Tuesday, November 14, 2023

திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம் - பகுதி 2 // சிவ.கதிரவன்

                                                 திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம்

www.swasthammadurai.com


வாழ்க்கை என்பதை நீங்கள் என்னவாக நினைத்து இருக்கிறீர்கள் என்பதை பார்த்து அந்த நினைப்பின்படி வாழ்ந்து அந்த காலம் முடிந்த பின்பு அடடே நாம் வாழ்க்கையை வாழாமல் விட்டுவிட்டோமே, இவ்வளவு காலம் நாம் வாழ்வது என்று நினைத்துக் கொண்டு செய்த காரியங்கள் எல்லாமும் நம்மை வாழ்ந்தோம் என்ற திருப்தியை தரவில்லையே என்ற உணர்விற்கு பிறகு இனி இந்த வாழ்க்கையை, இந்த வாழ்வை எப்படி வாழ்வது, வாழ்வு என்றால் என்ன என்று நீங்கள் தேடுகிற போது உங்களுக்கு ஒரு நூல் உதவி செய்யும் என்றால் அது திருக்குறளுக்கு மிக பொருத்தமான வழி அல்லது திருக்குறளை பெற்றுக்கொள்வதற்கு மிக பொருத்தமான வாய்ப்பு. இதுதான் நண்பர்களே, திருக்குறளை வாழ்வியல் நூல் என்று நான் மதிப்பதற்கு, போற்றுவதற்கு, வழங்குவதற்கு காரணம்.

திருக்குறளை இப்படித்தான் வாழ்க்கையை நான் செய்து வைத்திருக்கிற எல்லா பகடிகளையும் எல்லா கேலிச்சித்திரங்களையும் நான் செய்து பார்த்த பின்பு அடடா காலத்தை வீணடித்து விட்டோமே, என் வாழ்நாள் முழுவதும் வாழ்வது என்று நினைத்துக் கொண்டு வேறு ஏதோ செய்து விட்டேனே என்று கருதுகிற போது, கருதிய போது அவற்றை அவ்வாறு செய்வதன் வழியாக நான் வாழவில்லை என்று உணர்கிறபோது, எவ்வாறு வாழ வேண்டும் என்று நான் நினைத்த தருணத்தில் எனக்கு வழிகாட்டுகிற ஒரு மறை நூலாக, மெய்யியல் நூலாக திருக்குறள் இருக்கிறது. அப்படித்தான் திருக்குறள் வாழ்வைப் பார்க்கிறது. நாம் செய்த காரியங்களில் எப்போது நாம் வாழவில்லை என்று உணர்கிறோமோ, இது வீம்பாக உணர்வது அல்ல. நீங்கள் வழிய உணர்வதல்ல. நீங்கள் காலங்காலமாக ஒன்றை செய்து கொண்டே இருக்கிறீர்கள். அந்த செயல்களின் வழியாக இன்று மகிழ்ச்சி இருக்கலாம்.நாளை மகிழ்ச்சி இருக்கலாம். நாளை மறுநாள் மகிழ்ச்சி இருக்கலாம். பத்து ஆண்டு வரை மகிழ்ச்சி இருக்கலாம். எப்போது ஒரு பெரும் காலம் செலவு செய்த பிறகு அடடா ஆரம்பித்தில் மகிழ்ச்சியாக இருந்தது இப்போது இங்கு மகிழ்ச்சி காணவில்லையே என்று உங்களுக்கு தோன்றுகிற போது நீங்கள் செய்த செயல் வாழ்க்கை கூறிய செயலாக இல்லையோ என்ற கருத்து உங்களுக்கு சிந்தனைக்கு வரும். அப்படி சிந்தனைக்கு வருகிற தருணத்தில் உங்களுக்கு ஏற்புடைய நூலாக, வழி காட்டுகிற நூலாக திருக்குறள் நிச்சயமாக இருக்கிறது. திருக்குறள் அப்படித்தான் வாழ்க்கைக்கு உங்களை அழைத்து செல்கிற இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே!.

 ஆக, திருக்குறளை நீங்கள் படிப்பதற்கு முன்பே வாழ்வு குறித்து உங்களுடைய பழைய முடிவுகளை ஓரத்தில் வைத்துக் கொள்வது மிகுந்த அவசியமானது. பழைய முடிவுகளை, வாழ்க்கை பற்றிய கருத்துக்களை, வாழ்க்கை என்பது என்ன என்று உங்களுக்கு வைத்திருக்கிற சமன்பாடுகளை என எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு அல்லது அதை அனுபவித்து பார்த்துவிட்டு அவற்றின் வழியாக ஒன்றும் நடக்கவில்லை. வாழ்வு குறித்து எந்த மாற்றமும் வாழ்க்கை குறித்து எந்த உணர்வும் உங்களுக்கு ஏற்படவில்லை என்ற நிலையில் தான் உங்களுக்கு திருக்குறள் மதிப்பிற்குரியதாக வழிகாட்ட காத்துக் கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் திருக்குறள் வழிகாட்டுவதற்கு காத்துக்கொண்டிருக்கிறது என்று நான் திருக்குறளை பார்க்கிறேன்.

