Tuesday, November 21, 2023

புதிய குழந்தை - ஓஷோ - பகுதி 3 - சிவ.கதிரவன்

                                                             புதிய குழந்தை

குழந்தை குறித்து கற்றல் என்று நாம் பேசுகிற அடர்த்தி முழுவதும் அதற்குள் இருக்கிற கருத்து செரிவு எல்லாமும் சொல்லுகிற, வந்து நிற்கிற ஒற்றைப் புள்ளி குழந்தைகள் சமூகத்திற்கு சார்புள்ளவர்களாக இருக்கிறார்களா அல்லது சமூகத்திற்குரிய நெருக்கடிகளுக்கு தீர்வு சொல்கிறவர்களாக இருக்கிறார்களா என்கிற உரையாடலில் ஒன்றை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பேசுகிறோம்.

எங்களது பார்வையில், தனிப்பட்ட முறையில், எனது பார்வையில் எப்போதும் குழந்தைகள் எல்லா குழப்பத்திற்கும் தீர்வு சொல்பவர்களாக இருக்கிறார்கள். எல்லா பாரங்களையும் எளிமையாக கரைக்கும் வல்லமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  எல்லா அடர்த்தியான மனப் போராட்டங்களையும் உடைத்து, கரைத்து செல்கிற தன்மையோடு குழந்தைகள் இருக்கிறார்கள்  என்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். இத்தகைய பார்வையோடு பார்க்கிற போது புதிய குழந்தை என்கிற புத்தகத்திற்குள் உரையாடப்படுகிற குழந்தை பற்றிய உரையாடல் என்பது குழந்தையினுடைய சமூக சார்பின்மை, குழந்தை மீது சமூக முயற்சிக்கிற அடையாளக் குறிப்புகளை குழந்தைகள் எவ்வாறு தட்டி விடுகிறார்கள், குழந்தைகள் எவ்வாறு போர்த்திக் கொள்ளாமல் தவிர்க்கிறார்கள் என்கிற யுக்திகளை பேசிப் பார்க்கிற ஒரு புத்தகமாக இது இருக்கிறது. இந்த புத்தகம் முழுக்க குழந்தைகள் பற்றிய உரையாடல் அல்ல. குழந்தைகளைப் பார்ப்பவர்கள் பற்றிய உரையாடல். குழந்தைகளோடு பயணிப்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய உரையாடல்.

ஒரு தத்துவ ஆளுமை குழந்தைகள் குறித்து பேசுகிறார். தத்துவ ஆளுமை குழந்தைகள் குறித்து பேசுகிறார் என்பது சமகாலத்தில் புதிதல்ல. ஓஷோவிற்கு பக்கத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு பள்ளிக்கூடச் சூழலில், சமூக சூழலில் ஜான் ஹோல்ட் பேசிக் கொண்டிருக்கிறார். மரியம் மாண்டிசோரி பேசிக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் குறித்து இந்திய சூழலில் சுதந்திரத்திற்குப் பின்பு, சுதந்திரத்தை ஒட்டி வினோபா குழந்தைகள் பற்றி குழந்தைகளினுடைய உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கல்வி முறை பற்றி பேசிய நினைவுகள் நமக்கு இருக்கிறது. இவர்களினுடைய கல்வி குறித்த சிந்தனை என்பது ஒரு புறம் மிக அழுத்தமாக இவர்களுக்குள் இருக்கிற சமூக அக்கறை.

குழந்தை இயல்பிலேயே வளர்வதன் வழியாக பிற்காலத்தில் சமூகம் எத்தகைய மலர்ச்சியை சந்திக்கும் என்கிற  இவர்களின் குழந்தைகள் பற்றிய பேச்சை அது உருவாக்குகிறது. இவர்களின் குழந்தைகள் குறித்த உரையாடல் என்பது வெறுமனே குழந்தைகள் பற்றி உரையாடல் மட்டுமே. இயல்பாகவே குழந்தைகள் வளர்கிறபோது அது ஏற்படுத்துகிற வளர்ச்சி, அது ஏற்படுத்துகிற மலர்ச்சி சமூகத்தில் என்னவாக விளைகிறது என்கிற நோக்கத்தில் குழந்தைகள் பற்றி பேசுகிறார்கள்  இந்த கல்வி ஆளுமைகள், கல்வி பற்றி பேசுகிறவர்கள். அவர்களில் மிக உன்னதமான கருத்துக்களை குழந்தைகள் பற்றி ஓஷோ பேசுகிறார். ஓஷோவின் கருத்து குழந்தைகளை பற்றி பேசுவது என்பதை விடவும் குழந்தைகளை வளர்ப்பவர்கள் எவ்வாறு குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதாக அவர் உரையாடல் முழுவதும் நிரம்பி வழிகிறது.

ஏனென்றால் குழந்தைகளுக்கு இன்று நாம் ஒன்றை திரும்பத் திரும்ப செய்வது என்பதை வாய்ப்பாக அல்லது திட்டமாக வைத்திருக்கிறோம். நான் வாய்ப்பாக திட்டமாக என்று சொல்வதற்கு காரணம் நமது திட்டத்தின் வழியாக ஒரு வாய்ப்பு அதுவாக உருவாவது போல வைத்திருக்கிறோம். குழந்தைக்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்பது. எனக்கு தனிப்பட்ட முறையில் அனுபவம் நீச்சல் படிப்பதற்கு எனக்கு மூன்று நான்கு வயதில் வாய்ப்பிருந்தது. நீச்சல் கற்றுக் கொள்வதற்கு. எங்கள் ஊரில் நாங்கள் நீச்சல் பழகுவதற்கான ஒரு கிணறு இருந்தது. நான், என் தந்தை, என் உறவுக்காரர்கள் அந்த கிணற்றிற்கு சென்று குளிப்பது வழக்கம். அப்படியான வழக்கத்தில் தினசரி நீரோடு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் வழியாக நீச்சல் கற்றுக் கொள்வதற்குரிய சாத்தியத்தை நாங்கள் பெற்றோம். நீச்சல் கற்றுக்கொண்டோம். மூன்று, நான்கு வயதாகிற போது எனக்கு நீச்சல் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. என் மகிழ்ச்சியான வழியிலேயே  நான் நீச்சலை கற்றுக் கொண்டேன். எப்போதும் எனக்கு தண்ணீரோடு விளையாடுவதில் களைப்பே வந்ததில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது காலை 6:00 மணிக்கு நான் வீட்டில் இருந்து அந்த கிணற்றிற்கு சென்றேன் என்றால் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு பிற்பகல் 3 மணி ஆகும். எனக்கு உணவு தேவைப்படாது. இடையில் ஓய்வு தேவைப்படாது. ஒரு ஐந்து ஆறு மணி நேரம் குறைந்த பட்சம் தண்ணீரோடு பரவசமாக விளையாடுவதற்குரிய முனைப்பும் ஆர்வமும் இருந்து கொண்டே இருக்கும். ஆறு மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு மீண்டும் வீடு வருவதற்கு இரண்டு மணி, மூன்று மணி பிற்பகல் நேரம் ஆகும் என்றால் இந்த கால இடைவெளி எனக்கு எப்போதும் களைப்பை தந்ததே இல்லை. இடையில் எப்போதும் ஓய்வு தேவைப்பட்டதே இல்லை. நான் அவ்வாறே நீச்சலோடு பயணித்தேன். நீச்சல்  அவ்வாறு என்னோடு வந்து ஒட்டிக்கொண்டது என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

ஆனால் இன்று நீச்சல் பயிற்றுவிக்கப்படுகிறது. ஒரு நீளமான அகலமான ஒரு நீச்சல் குளத்திற்குள் குழந்தைகளை கைகளில், கால்களில் ரப்பர் சுற்றிக்கொண்டு அவர்கள் அந்த குளத்திற்குள் இறக்கிவிடப்படுகிறார்கள். அந்தக் குழந்தையை சுற்றி இரண்டு, மூன்று பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைக்கு பயிற்சி தருகிறார்கள். நீச்சல் பயிற்சி கொடுப்பதன் வழியாக கற்றுக் கொள்ள முடியும் என்கிற அபத்தமான நம்பிக்கையில் அவர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நீச்சல் அப்படி கற்றுக் கொள்ள முடியாது. அப்படி கற்றுக் கொண்டு நீச்சல் ஒரு  பேரலையில் நிற்பதற்கு எந்த பலத்தையும் கொடுக்காது. ஒரு பெரிய கடல் மட்டம் உயர்ந்து வருகிற போது, நீச்சல் குளத்தில் நீச்சல் படித்துக் கொண்ட ஒருவர் கடல் மட்டத்திற்குள் அலைக்குள் சென்று திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை. தண்ணீரோடு விளையாடி களைப்பில்லாமல் விளையாடி உற்சாகமாக தண்ணீரில் கலந்து கரைந்து கற்றுக்கொண்ட நீச்சல் மட்டுமே ஒருவரை நீச்சல் கற்றுக் கொண்டவராக கருதுவதற்குரிய நியாயத்தை கொடுக்கிறது.

பயிற்சி கொடுத்து நான்கு பேர் சுற்றி நின்று கொண்டு சராசரியான உயரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு கற்றுக்கொள்வது நீச்சல் அல்ல. அது ஒரு மணி நேர விளையாட்டு. ஒரு நாளில் ஒரு மணி நேரம் நீச்சலுக்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்கள். குழந்தைகள் அவ்வாறாக நீச்சல் கற்றுக் கொள்கிறார்கள் என்பது ஒரு புதிய விளைவை குழந்தைக்குள் ஏற்படுத்தாது. இது நீச்சலுக்கு மட்டுமல்ல. நாம் கொடுக்கிற எல்லா பயிற்சிகளுக்கும். ஓஷோ சொல்லுகிறார், பயிற்சி கொடுப்பது வழியாக மடையர்கள் உருவாகிறார்கள் என்று. இந்த புத்தகத்தில் புத்தகம் துவங்குகிறபோதே வினாக்கள் இப்படித்தான் தொடுக்கப்படுகிறது. ஓஷோவை பார்த்து ஒரு கேள்வி எழும்புகிறது. மடையர்கள் பிறக்கிறார்களா, பயிற்சி கொடுக்கப்படுகிறார்களா என்று அந்த கேள்வி துவங்குகிறது. பயிற்சி முறைகளுக்கு எதிரான உள்ளடக்கத்தை இந்த கேள்வி வைத்திருக்கிறது. ஓஷோ அப்படித்தான் பேசுகிறார். இன்று பயிற்சி கொடுப்பது எத்தகைய சிக்கலான ஒன்றை உருவாக்குகிறது என்பதை நான் அனுபவபூர்வமாக பார்க்கிறேன்.

என்  நீச்சலிற்கும் என் குழந்தைக்கு வழங்கப்படுகிற நீச்சை பயிற்சிக்கும் இடையே இருக்கிற வேறுபாடு எளிமையான வேறுபாடு அல்ல. பயிற்சியின் வழியாக என்னைச் சுற்றி விளையாடுகிற நீச்சல் குளத்தில் பயிற்சி பெறுகிற குழந்தைகளை பார்க்கிறபோது நான் நீச்சல் கற்றுக் கொண்டதற்கும் அந்த குழந்தைகள் நீச்சலை பயிற்சியாக மேற்கொள்வதற்கும் இடையே இருக்கிற வேறுபாடு நகைப்பிற்குரியதாக இருக்கிறது. தரத்தில் மிக குறைந்ததாக இருக்கிறது. மிகக் குறைந்தவர்களை அது உருவாக்குகிறது. நீச்சல் கற்றுக் கொண்டோம் என்கிற உணர்வை பயிற்சியின் வழியாக நாம் பெறுகிற போது நீச்சல் செய்கிற களத்தில் நிற்கிறபோது பேரலையின்  முன் நிற்கிற போது நாம் மடையர்களாக  இருக்கிறோம் என்பதை நாம் கற்றுக் கொண்ட நீச்சல் பேரலைக்கு முன் உணர்த்தி விடும் என்கிற உண்மையில் இருந்து பார்க்கிற போது பயிற்சி கொடுப்பதன் வழியாக மடையர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்  என்பதை இந்த சமூகத்திற்குள் நாம் சொல்ல வேண்டி இருக்கிறது. இன்னும்  சொல்ல வேண்டுமென்றால் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மடையர்களுக்கு தான் பயிற்சி கொடுக்க முடியும். மடையர்களுக்கு பயிற்சி கொடுப்பது என்பது மிக நெருக்கமான கருத்தாக்கங்கள் தான். ஆனால் வீரியமான குழந்தைகள் சுயமாக கற்றுக் கொள்வார்கள். வீரியமான குழந்தைகள் சுயமாக பயணிப்பார்கள். வீரியமான குழந்தைகள் பயிற்சிக்கு உள்ளாகும் போது அந்த பயிற்சியை பெற்ற பின்பு எதற்காக பயிற்சி மேற்கொண்டார்களோ அந்த நிஜத்திற்கு முன் நின்று பார்க்கிற போது அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் எல்லாமும் நமது புத்திசாலித்தனத்தை நமது சமயோகித புத்தியை மழுங்க செய்து இருக்கிறது. நம்மை மடையர்களாக மாற்றி இருக்கிறது என்பதை நிச்சயமாக உணர்வார்கள்.

 திருக்குறள் என்கிற இலக்கிய நூலை சரளமாக பேசுகிற, சிலாகித்து பேசுகிற யார் ஒருவரும் பயிற்சி முறையில் படித்தவர்கள் அல்ல. பள்ளிக்கூடத்தில் இரண்டு மதிப்பெண் பெறுவதற்காக படித்தவர்கள் அல்ல. இரண்டு மதிப்பெண் பெறுவதற்காக படித்த, பயிற்சி பெற்ற திருக்குறளை அவ்வாறு கற்றுக் கொண்ட ஒருவர் திருக்குறளை, திருக்குறள் பற்றி பேசுகிற உரையாடலில் திருக்குறள் வாழ்க்கை முறை குறித்து பேசுகிற உரையாடலில் மழுங்கடிக்கப்பட்டவர்களாக, அது பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. ஆக கற்றல் என்பது பயிற்சி கொடுப்பதன் வழியாக வருவதில்லை என்ற சமூகத்தன்மையோடு இந்த கூற்றினை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம். என்றாலும் கூட தொடர்ந்து ஓய்வு தேவைப்படாமல் தொடர்ந்து உற்சாகம் மிகுந்து வருகிற ஒன்றின் வழியாக செயல்படுகிற, ஒன்றின் வழியாக கடந்து போகிற, ஒன்றின் வழியாக கரைந்து போகிற ஒன்றே குழந்தையை  புத்திசாலித்தனமாக வளர்க்கும் என்பது நம் கண்முன் இருக்கிற  நிஜம். இந்த நிஜத்தை மையமாக வைத்து ஓசோ பயிற்சிகள் குறித்து விரிவாக பேசுகிறார்.  ஓசோ பயிற்சிகள் குறித்து உரையாடல் செய்கிறார். தொடர்ந்து கொடுக்கப்படுகிற பயிற்சிகள் எப்போதும் ஒரு சுயநினைவோடு இருக்கிற மனிதனை சுயநினைவோடு இருக்கிற ஒரு குழந்தையை என்ன செய்கிறது என்பதை நம் முன்  வைக்கிறார்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...