் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

வாழ்வில் பொருளாதார இயங்குமுறை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு தனிநபரை அழைத்து நான் என்கிற சொல்லை குறித்து விரிவாக விவாதிப்போம் என்றால் அவருக்கு அது குறித்தான விளக்கங்களும் செயல்பாட்டு கருத்தாக்கங்களும் சுற்றி நடந்து கொண்டிருக்கிற நான் குறித்தான பொருள் கொள்ளுதலும் முழுமையான அறிவுக்குட்பட்டதாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர் அவற்றைப் பற்றி தெரிந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம். ஆனால் தத்துவ பரப்பில் தேடலில் இருக்கிற நபர்களுக்கு நான் என்கிற சொல் மிக நெருக்கமாக உரையாடலுக்கு உட்பட்ட சொல். நான் என்கிற சொல்லை பகுத்துப் பார்ப்பதற்குரிய முன் தயாரிப்பு செய்யப்பட்டவர்களுக்கே நான் என்கிற சொல் குறித்து பேச முடியும். எல்லோரிடமும் நான் என்றால் சமூகம் வைத்திருக்கிற நான் என்பது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே இருக்கிற பொருளாதார, உயிரியல் சார்ந்த, சமூகத்தில் நிலவுகிற கருத்தாக்கங்கள் அடிப்படையிலான இடைவெளியில் நான்  நிரப்புகிறது. அவ்வாறே நான் குறிக்கப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே இதற்கு நேர் மாற்றாக இருக்கிற வேறொரு பரப்பில் நான் என்பது தன்னை உள்நோக்கிப் பார்க்கிற, தமக்குள் சேகரித்து வைத்திருக்கிற கருத்தாக்கங்கள் என்கிற தன்மையோடு பார்க்கிற ஒன்றாக நான் இருக்கிறது.

நான் என்பதை பேசுவதற்கு முன்பு மிர்தாத் போன்றதொரு ஒரு   பிரசங்கம் செய்கிறவர் நான் என்கிற சொல்லை பயன்படுத்துவதற்கு முன்பு, நான் என்கிற சொல் குறித்து பேசுவதற்கு முன்பு, அவர் எந்த தளத்தில் இருந்து நான்  என்பதை பயன்படுத்துகிறார். அந்த பிரசங்கத்தின் வழியாக நான் என்கிற சொல் எவ்வாறு பயணிக்கிறது என்பது மிக முக்கியமான பார்வை. அந்தப் பார்வையோடு பார்ப்பதன் வழியாகவே மிர்தாத் உள்ளிட்ட, மிர்தாதை போன்ற, மிர்தாதிற்கு பின் வந்த ஆய்வாளர்கள், தேடல் மிக்கவர்கள் கூறுகிற நான் என்பதற்குப் பின்னால் இருக்கிற எல்லாவற்றையும் பேசிப் பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் நான் என்று பேசுகிறபோது நான் என்று பார்க்கிற போது நான் பற்றி ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்று கருதுகிற போது சமூகத்தில் நிலவுகிற நான் என்பது குறித்து பேசுவதற்கும்  தேடல் குறித்த்து ஆன்மீகப் பரப்பில், தத்துவ பரப்பில் நான் என்று பேசுவதற்கும் உரிய வேறுபாடுகளை நாம் தெளிவாக புரிந்து கொள்வதன் வழியாகவே மிக நுட்பமான துல்லியமான ஒன்றை கண்டெடுக்க முடியும். பேசி பார்க்க முடியும் என்பது முதன்மையாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது. ஏனென்றால் மிர்தாத் உரையாடலை துவங்குவதற்கு முன்பு அந்த மடாலயத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிற நான் என்கிற சொல்லை கண்டித்து சுட்டிக்காட்டுகிறார். நான் என்கிற சொல் எப்படியான சொல் என்று நினைவூட்டுகிறார். நான் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேச முற்படுகிறார். அப்படி பேசுகிறபோது அதன் உள்ளடக்கமாக இத்தனை காலங்கள் நீங்கள் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த காலத்தில் உங்களுக்கு சேர்ந்த அறிவும் உங்களது புரிதலும் அது பற்றி உங்களுக்குள் உருவாகியிருக்கிற கருத்துக்களும் நீங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நானை குறிப்பிடுகிறார். நீங்கள் பேசுவது நீங்கள் அல்ல, உங்களது பழைய அனுபவங்கள் என்று நானை சுட்டி காட்டுகிறார். நீங்கள் கேட்பது பழைய அனுபவங்களில் இருந்து கேட்கிறீர்கள். நிஜமாகவே கேட்பதற்கு இல்லை என்று நான் குறித்து விளக்கம் அளிக்கிறார். நீங்கள் பார்க்கிற பார்வையில் ஏற்கனவே உங்களுக்குள் பொதிந்திருக்கிற நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற கருத்துக்களும் சேர்மானங்களும் உங்களைப் பார்க்கச் செய்கின்றன .அவைகளே நீங்கள் என்னவாக பார்க்க வேண்டும் என்று சுட்டியும் காட்டுகின்றன என்று நான் குறித்து, நான் என்பதற்குள் இருக்கிற கருத்துகள் குறித்து சுட்டிக்காட்டி விளக்கம் அளித்து பேசுகிறார். அப்போது அங்கு கேள்வி எழுகிறது.

 ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...