புதிய குழந்தை
ஒரு மனிதன் எப்போது ஒன்றை மகிழ்ச்சி என்று சொல்கிறான் என்று ஒரு வினாவை வள்ளுவர் எழுப்புகிறார். எப்போது ஒன்றை இனிமை என்று சொல்கிறான் என்று வள்ளுவர் எழுப்புகிறார். ஒரு மனிதன் இனிமை என்று தான் கேட்கிற இசையை குறிப்பிடுகிறான். அந்த இசையின் லயமும் இசையின் உணர்வும் அவனுக்கு இனிமையாக இருக்கிறது என்றால் எது அவனை அவ்வாறு சொல்ல செய்கிறது என்கிற உரையாடலில் வள்ளுவர் குறிப்பிடுகிறார், அவரது குழந்தையின் சத்தத்தை கேட்காத போது மற்ற இசைக்கருவிகள் இசைக்கின்ற, எழுப்புகின்ற இசை அவனுக்கு இனிமையானதாகத் தோன்றும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
குழலினிது, யாழ் இனிது என்று யார் சொல்லுவார்? யார் தனது குழந்தையினுடைய, ஒரு குழந்தையினுடைய சத்தத்தை கேட்காமல் இருக்கிறார்களோ அவர்களுக்கே குழலும் யாழும் இனிது என்று பொருள்படும் என வள்ளுவர் சுட்டி காட்டுகிறார். இந்த வள்ளுவரினுடைய குறளை நான் இன்னும் நீட்டிக்க விரும்புகிறேன். இன்னும் விரிவாக பார்க்க முடியும் என்று கருதுகிறேன். உள்ளபடியே வள்ளுவர் நான் நேசிக்கிற மரியாதைக்குரிய பெரும் புலவர்களில் ஒருவர். அவரது குறளுக்குள் இருக்கிற சாராம்சத்தை இன்னும் விரிவாக பேச வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான் நீட்டித்து வாசிக்கிற போது இந்த உலகில் உயர்ந்த தத்துவம் என்று எதையாவது ஒன்றை யாராவது ஒருவர் பார்க்கிறார் என்றால் அவர் குழந்தைகளினுடைய உள்ளடக்கத்தை பார்க்காதவர் என்று நாம் பொருள் கொள்ள முடியும்.
வானின், மலைகளின், காடுகளின் பெரும் வளமையை ஒருவர் பார்த்து வியக்கிறார் என்றால் அவர் குழந்தைகளினுடைய அகத்தில் இருக்கிற வளமையை பார்க்காதவராக இருக்கிறார் என்று இந்த குறளுக்குள் இன்னும் விரிவாக விரிவாக இலக்கியப் பூர்வமாக நாம் பேச முடியும் என்கிற வாய்ப்பை வள்ளுவர் வைத்திருக்கிறார். அப்படியே நான் பார்க்கிறேன்.
நண்பர்களே, ஒரு சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு 2500 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளைப் பற்றி உரையாடுகிறது என்பது வியப்பானது இல்லை. ஆச்சரியம் தருவதாக நான் பார்க்கவில்லை. அந்த சமூகம் குழந்தையை என்னவாக பார்க்கிறது என்பதில் தான் நாம் வியந்து வியந்து பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த தமிழ் சமூகத்தில் குழந்தையை பார்க்கிற வள்ளுவர் ஒரு குழந்தையின் உள்ளடக்கம் எவ்வளவு மேன்மையானது என்பதை பதிவு செய்திருக்கிறார் என்கிற பொருளோடு இந்த புத்தகத்தை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
புதிய குழந்தை என்று இன்று ஓஷோ நம்முன் பேசுகிற ஒரு உரையாடலின் அடர்த்தியான மையம் என்பது ஓஷோ முன்வைக்கிற குழந்தைகள் குறித்த உரையாடலுக்குள் இருக்கிற செயல்பாட்டு வடிவங்கள் எத்தகைய மேன்மையானது என்பது விசாரிக்கிற போது அது துவங்குகிற இடம், சென்று நிற்கிற இடம், முதல் புள்ளி விழுந்த இடம் வள்ளுவரினுடைய மக்கட்பேரு அதிகாரம் என்று நான் கருதுகிறேன்.
குழந்தைக்குள் இருக்கிற அகத்தை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான காலத் தேவையாக இன்று நமக்கு அமைந்திருக்கிறது. அடர்த்தியாக இருக்கிறது. ஆக குழந்தையினுடைய உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கிற போது எல்லாவற்றிற்கும் குழந்தை தீர்வு சொல்வதாக இருக்கிறது. மகிழ்வாக இருப்பதற்கான சூத்திரங்கள் என்ன. குழந்தைக்குள் இருக்கிற பண்புகளை நீங்கள் பார்க்கிற போது அந்த சூத்திரத்தை கண்டுகொள்ள முடியும். ஒன்றின் மீது படைப்பாக ஒன்றை பார்ப்பதற்கு என்ன செய்வது. படைப்பாக ஒன்றை உருவாக்குவதற்கு என்ன செய்வது என்று ஒரு மனிதர் தேடுவார் என்றால் அவர் குழந்தைகளுக்குள் அதை கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு சமூகம் முழுவதும் இருக்கிற எல்லா இடர்ப்பாடுகளுக்குமுரிய சிக்கல்களை குழந்தைகள் தீர்ப்பதற்குரிய தன்மையோடு இருக்கிறார்கள்.
எல்லா கொண்டாட்டங்களுக்கும் காரணங்களை, கொண்டாட்டத்திற்குரிய செயல்பாட்டு குறிப்புகளை குழந்தைகள் எப்போதும் தமக்குள் வைத்திருக்கிறார்கள் என்று நாம் பார்க்கிற பார்வையை, நாம் பேச வேண்டிய அவசியத்தோடு இருக்கிறோம். இது கல்வி குறித்து உரையாடுகிற ஒன்றாக மாறிப் போகிறது என்கிற மிகுந்த கவனத்தோடு குழந்தைகள் பற்றிய உரையாடலை நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகள் என்றவுடன் இந்த சமூகம் குழந்தைகளை கல்வி சாலைக்குள் கட்டி வைக்கிற ஒற்றை நோக்கத்தோடு இயங்குவதை பார்க்கிறோம். ஒரு குழந்தையை பார்க்கிற போது நான் பல நேரங்களில் நண்பர்களோடு பேசுகிற உரையாடலில் கேட்கிற சம்பவம், நிகழ்வு ஒன்று இருக்கிறது. யார் ஒருவர் குழந்தைகளைப் பார்த்தாலும் முதலில் கேட்கிற கேள்வி அவரது பெயர் என்ன, இரண்டாவதாக கேட்கிற கேள்வி அந்த குழந்தை படிக்கிற வகுப்பு என்ன, மூன்றாவதாக கேட்கிற கேள்வி அந்த குழந்தையினுடைய பள்ளிக்கூடத்தின் பெயர் என்ன, நான்காவதாக கேட்கிற கேள்வி அந்த குழந்தையினுடைய படிப்பு தரம் எவ்வாறு இருக்கிறது. உன் பேர் என்ன, எந்த வகுப்பில் படிக்கிறாய், எந்த பள்ளியில் படிக்கிறாய், நன்றாக படிப்பாயா என்பது சமூகம் குழந்தைகளுக்கு முன் வைத்திருக்கிற மாற்றத்திற்கு உள்ளாகாத கேள்விகள். இந்த கேள்விகளை எப்போதும் சமூக மாற்றிக் கொள்வதே இல்லை.
எல்லோரும் குழந்தைகளை பார்க்கிற போது இந்த கேள்வியை வைத்துக்கொண்டு தான் குழந்தைக்குள் செல்கிறார்கள். குழந்தையோடு உரையாடுகிற முதல் உரையாடல் இப்படித்தான் துவங்குகிறது. அது அறிந்த குழந்தை. அறியாத குழந்தை. நாம் குழந்தையினுடைய பெற்றோராக இருக்கலாம், பொறுப்புள்ளவர்களாக இருக்கலாம், குழந்தையைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்கலாம், அறிமுகமானவர்களாக இருக்கலாம், அறிமுகம் இல்லாதவர்களாக இருக்கலாம். எப்படியாயினும் குழந்தையோடு ஒரு உரையாடலை துவங்க வேண்டும் என்று ஒருவர் தீர்மானித்தால் அவர் இந்த நான்கு கேள்விகளை முதன்மையாக கேட்டு விட்டு தான் அந்த குழந்தையோடு உரையாட ஆரம்பிக்கிறார். இப்படி ஒரு அபத்தமான, வன்முறையான ஒன்று குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது என்கிற அடிப்படையில் குழந்தைகள் பற்றி உரையாடல் என்பது குழந்தைகளினுடைய கல்வி பற்றிய உரையாடலோ அல்லது குழந்தையினுடைய பள்ளிக்கூடத்திற்கும் குழந்தைக்கும் இடையே இருக்கிற தொடர்பு பற்றிய உரையாடலோ அல்ல என்பதை மிகுந்த கவனத்தோடு திருத்தமாக உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகளை படிக்க வைப்பதா, இல்லையா என்கிற நிறைய கேள்விகளை நாம் கடக்க வேண்டி இருக்கிறது. இப்போதும் கடந்து வந்து கொண்டே இருக்கிறோம். குழந்தைகளைப் பற்றி, குழந்தைகளின் சுதந்திரம் பற்றி, குழந்தையின் வெளிப்பாடு தன்மை பற்றி, குழந்தையின் படைப்பாற்றல் பற்றி நாங்கள் இப்போதெல்லாம் பேசி முடிக்கிறோமோ அப்போதெல்லாம் கூட்டத்திற்குள் இருந்து மீண்டும் மீண்டும் கேட்கிற ஒரே கேள்வி, அப்படின்னா குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்றீங்களா? என்பதுதான்.
நாம் பேசுவது குழந்தையினுடைய கல்வி பற்றி அல்ல. நாம் பேசுவது குழந்தையினுடைய படைப்பாற்றல் பற்றி. நாம் பேசுவது குழந்தையினுடைய உண்மை நிலை பற்றி. நாம் பேசுவது குழந்தைக்கும் மெய்யியலுக்கும் இடையே இருக்கிற தொடர்பு பற்றி. நாம் பேசுவது குழந்தை ஒரு இலக்கியத்தை எப்படி சாராம்சமாக வைத்திருக்கிறது என்பதைப் பற்றி. நாம் பேசுவது இந்த உலகம் அமைதியாகவும் இந்த உலகம் கொண்டாட்டமாகவும் மாறுவதற்கான எல்லா சாத்தியங்களையும் எல்லா சமன்பாடுகளையும் குழந்தைகள் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்பதை பற்றி. நமது மொத்த உரையாடலும் அப்படியானதாக இருக்கிறது என்கிற கவனத்தில் இந்த புத்தகத்தை நான் உங்களோடு அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தை படிக்கிற போது ஒரு குழந்தை பள்ளிக்கூடத்திற்கு செல்கிறதா, ஒரு குழந்தை பதின்ம வயதை எப்படி கடக்கிறது. ஒரு குழந்தை வீட்டில் எப்படி இருக்க வேண்டும். ஒரு குழந்தை எப்படி உடை உடுத்த வேண்டும் என்கிற மேம்போக்கான விடைகளும் கேள்விகளுமாக இந்த புத்தகத்தை நீங்கள் கடந்து செல்லக்கூடாது என்பதில் நான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.
குழந்தைகள் சமூகத்திற்கு சார்பானவர்கள் அல்ல. குழந்தைகளும் சமூகமும் ஒரு சிறிய இடைவெளியோடு இருக்க வேண்டும் என்கிற ஒரு பௌதீக வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளும் சமூகமும் எப்போதும் சேர்ந்து பயணிக்கிற தன்மையோடு இருப்பதில்லை என்கிற பல உள்ளடக்கங்களை நான் உங்களோடு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனென்றால் குழந்தைகள் கல்வி இன்னும் சமூகம் வைத்திருக்கிற பல்வேறு கருத்தாக்கங்களோடு பின்னப்பட்டிருக்கிற சூழலில் குழந்தைகளை புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அத்தகைய தேவை உணர்ந்து குழந்தைகள் குறித்த கற்றல் என்கிற நிகழ்வு நடக்கிறது என்கிற தன்மையில் குழந்தைகள் குறித்த கற்றலுக்குள் புதிய குழந்தை உரையாடப்படுகிறது என்று உங்களோடு பணிவோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment