மிர்தாதின் புத்தகம் – “நான் பற்றி”
ஒரு புத்தகத்தை நீங்கள் படிக்கிற போது, ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்து வைக்கிற போது அது வெறும் தகவல் தொடர்பு, தகவல் சேகரிப்பு என்கிற நிலையில் இருந்து நகர்ந்து விடா வண்ணம் உங்களோடு பற்றிக்கொள்வது அந்த புத்தகத்தினுடைய பொறுப்பாக இருக்க வேண்டும். அந்த புத்தகம் அப்படித்தான் இருக்கும் என்றால் அதுதான் புத்தகத்தினுடைய வெற்றி. மிர்தாத் அப்படிப்பட்ட புத்தக வரிசையில் முதன்மையானது. மிர்தாதின் புத்தகத்தை நீங்கள் வாசித்து வைக்கிற போது மிர்தாதின் எழுத்துக்களும் புத்தகமும் உங்களை விட்டு வேறு ஒரு அலமாரியில் குடியிருக்க கூடும். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கூட மிர்தாத் நீங்கள் வாசித்த செய்தி குறிப்பின் வழியாக உங்களுக்குள் இருந்து பேசிக் கொண்டே இருப்பார். மிர்தாதினுடைய வழிகாட்டலில் நீங்கள் நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். அப்படியான துல்லியமான தன்மைகளை, அப்படியான நுட்பமான தன்மைகளை உங்களுக்கு நினைவூட்டும் வகையோடு, நினைவூட்டும் எண்ணத்தோடு நினைவூட்டும் நோக்கத்தோடு ஒரு உரையாடல் இந்த புத்தகத்திற்குள் நடந்து கொண்டே இருக்கிறது. அவற்றை புரிந்து கொள்வதற்கு ஒரு காத்திருப்பும் அவற்றை புரிந்து கொள்வதற்கு ஒரு பெரும் முயற்சியும் தேவைப்படுகிறது என்று நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
‘நான்’ என்று பேசுகிற போது இந்த செய்தியை நான் அழுத்தி சொல்வதற்கு காரணம் நாம் ‘நான்’ என்று பேசுகிற போது அனேகமாக எல்லோருக்கும் சலிப்பும் களைப்பும் ஏற்பட்டுவிடும். சலிப்பும் களைப்பும் ஏற்படுவதற்குரிய எல்லா அம்சங்களையும் தத்துவங்கள் பொதுவாக வைத்திருக்கின்றன.
தீராத தேடல் உள்ளவரே தத்துவங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளவராக, ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். தத்துவங்கள் பெரும்பாலும் மெய்யியல் பெரும்பாலும் கோட்பாடுகளாக தொகுக்கப்பட்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ அவற்றிற்குள் நகைச்சுவைகள் ஒளிந்திருப்பதில்லை. அவற்றிற்குள் கிளர்ச்சி தரும் சம்பவங்கள் ஒளிந்திருப்பதில்லை. ஒரு கதையில் வருகிறது போன்ற ஒரு சாகச நிகழ்வுகள் ஏதும் இருப்பதில்லை. தத்துவங்கள் வெறுமனெ சுயபரிசீலனைக்குரிய தன்மையோடு ஒரு அறுவை சிகிச்சைக்குரிய தன்மையோடு தொடர்ந்து அறுத்துக் கொண்டே, நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு தத்துவத்தை நீங்கள் வாசிக்கிற போது இத்தகைய சிகிச்சை உங்களுக்கு நடந்து கொண்டே இருக்கிறது என்பதை ஏற்பதற்கு தயாராக இருப்பவர்களே களைப்பில்லாமல் தத்துவத்தை முழுவதுமாக வாசிப்பதற்கு வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் தத்துவத்தை வாசிக்கிறார்கள். நான் பற்றி நான் பேசுகிற எல்லா இடங்களிலும் வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் கேட்கிறவர்கள் "நான்" என்று நான் சொல்லி முடிப்பதற்குள் நான் விளக்கி முடிப்பதற்குள் அனேகமாக உறங்கி விடுவார்கள். அப்படித்தான் நான் என்கிற கருத்தாக்கம் இருக்கிறது. அது சொல்ல வருவதற்குரிய செய்தியை மட்டுமல்ல, அது உள்ளடக்கமாக இருக்கிற செய்தியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பேசி பார்ப்பதற்கும் உரையாடுவதற்குமாக நகர்கிற நகர்வை நம் மனநிலையில் ஏற்றுக் கொள்வதற்கு பெரும் தயக்கம் இருக்கிறது. ஏனென்றால் நாம் வேறொரு தளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கிறோம்.
