கற்றல் நலம்
சமூகம் வைத்திருக்கிற வெற்றி வெறுமனே
பொருளாதாரம் சார்ந்தது. தோற்றம் சார்ந்தது. ஒரு மனிதன் தன்னை சுற்றி வைத்திருக்கிற
அலங்கரிப்பு சார்ந்தது. சமூகம் காலம் காலமாக வரலாறு நெடுக ஒரு வெற்றியை சில நூறு ஆண்டுகளுக்கு
பிறகு வெற்றியாக பொருட்படுத்துவதே இல்லை. ஒரு வெற்றியை, ஒரு அலங்காரத்தை சில ஐம்பது
ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காரமாக பொருட்படுத்துவதே இல்லை.
இன்று சமூகம் முன்னாள் வைத்திருக்கிற இலக்காக வைத்திருக்கிற சமூகம் வைத்திருப்பதனாலேயே சமகாலத்தில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனும் அவற்றை பின்தொடர்ந்து ஓடுகிற வெற்றிகள் அனைத்தும் சில பத்து, இருபது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நினைவில் இல்லாத அளவிற்கு காலாவதியாகி வெற்றி இலக்குகள். இத்தகைய வெற்றி இலக்குகள் குறித்தும் இத்தகைய வெற்றி இலக்குகளுக்காக கற்றுக் கொள்வது குறித்தும் அதற்குரிய அலங்காரங்களை செய்து கொள்வது குறித்தும் இந்த உரையாடல் நிகழ்த்தப்படவில்லை.
சற்று ஆழமான புரிதலை நோக்கி ஒவ்வொரு
தனிமனிதனும் தனது நிம்மதியையும் மகிழ்வையும் கண்டுகொள்வது நோக்கி கற்றலை நாம் புரிந்து
கொள்ள வேண்டும் என்று இந்த உரையாடல் வழி நாம் பேசுகிறோம்.
கற்றல் என்பது சமூகம் வைத்திருக்கிற
இலக்குகளுக்கு சம்பந்தமில்லாதது. தனிமனிதனின் மகிழ்வென்பது சமூகத்தின் வழி கிடைக்கப்
படுகிற சாதகபாதக அம்சங்களிலிருந்து தீர்மானிக்கப் பட்டாலும் கூட, தனி மனிதன் தனக்குள்
ஒன்றை பெற்றுக்கொள்வதற்கும் துலக்கிப் பார்ப்பதற்கும் விரிவாக உரையாடுவதற்கும் ஒன்று
இருந்து கொண்டே இருக்கிறது. அந்தப் பகுதி மீது கற்றல் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக
இருக்கிறது.
இத்தகைய சமூக காரணங்கள் இத்தகைய பரந்துபட்ட
மனித வரலாற்றில் மாறிக்கொண்டே இருக்கிறது என்கிற பேருண்மையோடு மாறாமல் இருக்கிற ஒன்று
தனி மனிதன் எப்போதும் தன் முன் இருக்கிற காரணங்களையும் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி
இன்னும் மகிழ்வை நோக்கி நகர்கிற ஒன்றோடு தன்னை இணைத்து வைக்கிற செயல்பாடு நிகழ்ந்து
கொண்டே இருக்கிறது என்பது நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அது ஒரு நிஜமான மெய்யான காட்சி.
எவரும் மறுக்க முடியாதது. இந்த தனி மனிதன் தனக்குள் நிறைவை நோக்கி நகர்கிற ஒன்றிற்கு
கற்றல் நலம் அவசியமானது. தனக்குள் மகிழ்வே நோக்கி தேடுகிற ஒரு மனிதனுக்கு கற்றல் நலம்
அவசியமானது. தன் பாற்பட்ட, தன் மரபின் பாற்பட்ட, தன் உயிரியல் உளவியல் செயல்பாடின்
பாற்பட்ட, சமூகக் காரணங்களின் பாற்பட்ட எல்லா அசௌகரியங்களும் சிக்கல்களும் தீர்ந்த
நிலையில் தன்னை நிறைவாக மாற்றிக் கொள்வதற்கு தன்னை நிறைவாக உணர்ந்து கொள்வதற்கு தன்னை
நிறைவாக செயலாக்கம் செய்துகொள்வதற்கு ஒரு மனிதனுக்கு கற்றல் நலம் அவசியமானது.
இத்தகைய நலத்தின் பாற்பட்டு கற்றலை
குழந்தைகளோடு குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களில், பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில்,
கல்லூரிகளில் என்று சுருக்கி விடுவதும் ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட புத்தகங்களின் வழியாக
என்று சுருக்கி விடுவதும் நிறுவன மயமாக்கப்பட்ட நிறுவனங்களின் வழி என்று சுருக்கி விடுவதும்
ஆரோக்கியமான விமர்சனப் பூர்வமான நிலை அல்ல.
