மிர்தாதின் புத்தகம் – ‘நான்’ பற்றி உளவியல்
‘நான்’ பற்றி ஒரு மனிதன் தெரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதற்கு சமூகவெளியில் காரணங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. சமூகம் பல நான்களை உள்ளடக்கிய தன்மையோடு பல ‘நான்’களை இணைத்து செல்கிற தன்மையோடு, பல ‘நான்’களை உள்ளடக்கி ஒன்றாக்கி நாம் என்று இயங்கச் செய்கிற தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிற ஒன்றாக சமூகம் இருக்கிறது.
சமூகத்தில், சமூகத்திற்குள் ‘நான்’ என்று ஒரு மனிதர், ஒரு சமூக இயக்கத்தில் இருக்கிற ஒருவர் நான் பற்றி பேசுவதற்கு உடனடியான தேவை என்பது எப்போதும் இருந்ததில்லை. மிர்தாதின் புத்தகத்தில் மிர்தாத் நான் பற்றி விரிவாக பேசுகிறார். துறவிகள் மத்தியில் நான் குறித்து ஒரு விரிவான உரையாடலை மிர்தாத் செய்கிறார். அந்த புத்தகத்தை, அந்த புத்தகத்திற்குள் இருக்கிற செய்திகளை நாம் பேசிப் பார்க்க வேண்டும் என்று முனைகிற போது அன்றாட வாழ்வில், சமூக நிலையில் துறவிகள் அல்லாதவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள், எவ்வாறு இருக்க வேண்டி இருக்கிறது என்று வேறுபட்ட தளங்களில் ஒரு உரையாடலை செய்வது அவசியமாகிறது.
உள்ளபடியே மிர்தாதின் புத்தகம் ஒரு சூத்திரம் போல் அமைந்திருக்கிறது. மிகத்துல்லியமாக அதனுள் இருக்கிற சொற்களின் பொருளை நீங்கள் அறிந்து கொள்வதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு வாய்ப்பு அதற்குள் இருக்கிற சொற்களின் பொருளை பிழையாக புரிந்து கொள்வதற்கும் இருக்கிறது. எனவே ஒவ்வொரு சொல்லையும் தீர்க்கமாக நாம் பேசிப் பார்ப்பதன் வழியாக மேலும் ஒவ்வொரு சொல்லையும் சமூக நடைமுறையில் ஒப்பிட்டு பார்ப்பதன் வழியாக மிர்தாத் சொல்கி,ற மிர்தாதின் வழி நாம் புரிந்து கொள்வதற்குரிய எல்லாவற்றையும் நாம் காத்திருப்போடு பார்க்க முடியும் என்கிற அடிப்படையில் இந்த நான் குறித்த உரையாடலை வேறுவேறு தன்மையோடு நாம் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மிர்தாதின் புத்தகத்தில் ‘நான்’ என்பதை மிர்தாத் உளவியலில் சொல்லப்படுகிற (IDENTITY) அடையாளம் குறித்தான ஒரு விளக்கமாக, அதையோட்டி விரிகிற உளவியல் சாராம்சமாக பேசிப் பயணிக்கிற அம்சங்களும் இருக்கின்றன. நான் என்பது ஒரு மனிதனுக்குள் துவங்கியவுடனேயே நான் பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு முன்பு, நான் என்கிற ப்ரக்ஞை நமக்குள் துவங்கியவுடனேயே என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்கு கொஞ்சம் மெனக்கெடல் வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அது எளிமையான பணி அல்ல. தத்துவ விசாரணை, ஆன்மீக விசாரணை அல்லது தன்னை அறியும் விசாரணை என்று சமூக செயல்பாடுகளுக்கு மாற்றாக, நேர் எதிராக வேறு திசையில் பயணிக்கிற ஒரு செயல்பாட்டு விசாரணை முறை இது.