திருக்குறளை  அறிமுகம் செய்வது தான் இன்றைய உரையாடலின் மையம். இன்றைய உரையாடலை நான் திருக்குறளை அறிமுகம் செய்து உரையாட வேண்டும் என்று  விரும்புகிறேன். ஒரு உரையாடலின் பயன் திருக்குறள் பற்றி உங்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தால் நல்லதென்று அல்லது குறைந்தபட்சம் நேரம் நமக்கு சாதகமாக அமையும் என்றால் திருக்குறளினுடைய ஒரு சில பகுதிகளை அல்லது முகப்பு பகுதியை உங்களுக்கு தெளியச் செய்யலாம். பகிர்ந்து கொள்ளலாம் என்று எனக்கு எண்ணம். அந்த வகையில் திருக்குறள் வாழ்க்கைக்குறிய, வாழ்வு என்றால் என்ன என்ற கருத்தின் பாற்பட்டே நம் முன் இருக்கிறது. இந்த வாழ்வை வாழ்வதற்குரிய, வாழ்வு என்னவென்று பார்ப்பதற்குரிய ஒழுங்கு முறைகளை அது அந்த வரிசைப்படி ஒழுங்குப்படுத்தி வைத்திருக்கிறது என்பது திருக்குறளை வாசிக்கிறபோது நாம் கண்டுகொள்ள முடியும். முதலில் திருக்குறளை வாசிப்பதற்கு உங்களுக்கு ஒரு விருப்பம் அவசியம். அந்த விருப்பம் இதுவரை நீங்கள் செய்து வந்திருந்த கவனமின்மையிலிருந்து, தவறான செயல்பாடுகளில் இருந்து, புரிதல் இல்லாத செயல்பாடுகளில் இருந்து ஒன்றைக் கண்டு, கேட்டு வந்து நிற்கிற தன்மையோடு அது இருக்க வேண்டும். திருக்குறளினுடைய உங்கள் வாசிப்பு என்பது உங்கள் விருப்பத்தில் அமைய வேண்டும். அந்த விருப்பம் என்பது பிழையற்ற ஒன்றை செய்ய வேண்டும் என்கிற உங்கள் அடி மன உந்துதலில் இருந்து அமையப்பட வேண்டும். இதுவரை பிழையான ஒன்றோடு வாழ்ந்து வாழ்வை, வாழ்வின் நாட்களை, வாய்ப்பை நாம் வீணாக்கி விட்டோம் என்கிற பார்வையிலேயும் அதைப் போலவே இனி நேர்த்தியாக பிழையில்லாமல் கவனமாக வாழ வேண்டும் என்கிற விருப்பத்திலேயும் திருக்குறளினுடைய வாசிப்பு நிகழ வேண்டும் என்பது திருக்குறள் வாசிப்பிற்குரிய இலக்கணமாக நான் கருதுகிறேன் நண்பர்களே.

உங்களை வாசிப்பதற்கு இப்படி ஒரு ஆர்வமும் விருப்பமும் இலக்கணமும் தேவைப்படுகிறது வாசிப்பதற்கு. ஏனென்றால் திருக்குறள்  (ஆங்கிலத்தில் சொல்வார்களே, ஒரு போரடிக்கிற சப்ஜெக்ட்) ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு போரடிக்கிற சப்ஜெக்டாக இன்று மாறிவிட்டது. ஆனால் திருக்குறள் ஆர்வத்தோடு வாசிக்கிறவர்களுக்கு மிகுந்த ஆச்சரியங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தருகிற ஒரு வாழ்வியல் பொக்கிஷம் என்று நான் பார்க்கிறேன்.

பெரும் பெரும் அறிஞர்கள் கூட இந்த வாழ்வியல் பொக்கிஷத்தை அவரவர் வழிகளில் நின்று கருத்து கூறியிருக்கிறார்கள். எல்லாமும் ஏகத்திற்கு துல்லியமாக பொருந்திதான் இருக்கிறது. அப்படி ஒரு மேன்மையை திருக்குறள் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. வாழ்வியல் என்பது உங்களது வாழ வேண்டும் என்ற வேட்கையில் இருந்து பிழையோடு வாழ்ந்து விட்டோமே என்கிற தவிப்பிலிருந்து நேர்த்தியாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்தில் இருந்து அக்கறையில் இருந்து துவங்குகிறபடியால் திருக்கிறள் உங்களுக்கு வாழ்விற்குறிய எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். எப்படி கற்றுக் கொடுக்கும் என்று உங்களுக்கு கேள்வி வரலாம்.  எப்படி திருக்குறளை படித்தவுடன் வாழ்வை வாழ்ந்து விடலாம் என்று நீ சொல்கிறாய் என்று உங்களுக்கு கேள்வி வரலாம். வர வேண்டும். மற்ற நூல்களை படித்தால் நீ சொல்வது போல நாங்கள் வாழ முடியாதா என்றால் மற்ற நூல்களில் அப்படி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திருக்குறளில் ஒரு நிச்சயம் இருக்கிறது. ஒரு மறைநூலை நீங்கள் படிப்பீர்கள் என்று சொன்னால், ஒரு இலக்கிய நூலை நீங்கள் படிப்பீர்கள் என்று சொன்னால், ஒரு தத்துவ, மெய்யியல் நூலை நீங்கள் படிப்பீர்கள் என்று சொன்னால் அந்த நூல் உங்கள் வாழ்வியலுக்கு வழிகாட்டும் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் கிடையாது. எப்போதும் கிடையாது. அது நிச்சயமாக உங்கள் வாழ்வியலுக்கு வழிகாட்டுதலுக்குரிய எல்லா சாத்தியங்களையும் கருத்துக்களையும் அதனகத்திலேயே வைத்திருக்கிறது என்பதில் எனக்கு எந்த வித மாறுபட்ட கருத்தும் கிடையாது. அகத்திலேயே வைத்திருக்கிறது. அது உங்களுக்கு வாழ்வை, வாழ்கிற முறையை கற்றுக் கொடுக்கும் என்பதில் 100% நான் உடன்படுகிறேன். அதற்கான எல்லாம் சாத்தியங்களும் இருக்கிறது. அதற்கான எல்லா சாத்தியங்களையும் எல்லா நூல்களும் எல்லா மறை நூல்களும் உள்ளடக்கமாக வைத்திருக்கின்றன என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.

 ஆனால் திருக்குறள் சாத்தியம் என்கிற எல்லையை கடந்து, உறுதியாக உங்களுக்கு வழிகாட்டும். திருக்குறளை கற்றுக்கொண்டு நீங்கள் பிழையாக வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வளவு துல்லியமான வாழ்வியல் நெறிமுறைகளை உங்களுக்கு முழுக்க கற்றுக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கான சான்றுகள் அதற்குள் இருக்கிறது என்பதாலேயே நான் திருக்குறள் அப்படியான தன்மையோடு வாழ்வியல் கூறுகளை நமக்கு வழங்குகிற தன்மையோடு இருக்கிறது என்று நான் திடமாகச் சொல்கிறேன். திருக்குறளை படித்துவிட்டால் வாழ்வு நன்றாக வாழ்ந்து விடலாமா என்று கேட்கிற கேள்விக்கு நான் திடமாக பதில் சொல்கிறேன். நிச்சயமாக திருக்குறளை நீங்கள் படிப்பீர்கள் என்று சொன்னால், வாசிப்பீர்கள் என்று சொன்னால் அதைப்போல உங்களுக்கு, வாழ்விற்கு வழிகாட்டுகிற ஒரு மேன்மையான மறைநூல் வேரொன்றும் இல்லை என்கிற அளவிற்கு என்னால் சொல்ல முடியும். எல்லா நூட்களையும் நான் படித்தவன் இல்லை. எல்லா நூட்களையும் நான் படித்துவிட்டு ஒரு ஒப்பிட்டு ஆய்வு செய்த அடிப்படையில் சொல்கிற ஆய்வாளர் கிடையாது. ஆனால் திருக்குறளில் அமைந்திருக்கிற ஒழுங்கு முறைகளை வைத்துக்கொண்டு திருக்குறள் வடிக்கப்பட்டு இருக்கிற அந்த வடிவமைப்பு முறைகளை வைத்துக்கொண்டு சொல்கிறேன் திருக்குறள் ஒரு முழுமையான வாழ்விற்குரிய, வாழ்க்கைக்குரிய எல்லா அம்சங்களையும் உங்களுக்கு வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அத்தகைய ஒழுங்கு திருக்குறளில் இருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...