Wednesday, October 20, 2021

ENERGY / ஆற்றல்

 

ஆற்றல்

www.swasthammadurai.com


நாம் அக்குபங்சரினுடைய முதன்மையான பகுதியில் உரையாடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு மனிதனுக்குள் அக்குபங்சர் எவ்வாறு வேலை செய்கிறது? அக்குபங்சரில் இருக்கிற எத்தன்மை ஒரு மனிதனை குணப்படுத்துகிறது? என்கிற ஒரு தளத்தில் நாம் பாடங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது. அந்த மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற நோயை ஒரு மருத்துவம் எப்படி பார்க்கக்கூடும் என்றால் அந்த மனிதனுக்கு எந்த நோய் ஏற்பட்டிருக்கிறது? எந்த வகையான நோயில் அவர் பீடித்து இருக்கிறார்? எந்த வகையான நோய் அவருக்குள் வந்திருக்கிறது? அந்த நோயைத் தீர்ப்பதற்கு வழி என்ன? என்று பார்க்கிற வழக்கம் சமகாலத்தில் இருக்கிற மருத்துவத்தில் காணக்கிடைக்கின்றன.

அக்குபங்சர் அந்த நோயை அப்படிப் பார்ப்பதில்லை. அந்த நோய்க்கு காரணமாக இருக்கிற ஆற்றல் பற்றாக்குறையை அக்குபங்சர் பார்க்கிறது.

ஒரு மனிதனுக்கு நோய் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த நோய் ஒரு ஆற்றல் குறைபாடு. அது மனிதனின் உடல் சார்ந்ததும் அல்ல. மனிதனின் மனம் சார்ந்ததும் அல்ல. ஒரு ஆற்றல் தடைப்பட்டு இருக்கிறது. அந்தத் தடையை நீக்குகிற போது அந்த மனிதனுக்கு அல்லது அந்த நோய் ஏற்பட்டு இருக்கிற நபருக்கு, ஜீவனுக்கு மீண்டும் நோயில்லாத ஒரு நிலையை பெற்றுக்கொள்ள முடியும் என்று அக்குபங்சர் தன்னுடைய ஆற்றல் சார்ந்த விளக்கங்களை முன்வைக்கிறது.

எல்லா ஜீவராசிகளுக்கும் அக்குபங்சர் வேலைசெய்யும் என்று ஒரு கோட்பாடைக் கூட நான் படித்த ஞாபகம் இருக்கிறது. யானைகளுக்கு அக்குபங்சர் புள்ளிகள் இருக்கின்றன என்று ஒரு கட்டுரை படித்த ஞாபகம் இருக்கிறது. காட்டில் இருக்கிற விலங்குகளுக்கு ஆற்றல் சார்ந்த இயங்கும் முறை, ஆற்றல் சார்ந்த புள்ளிகள் அந்த உடலில் இருக்கின்றன என்றும் அந்த கட்டுரை விரிவாக பேசி இருந்தது. நிஜமும் கூட அப்படித்தான்.

உயிரோடு இருக்கிற எல்லா பொருள்களிலும் ஆற்றல் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்வதன் வழியாக அக்குபங்சர் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஒரு உதாரணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன், ஒரு உயிரி என்று நாம் விதவிதமாக மருத்துவக் கலைச் சொற்களின் வழியாக பேசி பார்ப்பது ஒரு வகையாக இருக்கலாம்.  

ஒரு பேருந்தை எடுத்துக்கொள்வோம். அல்லது உங்கள் வீட்டில் இருக்கிற ஒரு வாகனத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனம் தோற்றத்தில் இயங்குகிற இயக்கமுறை வைத்திருக்கிற ஒரு வாகனம். ஒரு பேருந்து என்று வைத்துக்கொண்டால் பேருந்து இயங்குவதற்கு எல்லாவிதமான உதிரிபாகங்களும் இருக்கின்றன. உள்ளுறுப்புகளாக இருக்கிற இயந்திரங்களும் இருக்கின்றன.

ஒரு முழுமையான நிறைவு செய்யப்பட்ட இயக்க தொடர்புடைய தொடர்ந்து ஒருங்கிணைப்போடு இயங்கக்கூடிய ஒரு இயக்க தன்மையில் ஒரு பேருந்து இயங்குவதற்கு தயார் செய்யப்பட்டு நிற்கிறது. இப்பொழுது அந்த பேருந்தில் இருக்கக்கூடிய உறுப்புக்கள் முழுவதுமாக இயங்குகிற வாய்ப்போடு, வல்லமையோடு இருக்கின்றன. அந்த பேருந்தை நீங்கள் இயக்க முடியும். அந்த பேருந்தில் நீங்கள் நகர்த்த முடியும். அந்த பேருந்துக்குள் இருந்து ஒன்றை ஏற்றி இறக்க முடியும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க முடியும். எல்லா சாத்தியங்களும் அந்தப் பேருந்துக்கு இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடியும். இது பேருந்தினுடைய தோற்ற வயப்பட்ட நிலை.

தோற்றத்தின் வழியாக அந்த பேருந்தினுடைய இயக்கத்தை, பேருந்து எவ்வாறு இயங்குகிறது? என்பதை கூட நீங்கள் புரிந்து கொள்ளவும் பார்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது நாம் பேருந்தை இயக்க வேண்டும். பேருந்தை இயக்க வேண்டும் என்று சொன்னவுடன் இயக்குவதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது.

ஒன்று இயக்குவதற்கு காரணமாய் இருக்கிற இயக்குனர். அவர் அவசியம். அவர்தான் அந்த பேருந்தின் நுட்பங்களை கண்டு இயக்குவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு இயக்க ஆயத்தமாக இருக்கிறவர். அவர் ஏறி அமர்ந்தவுடன் அந்தப் பேருந்தை இயக்க முடியும். அப்படி என்றால் அவர் ஏறி அமர்ந்தவுடன் அந்தப் பேருந்தை இயக்க முடியுமா என்றால் பேருந்து இயங்குமா என்றால் இயங்கும் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் பேருந்தை இயக்குவதற்கு மூன்று முக்கியமான இடம் இருக்கிறது. ஒன்று பேருந்து இயக்க வேண்டும் அல்லது பேருந்து இயங்க வேண்டும் என்று விரும்பினோம் என்றால் மூன்று இருக்கிறது. ஒன்று இயங்குவதற்கு அவசியமான பேருந்து. இரண்டாவது பேருந்தை இயக்குவதற்கு அவசியமான இயக்குனர். மூன்றாவது இந்த இரண்டையும் ஒருங்கிணைக்கிற பேருந்தை இயக்குவதற்கு அவசியமாக இருக்கிற ஒரு ஆற்றல்.

 பேருந்துக்குள் ஒரு எரிபொருள் செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட எரிபொருள் அங்கே பேருந்தினுடைய இயந்திர நுட்பத்திற்குள் தன்னை பாய்ச்சிக் கொள்ளும். அப்படி பாய்ச்சிய எரிபொருள் எரிகிற போது இயந்திரங்கள் சுழலத் தொடங்கும். இந்த சுழற்சியை இலாவகமாக சாதுரியமாக ஒரு திசையில் நகர்த்துவதற்கு இயக்குனர் உதவி செய்வார். அந்த நகர்த்துதலின் வழியாக பேருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த மூன்று வெவ்வேறு தளங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியுமா என்று நான் உங்களோடு கேட்க விரும்புகிறேன். இந்த மூன்று விதமான தளம் இருக்கிறது. பேருந்து என்கிற உதாரணத்தின் வழியாக இந்த மூன்று தளங்களை நீங்கள் பார்க்க முடிந்தால் இன்னும் எளிமையாக அக்குபங்சரினுடைய அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பேருந்து என்கிற உதாரணத்தின் வழியாகவே நான் அதை விளக்க விரும்புகிறேன்.

பேருந்தை இயக்குவதற்கு காரணமாக இருக்கிற பேருந்து, பேருந்து இயக்கத்தை ஒழுங்கு செய்கிற அந்த ஓட்டுனர், பேருந்து இயங்குவதற்கு உந்துசக்தியாக இருக்கிற எரிபொருள், எரிபொருள் உள்ளடக்கிய ஆற்றல். இவை மூன்றும் இணைந்தால் தான் இயக்கம் சாத்தியமாகும். இந்த மூன்றில் பேருந்து என்பது உடல், ஓட்டுநர் என்பது மனம். ஓட்டுனர் நினைக்கிற போது பேருந்தை இயக்கி விட முடியாது. எரிபொருள் அவசியம். பேருந்திற்குள் எரிபொருள் இருந்தாலும் ஓட்டுனர் இல்லையென்றால் பேருந்து இயங்க முடியாது. இப்படி ஒரு முக்கோணமான தொடர்பு இந்தப் பேருந்து, இந்த பேருந்து ஓட்டுனர், பேருந்தினுடைய எரிபொருள் ஆற்றல் இந்த மூன்றுக்கும் இடையில் ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்த மூன்றும் இணைந்தது ஒரு எதார்த்தம்.

இதில் பேருந்து என்பது உடல். இயக்குனர் என்பது மனம். இயக்குனருக்கும் பேருந்துக்கும் இடையே இருக்கிற பேருந்து இயக்கத்தை சாத்தியமாக்குகிற எரிபொருள் ஆற்றல் என்பது தான் அக்குபங்க்சர் வேலை செய்கிற இடம். நீங்கள் அக்குபங்சரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் எரிபொருளினுடைய எரிசக்தியை, ஆற்றலை, இயங்கு உத்தியை, உந்துதலை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று சொன்னால் அக்குபங்சரினுடைய ஒட்டுமொத்த மையமும் உங்களுக்கு பிடிபடக்கூடும்.

தொடர்ந்து பேசுவோம்…

ALSO READ: ACUPUNCTURE CLASSES / அக்குபங்சரினுடைய தனித்தன்மை

ALSO READ:  ACUPUNCTURE CLASSES / முன்முடிவில்லாமல் கற்பது


No comments:

Post a Comment

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - சிவ கதிரவன்

                   உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு உடல்நலம் என்பதில் மன அழுத்தம் என்பது கவனிக்கத்தக்க கருத்தாக  இருக்கிறது. பலரும் மன அழுத...