‘நான்’ என்று அல்லது ‘அடையாளம்’ என்று ‘தனி’ என்று பிரித்துப் பார்க்கிற பார்வையில் எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாக தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் நாம் பேசிப் பார்ப்பதன் வழியாக மிர்தாதிற்குள் இருக்கிற வெவ்வேறு அம்சங்களை பார்க்க முடியும். மிர்தாத் சொல்லி கொடுக்கிற புதிய பார்வையை புரிந்து கொள்ள முடியும். நான் என்பது என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு முன்பு, நான் எங்கிருந்து துவங்குகிறது. நான் துவங்கியவுடன் அதன் பொருள் என்ன என்பதை அடிப்படையில் நவீன சமகால ஒப்பு முறையாக ஒப்பிட்டு பார்க்கும் முறையாக உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உலகம் முழுவதும் எல்லாமும் பொருள்களும் உயிரினங்களும் இயங்குபவை, நகராமல் இருப்பவை, இயங்காமல் இருப்பவை என்று சகலமும் ஒன்றை சார்ந்து ஒன்று, இருந்து கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிற போது அங்கு எந்த பிளவும் இல்லை. எந்த பிளவும் அங்கு வாய்ப்பில்லை. அங்கு ஒன்று உயர்வானதாகவோ மற்றொன்று தாழ்வானதாகவோ ஒன்று புனிதமாகவோ மற்றொன்று தீட்டானதாகவோ பிரித்துப் பார்ப்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்கிற ஒரு இயங்கும் முறை இருக்கிற வரை அப்படி பிளவு ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இப்படியான ஒரு இயக்கம் இருக்குமா என்றால் அது கற்பனையாக நாம் வைத்துக் கொள்ளலாம். ஒரு கதையை புரிந்து கொள்வதற்கு மிர்தாதினுடைய அடிப்படை வாதத்தை பார்த்துக் கொள்வதற்கு கற்பனையான ஒன்றை நான் உங்களோடு விவரிப்பதற்காக உதாரணமாக கூறுகிறேன்.
உலகில் எல்லாமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிற சூழலில், ஒன்றோடு ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிற சூழலில் ஒன்றைத் தொற்று ஒன்று என்று இயங்கிக் கொண்டிருக்கிற வேளையில் எல்லாமும் சீராகவே சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். நிஜமாகவே இப்படி இருக்கும் என்றால் இப்படி எப்போதும் இருக்காது. உலகின் இயக்கமே மிக சுவாரசியமானது. மிக நுட்பமானது. நேர் எதிரான இரண்டு இயக்கங்களினுடைய விளைவாக இந்த உலகம் நிலைத்திருக்கிறது என்று விஞ்ஞானம் நம்புகிறது. உதாரணமாக நாம் காந்தத்தை சொல்லலாம். வட துருவமும் தென் துருவமும் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு, ஒன்றை ஒன்று விலக்கிக் கொண்டு சம அளவில் அதனுடைய நிலைப்பு தன்மை இருப்பதனாலே காந்தத்தினுடைய இயக்கம் தீர்மானிக்கப்படுகிறது. சுவாசத்தை சொல்ல முடியும். சுவாசம் உள்ளே செல்வதும் வெளியே செல்வதும் ஒன்றிற்கொன்று நேர் எதிரானது. இரண்டு நேர் எதிரான செயல்பாடுகளில் சுவாசம் இருக்கிறது. இரண்டிற்கும் சேர்த்து தான் மூச்சு என்று பெயர். நேர் எதிரான இரண்டின் வழியாகவே இந்த உலகம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. பருவ நிலைகள் நேர் எதிரான பருவ நிலைகள் பருவ மாற்றத்தை நிலை கொண்டு வைத்திருக்க செய்கின்றன. நேர் எதிரான இரண்டு இயங்கு முறை இந்த உலகினுடைய செயல்பாடுகளை எப்போதும் இந்த உலகம் முழுக்க நிலைத்திருப்பதற்கு, உலகம் முழுவதும் நிலைப்பு தன்மைக்கு ஆதாரமாக இருப்பது நேர் எதிரான செயல்பாட்டு முறை தான் என்று விஞ்ஞானம் நிரூபித்து இருக்கிறது. அப்படித்தான் இருப்பதை நாம் பார்க்கிறோம். என்றாலும் ஒரு கற்பனைக்காக ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அது சார்பு நிலையில் எங்கேயும் நான் என்பதற்கு வேலை இல்லை. எதுவும் தனியாக இயங்கவில்லை. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகிறது. இப்போது இந்த கற்பனைக்குள் தனியாக இயங்குகிற ஒரு புள்ளி துவங்குகிற போது, தனியாக இயங்குகிற ஒரு செயல்பாட்டு வடிவம் துவங்குகிற போது அங்கு தனியாக இயங்குகிற ஒன்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு நான் அவசியமாகிறது.
