Tuesday, February 23, 2021

EDUCATION - PART - 3 கல்வி - பகுதி - 3

                                                  கல்வி

www.swasthammadurai.com


சூப்பர் ஈகோ, ஒரு மனிதன் தனியாக இருந்தாலும் கூட, யாரும் பக்கத்தில் இல்லாமல் இருந்தாலும் கூட, அந்த சமூகம் என்ன திட்டமிட்டு வைத்திருக்கிறதோ அந்த தளத்திலேயே இயங்குகிற ஏற்பாடு. யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் நீங்கள் ஒரு மதத்தை வழிபடுபவராக இருந்தால் அந்த மதத்திற்கு எதிராக உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது சூப்பர் ஈகோவினுடைய திட்டம். அது சமூகம் வைத்திருக்கிற திணிப்பு. நீங்கள் பின்பற்றுகிற நம்பிக்கைக்கு எதிராக உங்களால் எதுவுமே செய்ய முடியாத அளவிற்கு உங்களைப் பின்னி வைத்திருக்கிற ஒரு ஏற்பாடு சூப்பர் ஈகோ. அப்படியான ஒரு சூப்பர் ஈகோ பின்னலை இந்த சமூகம் குழந்தைகளுக்கு வளர்ப்பதற்காக நிறையநிறைய ஏற்பாடுகளையும் வல்லமையான வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அப்படி தருகிற வழிகாட்டுதலில் மிக முக்கியமான, மிக சிக்கலான, மிக நுட்பமான ஒரு வழிகாட்டுதல் சமூகம் முழுவதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளில் ஒன்றாக இருக்கிற கல்வி.

ALSO READ:EDUCATION PART - 2 l கல்வி பகுதி - 2

குழந்தைகளுக்கு கல்வி இப்படித்தான் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதாக நான் பார்க்கிறேன். இது எத்தகைய கல்வி? எந்த கல்வியை இவ்வாறு நாம் சொல்ல வேண்டும்? விமர்சிக்க வேண்டும்? என்பதெல்லாம் நாம் தொடர்ந்து பேசுகிற உரையாடலில் பேசலாம். ஆனால் கல்வி என்பது என்ன? என்று நாம் நோக்குகிற போது, கல்வி ஒரு மனிதனுக்கு சமூகம் சார்ந்த ஒரு சாயலை, ஒரு ஒற்றனை, அந்த குழந்தையோடு ஒட்டி வைக்கிற ஒரு  வேலையை செய்கிற கருவி. அந்தக் குழந்தையினுடைய இயல்புக்கு இசைவாகவும் அந்தக் கல்வி இருக்கலாம். அல்லது அந்த குழந்தையினுடைய இயல்புக்கு மாற்றாகவும் அந்த கல்வி இருக்கலாம்.  அது நிகழ்கிற விபத்து. ஆனால் கல்வி என்பது மொத்தத்தில் சமூகம் சார்ந்திருக்கிற ஒரு சாயலை, ஒரு பட்டயம் போல் அந்த குழந்தையின் கழுத்தில் மாட்டி விடுகிற, ஒரு குழந்தையை இந்த சமூகம் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதற்கான ஏற்பாடு போல் மாட்டிவிடுகிற ஒரு கருவியாக, ஒரு பட்டயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ:EDUCATION - PART 1 l கல்வி - பகுதி 1

அத்தகைய கல்வி குறித்து ஒரு ஆழமான, விரிவான, விசாலமான ஒரு உரையாடலை நாம் செய்ய வேண்டும் என்கிற பொறுமையின் கீழ் நாம் இன்று துவங்கி இருக்கிறோம். கல்வியினுடைய பணி என்னவாக இருக்கவேண்டும்? என்பதில் துவங்கி, கல்வி என்பது என்ன? என்றும் கூட நாம் பேசி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த சமூகம் கல்வி கற்கவில்லை என்றால் இந்த உலகத்தில் வாழவே முடியாது என்று பயமுறுத்திய ஒரு காலம் போய், கல்வி கற்க பள்ளிக்கூடம் சென்றால் நீங்கள் இந்த உலகத்தில் வாழ முடியாது என்று ஓராண்டு காலம் பள்ளிக்கூடத்தையும் கல்வி சாலைகளையும் பூட்டி வைத்திருந்த ஒரு கோரமான விபத்தை நாம் சந்தித்தோம். கல்வி என்பது என்ன? என்பது ஒரு இறுதி செய்யப்படாத வரையறையாகவே இருக்கிறது. அந்த வகையில், கல்வியினுடைய எல்லா வாசல்களையும் ஒருமுறை திறந்து மூட வேண்டும் என்கிற நோக்கத்தில் கல்வி குறித்து குழந்தைக்கும் கல்விக்கும் உள்ள உறவு குறித்து, குழந்தைக்கும் அரசுக்கும் இருக்கிற உரையாடல் குறித்து, கல்விக்கும் அரசுக்கும் இருக்கிற பொறுப்பு குறித்து, ஒரு பெற்றோருக்கும் கல்விக்கும் குழந்தைக்கும் இடையே இருக்கிற தொடர்பு குறித்து நாம் பேசிப் பார்க்கவேண்டும் என்கிற தன்மையில் ஸ்வஸ்தம் இந்த உரையாடலைத் துவங்கியிருக்கிறது. உங்கள் மேலான கல்வி குறித்த, குழந்தையின் மீது அக்கறை குறித்த கருத்துக்களும் விமர்சனங்களும் கேள்விகளும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியை ஒருமுறை அசைத்துப் பார்க்கிற, உழுக்கிப் பார்க்கிற, ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று ஸ்வஸ்தம் கருதுகிறது.

ALSO READ:குழந்தையின் மொழி

 அந்தவகையில் குழந்தை குறித்து, கல்வி குறித்து, ஒரு ஆழமான ஒரு அக்கறையான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும் என்ற தன்மையில் நாம் தொடர்ந்து பேசுவோம். கல்வி தாய்மொழிக் கல்வி, பிறமொழிக் கல்வி, தொழில் சார்ந்த கல்வி, நுண்ணறிவை மேம்படுத்துகிற கல்வி, தொழிலறிவை மேம்படுத்துகிற கல்வி, உணர்ச்சி சார்ந்து இயங்குகிற கல்வி, அறிவுசார்ந்த இயங்குகிற கல்வி  இப்படி கல்வி குறித்து விதவிதமான உளவியல் மேடைகளும் இருக்கின்றன. ஒரு விரிந்த கல்வி குறித்த பார்வையை நம் உரையாடலின் முடிவில் பெற முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

                                                                                 தொடரும்...


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...