நோய் தோற்றம்
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு மட்டும் தான் உடல் மற்றும் மனம் சார்ந்த உபாதைகள், அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. ஒப்பீட்டு அளவில் பிரபஞ்சம் முழுவதும் இருக்கக்கூடிய தாவர இனங்கள், நுண்ணுயிரிகள், மனிதனல்லாத விலங்கினங்கள் வரையறுத்து வைத்திருக்க வரையறைக்கு அப்பாற்பட்டு இருக்கிற எல்லா ஜீவராசிகளுக்கும், உடலில், உடல் இயங்கு முறையில் ஏதேனும் அசவுகரியமோ மாற்றமோ வருமென்றால் அவைகள் அவற்றை நோயாக கருதுவதில்லை. அது ஒரு இயந்திர தன்மையோடு இயங்குகிற இயல்பில் இருக்கின்றன. தன் உடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அந்த மாற்றத்தின் காரணமாக தான் அசௌகரியமாக இருக்கிறோம், இருக்கிறேன் என்பதும் மனிதனுக்கு மட்டுமே இருக்கிற வாய்ப்பாக இருக்கிறது.எந்த ஜீவராசியை விடவும் மனிதன் இயல்பான இயங்கு தன்மையிலிருந்து மாறுகிற போது தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடிகிறது. அந்த இயங்கு தன்மையில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை நோயாக கருதி கொள்ளவும் முடிகிறது. இத்தகைய மாற்றங்கள் மற்ற ஜீவராசிகளுக்கு இருப்பதில்லை. இந்த மாற்றங்களை புரிந்துகொள்ளும் புத்திக்கூர்மையும் கூட மற்ற ஜீவராசிகளுக்கு இருப்பதில்லை. முழுக்க முழுக்க நோய் என்பது மனிதன் சார்ந்ததாக இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எந்த ஜீவராசிகளும் எந்த விலங்கினமும் மனிதனோடு இருக்கிற தாவரங்கள், விலங்குகள் தவிர்த்து நோய்களும் நோய்களுக்கான சிகிச்சை முறைகளும் மற்ற விலங்குகளிடம் மற்ற ஜீவராசிகளிடம் இருப்பதில்லை. மனிதனிடம் இருக்கிற இந்த விலங்குகளுக்கு மனிதனின் பாற்பட்டு, மனிதனின் அறிவின் பாற்பட்டு அவற்றின் சௌகரியங்கள் அசவுகரியங்கள் கணக்கிடப்படுகின்றன. உள்ளபடிக்கே அந்த விலங்குகளுக்கு தான் நோய்வாய்பட்டு இருக்கிறோம் என்பது தெரியுமா என்பது கூட தெரியாது. தாவர இனங்களுக்கு நோய் பீடித்திருக்கிறது என்பது தெரியுமா என்பது கூட தெரியாது. ஆனால் ஒரு தாவர விளைச்சலில் ஏற்பட்டிருக்கக் கூடிய விலங்கின் ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய சிறு மாற்றம் கூட மனிதனால் நோயாக கருதப்படுகிறது. மனிதனே அவற்றிற்கு சிகிச்சை அளிக்கிற சிகிச்சைக்கான மருத்துவத்தை கண்டுபிடிக்கிற நுட்பங்களை அறிந்து வைத்திருக்கிற செயல்பாடு என்பது நாம் காண்கிறோம். மனிதனைப் பொறுத்தவரை உடல் மற்றும் உளவியலில் மனநிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சிறுசிறு அசௌகரியங்களை நோயாக கருதிக் கொள்கிற தன்மை இருக்கிறது. இப்படித்தான் மனிதன் தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சிறு இயங்கு தன்மை மாற்றத்தை இயற்கையிலிருந்து மாறி இயங்குகிற அசௌகரியத்தை, பிறழ்வை நோயாகக் கருதத் துவங்குகிறான். அவ்வாறுதான் மனிதனுக்குள் நோய் உருவாகிறது.
ALSO READ:நலம்(HEALTH)
நோய்
தீரும் வழிமுறை
மருத்துவத்தில் நோய் தீர்வது பற்றி பேசுகிற போது எந்த மருத்துவத்துக்குள்ளும் நோய் வருவதற்கான நேரடியான விளக்கமும் நேரடியான வரையறைகளும் இல்லை. எல்லா மருத்துவ தத்துவங்களும் மனிதன் நோய் தீர்வதைவிடவும் அந்த நோயின் வழியாக அந்த மனிதனுடைய சொந்த கவனத்தில், உயிர்ப்பு நிலையில் நல்ல இடம் நோக்கி நகர்வதை வலியுறுத்துகின்றனர். அவ்வாறு வலியுறுத்தும்படியே அவற்றின் கொள்கைகளும் தத்துவ விளக்கங்களும் இருக்கின்றன. நோய் தீருவதற்கும் மனிதனுக்குள் இருக்கிற அக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நோய் என்பது ஒரு நினைவூட்டல் தான் என்பது போன்ற கருத்துகள் கூட மருத்துவ நூல்களில் காணப்படுகின்றது. சமகாலத்தில் மனிதர்களுக்குள் ஏற்படுகிற ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு துயரமும் இயற்கையில் இருந்து நகர்ந்து வந்ததாக, இயற்கையிலிருந்து பிறழ்வு ஏற்பட்டதாக பார்க்கிற இயங்கும் முறையில், நோய்கள் உருவாவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியானதாக மட்டும் எனக்குத் தோன்றவில்லை. இயற்கையிலிருந்து ஒருவர் விலகி இருப்பதால் நோய் ஏற்படக்கூடும் என்பது சரி. ஒருவேளை அந்த யூகம் நிரூபிக்கப்பட்டதாக கூட இருக்க முடியும். ஆனால் மீண்டும் இயற்கைக்கு திரும்புகிற போது அந்த நோய் தீர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிற வாதம் போதுமானதல்ல. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவர் இயற்கையில் இருந்து விலகி இருக்கிறார். அவருடைய வாழ்க்கை முறை இயற்கை சூழலோடு சார்ந்து இல்லை என்பதால் அவருக்கு நோயின் தீவிரம் துயரத்தினுடைய தீவிரம் அதிகமாக இருக்கிறது என்று கூறுவது தர்க்கரீதியில் சரிதான். மனிதன் இயற்கையானவன். இயற்கையோடு இயைந்து வாழக்கூடிய உடற்கூறு உடையவன். அந்த வகையில் இயற்கையோடு இணைந்து வாழாத, பிறழ்வு ஏற்பட்டு இருக்கக்கூடிய வாழ்க்கை முறை வருகிற போது அவருக்கு நோயும் நோயினுடைய தீவிரத் தன்மையும் உருவாவதற்கு, அதிகமாவதற்கு வாய்ப்பு இருப்பது என்பது விவாதத்திற்கு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் மீண்டும் இயற்கையோடு இணைகிற இயற்கையோடு ஒத்திசைவாக வாழ்கிற தன்மையிலிருந்து அவர் தன் நோயைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பது சீரான போதுமான செம்மையான வாதமல்ல கருத்து அல்ல. ஒரு மனிதன் இயற்கையோடு இருக்கிற போது நோய் ஏற்பட்டு, மீண்டும் இயற்கையோடு இணைந்தால் அவர் நோயிலிருந்து விடுபடுவார் என்பது சரியானதல்ல. ஏனென்றால் மனிதன் இயற்கையோடு இருந்து விடுபடுகிறபோது இயற்கையில் இருந்து பிறழ்கிற போது ஏற்படுகிற மிக முக்கியமான மாற்றம் மனிதனின் புற அறிவு சார்ந்தது. அவருடைய சிந்தனை ஓட்டம் சார்ந்தது. அவர் இயற்கையிலிருந்து தன் சிந்தனை ஓட்டத்தை மாற்றுகிறபோது இயற்கையிலிருந்து சிந்தனை ரீதியாக பிறழ்வு பட்டுக் கொண்டிருக்கிற போது மட்டுமே அவருக்கு நோய் ஏற்படுகிறது. மீண்டும் அவர் இயற்கை சார்ந்து தன் சிந்தனை ஓட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான முயற்சி செய்கிறபோது அந்த நோயிலிருந்து அவர் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் சிந்தனை ஓட்டத்தில் சிந்திக்கிற முறையில் ஒரு மனிதன் இயற்கையிலிருந்து பிறழ்கிற மனநிலைதான் சிந்தனையை உருவாக்குகிறது. ஒரு மனிதன் இயற்கையிலிருந்து விடுபடுகிற மனநிலைதான் சிந்திக்க தூண்டுகிறது. ஒரு மனிதன் சிந்திக்க தூண்டப்பட்ட உடன் தான், ஒருவேளை ஒரு மனிதன் சிந்தனை ஓட்டத்தில் நகர துவங்கியவுடன் அவர் இயற்கையிலிருந்து விடுபட்டவர் ஆகிறார். மீண்டும் அவர் சிந்திக்காமல் இருக்கிற போது மட்டும்தான் இயற்கையோடு இணைய முடியும். ஏனென்றால் இயற்கையோடு இணைந்து இருக்கிற எந்த ஜீவராசியும் தனிப்பட்ட முறையில் சிந்திப்பதில்லை. வளர்ச்சி அடைவதில்லை. மனிதன் அப்படி அல்ல. மனிதன் இயற்கையோடு இருக்கிறபோது சிந்திக்கவில்லை. சிந்திக்க துவங்கியவுடன் சிந்தனையில் இருந்து விடுபடுகிறான். அல்லது இயற்கையில் இருந்து விடுபடுகிறான் அல்லது இயற்கையில் இருந்து விடுபட துவங்கியவுடன் சிந்திக்க துவங்குகிறான். இந்த இரண்டில் எதுவென்றாலும், இந்த இரண்டும் கூட இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த சிந்தனை ஓட்டமும் சிந்திக்கும் திறனும் எப்போது மனிதனிடமிருந்து விடைபெற்று கொள்கிறதோ அப்போது தான் மனிதன் இயற்கையோடு இணைய முடியும். சிந்தனை ஓட்டம் என்பது இயற்கைக்கு வெளியில் நடப்பது. இயற்கைக்கு சம்பந்தமில்லாதது. இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்வது. இவ்வாறாக இருக்கையில் ஒரு மனிதன் தன் உடல் அளவில் மன அளவில் தன்னை ஆரோக்கியப்படுத்திக் கொள்வதற்கு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் என்பதே சாத்தியமில்லாதது. அதுவே முழுமையானது அல்ல. ஒரு மனிதன் எப்போது சிந்தனை இல்லாமல் ,சிந்தனையிலிருந்து விடுபட்டவனாக சிந்தனை ரீதியாக இயற்கையோடு தன்னை ஒப்படைத்துக் கொண்டவனாக மாறுகிறாரோ அப்போது தான் அவர் இயற்கையின் கோட்பாடுகளின்படி அல்லது ஒப்படைப்பின் சரணாகதியின் படி நோயில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment