Tuesday, November 14, 2023

திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம் - பகுதி 3 // சிவ.கதிரவன்

                                                 திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம்

www.swasthammadurai.com


திருக்குறளினுடைய துவக்கம் பாயிரம் என்று சொல்லுவார்கள். தமிழ் இலக்கியத்தில் ஒரு மரபு உண்டு. இன்று சம கால இலக்கியங்களில் சொல்வது போல ஒரு முன்னுரை, உள்ளே என்ன இருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிற ஒரு முன்னுரை திருக்குறளில் பாயிரம் என்று இருக்கிறது. அதுவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பால்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளுக்குள் இருக்கின்ற மொத்தமும் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்குள் இருக்கிற வாழ்வியல் நெறிமுறைகள் இயல்களாக பகுக்கப்பட்டு இருக்கின்றன. இயல்களுக்குள் மீண்டும் பத்து பத்து பாடல்கள், அதிகாரங்கள் என்று அதிகாரங்களாக பகுக்கப்பட்டு இருக்கின்றன. அதிகாரத்திற்குள் பாடல்களாக பகுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி பகுத்து வைப்பதற்கு ஒழுங்கு முறை என்று பெயர். ஒழுங்காக நேர்த்தியாக பகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் பார்க்கிறோம். நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாக நான் அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

திருக்குறளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது பகுக்கப்பட்டு இருக்கிற, வகுக்கப்பட்டிருக்கிற பால், இயல்கள், அதிகார வரிசை, பாடல் வரிசை எல்லாவற்றிலும் நீங்கள் பார்க்க முடியும், அதற்குள் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒழுங்கு என்பது என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். ஆனாலும் நான் சொல்ல விரும்புகிறேன். ஒழுங்கு என்பது என்ன. இப்போது ஒரு கட்டிடம் கட்டுகிறோம் என்றால் அந்த கட்டிடத்தில் மண், கல், செங்கல் இவற்றையெல்லாம் பயன்படுத்துகிறோம். இவற்றையெல்லாம் குவியலாக வைத்துக் கொண்டு கட்டிடம் கட்டுவதற்கு ஆகக்கூடிய செலவினை செங்கல், சிமெண்ட், சுண்ணாம்பு வாங்குவதற்கு உரிய பணத்தினை மொத்தமாக ஒரு இடத்தில் கட்டி அதற்குரிய எல்லா பொருட்களையும் வாங்கி ஒன்றாகக் குவித்து வைத்து விட்டால் அது கட்டிடம் என்று பொருள்படுமா என்றால் இல்லை. ஆக, அவற்றை ஒழுங்காக செய்ய வேண்டும். வாங்குகிற பொருட்களை, வாங்குகிற சாமான்களை ஒழுங்காக நேர்த்தியாக வகுத்து, பகுத்து செய்ய வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது அல்லவா. அப்படி வகுத்து, பகுத்து செய்வது என்றால் என்ன. எந்த நோக்கத்திற்காக கட்டிடம் கட்டுகிறோமோ அந்த நோக்கத்திற்கு பாதகம் இல்லாமல் அந்த நோக்கத்திற்கு பிறழ்வு இல்லாமல், பிழையில்லாமல் அந்த நோக்கத்தை அடைவதற்கு நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் அமையப்பட வேண்டும். அதற்கு பெயர் ஒழுங்கு.