கூட்டமாக இருக்கிறபோது, சமூகமாக இருக்கிறபோது, ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிற போது, ஒன்று ஒன்றைச் சார்ந்து வேலை செய்து கொண்டிருக்கிற போது அங்கு எந்த சிக்கலும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் அந்த கூட்டத்திற்குள் அந்த சமூக நிலைப்பாட்டிற்குள் அந்த நெறிமுறைக்குள் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிற போது ஒருவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிற போது அங்கு நான் என்கிற வடிவம், நான் என்கிற தோற்றம் உருவாவதற்கு காரணம் அமைகிறது. அந்த உருவாக்கத்தின் அடிப்படையில் அந்த உருவாக்கத்தினுடைய வெளிப்பாட்டில் நான் என்கிற உளவியல் உருவாகிறது. ஒட்டு மொத்த உளவியலும் இப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நான் என்பதற்கு பின்னால் ஒரு தனி உளவியல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று உளவியல் சார்ந்த விஞ்ஞான ஆவணங்கள் குறித்து வைத்திருக்கின்றன.
நான் என்பது ஒரு சொல்லல்ல. நான் என்பதை மனிதர்கள் ஒரு கூட்டத்திற்குள் ஒரு சமூகத்திற்குள் தன்னை தனித்து அறிமுகம் செய்து கொள்வதற்கு ஒரு கூட்டத்திலிருந்து தன்னை விளக்கி அறிமுகம் செய்து கொள்வதற்கு, ஒரு குழுவிற்குள் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டிக்கொள்வதற்கு நான் என்கிற அடையாள மொழி தேவைப்படுகிறது. நான் என்கிற அடையாளம் மொழியின் குறிப்பு, நான் என்கிற அடையாள மொழியினுடைய தன்மை அங்கு இருக்கிற நான் என்று கருதுகிற சொல்லுகிற அந்த தனி குறிப்பிற்கு முன்னாள் இருக்கிற எல்லாவற்றிலும் இருந்து தனக்கு இருக்கிற வேறுபாட்டினுடைய வெளிப்பாடு. முன்னால் இருக்கிற எல்லாமும் பச்சை வண்ணமாக இருக்கும் என்றால் நான் பச்சை வண்ணம் இல்லை என்று நான் துவங்குகிறது. முன்னால் இருக்கிற எல்லாமும் கார சுவையாக இருக்கும் என்றால், நான் கார சுவை அல்ல என்று நான் துவங்குகிறது. தன்னை சுற்றி இருக்கிற எல்லாவற்றிலும் உள்ளே இருக்கும் ஒற்றுமைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சிறிய வேற்றுமையை நான் என்று அறிமுகப்படுத்துகிற வேறுபட்ட குறியீடு நான். நான் என்பது இப்படியான உளவியல் பின்புலத்தோடு இருக்கிறது என்பதை நாம் உளவியலின் பார்வையில் கூடுதலாக தெரிந்து வைத்துக் கொள்வது மிர்தாதின் புத்தகத்தை வாசிப்பதற்கு கூடுதல் உதவியாக இருக்கும்.
மிர்தாதின் புத்தகம் எல்லா தன்மைகளிலும் வாசிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மிர்தாதின் புத்தகம் ஒரு உளவியலின் அடிப்படையில், ஆன்மீக தேடலின் அடிப்படையில் அல்லது இலக்கிய தன்மையில் என்று எல்லா அம்சங்களிலும் எல்லா பார்வைகளிலும் வாசிக்கப்பட வேண்டும் என்று எனக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அந்த வகையில் மிர்தாதினுடைய எல்லா சொல்லாடல்களையும் எல்லா கருத்துக்களையும் ஒன்று கூடி உரையாட செய்வதற்குரிய ஒரு நோக்கத்தோடு நாம் உரையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment