Thursday, July 2, 2020

நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்

நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்

ஆகவே முழுவதும் படித்து விடுங்கள்.

 

குழந்தைகள் மீதான அக்கறை, குழந்தைகளின் நலன், குழந்தைகளின் கல்வி மற்றும் கற்றல் முறைகள் குறித்து, குழந்தைகள் மீது நல்லெண்ணம் கொண்ட யாவரும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அப்பேச்சுகளில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தாம் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் உயர்வானதாகவே கருதுகின்றனர். அவ்வாறு ஒவ்வொருவரின் அன்பும் உயர்கருத்தும் நலமானதே, எனினும் குழந்தைகள் மீது தனிஒருவரின் கருத்து செயல்வடிவம் பெறும் பொழுதில் அக்கருத்தை குழந்தைகள் எவ்வாறு கடந்து போகிறது? என்று பார்ப்பதில்லை; "மேலும் குழந்தைகள் சிறியவர்கள்; அவர்களுக்கு ஒன்றும் தெரியாது; அவர்களுக்கு நாம்தான் நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்கிற தன்மையுடன் குழந்தைகள் மீதான அக்கறை செயல்வடிவமாகின்றன. இதில் குழந்தைகளின் அகபரப்பு, மகிழ்ச்சி, சுதந்திரம் பற்றி ஒருவர் பேசினாலும் கூட அக்கருத்துக்களையும் தாம் கொண்டுள்ள பார்வையுடன்தான் பார்க்கின்றனர். ஆக, "எந்த புதிய கருத்தும் எனது கண்கொண்டு பார்த்து செயல் வடிவம் பெறுகிறது; எனது அக்கறை என் அனுபவத்தின் வழியாக உருவாக்கப்படுகிறது; இதில் குழந்தை, அதன் அசைவுகள், விளையாட்டுகள், மொழி, உரையாடல், சிந்தனை போன்ற குழந்தை சார்பு விஷயங்கள் கூட எனதாகவே இருக்கின்றன", என்பது அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது.

ALSO READ:HEALTH(நலம்)

இது ஒன்று...


குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகள் என்று துவங்கிய உடன் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகளை கவனித்துக் கொள்பவர்கள், செயல்பாட்டாளர்கள் என எல்லோருக்குள்ளும் எழும் பொதுக் கருத்து;

"இவனை கையாள்வதற்கு எளிமையான வழி சொல்லுங்கள்",

"இவன் நல்லா படிக்கணும்; என்ன செய்யலாம்?"

"சோசியல் வாழ்க்கையில் இவன் நல்லா வர என்ன செய்ய?"

"நாம் என்ன செய்ய? நாம நல்லாத்தான் இருக்கோம், நம்மட்ட ஏன் இத சொல்றாங்க?"

" பிள்ளைய அப்படியே பெரிய கம்பெனிக்கு தயார் பண்ணி செட்டில் ஆகிட்டா சரிதான்".

"இவ கொஞ்சம் சுமாராதான் படிப்பா, எப்படியாவது  பன்னெண்டு பாஸ் பண்ணிட்டா போதும்..."

என்றவாறே இருப்பதை பார்க்க முடிகிறது.

இதில் சேவையாக குழந்தைகளை பற்றி சிந்திப்பவர்கள் ஒரு படி மேலே போய்

"நீங்கள் சொல்றது சரிதான் ஆனால் இப்ப இருக்கிற சூழல், எதார்த்தத்துல என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும்; அதையே செய்வோம்... அத அரசாங்கத்தை செய்ய வைப்போம்". என்கின்றனர்.

ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது

இது இரண்டு...


     இப்போதுள்ள கல்வி, குழந்தைகளுக்குள் ஏற்படும் சிக்கல்,கற்றல் நெருக்கடி, குழந்தைகளுக்கான உளவியல் சிக்கல் இவற்றின் மீதான மாற்று உரையாடல்களை, பரிந்துரைகளை எதிர் கொள்பவர்களுக்கு கூடுதல் குழப்பமாக உள்ளது.

     "குழந்தைகளை எங்கு வேண்டுமென்றாலும் படிக்க செய்யலாம்; அவர்களுக்கு கலை, இலக்கிய வாய்ப்பினை உருவாக்குவோம்; அவர்கள் ஓவியங்கள் வரையட்டும்; அப்படியே அவர்களின் மகிழ்வு இரட்டிப்பாகும். குழந்தைகளின் கவிதை திறன் மேம்பட்டவுடன், அவன் உயர்ந்தவனாகிவிடுவான் என்ற கற்பனைகள், எதிர்பார்ப்புகள் ஒருபுறம்..."

     "குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை போதிப்போம், சாதிய பாகுபாடுகளை களைவோம் என்று வகுப்புகளை  நடத்துவதும் நிகழ்கிறது."

இம்மாதிரியான பேச்சுக்களும் ஆலோசனை வகுப்புகளும் குழந்தைகளுக்கு வழிகாட்டும், அவர்களை உயர்த்தும் என்ற நம்பிக்கைகள்  வலுப்பெற்றுள்ளன.

     "உலகளாவிய கல்வியாளர்கள் என்போரின் பரிந்துரைகளை முன்மாதிரியாகக் கொள்வதும், உலகளாவிய இலக்கிய திரைப்பட வடிவங்களை முன்வைத்து ஆலோசிக்க ஆரம்பிப்பதும் கூட மாற்றுக் கல்வி- கற்றலுக்கான களமாக உள்ளது."

ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை

இது மூன்று...

 

இம்மூன்று நிகழ்வுகளையும் நீங்களும் பார்த்திருக்கலாம்...

இதனைத் தொடர்ந்து நான் உங்களிடம் பகிர நினைப்பது,

குழந்தைகளின் மீது பெற்றோராகிய நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், அன்பு அக்கறையும் சரிதானா? என்று நான் கேட்ட எல்லா பெற்றோரும் என்னுடன் பேசத் துவங்குகின்றனர். அந்த பேச்சானது மேற்கூறிய வகைகளில் நிகழ்கிறது. பேசிக்கொண்டுள்ள போது இடையில், இறுதியில் அவர்கள் சொல்லும் வார்த்தை...

     "சரி விடுங்க; நீங்க சொல்வது எல்லாம் சரிதான்; ஆனா இப்படிதான் பள்ளிக்கூடமும் சமுதாயமும் இருக்கு; என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழி சொல்லுங்க" என்று என்னிடம் கேட்கின்றனர்.

நான் ஒரு பரிந்துரையை சொன்னால் முகம் மாறுகிறது. ஏற்கமுடியவில்லை;பின் என்னை ஆபத்தான ஆளாக பார்க்கத் துவங்குவதை உணர்கிறேன்.

உதாரணமாக ஒன்று, ஒரு பெற்றோரிடம் நான் சொன்னது, "உங்கள் குழந்தை தினமும் பல்துலக்கிவிடும், என்றாவது ஒருநாள் பல் துலக்க விரும்பவில்லை எனில் விட்டு விடலாமே? என்றேன். அதோடு நான் வேண்டாதவனாகிவிட்டேன். அவர்கள் என்னை தவிர்க்கின்றனர். இவ்வாறு தம் பல்லை தான் எப்போது துலக்க வேண்டும் என்ற சுதந்திரத்தை தரமுடியாத ஒரு நபரால் குழந்தைகளுக்கு பிற விஷயங்களில் என்ன சுதந்திரத்தை, மகிழ்ச்சியைத் தர முடியும் என எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

இது நான்கு...

 

இவ்வாறு குழந்தை வளர்ப்பு, கற்றல்-கற்பித்தல் உரையாடல்கள், பரிசோதனை முயற்சிகளில் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன.

குழந்தைகளை வளர்ப்பதென்பது கதை சொல்ல வேண்டும், நீதி போதிக்க வேண்டும், ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்,நன்கு படிக்கவைக்க வேண்டும். எதிர்காலத்தில் சம்பாதிக்கும் நபராக மாற்ற வேண்டும்,கலை உணர்வுள்ளவனாக மாற வேண்டும். கவிஞனாக மாற வேண்டும். இசைக்க வேண்டும் என விதவிதமாக பெற்றோர்களின் விருப்பங்கள் மீதே குழந்தைகள் பற்றிய உரையாடல் தனியாக உரையாடப் படுகின்றன.

"நீச்சல் தெரியாத அப்பா நீச்சல் போட்டிக்கு குழந்தைகளை தயார்படுத்துவதும், நான் ஸ்போர்ட்ஸ் வுமேன் என் மகளும் ஸ்போர்ட்ஸ் போகனும்" என அம்மாக்கள் கருதுவதும் வேடிக்கையானதே.

இவ்வேடிக்கைகள், தான் கொண்ட கருத்துக்களில் இருந்தே தம் குழந்தைகளை கையாளும் தன்மையைத்தான் காட்டுகின்றன.

இவ்வகை குழந்தை வளர்ப்பை என்ன சொல்வது... குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் தவிர, பள்ளிக்கூடம் சார்பு நடவடிக்கை தவிர வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை.

பள்ளிக்கூடம், நெருக்கடிகள் அவர்களை பலம் குறைந்தவராக மாற்றுகின்றது எனும்போது என்னிடம் கேட்கப்படும் கேள்வி, "நீங்க இதுமாதிரி பள்ளிக்கூடம் போகாமல் இருந்தா  இப்படி பேசுவீங்களா?  நீங்க இப்படி பேசுவதற்கு கூட நீங்க அழுத்தப்பட்டு படிச்சதுதான் காரணம்,அதனால் இது அழுத்தம் இல்ல;வளர்ச்சிதான்"  என்று நேரடியாகவே சொல்வதையும் காண்கிறேன்.

அப்போதெல்லாம் எனது பதில் "அப்படியெனில் உங்கள் குழந்தையை நல்லா படிக்க வைக்கிறது என் மாதிரி பேச வைக்கவா?" என்றவுடன் கோபமாக திரும்பிக் கொள்கின்றனர்.

ஆக, குழந்தை வளர்ப்பு பற்றி சமூகம் என்ன சொல்லி வைத்திருக்கிறதோ, அதைத்தான் ஒவ்வொருவரும் பின்பற்றுகின்றனர் என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் பிறருக்கு சமூகமாக தம்மை மாற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். கல்வியை சொல்லித்தருவது பள்ளிக்கூடம் வழியாக சமூகம் தான் என்பது கண்முன்னே தெரிகிறது.

இச்சூழலை மறுத்து வீட்டுக்கல்வி பரிந்துரைகள், பள்ளியில்லா கல்வி முறை பற்றிய செயல்பாடுகள் உரையாட முடியாமலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டுக் கல்வியில் குழந்தை மையப்படுத்தப்படுகின்றதா? எனில் இல்லை; அங்கு பள்ளிக்கூடம் தரும் அழுத்தம் இல்லையே தவிர கற்றல்,கற்பித்தல், பரிந்துரைத்தல் ஆலோசனை வழங்குதல் எல்லாம் ஒன்றே தான்.

ஒரு குழந்தையை மையமாகக்கொண்டு யோசிக்கிற புத்திசாலித்தனம் இந்த சமூகத்திற்கு வாய்க்ப்படாது. ஏனெனில் இச்சமூகத்தினர் குழந்தைகளை உபபொருளாக உற்பத்தி செய்கின்றனர். சமூகத்தில் தாய் தந்தையின் அன்பில் குழந்தைகள் உற்பத்தி நிகழ்கிறது. சமகாலத்தில் உள்ள குழந்தைகள், முற்காலத்தில் உள்ளவர்கள் என யாவரும் அவ்வாறு வந்த வாரிசுகளாகவே உள்ளனர். சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட குழந்தை உற்பத்தித் தடுப்பு முறைகளை பற்றி மனித சமூகம் மருத்துவ ஆய்வுகளை செய்துள்ளது; அப்படியெனில் என்ன பொருள்? குழந்தைகளை மனித சமூகம் விரும்பவில்லை. சென்ற நூற்றாண்டு வரை கூட, தற்போதும் கூட குழந்தை உற்பத்தியை தவிர்க்க மருத்துவ பரிந்துரைகள் காணக்கிடைக்கின்றன.

இம் மருத்துவ ஆலோசனைகளும், தடுப்பு மருந்துகளும் அமோகமாக விற்றுத்தீர்கின்றன, என்றாலும் இத்தடுப்பு நடவடிக்கையை மீறியோ, இவற்றில் உட்படாமலோ வந்த குழந்தைகள்தாம் நாமெல்லாம். ஒவ்வொருவருக்குள்ளும் தேவையை நிறைவேற்றவும், சொத்தை காக்கவும், பெயரைச் சொல்லவும் குழந்தைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றுள்ள மனநிலையை உங்களில் யார் மறுக்க முடியும்?

பின்வருமாறு அரசாங்கம் அறிவிப்பு செய்த காலமும் உண்டு. "குழந்தை பெற தடைகளை உபயோகியுங்கள்" என்று... இச்சூழலில் பிறக்கும் குழந்தைகளை, உற்பத்தி முறையில் வந்த உபபொருட்களை இச்சமூகம் எவ்வாறு பார்க்கும்? குழந்தைகள் உங்களது உடலளவிலான உற்பத்தி பொருள்; அவற்றை நீங்கள் பொருள் என்ற மனநிலையுடன் தான் கையாளுகின்றீர்கள். அப்படித்தான் உங்களால் செய்ய முடியும். குழந்தைகள் பற்றி யாராவது அதிகமாக பேசினால் "இது என் பொருள்; என் விருப்பம்" என்று தூக்கிக்கொண்டு ஓடி விடுவீர்கள். இந்நிலையில் இந்த சமூகத்திற்குள் குழந்தையின் கல்வி கற்றல் முறைகள் பற்றி உங்களால் அக்கறையுடன் என்ன பேசிவிட முடியும்?.

குழந்தைகளை உபபொருளாக பாவித்த உடனேயே உங்கள் அணுகுமுறை முழுவதும் சிதைந்துதான் போகிறது. இந்த அணுகுமுறையும் சிதைவு நிலையும் கூட மாற விரும்பினால் "நாம் கூட உபஉற்பத்திதானே" என யோசிக்கத்துவங்குங்கள். உங்களின் சொந்த அக உரையாடல் ஒருவேளை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றத்தார் யாவருக்கும் நலம் பயக்கக்கூடும்.

இந்த சிந்தனை கொண்டு குழந்தை, பெற்றோர், ஆய்வாளர்கள் என எல்லோரும் பேச வேண்டிய களம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான உரையாடல் நடக்கத் துவங்கும் எனில் குழந்தைகள் உலகம் உடைந்து உலகத்தின் குழந்தைகளை காண முடியும். அக்குழந்தைகள் இவ்வுலகை அழகாக்குவார்கள்.

முழுவதும் படித்தமைக்கு நன்றி. ஏனெனில் நீங்கள் முழுவதும் படித்தவுடன் தான் யோசிப்பீர்கள்.

 


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...