Wednesday, November 15, 2023

திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம் - பகுதி 4 // சிவ.கதிரவன்

                                     திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம்

www.swasthammadurai.com


ஒரு முன்னுரை போன்று பாயிரவியல் அமைந்திருக்கிறது. பாயிரவியலில் கடவுள்    வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, பின்பு அறன் வலியுறுத்தல் என்று நான்கையும் நீங்கள் படித்துவிட்டால் நான் முன்னமே சொன்னது போல உங்களுடைய வாழ்வியல் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுவதற்கு ஒரு சுருக்கமான அறிமுகத்தை இந்த நான்கு அதிகாரத்தில் நீங்கள் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு அமைப்போடு திருக்குறள் வாழ்வியலை நெறிமுறைகளை நமக்கு தருகிறது. இந்த ஒழுங்குமுறை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். வாழ்வியல் ஒழுங்குமுறைக்கு மிக கச்சிதமான பொருத்தப்பாடுகளோடு திருக்குறள் எப்படி அமைந்திருக்கிறது என்று பார்க்கிறபோது ஒழுங்கு முறையினுடைய வகையாக, வழியாக ஒப்பிட்டு பார்க்கிறபோது முதலில் ஒரு அறிமுகம். அறிமுகத்தில் திருக்குறளினுடைய ஒட்டுமொத்தமும் என்னவாக இருக்கிறது. திருக்குறளை படிக்கிற போது என்னவெல்லாம் கற்றுக் கொள்வீர்கள். அது எவ்வாறெல்லாம் உங்கள் வாழ்விற்கு உதவுகிறது என்கிற அடிப்படையில் ஒன்றை நீங்கள் இந்த நான்கு அதிகாரத்திற்குள் பார்த்துவிட முடியும். அந்த வகையில் இந்த நான்கு அதிகாரம் கடந்து அடுத்த அதிகாரம் ஒரு மனிதனினுடைய இல்லறம் குறித்து பேசுகிற இல்லறவியல். 20 அதிகாரங்களை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது.

முதலில் பாயிரம் அறிமுகம். பின்பு அந்த மனிதனினுடைய இல்லறம். பின்பு இல்லறம் கடந்து துறவுறவியல். 13 அதிகாரங்களை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. முதல் அறத்துப்பாலில் இறுதியாக ஊழியல் ஒரே ஒரு அதிகாரம் தான். ஆக அறத்துப் பாலில் இந்த வரிசைப்படி பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்கிற வரிசைப்படி ஒருவர் வாழ்ந்து, வாழ்க்கையை பார்த்த பின்பு அவர்களுக்கு பொருட்பால் துவங்குகிறது. அறம் கொண்டு பொருள் ஈட்ட என்று  ஆன்றோரினுடைய ஒரு குறிப்பு நான் படித்திருக்கிறேன். முதலில் அறம்படி வாழ்தல் பின்பு அறத்தின் பாற்பட்டு பொருளீட்டல் பின்பு பொருளின் பாற்பட்டு கிடைக்கிற இன்பம். இன்பத்தின் பின் கிடைக்கிற வீடுபேறு என்று அறிஞர் பெருமக்கள் திருக்குறளை விளக்கி சொல்கிற போது சொல்வதுண்டு. அந்த அறத்துப்பால் முடிந்த உடன் இந்த ஒழுங்கினுடைய அடுத்தபடியாக அறம் முடிந்தவுடன் பொருள் ஈட்டுவதற்கு அறமாக இருக்கிற ஒருவன் தவறாக பொருளீட்ட முடியாது. அறமாக இருக்கிற ஒருவர் தவறாக பொருளீட்ட முடியாது.

பொருள் ஈட்டல் என்பது வணிகம் சார்ந்து நாம் இன்று புரிந்து வைத்திருக்கிறோம். பொருளீட்டல் என்பது ஒரு தரகு நிலையில் அல்லது ஒருவரை சுரண்டி பிழைக்கிற ஒன்றாக நாம் புரிந்து வைத்திருக்கின்றோம். அந்த வகையில் பார்த்து பழகிய நமக்கு திருக்குறள் அறத்துப்பால் கடந்த பின்பு பொருட்பாலை வைத்து வரிசைப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசைப்பாடுகளில் பொருளீட்டலில் இரண்டு பெரும் பிரிவாக அரசியல், உறுப்பியல் இருக்கிறது. பின்பு பொருட்பால் கடந்த பின்பு காமத்துப்பால். கலவியல், கற்பியல் என்று மொத்தம் 133 அதிகாரங்களை உள்ளடக்கி அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களை வைத்திருக்கிற ஒரு மாபெரும் ஒழுங்கு முறையோடு இந்த மெய்யியல் நூல் நமக்கு வாழ்வியல் குறித்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரிசைப்படி நாம் ஒழுகுகிற ஒழுக்க முறையில் நாம் பயணிப்போம் என்றால், நகர்ந்து செல்வோம் என்றால் வாழ்விற்குரிய எல்லா நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவரவர் வாழ்விற்கு, அவரவருக்கு உரிய ஒரு அம்சமான வாய்ப்பை வாழ்வு வைத்திருக்கிறது. அவருக்குரிய அம்சத்தோடு அவர் இருக்கிறார் என்கிற வாய்ப்பை வாழ்வு வைத்திருக்கிறது. வாழ்வு வைத்திருக்குற வாய்ப்பை புரிந்து கொள்வதற்கும் அந்த வாய்ப்பின் வழியாக வாழ்வை இன்னும் முழுமையாக வாழ்ந்து கொள்வதற்கும் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் அக்கறை உள்ள எல்லோருக்கும் திருக்குறள் நல்ல வழிகாட்டி நூலாக, நெறி நூலாக இருந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...