Friday, November 17, 2023

திருக்குறள் வாழ்வியல் / பாயிரம் –கடவுள் வாழ்த்து // பகுதி 2 - சிவ.கதிரவன்

                                             பாயிரம் –கடவுள் வாழ்த்து

www.swasthammadurai.com




இப்போது கடவுளை நாம் புரிந்து கொள்வதற்கு, கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் அந்த முடிவை நமக்கு அறிவிக்கிறார். முதல் பாடலிலேயே –

          “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

   பகவன் முதற்றே உலகு- என்பது முதல் பாடல்.  நாம் சிறிய வகுப்புகளில்  அல்லது திருக்குறள் அறிமுகமாகி இருக்கிறபோது நாம் பலரும் பல விதமான கேள்விப்பட்டிருக்கிற எளிமையான குறட்பா இது. ஆதி பகவன், அகர முதல என்பது ஒப்பீட்டு சொல். இலக்கணமாக நீங்கள் தெரிந்துதான். காலம் கருதி இந்த வகுப்பினுடைய  கருத்து முதன்மை கருதி நான் அவற்றிற்குள் போக விரும்பவில்லை.

 இரண்டு குறிப்புகளை வள்ளுவர் சொல்கிறார். ஆதி, பகவன். ஆதி என்பது என்ன என்றால் எல்லாவற்றிற்கும் ஆதி உண்டு. எல்லாவற்றிற்கும் ஒரு முதற் பொருள் உண்டு. ஒரு பேனா உருவாகியிருக்கிறது. இங்கே நாம் அமர்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒளிப்பதிவுக் கருவிகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம் என்றால் இதற்கு ஆதியாக ஒன்று இருக்கும். மீண்டும் அதை ஆய்விற்கு விஞ்ஞானப்பூர்வமாக உட்படுத்துகிற போது அதற்கு ஆதியாக ஒன்று இருக்கும்.

எப்படி கணிதவியலில், விஞ்ஞானத்தில் முடிவிலி என்று ஒன்றை சொல்வார்கள். முடிவிலி என்பது முடிவு பெறாதது. ஒரு எண்ணை சொல்கிறபோது அதைவிட பெரிய எண்ணை சொல்ல முடியும் என்று நகைச்சுவையாக சொல்லுவார்கள். ஆக, விஞ்ஞானம் என்பது இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளடக்கிய ஒரு புரிதல். விஞ்ஞானத்தினுடைய அடிப்படை கணிதம், இயற்பியல், வேதியியல். இந்த மூன்றும் மிக முக்கியமானது. இதை மையமாகக் கொண்டு கணிதத்தை பார்க்கிறபோது கணிதம் என்பது பூஜ்ஜியத்தில் துவங்குகிறது. எங்கு முடிகிறது என்று தெரியாது. தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு விஞ்ஞான பூர்வமான விளக்கம். தொடர்ந்து நீண்டு கொண்டே போகும். பூஜ்ஜியத்தில் தொடங்கி நீண்டு கொண்டே போகும். அதே போலவே ஆதி என்பது முன்பு செல்வது. ஒன்று உருவாவதற்கு முன்பு என்ன என்று முன்பு செல்வது. அதற்கு நீங்கள் விளக்கம் சொல்பவரின் அறிவு எல்லைக்கு உட்பட்டு, விசாரணை எல்லைக்கு உட்பட்டு அதனுடைய பொருளும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் எல்லாவற்றிற்கும் ஆதி உண்டு. உதாரணமாக, நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம். அதற்கு முன்பு கைப்பிடி வைக்காத நாற்காலியில் அமர்ந்திருப்போம். அதற்கு முன்பு பலகையில் அமர்ந்திருந்தோம். அதற்கு முன்பு தரையில் அமர்ந்திருந்தோம். இப்படி ஒன்றிற்கு முன்பு, ஒன்றிற்கு முன்பு, ஒன்றிற்கு முன்பாக ஒரு பொருள், ஒரு பொருளிற்கு முன் சிந்தனை. சிந்தனைக்கு முன்பு என்று ஒவ்வொன்றிற்கும் ஆதியை நோக்கி நகர்வதற்கு அறிவியல் பூர்வமான முயற்சிகளை நாம் செய்ய முடியும் அல்லது நம்பிக்கையின் பாற்பட்டு முயற்சிகள் செய்ய முடியும். தர்கபூர்வமாக முயற்சிகள் செய்ய முடியும். ஒவ்வொன்றிற்கும் ஆதி இருக்கிறது. ஆதியை எந்த தத்துவ மெய்யியலாளர்களும் மறுப்பதற்கு இல்லை. எல்லாவற்றிற்கும் ஆதி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

