குழந்தையின் மொழி
ஒரு மொழி இரண்டு வகையாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று அந்த மொழியை பேசுபவரின் புரிதல். மற்றொன்று அம்மொழியை கேட்பவரின் புரிதல். இந்தப்புரிதல் வேறுபாடு குழந்தைகளுக்கும் பொருந்துகிறது. நான் என் குழந்தையின் மொழியை எனக்குத் தெரிந்த அர்த்தத்தின் வழியாகவே புரிந்து கொள்கிறேன். எனது அர்த்தம் என் குழந்தை முன்வைக்கும் அர்த்தமாக இருந்ததில்லை. குறைந்தபட்சமாக நானும் என் குழந்தையும் புரிந்து கொள்வதற்கான தோராய ப்புள்ளியில்தான் பயணிக்கிறோம்.
ALSO READ:குழந்தை(CHILD)
ஒரு குழந்தையின் மொழி எவ்வாறெல்லாம் ஒரு மனிதனிடம் வந்து சேருகிறது என்பது புதிரானதுதான். வீடுகளில் குழந்தையின் உரையாடல், குழந்தையின் அழுகை, குழந்தையின் வேகம் போன்றவை பின்வருமாறே புரிந்து கொள்ளப்படுகின்றன. பெரும்பாலானவை பசிக்காகவும், தூக்கத்திற்காகவும் என்றே கருதப்படுகிறது. பெரியவர்கள்தாம் இந்தக் கருத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நம்மைச் சுற்றி வாழ்கிற மனிதன் கூட்டத்தில் யாரொருவரும் தமக்கு தூக்கம் வருகிற நேரத்தில் அல்லது தூக்கம் மறுக்கப்படும் நேரத்தில் அழுவதில்லை. பின் எவ்வாறு தூக்கம் வருவதாலோ அல்லது தூக்கம் மறுக்கப்படுவதாலோ குழந்தை அழுகிறது என்ற பார்வை உருவானது என்று தெரியவில்லை. ஒரு குழந்தையின்-மொழி ஒரு குழந்தையின் அழுகை நேர்மையாக நிகழ்த்தப்பட வேண்டிய உரையாடல் மறுக்கப்பட்டு உறக்கமாக அழுத்தப்படுவது எந்த மாதிரியான புரிதல் வகை? ஒரு குழந்தையின் மொழி உணவுக்கான மொழியா? உறக்கத்திற்கான மொழியா? குறும்பான மொழியா? என்ற எல்லா கேள்விகளும் எனக்கு தவறாகவே படுகிறது. ஒரு குழந்தையின் மொழியை புரிந்துகொள்ள எனது பழைய அனுபவங்களையும் பழைய உரையாடல் ஞாபகங் களையும் நகர்த்திவிட்டு பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நகர்வுதான் இதுதான் என்குழந்தையின் மொழியை புரிந்துகொள்ள முடியாவிடினும் நேர்மையாக கேட்க ச்செய்கிறது.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
முதல் மூன்று ஆண்டுகள் குழந்தையை புரிந்து கொள்வதற்கான காலம், முதல் எட்டு ஆண்டுகள் குழந்தையை வார்த்து எடுப்பதற்கான காலம் என்பது மாதிரியான குழந்தைகள் பற்றிய அறிவியல் கருத்துக்களும் யூகங்களும் சமகாலத்தில் உரையாடப்படுகின்றன. இவை எல்லாமும் எப்படியானவை என்பது பற்றி ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒரு குழந்தை புரிந்து கொள்ளப்படுவதும் ஒரு குழந்தை வார்த்தெடுக்கப்படுவதும் அந்தக் குழந்தையின் முன்னால் இருக்கிற சமூகத்தின் விருப்பமாக இருக்கிறது. மேலும் அந்த சமூகம் அந்தக்குழந்தை மீது செலுத்த நினைக்கிற அதிகமாகவும் இருக்கிறது.
குழந்தை தனதளவில் தன்னைச் சுற்றி இருக்கிற உலகத்தை புரிந்து கொள்வதற்கான காலம் எத்தனையாண்டுகள்? என்பதை நாம் உரையாடிப்பார்க்க வேண்டும். அதோடு குழந்தையை நாம் புரிந்து கொள்ளும் காலம் எத்தனை ஆண்டுகள் என்பதையும் உரையாடிப் பார்க்க வேண்டும். மேலும் ஒரு குழந்தையோ ஒரு மனிதனோ இந்த சமூகத்திற்காக தம்மை வார்த்துக் கொள்ளும் மனநிலையை எத்தனை ஆண்டுகளில் பெற முடியும் என்று உரையாடவும் ஒரு சமூகம் ஒருவரை, ஒருகுழந்தையை வார்க்குமா? வடிவமைக்குமா? என்று உரையாடவும் வேண்டும் . இவ்வாறு குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் புரிதல் சார்ந்த வன்முறைகளும் வார்த்தல் சார்ந்த வன்முறைகளும் எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை தான்.
ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை
நான் குழந்தையின் மொழிப்பற்றி உரையாடும் போது தொடர்ந்து எதிர்கொள்ளும் கேள்வி "எதுவும் கேட்காமல் குழந்தைகளை அப்படியே விட்டுவிடச்சொல்கிறீர்களா?" என்பதாகும்.இந்தக் கேள்வி குழந்தையின் மீதான அக்கறையாக இருக்கலாம். மேலும் குழந்தையின் மீதான அதிகாரமாகவும் இருக்கலாம்.
நான் பார்க்கிறேன் எதுவும் கேட்காமல் அப்படியே விட்டு விடக்கூடாது என்பதை குழந்தைகளின் மீதின்றி வேறெங்கும் செய்துவிட முடியாது. நான் விரும்புகிற முறையில் எனது மளிகைக்கடைக்காரர் உரையாடுவது இல்லை. பேருந்து நடத்துனர் உரையாடுவது இல்லை. நாம் விரும்புகிற முறையில் என் குடும்ப உறுப்பினர்கள் கூட உரையாடுவது இல்லை. ஆனால் என் குழந்தை மட்டும் என் விருப்பத்தின்பால் உரையாடுகிறது என்று நான் யூகிப்பது எந்தவகையில் சேர்ப்பது? என் விருப்பத்தையும் என்புரிதலையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால்கூட என்னைச்சுற்றி உள்ளவர்கள் நான் புரிந்து கொள்வதைப் போல உரையாடுகிறார்களா என்றால் இல்லை. ஒவ்வொருவரும் தாம் எவ்வாறு இருக்கிறோம் என்ற வகையில் உரையாடுகின்றனர். அந்த உரையாடலை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உரையாடலை எனக்குள் சமரசம் செய்து விடுகிறேன். இவ்வாறான ஏற்றுக்கொளலும் சமரசங்களும் என் குழந்தை மீது காணாமற் போகிறது. என் குழந்தையின் மொழி எனது புரிதலின்பால் மொழிபெயர்க்க படுகின்றது என்பது எனக்கு கவலையாகவே இருக்கிறது. இதன் மீது யாவருடனும் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்த விரும்புகிறேன்.
ஒவ்வொரு குழந்தையும் தமக்கென்று தனித்தனியான புரிதலை வைத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். நமக்குள் தனித்தனியான மனித குணங்கள் இருப்பது போலவே குழந்தைகளிடமும் தனித்தனியான குழந்தை குணங்களும் இருக்கின்றன. அது அவ்வாறுதான் இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். தனித்தனியான குழந்தைகளின் குணங்களும் தனித்துவமானவை. தனித்தனியான குழந்தைகளின் மொழியும் குறிப்பிடத்தகுந்தவை. ஒருகுழந்தை தமது தேவையை இன்னொரு குழந்தையைப் போல் சொல்வதே இல்லை. ஒவ்வொரு குழந்தையும் பேசுகிற மொழி என் பார்வையால் ,என் விருப்பதால் தவறாக பொருள் கொள்ளப்படுவதால் நிறைய குழந்தைகள் ஒரே வடிவத்தில் உரையாடுவதாக நான் கற்பனை செய்கிறேன். என்னைப் போல கற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் மொழி மீண்டும் மீண்டும் தவறாகவே பொருள் கொள்ளப்படுகிறது.
ALSO READ:நலம்(HEALTH)
குழந்தை பிறந்து பள்ளிக்கூடத்திற்குள் செல்லும்முன் வீட்டினுள் நடக்கும் உரையாடல் நிகழ்வுகளில் ஏற்படுகிற தவறான புரிதல்கள் தான் நான் மேல் சொன்னது. ஒரு குழந்தை மீது நான் சரியென நினைத்து வைத்திருக்கின்ற கருத்துக்களை திணித்துவிட தொடர்ந்து முயற்சிப்பதன் விளைவாக குழந்தையின் மொழி மௌனமாக்கப்பட்டு என் மொழியே இருவருக்குமான மொழியாக மாறிப் போய் விடுகிறது. என் குழந்தை பேசுகிற மொழி எப்போதும் போல் என்னால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு எனக்கு சாதகமாகவே என் குழந்தையின் மீது அழுத்தம் கொடுக்கிறது. "என் குழந்தை என்னிலிருந்து வேறு படவில்லை என்பதை உணரும் போதும், என் குழந்தை என்னை நம்புகிறது "என்பதைக் காணும்போதும் நான் கொடுக்கும் தவறான அழுத்தமானது வன்முறையாகவும் அதிகாரமாகவும் இருப்பதை நான் மௌனமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment