நரிகள் வடைசாப்பிடுவதில்லை
"கதை கேட்டு இருக்கிறீர்களா?" இந்தக் கேள்வியை பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் இருப்பவர்களிடம் கேட்டால் அனைவரும் ஆம் என்றே சொல்லியிருப்பர். தற்போது, கொஞ்சம் வயசானவர்களிடம் கேட்டால் கூட ஆம் என்று சொல்கிறார்கள். நாம் கூட ஆம் என்று சொல்வோம். ஏனென்றால் அவ்வளவு கதைகளைக் கேட்டிருப்போம். பாட்டி சொன்ன கதைகள், அப்பா சொன்ன கதைகள்,அம்மா சொன்ன கதைகள் என எல்லோருக்கும் வீட்டிற்குள்தான் கதைகள் தொடங்கி வளரத் தொடங்கின.
ALSO READ:தியானக் கதைகள் - 2
இருட்டிற்குள் இருக்கும் பெரிய அண்டங்காக்கை, சூரியனிலிருந்து வரும் சாகாத பறவைகள், ஊரே பயப்படும் அரக்கன் என மிரளவைத்த கதைகளும் பத்து தலை 20 கால்கள் 25 கைகள் கொண்ட அமானுஷ்ய உருவம் கொண்ட கதைகளும் இன்றும் நினைவில் உள்ளன. கொஞ்சம் பயம் கூட இருக்கிறது என் பாட்டி கதைகளில் மட்டும் தான் இளவரசியின் உயிர் ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி கிளியின் மூக்கில் இருக்கிறது .அந்தக் கிளியும் இளவரசியின் உயிரும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன.
என் அப்பா சொல்லியிருக்கிறார்கள் "குழந்தைகளுக்கு அறிவும் யோசனையும் கதைகள் வழிதான் வளருமாம்; அவர்களுக்கும் அப்படித்தான் இருந்ததாம்". சரியாகத்தான் படுகிறது .கதைகளில் உள்ளவை கற்பனையா, நிஜமா, எதிர்பார்ப்பா, ஏக்கமா என்பதெல்லாம் தேவையில்லை. எல்லாக் கதைகளிலும் சொல்பவரின் அனுபவம், விருப்பம் இருந்ததை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. பாட்டி கதைகளுக்குள்ளும் வீட்டில் கேட்ட கதைகளுக்குள்ளும் உள்ள உண்மையை ஒரு பேச்சாளர் திருத்தமாக சொன்னார் "நம் வீட்டுக் கதைகளில் கெட்டவர்கள் வென்றதில்லை, ஒருபோதும் நல்லவர்கள் தோற்பதில்லை,". அவர் சொன்ன பிறகு நான் கேட்ட எல்லா கதைகளிலும் தேடித் தேடிப் பார்த்தேன்; கெட்டவர்கள் வென்றதே இல்லை, நல்லவர்கள் தோற்றதே இல்லை. இப்போதெல்லாம் கதைகள் வேறுமாதிரி ஊக்கமளிக்கின்றன. வீட்டு கதைகளில் உள்ள செய்திகளை வளர்ந்த பின் ஆராய முடிகிறது தவிர திரும்ப கதை சொல்லவும் பாட்டி இல்லை, கேட்கவும் நேரமில்லை. இப்போதெல்லாம் பலர் என்னிடம் கதை சொல்லிவிட்டார்கள். நிறைய கதைகள் என்னிடம் வந்து தன்னைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. என்னை மாற்றிக் கொண்டும் இருக்கின்றன. நிறைய கதைகள்...
ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
வார இதழ் கதைகள், மாத இதழ் கதைகள், சிறுகதைகள், தத்துவக் கதைகள், ஜென் கதைகள், ஓஷோவின் முல்லா கதைகள், சத்குருவின் சங்கரன்பிள்ளை கதைகள் என பல கதைகள்... எல்லாவற்றிலும் மனிதனின் அவசரமும் நடப்பு வாழ்க்கையும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன. பொய் புரட்டுகள் இல்லை.
ச.தமிழ்ச்செல்வன், ஜெயகாந்தன், எஸ். ஏ. பி., லக்ஷ்மண பெருமாள், காமுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, மார்க்சிம் கார்க்கி, வெங்கடேசன் என நிறையப் பேர் சிறிதாகவும், பெரிதாகவும் கதைகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். இதில் உணர்ச்சிகள் இருக்கின்றன. நகைச்சுவைகள் இருக்கின்றன. கோபதாபங்கள் இருக்கின்றன. அழகு- வலி இருக்கின்றன. பொய் புரட்டு தெரியவில்லை. கதைகளில் பொய் புரட்டு தெரியவில்லை.
ALSO READ:தியானக் கதைகள்
நான் பேச வந்தது வேற கதை .
வீட்டில் கதைகள் கேட்டு முடிந்தபின்பு பள்ளிக்கூடம்தான் முதலில் கதைகளைச் சொல்லத் தொடங்கியது. பள்ளிக்கூடம் சொன்ன முதல் கதை என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த உறுத்தலின் காரணமாக பள்ளிக்கூடம் சொன்ன அடுத்து அடுத்து சொன்ன கதைகளை என்னால் கேட்க முடியவில்லை. முதல் கதை தந்த பாதிப்பிலிருந்து நாம் இன்றுவரை மீளவில்லை. சரி கதையைச் சொல்லி விடுகிறேன். ஒரு ஊரில் ஒரு பாட்டி, வயசான பாட்டி, வடை சுட்டு விற்பவள். ஒரு நாள் அவள் சுட்ட வடை ஒன்றை காகம் எடுத்துச் சென்று காட்டு மரத்தில் அமர்ந்தது. அந்த வழியே வந்த நரி காகத்தைப் பார்த்தது. நரிக்குப் பசி; காகம் வடை வைத்துள்ளது. நரி யோசித்தது. ஒரு திட்டம் தீட்டியது. காகத்துடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியது. அழகிய காகமே உன் தோற்றம் அழகாக இருக்கிறது. உன் குரலை கேட்க வேண்டும் ஒரு பாட்டு பாடேன் என்றது நரி. வாயில் வைத்திருக்கும் வடையை யோசிக்காமல் பாடியது காகம். வடை கீழே விழுந்தது. நரி எடுத்துக் கொண்டு ஓடியது காகம் ஏமாந்து போனது.
இந்தக் கதைதான் என்னைக் கோபமாகவும், எரிச்சலாகவும் மாற்றியது. மார்க்குக் கூட வேண்டாம் என்று சண்டை போட்டு இந்தக் கதையைச் சொல்லாமல் இருந்திருக்கிறேன். இதில் கோபமும் எரிச்சலும் ஏன் வரவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம்; பொய் புரட்டு பார்க்காத கதைகளைக் கேட்ட எனக்கு வந்தது. ஏனெனில்,"நரிகள் வடை சாப்பிடுவதில்லை".
No comments:
Post a Comment