இப்போது நாம் கட்டிடத்திற்கு உதாரணமாக பார்த்தோம் என்றால் ஒரு நான்கு, ஐந்து பேர் அல்லது ஒரு குடும்பம் குடியிருப்பதற்கு, வாழ்வதற்கு ஒரு கட்டிடத்தை உருவாக்குகிறோம். ஆக, அந்த கட்டிடத்தில் வாழுகிற ஐந்து பேரில் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள். ஒரு வயதானவர் இருப்பார் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம். அந்த கட்டிடம் கட்டி உள்ளே வாழ்பவர்கள் இரண்டு குழந்தைகள், ஒரு வயதானவர், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு பெண்மணி என்று ஒரு குடும்பம் அல்லது ஒரு குழு அந்த கட்டிடத்திற்குள் இருக்கிறது என்றால் அந்த கட்டிடம் கட்டி முடித்த பிறகு அந்த குழு வாழ்வதற்குரிய வழிமுறைகளோடு, வாழ்வதற்குரிய சாத்தியப்பாடுகளோடு அந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆக, அந்த ஐந்து நபரும் உள்ளே சென்று வருவதற்குரிய வாயில்கள் அந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும். இது ஒரு ஒழுங்கு. இது ஒரு முக்கியமான ஒழுங்கு. அங்கே பயன்படுத்தவர்களுக்கு உள்ளே போய் வருவதற்குரிய வாய்ப்பு இருக்க வேண்டும். அப்படி வாய்ப்பாக வாயிற் கதவு வைத்தாகி விட்டது. தொடர்ந்து அவர்கள் வாழ்வதற்கு இருப்பதற்கு வெளிப்புறச் சூழலில் இருக்கிற, இயற்கையில் இருக்கிற பெரும் குளிரும் காற்றும் வெப்பமும் அவர்களை தாக்கா வண்ணம் இருக்க வேண்டும். அதற்குரிய நிழல்பாடுகளோடு அந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு ஒழுங்கு. அந்த வகையில் அவர்களின் உயரத்தை விடவும் கூடுதல் உயரமாக மேலே போர்த்திய வண்ணம் அந்த கட்டிடத்தினுடைய அமைப்பை அமைத்துக் கொண்டால் உள்ளே பெரும் காற்றும் வெப்பமும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அடுத்த தேவையில் இருந்து, நோக்கத்தில் இருந்து உருவாகிற ஒழுங்கு. இப்படி ஒரு பெரும் செலவு செய்து கட்டிடத்தை அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு, கட்டிடத்திற்குள் இருப்பவர்களுக்கு முழுப் பயன் தருகிற வகையில் அந்த கட்டிடத்தை வடிவமைப்பதற்கு பெயர் ஒழுங்கு.

ஆக ஒரு ஒழுங்கு என்பது நிறைவு நிலையில் எந்த பயன்பாட்டிற்காக அவற்றை பேசுகிறோமோ, எந்த பயன்பாட்டிற்காக அவற்றை உருவாக்குகிறோமோ அந்த நிறைவு நிலை நோக்கி அந்த நோக்கத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் அந்த ஒழுங்குமுறை. அதில் பொருத்தப்படுகிற ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கல்லும் எதை நோக்கி, எதற்காக அது பேசப்படுகிறதோ அதற்கு கச்சிதமான பொருத்தப்பாடுகளோடு இருக்க வேண்டும். அப்படி கட்சிதமான பொருத்தப்பாடுகளோடு இருக்கிற ஒன்றிற்கு பெயர் ஒழுங்கு. உங்கள் உடல் ஒழுங்காக இயங்குகிறது என்றால் உங்கள் உடலினுடைய இயக்கத்திற்காக உதாரணமாக நம் கண் ஒழுங்காக இயங்குகிறதா என்றால் உங்கள் கால் நடப்பதற்குரிய பாதையை கண் சரியாக காட்ட வேண்டும். அப்படி என்றால் கண் ஒழுங்காக இயங்குகிறது என்று பொருள். நீங்கள் வாழ்வதற்குரிய உணவுகளை உண்கிறீர்கள். அந்த உணவுப் பொருளானது உங்கள் வாழ்க்கைக்குறிய ஆற்றலை உங்களுக்கு தருவதாக அமைய வேண்டும். அதற்குரிய ஜீரண அம்சங்களை உங்கள் வயிறு பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருக்கும் என்றால் உங்கள் வயிறு ஒழுங்காக இயங்குகிறது என்று பொருள். நீங்கள் என்று உங்கள் உடலை கருதிக் கொண்டால் நீங்கள் ஒழுங்காக இயங்குவதற்கு, நலமாக இயங்குவதற்கு உங்கள் உடலில் இருக்கிற ஒவ்வொரு அவயமும் இசைவான தன்மையோடு இருக்கிறது என்றால் அதற்கு பெயர் ஒழுங்கு. அப்படியான ஒழுக்க முறையோடு திருக்குறள் வாய்க்கப்பட்டிருக்கிறதா என்று ஒழுங்கிற்குரிய தன்மையோடு பார்த்தோம் என்றால் திருக்குறள் அப்படித்தான் உருவாகி இருக்கிறது. ஒரு மனிதனினுடைய வாழ்வின் மேன்மைக்கு திருக்குறள் எப்படி உதவுகிறது. அதற்கான வரிசை முறைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கிற போது அதுஒழுங்காக என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பார்க்க முடிகிறது. அந்த ஒழுக்க முறை திருக்குறளுக்குள் இருப்பதன் காரணத்தினாலேயே திருக்குறளை நல்ல வாழ்வியல் முறையாக வாழ்வில் நூலாக நாம் புரிந்து கொள்ள முடியும். பார்க்க முடிகிறது.அல்லது வாழ்வியலுக்கு எது முதன்மையாக அமையப்பட வேண்டும், எது முதன்மையாக இருக்குறது என்று கருதுகிறோமோ அந்த வரிசைப்படி திருக்குறளினுடைய முதல் துவக்கத்திலிருந்து இறுதிவரை நாம் பயணித்து போகிற போது இறுதியாக வாழ்வியல் குறித்து ஒரு நல்ல புரிதலை நாம் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் திருக்குறளினுடைய செயல்பாடு, வடிவமைப்பு, ஒழுங்குமுறை மிக்க மகிழ்ச்சியாக, மிக்க வாழ்விற்குரிய, கொண்டாட்டத்திற்குரிய எல்லாவற்றையும் உள்ளடக்கிய நெறிப்பாடுகளை கொண்டதாக இருக்கிறது என்பதையும் நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

 தமிழ் சமூகம் அல்லது இந்திய சமூகம் ஒரு மனிதனினுடைய வாழ்க்கை வெற்றியை அவன் வீடுபேறு அடைவது என்று வகுத்து வைத்திருக்கிறது. ஒருவன் வீடுபேறு அடைவதற்கு என்ன செய்வது என்று வாழ்வியலினுடைய இலக்காக, இலக்கிற்குரிய கேள்வியாக சிந்திப்பார் என்றால் அவர் வீடுபேறு அடைவதற்குரிய வகைகளை திருக்குறள் வகுத்து வைக்கிறது.

 அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்கிற வகையில் ஒரு மனிதன் தன் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வான் என்றால் அந்த வகையிலேயே அவனுக்கு வாழ்வினுடைய இலக்கணத்தோடு அவன் வாழ்வினுடைய அடுத்த நிலைக்கு, உயர் நிலைக்கு செல்வான் என்று பொருள் கொள்ள முடிகிறது தமிழ் இலக்கிய மரபுப்படி, வாழ்வியல் மரபுப்படி.

அந்த வகையிலே அறத்துப்பால் ஒரு மனிதனினுடைய அறம் குறித்தான செயல்பாடுகளை அது முன் வைக்கிறது.  ஆரம்பத்திலேயே உங்களுக்கு நான் அறிமுகத்தில் சொல்லி இருந்தேன். அறத்துப்பால் என்பது திருக்குறளுக்குள் என்ன இருக்கிறது என்பதை சொல்லுகிற முதல் நான்கு அதிகாரங்கள். பாயிரவியல். அது ஒரு முன்னுரை  போன்ற ஒரு அடுக்குமுறை. திருக்குறளுக்குள் என்ன இருக்கிறது. பாயிரவியலில் பார்த்தோம் என்றால் ஒரு எழுத்தை பற்றிய, ஒரு இலக்கியத்தைப் பற்றிய முன்னுரை சொல்கிறபோது அந்த எழுத்து எங்கிருந்து துவங்குகிறது, எங்கு நகர்கிறது, எங்கு செல்கிறது என்று நாம் பார்க்க முடியும். அந்த  முன்னுரையிலேயே நாம் அவற்றை கண்டுபிடிக்க முடியும். அது ஒரு மரபு. ஒரு இலக்கியத்தை, ஒரு செவ்வியல் இலக்கியத்தை அல்லது ஒரு சங்க கால இலக்கியத்தை பார்க்கிறபோது சமகாலத்திலும் கூட ஒரு நூலை, நாவலை, பெருங்கதையாடலை அல்லது ஒரு கட்டுரை தொகுப்பை பார்க்கிறபோது அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரைகளுக்குள் அல்லது அந்த கதைகளுக்குள் இருக்கிற கதை மாந்தர்கள் யாவர். அந்த கட்டுரையினுடைய சாராம்சங்கள் என்ன என்று ஒரு அறிமுகம் செய்வது போல முன்னுரை எழுதப்பட்டு இருக்கும். இது ஒரு இலக்கிய அமைப்பு முறையில் இருக்கிற ஒரு மரபு. அப்படி பாயிரவியல் இந்த திருக்குறளுக்குள் இருக்கிற மொத்த சங்கதிகளையும் நான்கு அதிகாரமாக வைக்கப்பட்டிருக்கிறது. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, முன்னோரை வணங்குதல், நான்காவதாக அறன் வலியுறுத்தல் இப்படி ஒரு நான்கு வகையில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கையும் நீங்கள் படித்துவிட்டால், நாங்கையும் பார்த்து விட்டால் நீங்கள் திருக்குறளினுடைய மொத்த அம்சத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...