ஒரு மனிதன் சரியான ஒன்றை எல்லா அம்சங்களிலும்
புரிந்து கொள்வதற்கு எப்போது வழி இருக்கிறதோ அப்போதுதான் ஒவ்வொரு தனிமனிதனும் அவரவர்
அளவில் நிறைவாக நிரப்பிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிறைவை நோக்கி தன்னிறைவை
நோக்கி, மன நிறைவை நோக்கி நகர்கிற போது எப்போதும் எது மன நிறைவை கொடுக்கவல்லதோ அதற்குரிய
புரிதலோடு, அதற்குரிய தேடலோடு நடைபோடுகிற போதே, பயணிக்கிற போதே ஒரு முழுமையான மகிழ்வை
ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இத்தகைய முழுமையான நலம் நோக்கி, முழுமையான
நிறைவை நோக்கி ஒரு மனிதன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் ஆற்றல், உந்துதல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே மனிதன் எப்போதும் தமக்கு ஏற்படுகிற ஓர் அனுபவத்திலிருந்து
ஒன்றே கற்றுக் கொள்கிறார் என்று நாம் பார்க்க முடியும்.
ஒரு மனிதன் ஒரு அனுபவத்திலிருந்து ஒன்றை
கற்றுக் கொள்வதற்கான காரணம் நிகழ்வு நிகழ்கிற போது அதன் வழி தனக்கு மகிழ்ச்சியான ஒன்றை
அவனது ஆழமான உந்துதல் தேடிக் கொண்டே இருக்கிறது. அதன் காரணத்தினாலேயே அவன் தன் மகிழ்ச்சிக்காக
நிறைவுக்காக ஒவ்வொரு நிகழ்விலும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறான் என்பது உளவியல் ஆவணம்.
உளவியல் பேராசான் சிக்மண்ட் பிராய்ட்
மனதின் வடிவங்களைப் பற்றி பேசுகிறபோது ஒரு மனிதன் தனக்குள் இருக்கிற மகிழ்ச்சியின்
மீதான வேட்கையை விரிவாகப் பேசுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் தான் மகிழ்வாக இருக்க
வேண்டும் என்கிற வேட்கையோடு இயங்குகிறது என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். உளவியல்
கற்கிற எல்லோருக்கும் இத்தகைய உணர்வை, இத்தகைய வேட்கையை புரிய வைக்கும் பொருட்டு விரிவாக
சொல்லும் பொருட்டு ஓர் ஆவணமாக சிக்மன்ட் பிராய்ட் தனது ஆய்வில் பதிவு செய்திருந்தாலும்
கூட நாம் காண்கிற காட்சியில் ஒவ்வொரு மனிதனும் இயல்பாக நடப்பது போல் தோன்றினாலும் கூட
அவர் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதன் மீதான வேட்கையே அவரை இயங்கச் செய்கிறது. நடக்கச்
செய்கிறது. உறங்கச் செய்கிறது. உறவு பாராட்டச் செய்கிறது. விளையாடச் செய்கிறது. எல்லாவற்றிற்கும்
தாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற வேட்கையே முதன்மையானது என்பது துவங்கி, கற்றலுக்கான
காரணத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
இந்த வேட்கை ஒரு மனிதனை கற்றுக்கொள்ள
செய்கிறது. தாம் மகிழ்வாக நிறைவாக இருக்க வேண்டும் என்கிற வேட்கையே ஒரு மனிதனுக்கான
கற்றலுக்குரிய காரணமாக இருக்கிறது. இத்தகைய ஆழ்மன வேட்கை என்பது ஒற்றை நோக்கத்தோடு
இயங்குகிறது. அந்த ஒற்றை நோக்கம் அந்த மனிதனின், அந்த தனிமனிதனின் மகிழ்வு, நிறைவுத்தன்மை.
இது எல்லா அனுபவங்களையும் கற்றலாக மாற்றுகிறது. ஒன்றிலிருந்து மனிதன் நகர்ந்து கற்றுக்
கொள்வதன் வழியாக வேறொன்றாக மாறுகிறார். ஒன்றிலிருந்து கற்றுக் கொள்வதன் வழியாக புதிய
பரிணாமத்தை பெற்றுக் கொள்கிறார். ஒன்றிலிருந்து கற்றுக் கொள்வதன் வழியாக தன் பழைய எல்லா
பாவனைகளையும் மாற்றிக் கொள்கிறார்.
எல்லாமும் கற்றல் காரணமாக நடக்கிறது.
கற்றல் மகிழ்வின் வேட்கையாக விளைகிறது. கற்றல் என்பது அப்படித்தான் இருக்கிறது. இதற்குள்
குழந்தைகள், பெரியவர்கள், குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்
என்கிற எந்த பேதமும் இல்லாத அளவிற்கு இந்த எதார்த்தம், இந்த மன உணர்வு, இந்த மன ஓட்டங்கள்
இப்படித்தான் இருக்கின்றன. இந்த வகையில் கற்றல் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்கிற
சமன்பாடுகளோடு கருத்தாக்கங்களோடு கற்றல் நலம் குறித்து ஒரு விரிவான பகுதியை நாம் பேசிப்
பார்க்க வேண்டி இருக்கிறது. பேசிப் பார்ப்போம்…
…தொடர்ந்து பேசுவோம்…
No comments:
Post a Comment