Friday, September 16, 2022

கற்றல் நலம் - உரையாடல் 1 - பகுதி - 2 - சிவ.கதிரவன்

                                                 கற்றல் நலம் பகுதி - 2

www.swasthammadurai.com


ஒரு தனி மனிதனுக்கு உடல் களைப்பு ஏற்படுகிறது. அந்த தனிமனிதன் உடல் களைப்போடு காத்திருக்கிறார். களைப்பின் தீவிரம் அதிகமாகிறம் போது அந்தத் தீவிர தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு, தன்னை நலம் ஆக்கிக் கொள்வதற்கு களைப்பின் பொருட்டு, களைப்பின் காரணத்தை, களைப்பிற்கான தீர்வை அவர் தேடுகிறார்.

அதன் விளைவாக உணவுமுறையோ, ஓய்வு முறையோ, மருத்துவ முறையோ அவருக்கு ஒன்று கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கிடைத்திருக்கிறது. அந்த ஆலோசனையின் பேரில் பரிந்துரையின் பேரில் தன் உடலில் ஏற்பட்டிருக்கிற களைப்பை நீக்கிக் கொள்கிற செயலை அவர் செய்கிறார். களைப்பு நீங்குகிறது. அவருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. தலைவலி ஏற்படுகிறது. உடல் வெளிக்காட்டுகிற இன்ன பிற அசவுகரியங்கள் தெரிகின்றன. அதற்குரிய உடல்நல நிபுணத்துவம் பெற்றவரோடு அவர் உரையாடி தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை நீக்கி கொள்வதற்கான வழிமுறைகளை, பரிந்துரைகளை பெற்றுக்கொள்கிறார். அவற்றை அவர் சொன்னதன் வழியே செய்து முடிக்கிறார். அவர் உடல்நலம் பெறுவதை உணர்கிறார்.

இந்தச் செயல்பாடு இரண்டு முறை மூன்று முறை ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் நடக்கிறபோது நான்காவது முறையோ அல்லது கூடுதல் காலத்தின் பாற்பட்டு கூடுதல் காலம் கழிந்தபிறகோ இந்த செயல்முறை தொடர்ந்து நிகழும் என்றால் அவர் எப்போது தமக்கு களைப்பு ஏற்பட்டாலும் எப்போது தமக்கு குறிப்பிட்ட வகையான தன் அனுபவத்தில் ஏற்பட்டிருக்கிற அனுபவ வகைப்பட்ட நோய்க்குறி தமக்கு தென்பட்டவுடன் அவற்றைத் தீர்த்துக் கொள்கிற சூத்திரத்தை, சமன்பாட்டை தன் பழைய அனுபவத்தின் வழியாக பரிந்துரைகயின் வழியாக செய்து பார்த்து தமக்கு ஏற்பட்டிருக்கிற நோய்க்குறியை நீக்கிக்கொள்கிற நிலையில் இருக்கிறார் என்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அனுபவம் பெற்றிருப்போம்.

நோய்க்குறிக்கும் களைப்பிற்கும் ஒரு மருத்துவ நிபுணரின் பரிந்துரை பயன்பட்டிருக்கிறது என்பது ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு தொடக்கத்தின் இருந்து ஒரு பெரும் தொடர் நிகழ்வை உண்டாக்குகிற துவக்கப்பள்ளி.

ஒரு குறிப்பிட்டு உடலில் ஏற்படுகிற மாற்றம், தொடர்ந்து ஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் என்கிறபோது அந்த மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு அவருக்கு கிடைக்கிற அனுபவத்தின் வாயிலாக, பரிந்துரைகளின் வாயிலாக மீண்டும் அப்படி ஒரு அசவுகரியம் ஏற்படுகிற போது அந்த தனிமனிதன் பழைய நினைவிலிருந்து அனுபவத்திலிருந்து தனக்கு ஏற்பட்டிருக்கிற அசௌகரியத்தை சீர் செய்து கொள்கிற ஒன்றை செய்கிறார் என்பது அவர் கற்றலின் விளைவு.

இந்த உடல்நலம் சார்ந்த செயல்பாடு கற்றலாக உங்களுக்குள் நிகழ்கிறது. தவிர்க்கமுடியாமல் நிகழ்கிறது. உங்கள் வாகனத்தில் எரிபொருள் மீது கவனம் இல்லாத காரணத்தினால் நீங்கள் செல்கிற போது எரிபொருள் இல்லாத அனுபவத்தை நீங்கள் பெற்றீர்கள் என்றால் மீண்டும் ஒருமுறை எரிபொருள் இல்லாத அனுபவத்திற்குள் நீங்கள் செல்லா வண்ணம் நீங்கள் திட்டமிட்டு கொள்வீர்கள் என்பது நிச்சயமானது. ஒருமுறை எரிபொருள் தீர்ந்தால் மறுமுறை எரிபொருளை எப்பொழுது நிரப்பிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தை நீங்கள் பழைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வீர்கள்.

நீங்கள் உங்கள் சமையலில் உங்கள் வேலைகளில் உங்கள் கைகளை காயப்படுத்திக் கொண்டால் உங்கள் உடலை சேதப்படுத்திக் கொண்டால் அந்த வேலையை செய்கிறபோது மீண்டும் உங்களுக்கு காயமோ சேதமோ ஏற்படாவண்ணம் உங்கள் பணியை நீங்கள் நிர்மானித்துக் கொள்வீர்கள் என்பது ஏற்கனவே ஏற்பட்ட காயத்தின் பாற்பட்டு நீங்கள் கற்றுக் கொண்டது. செயல்பாடுகளில் நீங்கள் தொடர்ந்து இயங்குகிற போது நேற்றிலிருந்து ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள் என்பது தொடர்ந்து மாற்றமில்லாமல் நிகழ்கிற தவிர்க்க முடியாத உப விளைவு.

ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு உரையாடலிலும் ஒவ்வொரு பார்வையிலும் ஒன்றைக் கேட்பதில், ஒன்றை கொடுப்பதில், ஒன்றை பேசுவதில் என்ற பாகுபாடு ஏதுமின்றி ஒரு தனி மனிதனின் செயல்பாடு ஒன்றோடு இனங்கியோ, ஒன்றோடு பிணங்கியோ கற்றலுக்கு உள்ளாகாமல் நிகழ்வதே இல்லை என்பது மிக முக்கியமான செயலாக இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட வயது உள்ள, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குள், ஒரு குறிப்பிடும்படியான வளாகங்களில் மட்டும் நிகழ்கிற நிகழ்வாக பார்க்கிற பலகீனமான பார்வை நமக்கு இருக்கிறது என்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதன் பொருட்டே கற்றல் பற்றி நாம் புதிய ஒன்றை பேசுகிறோம்.

கற்றல் என்பது நேரடியாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாக்கம். கற்றல் என்பது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு  சமூக தனி மனிதனும் தான் விழித்து சமூகத்தில் இயங்கி மீண்டும் உறக்கத்திற்கு செல்லும் வரை உறக்கத்திலும் கூட தாம் உள்ளாகிற, உள்ளாக்கப்படுகிற எல்லா செயல்களிலும் ஒரு அனுபவத்தை பெற்றுக் கொண்டே இருக்கிறார். சேகரித்துக் கொண்டே இருக்கிறார்.

சமூக தத்துவ ஆய்வாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி மனிதமனம் குறித்து ஒன்றை குறிப்பிடுவார். மனித மனம் என்பது வேறொன்றுமில்லை. மனிதனின் தொடர்ந்த அனுபவத் தொகுப்பு. தொடர்ந்த அனுபவத் தொகுப்பே மனம் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது.

 ஒவ்வொரு மனிதரும் எல்லா மனிதர்களும் அனுபவத்தின் சேகரிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறார்கள். இந்த அனுபவம் என்பது இன்னொரு நாளை இன்னொரு காட்சியை இன்னொரு நிகழ்வை பழைய சேதங்கள் ஏதுமின்றி பழைய அசவுகரியங்கள் ஏதுமின்றி முந்தைய சிக்கல்கள் ஏதுமின்றி கடப்பதற்கு கற்றுக் கொடுக்கிற ஒன்றாகவே மனிதனுக்குள் பரவுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள், நடுத்தர வயது ஒத்தோர், முதியவர்கள், பெண்கள் குறிப்பிட்ட வகையான நிறுவனத்தை சார்ந்தவர்கள், குறிப்பிட்ட வகையான சமூகத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட வகையான மதத்தை நம்புகிறவர்கள், அரசியல் நிலைப்பாடு உள்ளவர்கள் என்று எந்த பேதமும் இல்லாமல் யாவருக்கும் இயங்குகிற போது அனுபவம் பொதுவானது. அனுபவம் ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பது பொதுவானது.

கற்றல் என்பது அங்கிருந்துதான் பார்க்கப்பட வேண்டியது. கற்றல் என்ற உடன் மனிதர்கள் குழந்தைகள் மீது வைத்து அவற்றை தொடங்குவது சரியான பார்வை அல்ல. நாம் பேசுவது சமூகரீதியான வெற்றியின் இலக்கை முன்வைத்து பேசப்படுகிற தன்முனைப்பை வளர்த்துவிடுகிற சங்கதிகளோடு சம்பந்தப்பட்டது அல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் அமைதிக்கும் நிம்மதிக்கும் வாழ்வியல் அழகிற்கும் சமூகம் வைத்திருக்கிற வெற்றி ஒருபோதும் பயன்படாது.

                                                                            ...தொடர்ந்து பேசுவோம்...

ALSO READ : கற்றல் நலம்

ALSO READ : JOHN HOLT - HOW CHILDREN LEARN - EDUCATION - INTRODUCTION - PART 1

ALSO READ : CHILD HEALTH PART - 16 குழந்தை நலம் பகுதி - 16

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...