Monday, December 4, 2023

மன அழுத்தம் பற்றிய புரிதல் - பகுதி 1 - சிவ.கதிரவன்

 

மன அழுத்தம் பற்றிய புரிதல்

www.swasthammadurai.com


வேலை செய்கிற இடங்களில், குடும்பங்களில், நாம் உறவு பாராட்டுகிற இடங்களில் நமக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

மன அழுத்தம் குறித்த ஒரு விரிவான சிந்தனையை நாம் தெரிந்து கொள்வது என்கிற அடிப்படையில் இந்த வார உரையாடல்.

மன அழுத்தம் என்பது சமீபகாலத்தில், சமகாலத்தில் எல்லோருக்குமாக இருக்கிற ஒரு பொதுவான சொல்லாகவும் நவீன மனிதர்களுக்குரிய உளவியல் வெளிப்பாடாகவும் ஒரு குறியீடாகவும் வந்து கொண்டே இருக்கிறது.

மன அழுத்தம் என்பது அழுத்தப்படுகிற மனம் என்கிற அம்சத்தில் நாம் பேசுவது ஒருபுறம். ஆனால் மன அழுத்தம் என்று பயன்படுத்தப்படுகிற சொல்லின் பொருள் -  தொடர்ந்து ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற உளவியல் சிக்கலாக நாம் பார்க்கிறோம். தற்போது வேலை இடங்களில், உயர் பதவிகளில் இருக்கிற நபர்கள் கூட மன அழுத்தம் காரணமாக தன்னையும் தன் உடலையும் தன் வேலையையும் சிதைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கிற அளவிற்கு  மன அழுத்தம் என்பது பரவலாகி கொண்டிருக்கிற வேளையில் மன அழுத்தம் குறித்து நாம் சிந்திப்பதும் மன அழுத்தம் குறித்த ஒரு உரையாடலை செய்வதும் மிகுந்த முதன்மைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மன அழுத்தம் என்று ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் ஒன்றை புரிந்து வைத்திருக்கின்றோம். உண்மையிலேயே மனம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் வழியாக மனம் என்ன சொல்கிறது, அதன் வெளிப்பாடு என்ன என்கிற புரிதல் பெற்றுக் கொள்வதன் வழியாக மன அழுத்தம் குறித்து, மன அழுத்தத்திலிருந்து நாம் விடுதலை அடைவதற்கு சாத்தியம் இருக்கிறது. சமகாலத்தில், மன அழுத்தத்திற்கு விடையாக இருக்கிற, விடையாக சொல்லப்படுகிற சமன்பாடுகளும் உரையாடல்களும் மன அழுத்தத்தை போக்குவதற்கு பதிலாக சில நேரங்களில் மன அழுத்தத்தின் அடர்த்தியை அதிகமாக்கி விடுவதும் நிகழ்ந்து வருகிற சூழலில், மன அழுத்தத்தை மிகத் துல்லியமாக கடந்து போவதற்கு மன அழுத்தத்திலிருந்து முழுவதுமாக விடுதலை அடைவதற்கு மெய்யாகவே நாம் செய்ய வேண்டியது மனம் என்பது என்ன, மனம் எவ்வாறு அழுத்தப்படுகிறது என்கிற பார்வையில் ஒன்றை கற்றுக் கொள்வதன் வழியாக நாம் மன அழுத்தத்திலிருந்து விடுதலையாவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

ஒன்றைத் தொடர்ந்து செய்கிற வழக்கம் உள்ள நபராக ஒவ்வொருவரும் இருக்கிறோம். வழக்கம் உள்ள நபர் என்கிற வார்த்தையை நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். வழக்கமாக என்பது மாறிவிடா வண்ணம் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் அமைக்கப்படுவதில் கவனமாக இருக்கின்றோம். தொடர்ந்து ஒரே விதமான வேலைத் தன்மை, ஒரே விதமான வாழ்வியல் முறை, ஒரே விதமான செயல்பாடு, ஒரே விதமான உரையாடல், கல்வி முறை என்று  எல்லாவற்றிலும் வழிபாடு உட்பட, தத்துவ விவாதங்கள் உட்பட ஒரே விதமாக செய்வதில் நாம் கவனமாக இருக்கிறோம்.  ஒரே விதமாக செய்ய வேண்டும் என்கிற தொடர் முயற்சியும் நம்முள் இருக்கிறது. இந்த ஒரே விதமான நிலைப்பாடு, ஒரே விதமான பயணப்பாடு என்பது மனதின் வெளிப்பாடு.

மனம் என்பது ஒன்றை வழக்கத்தின் அடிப்படையில், வழக்கமாக்கிக் கொள்கிற அடிப்படையில் இயங்குகிற ஒரு செயல்பாட்டு கருவி. மனதைப் பற்றி உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்குமென்றால் அந்த கருத்துக்களை உளவியலின் அடிப்படையில் சரி, தத்துவத்தின் நெறிப்பாடுகளின் அடிப்படையிலும் சரி ஆய்வுக்கு உட்படுத்துகிற போது மனம் என்பது என்ன என்று, மனம் என்பது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு துல்லியமான இடத்தை கண்டெடுத்த பின்பு மனதினுடைய செயல்பாடை நீங்கள் இவ்வாறு தான் புரிந்து கொள்ள முடியும். மனம் என்பது தொடர்ந்து வழக்கத்திற்குள் நின்று செயல்படுகிற, செயல்படுத்துவதற்கு அழுத்துகிற ஒன்றான  தன்மையுள்ள கருவி. எல்லா மனிதருக்குள்ளும் இருக்கிற மனம் கொண்ட செயல்பாட்டு நுட்பம் என்பது ஒரு வழக்கத்தை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. தொடர்ந்து மனதினுடைய செயல்பாடு இப்படித்தான் இருக்கிறது. மனதினுடைய செயல்பாடு வழக்கம் மீறுகிறபோது மனம் இயல்பாக இருப்பதில்லை. நீங்கள் வழக்கமான  ஒரு செய்தித்தாளை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் செய்தித்தாள் படிக்காத நாள் உங்களுக்கு தொந்தரவான நாளாக மாறிப்போகும். குறிப்பிட்ட நேரத்தில் தியானம் மேற்கொள்கிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் தியான மேற்கொள்ள  முடியவில்லை என்றால் அந்த நாள் உங்களுக்கு தொந்தரவான நாளாக மாறிப் போகும். நீங்கள் செய்தித்தாள் படிப்பதையும் தியானம் மேற்கொள்வதையும் கூட சராம்சத்தில் இரண்டும் வேறுபட்டதாக இருந்தாலும் கூட மனதை பொருத்த அளவில் மனம் வழக்கமாக்கிக் கொள்ளும் என்றால் இரண்டையும் ஒன்றாகவே பார்க்க துவங்கும்.

செய்தித்தாள் படிப்பது என்பது லவ்கீக வாழ்க்கையினுடைய செயல்பாட்டு வழக்கம், செயல்பாட்டு முறை. அன்றாடம் நம் வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கும் நம்மைச் சுற்றி  என்ன நிகழ்கிறது என்று புரிந்து கொள்வதற்கும்  அறிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் புதிய செய்திகளை சேகரித்துக் கொள்வதற்குமான செயல்பாட்டு முறையாக செய்தித்தாள் வாசிப்பது இருக்கிறது. தத்துவ நெறிபாடுகளின் அடிப்படையில் தேடல் உள்ளவர்கள் என்று தம்மை கருதிக் கொள்கிறவர்கள் தியானம் முறையை கை கொள்வார்கள். தியான முறை என்பது  செய்தித்தளை வாசித்து செய்திகளை சேகரிப்பது என்பதற்கு நேர் எதிரான பக்கம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற எல்லா செய்திகளையும் உங்களை விட்டு நகரச் செய்வது, உங்களை விட்டு அகலச் செய்வதற்காக தியானம் மேற்கொள்கிற வழக்கத்தை தியானம் செய்பவர்கள் தியானம் செய்வதற்கான காரணமாக சொல்கிறார்கள்.

ஆனால் ஒரே நாளில் செய்தித்தாள் வாசிக்கிறவர் செய்தித்தாளை வாசிக்க முடியாமல் போகுமானால் என்ன துயரத்திற்கு உள்ளாவாரோ அதே துயரத்தை தியானம் செய்கிறவர் அதே நேரத்தில் தியானம் செய்வதற்கு தவறினால் துயரத்திற்கு உள்ளாகிறார் என்பது மனம் தியானம் பற்றியும் செய்தித்தாள் பற்றியும் ஏற்படுத்தி வைத்திருக்கிற வழக்கம். ஆக மனம் வழக்கத்தின் பாற்பட்டு ஒன்றை இயக்குகிறது, ஒன்றாக இயங்குகிறது என்பதை புரிந்து  கொள்ளுகிற போது மட்டுமே மனதிற்கு ஏற்படுகிற அழுத்தமும் மனதை அழுத்துகிற தன்மை எது என்பது பற்றியும் நாம் விரிவாக பார்க்க முடியும்.

மனம் தொடர்ந்து வழக்கத்தை பின்பற்றும் தன்மை உள்ளது. ஒரு வழக்கத்திலிருந்து நீங்கள் மாறுபடும் நிலைக்கும் நகர்வீர்கள் என்றால் உங்கள் மனம் அவற்றை கேள்விக்குள்ளாக்கும். உங்கள் மனம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது. மிக எளிய உதாரணம், நீங்கள் வழக்கமாக உறங்குகிற இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்றால் உங்களுக்கு அங்கு வழக்கம் ஏற்படும் வரை மனம் உங்களை உறங்க விடாது. பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இடம் மாறி படுக்கிற போது என்னால் உறங்க முடிவதில்லை என்று பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். மிக எளிய நிஜம் இது. உறக்கம் என்பது மனிதன் எல்லாவற்றிலும் எல்லா வகையான சௌகரியங்களையும் துறந்த போதும் விடுபட்ட போதும் எத்தகைய துயரமாக இருந்தாலும் கூட அந்த தனிமனிதனினுடைய கட்டுப்பாடை மீறி தன்னெழுச்சியாக வருகிற ஒரு உடல் சீரமைப்பு முறை உறக்கம். அந்த உறக்கம் கூட வழக்கம் மாறுகிறபோது தமது வழக்கமான இடத்தில் தூங்க முடியாது என்கிற நிலை வருகிற போது உறக்கம் கூட வருவதில்லை என்கிற மனதினுடைய விளையாட்டை நான் பார்த்திருக்கிறேன். பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்களுக்கும் பல நேரங்களில் அப்படி இருக்கக்கூடும்.

பேருந்துகளில் ஏறி அமருகிற போது இந்த இருக்கையில் தான் நான் அமர்ந்து வருவதுண்டு என்று சண்டை பிடித்த நண்பர்கள் என்னிடம் இருக்கிறார்கள். வகுப்பறையில் இந்த இடத்தில் தான் அமர்ந்து பாடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிற நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் எழுந்து இந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்று காலை எழுந்தவுடன் உறுதிமொழி எடுத்துக் கொள்கிற நண்பர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாமும் மனம் செய்கிற விளையாட்டு. மனம் உங்களைத் தொடர்ந்து ஒரு வழக்கமான நேர்த்தியான, நேர்த்தி என்று தான் கருதி கொண்டிருக்கிற ஒரு பாதையில் உங்களை இயக்கிக் கொண்டே இருக்கிற உந்தும் முறை. இந்த மனதினுடைய செயல்பாடு எப்பொழுதுமே இப்படியானதாகவே இருக்கிறது. நீங்கள் கடந்த காலத்தில் சேகரித்து வைத்திருக்கிற ஒரு செய்தியை, கடந்த காலத்தில் பார்த்து வைத்திருக்கிற ஒரு அனுபவத்தை உங்கள் மனம் அந்த அடிப்படையிலேயே மிகுந்த லாபகத்தோடு மிகுந்த இயல்பான நிலை என்கிற கருத்தோடு உங்களை இயக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறோம் அப்படித்தான் நீங்கள் இயங்கிக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் செய்கிற எல்லாமும் வழக்கத்திற்குட்பட்டதாகவே இருக்கும். நீங்கள் செய்கிற எல்லாமும் உங்கள் மனம் சொல்கிற வழக்கமான பாதையிலேயே பயணிப்பதாக இருக்கும். புதிய பாதையை தேர்வு செய்வது, புதிய பயிற்சியை தேர்வு செய்வது, புதிய செயல்பாட்டு முறையை தேர்வு செய்வது, புதிய தத்துவ தேடலை தேர்வு செய்வது என்று நீங்கள் முடிவு செய்கிறபோது உங்களுக்குள் உங்களை அறியாமல் உங்கள் கட்டுப்பாட்டை மீறி ஒரு பெரும் பதட்டத்தை சந்திப்பீர்கள். அந்தப் பெரும் பதட்டம் உங்கள் மனம் ஏற்படுத்துகிற பதட்டம்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...