மிர்தாத் புத்தகத்தை பார்க்கிறபோது அல்லது ‘நான்’ என்று ஒரு குறிப்பை நாம் படிக்கிற போது நான் என்பதற்கு இடையே இருக்கிற சமூக நிலைக்கும் தத்துவ தேடலுக்கும் ஏற்பட்டிருக்கிற இடைவெளியை நாம் வைத்துக் கொண்டு தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இது ஒரு பெரும் இடைவெளியோடு இருக்கிறது. நான் என்பது நீங்கள் தீராத தேடலோடு பார்க்கிறபோது மட்டுமே நான் என்பதை பார்க்க முடியும். ‘நான்’ என்று இருக்கிற ஒன்றை புரிந்து கொள்ள முடியும். அது கருத்தாக இருக்கிறதா, வடிவமாக இருக்கிறதா என்பதை பேசிப் பார்க்க முடியும். மிர்தாத் அப்படியான உரையாடலை செய்கிறார். மிர்தாத் அப்படியான செயல் வடிவத்தை செய்கிறார். அப்படியான ஒன்றை பரிந்துரைக்கிறார். அப்படியான ஒன்றை விவாதிக்கிறார்.
நான் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கிற போது இவையெல்லாம் நான் அல்ல என்று நீங்கள் வந்து நிற்கிற போதுதான் மிர்தாதினுடைய செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். மிர்தாத் நான் பற்றி கூறுகிற எல்லா அம்சங்களுக்குள்ளும் ஒவ்வொரு மனிதனும் சேகரிக்கப்பட்ட அறிவோடு இருக்கிறான். உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறான். ஆன்மிக தளங்கள், ஆன்மீக பரப்பு, தத்துவ பரப்பு எல்லா மனிதரும் சேகரிக்கப்பட்ட அறிவோடு இருக்கிறான் என்கிற நிலையிலேயே நின்று விடுகின்றன. பெரும்பாலும் அப்படி நின்று விடுகின்றன. இந்திய தத்துவ பரப்பில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினுடைய மேற்கோள்களை பார்க்கிறபோது சேகரிக்கப்பட்ட செய்திகள் தான் ‘நான்’ என்று அவர் திட்டவட்டமாக முடிவுக்கு வருகிறார். உண்மையிலேயே சேகரிக்கப்பட்ட செய்திகளை தான் நான் என்று நாம் கருதி கொண்டிருக்கிறோம். மிர்தாத் இன்னும் ஒரு படி மேலே சென்று கூறுகிறார், சேகரிக்கப்பட்ட செய்திகளுக்கு ஆழமாக ‘நான்’ இருக்கிறது என்கிறார்.
நீங்கள் பார்க்கிற போது நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் கேட்கிற போது நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் பேசுகிற போது நீங்கள் பேசவில்லை. பார்க்கிற எல்லாமும் நீங்கள் சேகரித்தவை. கேட்கிற எல்லாமும் நீங்கள் சேகரித்தவை. பேசுகிற எல்லாமும் நீங்கள் சேகரித்தவை. இந்த சேகரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஊடாக, எல்லாவற்றிற்கும் ஆழமாக நான் இருக்கிறது. அந்த நான் புனிதமாகவே இருக்கிறது. இந்த புனிதமான நானை உங்கள் சேகரிக்கப்பட்ட அறிவு, உங்கள் சேகரிக்கப்பட்ட சத்தங்கள், நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற பார்வைகள் எல்லாமும் அழுத்தி வைத்திருக்கின்றன என்று மிர்தாத் குறிப்பிடுகிறார். மிர்தாதினுடைய பார்வை தத்துவ பரப்பில் புதியது. புத்தர் அவ்வாறு பார்த்திருக்கிறார் என்று நான் படித்திருக்கிறேன். புத்தர் எல்லாவற்றையும் கவனமாக பார்க்க சொல்கிறார். அதற்கு அவர் விழிப்புணர்வு என்ற பெயர் வைக்கிறார். புத்தரினுடைய பயிற்சி முறையில் மிகப் பிரபல்யமான பயிற்சி முறை மூச்சின் மீது விழிப்பாய் இருப்பது. மூச்சு என்பது உள்நோக்கி செல்வது, வெளிநோக்கி வருவது. ஒரு மனிதனினுடைய மூச்சு குறித்து நாம் பேசுகிற போது எல்லா தத்துவ மெய்யியல் கோட்பாடுகளும் மூச்சை பற்றி பேசுகின்றன. புத்தரும் பேசுகிறார்.
மூச்சை உள்நோக்கி இழுப்பது, வெளிநோக்கி தள்ளுவது. மூச்சு உள்நோக்கி செல்கிறது, வெளிநோக்கி வருகிறது. இந்த உள்நோக்கி செல்லும் மூச்சும் வெளிநோக்கி வரும் மூச்சும் எதிரெதிரானவை அல்ல. இவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை. ஒன்றிற்கொன்று
இணையானவை. இவற்றை கவனிப்பதன் வழியாக ஒரு மனிதன் எல்லாவற்றையும் கவனிக்க முடியும் என்று புத்தர் குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் என்றால் அவர் இந்தப் பருவுடல், பருவுடலுக்கு மேலாக இருக்கிற ஆற்றல் உடல், மன உடல் என்று வெவ்வேறு உடல்களையும் வெவ்வேறு கவனங்களையும் வெவ்வேறு உடல்களையும் வெவ்வேறு கவனங்களையும் வெவ்வேறு செயல்பாட்டு முறைகளையும் கவனிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவற்றின் துவக்கப் புள்ளி புறமாக இருக்கிறவ மூச்சை கவனிப்பது. புறமாக இருக்கிற உங்கள் மூச்சை கவனிப்பதன் வழியாக, அவற்றின் மீது நீங்கள் கவனம் வைப்பதன் வழியாக, புற உடலில் மூச்சு சென்று வருவதை பார்ப்பதன் வழியாக உங்கள் பார்வை கவனமாகவே இருக்க துவங்குகிறது. உங்கள் செயல்பாடு கவனமாக இயங்க துவங்குகிறது. நீங்கள் கவனமாக மாறிப் போகிறீர்கள். நீங்கள் தான் கவனம் என்ற நிலைக்கு வந்து செல்கிறபோது உங்கள் உடலைக் கடந்து பார்க்க முடியும். உங்கள் சிந்தனையை கடந்து பார்க்க முடியும். உங்கள் கண்கள் சேகரித்து வைத்த காட்சிகளை கடந்து பார்க்க முடியும். உங்கள் வாக்கு சேகரித்து வைத்திருக்கிற ஒளிக் குறிப்பை கடந்து பார்க்க முடியும். உங்கள் காதுகள் சேகரித்து வைத்திருக்கிற செவிநுட்பத்தை கடந்து பார்க்க முடியும். எல்லாவற்றையும் கடந்து பார்க்க முடியும். அப்படி பார்க்கிறபோது உங்களுக்குள் நான் இருக்கிறது என்று மிர்தாத் கூறுகிறார்.
புத்தரினுடைய அந்த கோட்பாட்டின் மெய்ப்பொருளை புரிந்து கொள்வதன் வழியாக நாம் மிர்தாதை புரிந்து கொள்ள முடியும். எல்லா மக்களும் எல்லா தனிமனிதனும் எப்போதும் சேகரிக்கப்பட்ட அறிவோடு பயணிக்கிறார்கள் என்பதில் நிஜம் இருக்கிறது. துறவிகளும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் நான் என்பது துறவிகளிடத்தில் பேசுகிற போது, துறவிகள் முன்னிலையில் பேசுகிற போது நான் என்பது வெறுமனே நான் அல்ல, சேகரிக்கப்பட்ட அறிவு மட்டுமல்ல. அறிவை சேகரித்து வைத்திருக்கிற பாத்திரம் ஒன்று இருக்கிறது. உங்கள் பார்வையை சேகரித்து வைத்திருக்கிற பாத்திரம் ஒன்று இருக்கிறது. உங்கள் ஒளி குறிப்பை சேகரித்து வைத்திருக்கிற பாத்திரம் ஒன்று இருக்கிறது. அந்த பாத்திரம் நானாக இருக்கிறது. இந்த நான் ஒரு பெரும் புனிதத் தன்மையோடு இருக்கிறது . இறைத்தன்மையோடு இருக்கிறது. இந்த இறைத்தன்மையும் இந்த சேகரித்து வைத்திருக்கிற பாத்திரமும் ஒன்றாக இருக்கிறது என்பதை விளக்குகிற பாவனையோடு மிர்தாத் விளக்குகிற நான் விளக்கங்கள் இருக்கின்றன.
மிர்தாத் எல்லாவற்றையும் விரிவாக பேசுகிறார். ஒரு மனிதனினுடைய, ஒரு துறவையினுடைய வழிப்போக்கில் பார்வை போக்கில் சிந்தனை போக்கில் ‘நான்’ எங்கு குவிந்திருக்கிறது. ‘நான்’ எங்கு அழுத்தப்பட்டிருக்கிறது. ‘நான்’ என்கிற கருத்து உண்மையிலேயே என்னவாக இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக முன்வைத்து பேசுகிறார் மிர்தாத். ‘நான்’ என்று பேசத் துவங்குகிற போது அவர் துவங்குகிற புள்ளி சேகரிக்கப்பட்ட அறிவாக இருக்கிற மனிதனினுடைய செயல்முறையை, சேரிக்கப்பட்ட அறிவாக இருக்கிற மனிதனினுடைய எல்லாமும் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த பாத்திரம் நானாக இருக்கிறது. அந்த பாத்திரம் மெய்ப்பொருளோடு, மெய்யுணர்வோடு, இறைவுணர்வோடு தொடர்பில் இருக்கிறது. இந்த தொடர்பை நீங்கள் பிடித்துக் கொள்வதற்கு பார்த்துக் கொள்வதற்கு அதன் மீது கவனமாக இருக்க வேண்டும் என்று மிர்தாத் முன் வைக்கிறார். இது மிகச் சிறிய துகளாக இருக்கிறது என்று மிர்தாத் நினைவூட்டுகிறார். உங்கள் சேகரிக்கப்பட்ட அறிவு ஒரு கொள்கலனில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அந்த கொள்கலன் என்கிற நிலையில் இருந்து உங்களது பேச்சும் உங்களது பார்வையும் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என்று மிர்தாத் வரையறுக்கிறார், வலியுறுத்துகிறார். நீங்கள் சேகரிக்கப்பட்ட காட்சிகளை ஒரு கொள்கலனில் நிரப்புகிறீர்கள். நீங்கள் பார்த்த செய்தியை ஒரு கொள்கலனில் நிரப்புகிறீர்கள். நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளை ஒரு கொள்கலனில் நிரப்புகிறீர்கள். எல்லாமும் கொள்கலனில் நிரம்பி வழிகிறது. நீங்கள் பேசுகிறபோது கொள்கலனில் இருக்கிற ஒன்றை வைத்தே பேசுகிறீர்கள். நீங்கள் பார்க்கிற போது கொள்கலனில் இருக்கிற ஒன்றை வைத்து பார்க்கிறீர்கள். நீங்கள் உரையாடுகிறபோது கொள்கலனில் இருக்கிற ஒன்றை வைத்து உரையாடுகிறீர்கள். இது நீங்கள் சேகரிக்கப்பட்டவை. ஆனால் மிர்தாத் குறிப்பிடுவது கொள்கலனை பற்றி. கொள்கலன் இறையினுடைய சிறு குறிப்பு. இறையினுடைய சிறிய மாதிரி. கொள்கலன் இருக்கிற இருப்பு தெரியா வண்ணம் சேகரிக்கப்பட்டதன் வழியாக அழுத்தப்பட்டிருக்கிறது, மறைக்கப்பட்டிருக்கிறது, அவற்றை நீக்கி எறியுங்கள் என்று மிர்தாத் முன் வைக்கிறார். உங்கள் கொள்கலனை திறந்து கொள்ள வேண்டும் என்று மிர்தாத் துறவிகளுக்கு பரிந்துரைக்கிறார்.
கொள்கலன் இறையோடு இணைந்து இருக்கிறது. நீங்கள் நான் என்று சொல்கிற போது கொள்கலனிலிருந்து சொல்லுங்கள். சேகரிக்கப்பட்ட அறிவில் இருந்து அல்ல. நீங்கள் நான் என்று சொல்லுகிற போது கொள்கலனின் நிலையிலிருந்து சொல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே பார்த்து வைத்திருக்கிற அனுபவங்களிலிருந்து சொல்ல வேண்டாம் என்று ‘நான்’ குறித்து பகுத்து பேசுகிறார். இப்படி ‘நான்’ குறித்து பகுத்து பேசுகிறபோது ‘நானி’னுடைய இறைத் தன்மையை புரிந்து கொள்கிற துறவிகள் மீண்டும் கேட்கிறார்கள், இது துகளாக இருக்கிற இறைத்தன்மை என்றால் பிரம்மாண்டமாக இருக்கிற இறைத்தன்மை என்ன என்று கேட்கிறபோது அடுத்த நிலை நோக்கி மிர்தாத் உரையாடலை நகர்த்தி செல்கிறார். நான் என்பது துகளில் இருந்து மிகப்பெரும் பிரமாண்டம் என்கிற மும்மை விதிநோக்கி, முப்பெரும் ஆற்று நோக்கி இந்த உரையாடலை விரித்து செல்கிறார்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment