Tuesday, June 23, 2020

உணவில் உயர்வு தாழ்வு

உணவில் உயர்வு தாழ்வு

    உடல் நலம் பற்றி சிந்திக்கத் தொடங்கியவுடன் உணவின் பங்களிப்பு குறித்தும் உடல் நலத்திற்கும் உணவிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் பேசத் தொடங்கி வருகிறோம். எத்தனை வகையான நவீன மருத்துவங்களும், சிகிச்சை முறைகளும் வந்தாலும் அவை உணவை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பரிந்துரைக்கின்றன. ஓரிரு நாள் காய்ச்சல்,தலைவலி முதற்கொண்டு நுட்பமான அறுவை சிகிச்சை வரை உணவை பரிந்துரை செய்யாத மருத்துவக் கோட்பாடுகளே இல்லை. உடல்நலத்திற்கு மருத்துவங்கள் கூறும் வரையறைக்குட்பட்ட உணவுகளை நல்ல உணவுகள் என்றும் மருத்துவ ஆய்வுக்குட்படாத மரபு சார்ந்த உணவுகளை  தரமற்ற, பொருத்தமில்லாத உணவுகள் என்றும் பிரித்துப் பார்க்கிற மனோபாவம் நமக்குப் பழகிக் கொண்டிருக்கிறது.food in current lifestyle


                நோய்களின் பெயரைச் சொல்லி உணவைப் பரிந்துரை செய்வதும், உணவை நிறுத்துவதும் கூட இவ்வகையைச் சார்ந்ததே. உடல் அடிப்படை இயக்கத்தினை முழுவதும் தெரிந்த மருத்துவ முறைகள் கூட உணவிற்கும் உடலிற்கும் உள்ள தொடர்பை நன்மை, தீமைகளாகப் பட்டியலிடுகின்றனர். எல்லா உணவும் எல்லா உடலுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு உணவு. இதில் உடல்நலம்,அதன் சிதைவு அதன் காரணமாக தொடர்ந்து ஏற்படும் மரணங்கள், இதை தடுக்க மருத்துவங்கள் எடுக்கும் முயற்சி என்ற வகையில் உணவுப் பொருட்களும், உடல் நலமும் பார்க்கப்படுகின்றன.எளிமையாக பார்க்கின்ற பொழுது, குறிப்பிட்ட பொருளை உண்ணும்போது உங்கள் உடல்நலம் சேதப்படாது. மரணம் ஏற்படாது. குறிப்பட்ட பொருளைத் தவிர்க்கும்பொழுது உயிர் பிழைத்துக் கொள்வீர்கள் என்றெல்லாம் கற்பிக்கப்படுகின்றன. எண்ணையை தவிர்த்தால் இதயத்திற்கு நல்லது. வாழைத்தணடு சிறுநீரகத்தை பாதுகாக்கும் என்பது போன்ற பரிந்துரைகள் எல்லாம் உணவின் மீது சில முடிவுகளை சூட்டி விடுகின்றன.இதயத்திற்கு உதவும் உணவு உயர்ந்த உணவாகவும், சிறுநீரகத்தை கெடுக்கும் உணவு தாழ்ந்த உணவாகவும் நாம் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.உணவில் உயர்வு, தாழ்வு என்பதே கிடையாது.உண்பவர்களின் தேவையில் உள்ள உயர்வு, தாழ்வு உணவின் உயர்வு, தாழ்வாக மாறி விடுகிறது.

ALSO READ:துயரருக்கு முதலுதவி

                நோய் தடுக்கும் உணவுகள் என்று உலவி வரும் உணவுகள் எல்லாம் விலை உயர்ந்து போகின்றன.இப்பொழுது விலை உயர்ந்த உணவுகளையும் உயர்வாக புரிந்து கொள்கிறோம்.மனிதனின் ஆராக்கியம் உணவு,மனம்,சுற்றுச் சூழல் இவற்றின் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பின் அடிப்படையில் உணவின் பங்கு ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.ஆரோக்கியத்தில் மூன்றில் ஒரு பங்கு என்பது உடல் நலத்திற்கு உதவலாமே தவிர தீர்மானிக்க முடியாது என்பதை தமது கணக்குகள் வழியாக நமது முடிவிற்கே மறைமுகமாக விட்டு விடுகிறது சுகாதார நிறுவனம். உணவிற்கு அப்பாற்பட்டு காற்று, நீர், வெப்பம், பருவமழை, மன அமைதி இவையெல்லாம் சரிவிகிதத்தில் அமைந்த ஒருவரே ஆரோக்கியமானவர் என்று நாம் வரையறுத்துக்கொள்ளலாம். இந்த ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ள உங்கள் மதம், உங்கள் சாதி, உங்கள் குடும்பம், உங்கள் பாரம்பரியம் என்னவெல்லாம் பரிந்துரை செய்கிறதோ அதன்படி உணவுமுறை அமைந்திருக்கும். இந்தியாவில் பழமையான மதங்கள் சில உணவை தவிர்க்கச் சொல்கின்றன. சில சமூக முறைகள் சில உணவு முறைகளை பரிந்துரை செய்கின்றன. திருவிழா நாட்களில் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டுமென்ற சடங்குகளை ஏற்படுத்தியுள்ளனர்

    இந்த அடிப்படையில் உங்கள் மதமோ, சம்பிரதாயமோ குறிப்பிட்ட உணவை பரிந்துரைத்தால் அதுவே உயர்வானதாகும். அதுவே தாழ்வாக கருதப்படுமாயின் அதுவே தாழ்வான உணவாகிறது. பழ உணவு மட்டும் உண்பவர்கள், திரவ உணவு மட்டும் உண்பவர்கள், மரக்கறி மட்டும் உண்பவர்கள், புலால் கறி மட்டும் உண்பவர்கள், சமையல் செய்யாத உணவை மட்டும் உண்பவர்கள் என்று தமது விருப்பத்திற்கு ஏற்ப தமது உணவை உண்டு மகிழ்வோர் தமது உணவு பழக்கமுறைதான் உயர்ந்தது என்று கருதிக் கொள்கின்றனர். பழ உணவு உண்பவர் புலால் உணவு உண்போரை குறைபட்டுக் கொள்வதும், மரக்கறி உண்பவர் சமைக்காத உணவு உண்போரை பைத்தியக்காரர் போல பார்ப்பதும் உணவில் உயர்வு தாழ்வு மனப்பான்மையே ஆகும். நவீன சூழலில் உணவு கலாச்சாரத்தின் பிண்ணனியில் பார்க்கின்ற பொழுது பழங்களை மட்டும் உண்பவர் அதில் தெளிக்கப்படும் இராசயனங்களின் விளைவாக உடல் நலக் கேட்டிற்கு ஆளாகிறார். சமைத்த உணவை உண்பவர்கள் அதில் சேர்க்கப்படும் கூட்டுப் பொருட்களின் விளைவாக உடல் நலக்கேட்டிற்கு ஆளாகிறார். உண்கிற உணவை அதன் எந்த குணமும் சிதையாமல் உண்ண முடியும் என நம்பினாலும் கூட பற்பசை, உடற்பூச்சு, சோப்பு, வாசனை திரவியங்கள் போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் மூலமாக உடல்நலக் குறைவு புகுந்து விடுகிறது.

ALSO READ:மருத்துவரின் பொறுப்பு

                உடல் நலத்தைப் பேணும் முயற்சியில் மட்டுமே உணவு பார்க்கப்படுவதால் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உணவின் வழி செய்யப்படும் முயற்சி தோற்றுப் போகிறது. உங்கள் நலத்தை தக்க வைத்துக் கொள்கிற உணவு முறை என்பதே சரியான உணவு முறையாகும். அந்த உணவே உயர்ந்த உணவாகும்.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...