பகவன் என்பது பொருள்(matter). ஆதியும் எல்லாமும் பொருளாக்கப்பட்டது. சிந்தனை என்பது பொருளாக்கப்பட்ட பின்பு. ஆக, ஆதி என்பது சிந்தனை. முதன்மையானது. நாற்காலி என்று, தொலைபேசி என்று, புத்தகம் என்று ஒன்றை பின்னோக்கி தேடி சென்றீர்கள் என்றால் அது உருவாவதற்கான சிந்தனை, சிந்தனைக்கு அப்பாற்பட்டு, சிந்தனைக்கு முந்தைய என்கிற ஓர் இடத்தில் போய் நிற்கும். அது சென்று, வந்து, வளர்ந்து இன்று அது ஒரு படைப்பாக, உருவமாக, தோற்றமாக வந்து நிற்கும்.  இந்த இரண்டும் தவிர்க்க முடியாதது. இந்த இரண்டும் முதன்மையானது. இந்த உலகில் இந்த இரண்டும் இருக்கிறது. ஆதியான ஒன்றும் ஆதியான ஒன்றில் இருந்து பிறந்த ஒன்றும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை கடவுள் வாழ்த்தின் திருவள்ளுவர் சொல்கிறார். இந்த ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் என்பது என்ன. மெய்யிலாளர்கள் சொல்வது போல இந்த உலகம் மாயை என்று சொல்பவர்கள் உண்டு.  அரவிந்தர் என்கிற மெய்யியல் கோட்பாடு பேசுகிற பார்வையில் பார்த்தோம் என்றால் எல்லாமும் இறைவன் என்று சொல்வதும் உண்டு. நவீன உலகத்தில், நவீன காலத்தில் எல்லாவற்றையும் இறைவனாக பார்க்கிற இறை வகுப்புகள் வந்துவிட்டன. எல்லாமும்  இறைவன் தான். நீங்கள் இறைவனுக்குள்ளே தான் இருக்கிறீர்கள் என்று மெய்யியல் பேசுபவர்கள் சொல்கிற காலமாக இது இருக்கிறது. இவற்றையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். எல்லாமும் இறைவன் தான் என்றாலும் சரி  அல்லது எல்லாமும் மாயை தான் என்றாலும் சரி. எந்த வகையில் சொன்னாலும் இந்த உலகு ஆதியாக கருத்தில், சிந்தனையில் துவங்கி பொருளில் நிறைவடைகிறது. உலகம் துவங்கிய காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். மனிதன் உருவாவதற்கு முன்பும் இது இருந்து கொண்டே இருக்கிறது. இருந்து கொண்டே இருக்கும். இது கடவுள் அல்லது கடவுள் இன்மை  என என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்

ஆக திருவள்ளுவர் வாழ்க்கை குறித்து பேசுகிறபோது இது கடவுள் என்று அவர் குறிப்பிடவில்லை. உலகு என்பது என்ன என்று குறிப்பிடுகிறார். இந்த உலகம் கடவுளாக இருக்கலாம். மாயையாக இருக்கலாம். என்னவாக இருந்தாலும் உலகு என்பது என்ன. கண் முன்னால் இருக்கிற ஒன்றை ஆதி நோக்கி நீங்கள் அறிவியல்பூர்வமாக தேடுவீர்கள் என்றால், ஆதி ஓர் இடத்தில் போய் சேர்ந்து நிற்கும். தொடர்ந்து உங்கள் தேடல் ஆர்வத்தை பொறுத்து அந்த பயணம் நிறைவு பெறாமல் இருக்கும். அது ஒரு புறம் நீண்டு கொண்டே முன்னோக்கி செல்வது. இந்த இடத்தில் இருந்து மீண்டும் இந்த பொருள் வளர்ந்து கொண்டே செல்லும். இது நீண்டு கொண்டே பின்னோக்கி செல்வது. இந்த இரண்டும் சேர்ந்து இருப்பது - எப்படி ஒரு மொழிக்கு அகரம் இருப்பது போல, ஒரு மொழிக்கு அசை, ஒலி இருப்பது போல, சொற்கள் இருப்பது போல, எழுத்துக்கள் இருப்பது போல இன்னும் மொழியின் மேன்மை குறித்து பேசுகிற நூலாசிரியர்களும் சிந்தனையாளர்களும் ‘அ என்ற ஒலி எல்லா மொழிகளிலும் இருக்கிறது என்றெல்லாம் கூட இதனுடைய மேன்மை குறித்து, வள்ளுவரினுடைய சிந்தனை வளமை குறித்து விளக்கமாக சொல்கிறார்கள். நம் வகுப்பில் அப்படியான கோணத்தில் நாம் பேசுவதற்கு இல்லை. அது அவர்களினுடைய சிறந்த பார்வை.

ஆனால் நம் வகுப்பிற்குள் திருவள்ளுவர் நமக்கு அறிமுகப்படுத்துகிற கடவுள் என்பதன் பொருள் என்ன என்றால் கடவுள் என்று அவர் குறிப்பிடுவது கடவுளைக் கூட அவர் துல்லியமாக ஓர் இடத்தில் வெளிப்படுத்த விரும்புகிறார். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று உலகில் இருந்து தான் கடவுளை நமக்கு அறிமுகம் செய்கிறார். உலகு எவ்வாறு இருக்கிறது என்று அறிமுகம் செய்கிறார். கடவுள் வாழ்த்தினுடைய முதல் பகுதி உலகு எவ்வாறு இருக்கிறது. கண் முன்னால் இருப்பதினுடைய முன்முனை. கண் முன்னால் இருப்பதினுடைய இறுதி முனை. இரண்டும் இணைந்து பயணிக்கிற ஒரு பயணப்பாடாக இந்த உலகு இருக்கிறது என்கிற பார்வையில், இந்த நிஜத்தை நாம் ஏற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் மகிழ்ச்சியான வாழ்விற்கு, நிறைவான வாழ்விற்கான துவக்கம் என்று வள்ளுவரினுடைய வார்த்தைகளின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...