Thursday, October 19, 2023

மிர்தாதின் புத்தகம் – “நான் பற்றி” - பகுதி 2 - சிவ.கதிரவன்

                                                             மிர்தாதின் புத்தகம் – “நான் பற்றி”

www.swasthammadurai.com

நான் என்பது எங்களது சேகரிக்கப்பட்ட அறிவு என்றால், நான் என்பது எங்களுக்குள் தேங்கியிருக்கிற பழைய காட்சிகளும் அனுபவங்களும் என்றால் உண்மையான நான் என்பது என்ன, உண்மையிலேயே நாங்கள் எப்படி எங்களை அழைத்துக் கொள்வது என்கிற விவாதம் அடுத்த உரையாடலுக்குள் நகர்வதற்கு மிர்தாத் ஒரு சூழலை உருவாக்குகிறார். ஒரு உரையாடலை உருவாக்குகிறார். 

மடாலயத்தில் நான் என்கிற சொல் தவிர்க்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கிறது. காலகாலமாக நான் என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தக் கூடாது என்று நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நான் என்கிற சொல் சமூகம் வைத்திருக்கிற பல்வேறுபட்ட அபிப்பிராயங்களின் தொகுப்பாக இருக்கிறது என்கிற காரணத்தினால் நான் என்கிற சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது. நான் என்கிற சொல்லிற்கு பின்னால் இருக்கிற பலகீனமான அறியாமைகளை நாம் சூட்டிக் கொள்ளக் கூடாது என்கிற வகையில் நான் என்கிற சொல் தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்த கதையின் வழியாக நாம் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் மிர்தாத் நான் என்று சொல் நிற்கிற இடத்தில், நான் என்றால் என்ன என்று துவங்குகிறார். ‘நான் என்பது என்று மிர்தாத் துவங்குகிறபோது அந்த அத்தியாயங்களில் மிர்தாதினுடைய பிரசங்கத்தில் நாம் நோக்குகிற போது பார்க்கிறபோது நான் என்பது சர்வ வல்லமை கொண்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஒரு மனிதன் நான் என்று சொல்கிற போது அவன் இந்த சமூகம் என்னவெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறதோ, இந்த சமூகம் எவற்றையெல்லாம் தாங்கி பிடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கிறதோ, இந்த சமூகம் இவற்றையெல்லாம் வெற்றி என்று கருதுகிறதோ எல்லாவற்றின் உள்ளடக்கத்தையும் மையப் பொருளாக கொண்டிருக்கிற ஒன்றை நான் என்று வரையறுப்பது போன்று இந்த உரையாடல் செல்கிறது.  உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறதா என்றால் இது ஒரு சூத்திரம் என்பது போல் படிக்க வேண்டிய அவசியத்தினால் நாம் பார்த்தவுடன் நமக்கு கிடைக்கிற சொற்களை, கருத்துக்களை நாம் எடை போட்டு பார்த்து பரிசீலித்து  உள்ளே செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. மிர்தாதின் சொற்கள் அப்படித்தான் இருக்கின்றன. மிர்தாதின் சொற்களை நாம் பார்க்கிறபோது நான் என்று மிர்தாத் சொல்கிற சொல்லின் பின்னால் தரப்படுகிற விளக்கங்கள் அத்தனையும் தரப்படுகிற கருத்துக்கள் அத்தனையும் நான் என்பது ஒரு வெற்றிக்குரிய ஒன்றாக நாம் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மிர்தாத் அப்படியான தன்மையோடு அந்த சொல்லை பயன்படுத்தவில்லை.

மிர்தாத் நான் என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கிற மிகப் புனிதமான பகுதி என்று முன்வைக்கிறார். நான் என்கிற சொல் உண்மையிலேயே உங்களால் சேகரிக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து உருவாவதில்லை. உங்களால் சேகரிக்கப்பட்ட கருத்திற்கு மிக ஆழத்தில் ஒளிந்து இருக்கிற ஒரு பொக்கிஷமாகநான் இருக்கிறது. நான் என்கிற சொல் உண்மையிலேயே நீங்கள் பேசுகிற கருத்தாக இல்லை. நான் என்கிற சொல் நீங்கள் பார்க்கிற பார்வையாகவும் இல்லை. நான் என்கிற சொல் நீங்கள் கேட்கிற செய்திகளாக இல்லை. நீங்கள் பார்க்கிற காட்சிகள் உங்கள் சேகரிப்பில் இருந்து பார்க்கின்றன, பார்க்கப்படுகின்றன. நீங்கள் கேட்கிற ஒலிகள் உங்கள் சேகரிக்கப்பட்ட அனுபவத்திலிருந்து கேட்கப்படுகின்றன, கேட்கின்றன. என்றாலும் கேட்கிற அனுபவத்தை தாண்டி ,பார்க்கிற காட்சிகளை தாண்டி பார்க்கப்படுகிற நபர் என்கிற தளத்தையும் உடைத்துக் கொண்டு பார்க்கிற போது நான் என்கிற ஒரு புனித பொக்கிஷத்தை புனித உள்ளடக்கத்தை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்ற குறிப்போடு மிர்தாத் நான் என்கிற சொல்லை விளக்குகிறார்.

நான் என்று தத்துவ பரப்பில் பேசுகிற போது, நான் என்று ஆன்மீக பரப்பில் பேசுகிற போது எல்லாமும் மாயையாக எல்லாமும் அனுபவக் குறிப்பாக, எல்லாமும் சேகரிக்கப்பட்ட அறிவாகவே தொகுக்கப்பட்டிருக்கிறது என்கிற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் சமகாலத்தில் சொல்லப்படுகின்றன.

ரமண மகரிஷி என்கிற ஒரு பெரும் ஆளுமையை இந்திய தத்துவ பரப்பு சந்தித்திருக்கிறது. நீண்ட காலம் மௌனமாக தம்மை சந்திக்க வருகிற சீடர்களிடம் காத்திருந்து, ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுகிற தன்மை உடையவராக ரமண மகரிஷி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் இருக்கின்றன. அவரைப் பற்றிய ஆய்வுகளும் பின்பு தொடர்ந்து வந்த ஆவணங்களும் மிகத் துல்லியமாக வரையறுத்து வைத்திருக்கிற கதைகளை பார்க்கிறபோது, குறிப்பு நிலவரங்களை பார்க்கிற போது அவற்றிற்குள் நாம் வந்து சேர்கிற இடம் ஒவ்வொரு மனிதனும் நான் என்பது குறித்து என்னவாக இருக்கிறான் என்பதை கண்டுபிடிப்பதற்கும் அவற்றை நேர்த்தி செய்து கொள்வதற்குமான முயற்சியை ரமண மகரிஷி பரிந்துரை செய்தார் என்று பார்க்க முடிகிறது. அவர் எழுதிய மிக அனைவருக்கும் அறிமுகமான தத்துவ பரப்பில் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய புத்தகமான ஒரு புத்தகம் இருக்கிறது. ‘நான் யார் என்று அந்த புத்தகத்தின் தலைப்பு. நான் யார் என்று ஒரு அக விசாரணையை தொடங்கும் முயற்சி உள்ள யாவருக்கும் அந்த புத்தகம் ஒரு எளிய வழிகாட்டியாக இருந்து கொண்டே இருக்கிறது என்பது தனிக்கதை. ஆனால் நான் யார் என்ற புத்தகத்தை பார்க்கிறபோது, ரமண மகரிஷி தன்நான் பற்றிய கருத்துக்களை பதிவு செய்கிறார், உரையாடுகிறார். ஒரு கேள்வி பதில் போல் அந்த புத்தகத்தினுடைய பக்கங்கள் விரிகின்றன.

நான் என்பது என்ன என்று ஒருவரிடம் கேட்கப்படுகிற போது நான் என்பது இந்த உடல் என்று அவர் பதில் அளிக்கக்கூடும். உண்மையிலேயே நான் என்பது உடல் என்றால் இந்த உடலுக்குப் பின்  வேறேதும் இருக்கிறதா என்று அடுத்த கேள்வியை இந்த புத்தகத்தின் வழியாக ரமண மகரிஷி தொடுக்கிறார். நான் என்று நீங்கள் ஒருவரை பார்த்து கேட்பீர்கள் என்றால் அவர் நான் என்று எதை கருதுகிறாரோ அதை சொல்வார். என்னை கேட்பீர்கள் என்றால் நான் என்பது என் உடல். நான் என்பது எனது பெயர். நான் என்பது எனது பொறுப்பு. நான் ஆற்றுகிற பணி. இவையெல்லாம் நான் தான் என்றால் இதில் நிரந்தரமான நானாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

சிறுவயதில் குறிப்பிட்ட பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கு முன்பு இருக்கிற வயதில் கூட, நான் இருந்தது .அப்போது நான் என்பது என்ன? நான் என்பது சிறுவயதில் இருக்கிற ஒரு குழந்தை. பின்பு பள்ளிக்கூடங்களில் சேர்ந்த பின்பு, நான் என்பது என்ன? நான் என்பது பள்ளி மாணவன். நான் என்பது என்ன? என்று மீண்டும் கேட்கப்படுகிற போது நான் என்பது குறிப்பிடப்படுகிற அல்லது அப்போது படித்துக் கொண்டிருக்கிற வகுப்பைச் சார்ந்தவன். பள்ளிப்படிப்பு முடிந்த பின்பு கல்லூரி மாணவன். கல்லூரி படிப்பை முடித்த பின்பு நான் என்பது என்ன? ஒரு பணியில் அமர்ந்திருக்கிற பணியாளன். பணி முடிந்த பிறகு நான் என்பது என்ன? ஒரு சமூகத்தில் இயங்குகிற சமூக இயக்கம் கொண்டவன். பின்பு நான் என்பது என்ன? நான் கணவனாகவோ, குடும்ப உறுப்பினராகவோ இருக்கிற அண்ணன், தம்பி என்கிற வேறுவேறுபட்ட சமூகப் பொறுப்புகள், குடும்ப பொறுப்புகள். இவ்வாறு நான் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேறுவேறு அடையாளங்களோடு குறிப்படப்படுகிறது. இப்படியான அடையாளங்கள் எல்லாமும் என்ன என்று ரமண மகரிஷியினுடைய உரையாடலுக்குள் ஒரு பெரும் பகுதி நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு மனிதனை நான் என்று விசாரிக்கிற போது, அந்த மனிதனினுடைய நான் என்பது என்ன என்று கேட்கிற போது அந்த மனிதன் அப்போது தன்னை பற்றி  என்ன கருதி கொண்டிருக்கிறாரோ அதுவே நான்  என்று ஆகிவிடுகிறது என்பது நான் குறித்த ரமண மகரிஷியினுடைய மிக முக்கியமான துவக்க குறிப்பு.

யாரை நீங்கள் கேள்வியால் நான் என்று கேட்டாலும் அவர்களுடைய பதில் அப்போது அவர்கள் தம்மை நான் என்பதை என்ன கருதி கொண்டிருக்கிறார்களோ, நான் என்பது குறித்து என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, நான் என்பது குறித்து அவர்கள் என்ன பார்த்து வைத்திருக்கிறார்களோ அதை நான் என்று பதிவு செய்கிறார்கள் என்பது ‘who am I’  என்பதுநான் யார் என்ற புத்தகத்தில் ரமண மகரிஷியினுடைய  வாதமாக துவங்கி  நிகழ்கிறது. இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற நான் குறித்து ஒரு விரிவான உரையாடலை செய்யப்படுவது என்பது ரமண மகரிஷியினுடைய காலத்தில், அவருக்கு சமமாக, அவருக்கு பின் வந்த சமூக அமைப்பில் தேவைப்படுகிற ஒரு வாதம்.

துறவிகளுக்கு நான் குறித்து பேசப்படுகிற போது, இவற்றோடு இவற்றை பொருத்தி சொல்வதற்குரிய விளக்கங்களும் கருத்தாக்கங்களும் தேவைப்படுகின்றன. வேறுபடுத்தி சொல்வதற்குரிய குறிப்புகள் அவசியமாகின்றன. ஒரு வளாகத்தில், ஒரு சமூக நிலையில் நான் என்று யார் ஒருவரும் கேட்பதற்கும் பேசுவதற்கும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துறவிகள் என்பவர் நான் என்கிற நிலையிலிருந்து நகர்ந்தவர்கள். துறவிகள் என்பவர் நான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மறுக்கிறவர்கள். நான் என்கிற அடையாளத்தை கடந்து செல்வதற்கு முயற்சிப்பவர்கள். அவர்களே துறவிகள். ஒரு துறவி தன்னை துறவி என்று அறிவித்துக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் துறவி என்பது அடையாளம் இல்லாத குறிப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது. துறவு என்பது எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தன்மையை குறிக்கிற சொல் அது.  அது ஒரு இயக்கம். அது ஒரு பெயர்ச்சொல் அல்ல. மாணவன்ஆசிரியர் - குடும்ப உறுப்பினர் என்று வகைப்படுத்துகிற  பெயர்ச்சொல்  அடையாளச் சொற்கள் போல துறவி என்பது அடையாளச் சொல் அல்ல. அது ஒரு பெயர் சொல் அல்ல.துறவு என்பது ஒரு இயக்க நிலை. இயக்க நிலையில் பயணிப்பவர் துறவி.

ஆக, துறவி என்பவர்களுக்கு மத்தியில்நான் என்று பேசுகிற போது ஒரு துறவியினுடைய நான் என்பது இயக்கமாக இருக்கிறது என்பதில் ஏற்பட்ட பிழையை உள்ளடக்கமாக வைத்துக்கொண்டு மிர்தாத் பேசுகிறார். நான் என்கிற சொல்லுக்கு பின்னால் நீங்கள் பேசுகிற உங்கள் அனுபவங்களைக் கடந்து உண்மையிலேயே உங்கள் இயக்கமாக இருக்கிற ஒன்று இருக்கிறது. இந்த நான் மிக முக்கியமான தன்மை உள்ளது. மிர்தாத் இதை பேசுகிறபோது மிகக்குறிப்பாக தம்மை அறிமுகப்படுத்தி சொல்கிறார். தம்மைப் பற்றி ஒரு குறிப்பை கொடுக்கிறார். மிர்தாத் எல்லாவற்றையும் படைக்கக் கூடியவர். எல்லை மீறுபவற்றை தடுக்க கூடியவர். எல்லாவற்றையும் உருவாக்கக் கூடியவர். எல்லை மீறி செல்லும் எந்த ஒன்றையும் நிறுத்தி வைப்பதற்கு வல்லமை உள்ளவர் என்று நான் குறித்து பேசுகிறபோது  மிர்தாத் தம்மை குறித்தும் சேர்த்தே சொல்கிறார்.

மிர்தாதினுடைய தீர்க்கதரிசனமான பார்வையில் ஏற்படக்கூடிய எல்லா அச்சங்களையும் எல்லா குழப்பங்களையும் தவிர்க்கிற தன்மையோடு, கடந்து செல்கிற தன்மையோடு நான் என்கிற குறிப்பை மிர்தாத் எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. மிர்தாதினுடைய நான் என்கிற தன்மையை நாம் மிகுந்த சிரத்தையோடு படிக்க வேண்டியிருக்கிறது.

மிர்தாதினுடைய புத்தகம் துவங்குகிற போது இந்த புத்தகத்தை எப்படியாவது படித்து முடித்து விட வேண்டும் என்கிற தன்மை உள்ளவர்களுக்கே இந்த புத்தகம் வழங்கப்படுகிறது என்று எனக்கு தோன்றியது. எப்படியாவது படித்து  முடித்து விட வேண்டும் என்று யாரெல்லாம்  கருதுகிறார்களோ இந்த புத்தகத்தினுடைய உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாரெல்லாம் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த புத்தகம் வழிகாட்டியாக இருக்கிறது என்று நான் கருதினேன். இப்போதும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. புத்தகங்கள் என்பது  எழுத்துக்களின், சொற்களின், சொற்றொடர்களின் கூட்டு என்கிற நிலையிலிருந்து மிர்தாதின் புத்தகம் வேறு தளத்தில் இருக்கிறது. இது ஒரு அகராதி போல் தொகுக்கப்பட்ட நூல் அல்ல. இது ஒரு அகராதி போல் சேகரிக்கப்பட்டிருக்கிற சொற்றொடர்களின், சொற்களின் தொகுப்பு அல்ல. இந்த புத்தகத்தை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த புத்தகம் உங்களை எதுவும் செய்யாது. அது வெறுமனே புத்தகம் வெறுமனே நூல். இந்த புத்தகத்திற்குள் இருக்கிற செய்திகள் குறிப்புகள் இந்த புத்தகத்திற்குள் இருக்கிற தத்துவ குறிப்புகள் உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கிற ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கனத்திலும் மிர்தாதின் வாயிலாக உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும். மிர்தாதின் குறிப்பாக உங்களுக்குள் பேசிக் கொண்டே இருக்கும். அதுதான் மிர்தாதின் வெற்றி. இந்த புத்தகத்தினுடைய உள்ளடக்கம் என்பது காகிதத்தில் சேகரிக்கப்பட்டிருக்கிற சொற்றொடர்களாக நீங்கள் புரிந்து கொள்ளக்கூடாது. மிகுந்த கவனத்தோடு இந்த செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது தொகுக்கப்பட்ட நூலோ அல்லது சேகரிக்கப்பட்ட குறிப்புகளோ அல்ல. இது வெறுமனே புத்தகம் தான். எல்லா புத்தகங்களுக்கும்  காகிதமும் அச்சும் சேர்ந்து, கூடி, கட்டி இருக்கிற எல்லா புத்தகங்களுக்கும் என்ன மரியாதையோ அத்தகைய மரியாதை தான் இந்த புத்தகத்திற்கும்.

ஒரு மொழி தெரியாத ஒருவர் இந்த புத்தகத்தை பார்ப்பார் என்றால் எப்படி பார்ப்பாரோ அப்படித்தான் இந்த  புத்தகமும் பார்க்க முடியும். ஆனாலும் இந்த புத்தகத்தை வாசிக்கிறவர்களுக்கு ஏற்படுகிற மாற்றம் என்பது அத்தகைய மாற்றம் அல்ல. இந்த புத்தகத்தின் வழியாக மிர்தாத் உங்களோடு பேசுகிறார். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் இந்தப் புத்தகத்தினுடைய கருத்துக்களை கேட்டு சேகரித்தவுடன் எல்லா புத்தகங்களும் படிப்பது போல் இவற்றைக் கடந்து செல்ல முடியாது. மிர்தாத் உங்களோடு பேசிக்கொண்டே இருப்பார்.

நான் என்று நீங்கள் எப்போதெல்லாம் சொல்கிறீர்களோ, அப்போதெல்லாம் மிர்தாத் உங்களுக்குள் இருந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். இப்படியான சிறப்பு எல்லா புத்தகங்களுக்கும் அமைந்து விடுவதில்லை. தத்துவ பரப்பில், இலக்கியப் பரப்பில் அனேக புத்தகங்கள் நம் முன் இருக்கின்றன. நமக்கு காணக் கிடைக்கின்றன. அச்சு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் வளர்ச்சி அடைந்த பிறகு புத்தகங்களினுடைய உற்பத்தி மளமளவென்று இருந்தது. அனேக புத்தகங்கள் அச்சிற்கு வந்திருக்கின்றன. ஏராளமான கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஆவணமாய் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் இத்தகைய சிறப்பு அமைந்து விடுவதில்லை.

... தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...