உணவு(food)
![]() |
உணவு |
உணவு பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. ஒருவரைப் பார்த்தவுடன் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு சாப்பிட்டீர்களா? food in current lifestyle
என்று கேட்பதும் முக்கியமானதாக இருக்கும். ஒருவர் சகமனிதனை பார்த்து சாப்பிட்டீர்களா? என்று கேட்டவுடன் கிடைக்கும் பதிலில் இருந்து உணவைப் பற்றி,உணவை உண்டவர் பற்றி,உணவு சொல்லும் சமூகப் பின்புலம் பற்றி ஆராய்ச்சிகள் நிகழத் தொடங்கிவிடும்.ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பதற்குள் செல்லாமல் சக மனிதன் சாப்பிட்டாரா என்கிற சிந்தனை உணவு பற்றிய ஆராய்ச்சிகளில் முதன்மையானதாக இருக்கிறது. சக மனிதர் அவரது உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் என்ற விருப்பமும் எதிர்பார்ப்பும் ஒருவேளை அவர் சாப்பிடத் தவறியிருந்தால் அவரை உண்ண வேண்டி வற்புறுத்துவதும் உணவு சார்ந்த ஆய்வாக தொடர்ந்தாலும் அது உணவு பற்றியதல்ல.
ALSO READ:பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்
தன்னைச் சுற்றியிருக்கிற தன்னை நேசிக்கிற தான் நேசிக்கிற ஒவ்வொரு உயிரும் உணவு அருந்தியிருக்க வேண்டும் என்பதை உணவைப் பற்றிய விசாரிப்பாக மட்டும் சுருக்கி விட முடியாது. தன்னைச் சுற்றி வாழ்கிற சக உயிரினம் ஏதோ ஒரு வழியில் தமக்கு உதவுகிறது, தம்மைச் சார்ந்திருக்கிறது,தாம் சார்ந்து இருக்க வழி செய்கிறது என்கிற பிணைப்பு குறித்த உணர்வு அவ்வுயிர் சாப்பிட்டு விட்டதா என்று கேட்பதிலிருந்து துவங்குகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற உயிhpனங்கள் வளமாக இருப்பது தான் நலமாக இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாக எனக்கு நம்பிக்கையும் உணர்வும் இருக்கிறது. இம்மாதிரியான நம்பிக்கையும் உணர்வையும் வெளிப்படுத்திய பலரை பார்த்தும் இருக்கிறேன். வெளிப்படுத்தாதவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லையென்றாலும் என்னைப் போன்று நிறைய நம்பிக்கையும் உணர்வும் உள்ளவர்களாகவே தோன்றுகிறது. சிறுவயதில் விளையாடும் குழந்தைகளுக்கு வெறுங் கையில் உணவைப் பிசைந்து அம்மாவிற்கு, அப்பாவிற்கு, மாமாவிற்கு,தாத்தாவிற்கு, நாய்க்குட்டிக்கு, நிலாவிற்கு, மரத்திற்கு, செடிக்கு, காக்காவிற்கு, தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வளமையான பழக்கங்களை வழக்கப்படுத்தும் சமூக விளையாட்டுக்கள் இன்றும் இருக்கின்றன. வெளியூரில் இருக்கும் குடும்பத் தலைவர் தன் வீட்டில் உள்ளோரோடு பேசும்போது நாய்க்குட்டி சாப்பிட்டு விட்டதா என்பதை மறக்காமல் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.அறிமுகம் இல்லாத என்னோடு தொடர்பு இல்லாத மனிதர்கள் கூட மேற்கண்ட குணம் கொண்டவர்களாக இருக்கும் அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கும். இந்தியா போன்றதொரு விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையில் தன்னைச் சுற்றியிருக்கிற அனைத்து உயிரினங்களும் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை உள்ள மனிதர்களை வெளிப்படையாக பார்க்க முடியும். உலகம் முழுவதும் இருக்கிற விவசாயம் சார்ந்த ஒவ்வொரு மனிதரும் கூட இத்தகைய குணம் கொண்டவராக இருப்பர் என்றே எனக்குத் தோன்றுகிறது.விவசாயத்துறை அல்லாத பல்வேறு துறை சார்ந்தவர்களும் உணவு உட்கொள்வதைப் பற்றி விசாரிப்பது விவசாய முறையில் இருந்து வரும் நலவிசாரிப்பின் தொடர்ச்சியே ஆகும்.
ALSO READ:உணவில் உயர்வு தாழ்வு
உணவை சக உயிரின் நலம் குறித்து கேட்டுக் கொள்வதற்கான காரணமாக புரிந்து கொள்வதே எனக்குச் சரியாகப் படுகிறது. ஒரு மனிதன் உட்கொள்ளும் உணவு அதன் தன்மை அதன் உள்ளிருக்கும் தனிமங்கள், புரதங்கள், கனிமங்கள், சத்துக்கள் என்பது பற்றி வளர்ந்து வரும் விஞ்ஞானம் நுணுகி நுணுகி ஆய்வு செய்யும். விஞ்ஞானம் உணவை உட்கொள்ளும் முறையை உடல் நலத்தோடு சுருக்கிப் பார்க்கிற பிழையால் இது நிகழ்கிறது. ஒரு மனிதருக்கு என்ன சுவை வளம் தரும், எவ்வளவு புரொட்டீன் பயன்படும் எத்தனை கலோரி விட்டமின் தேவை என்று மட்டும் பார்ப்பது ஒரு வாகனத்தில் பெட்ரோல் அளவையும் மைலேஜ் அளவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதைப் போல முடடாள்;தனமானது. தற்காலத்தில் உணவு பற்றிய விசாரிப்புகள் எல்லாமும் ஒப்பீட்டு முறையாகவே இருப்பது நிறைவானதாக இல்லை.
ALSO READ:உணர்வும் உணவும்
உணவு பற்றிய விசாரிப்புகள் ஒப்பீட்டு முறையாக இருப்பது என்பது என்ன உணவு எலும்பை வளமாக்கும், என்ன உணவு வேகமாக வளரச் செய்யும், எதை தவிர்த்தால் முகத்தில் பருக்கள் வராது என்றவாறு ஒவ்வொரு பண்டத்தையும் நீங்கள் பொருத்திப் பார்ப்பது நடக்கிறது. இது தனிநபர் தேர்வு என்றாலும் கூட நீங்கள் தேர்வு செய்ததை சரியென நம்பி உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக்குவது பொருத்தமில்லாதது. எம் பிள்ளைகளுக்கு என்ன உணவு பிடிக்கும் என்று சமைத்துப் பரிமாறிய தாய்மார்களை பிள்ளைகளுக்குப் பிடித்தது பற்றி கவலையில்லாமல் சத்தானதை கொடுப்பதை மட்டும் போதுமானது என்கிற வறண்ட மனோபாவத்தை ஆரோக்கியத்தின் பெயரால் அறிவியல் விளம்பரங்கள் வாயிலாக செய்து கொண்டே இருக்கின்றன. நவீன தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு உரிய சரியான உணவு எது என்பதை தொலைக்காட்சி விளம்பரங்களில் இருந்தே முடிவு செய்து கொள்கின்றனர். உணவென்பது பிறர் மீது இருக்கிற அன்பையும், நலம் சார்ந்த விருப்பத்தையும் பிறர் பொருட்டு தருகிற பார்வையும் உறுதிப்படுத்துவதற்கான பொருள், மேலும் உணவு தன்னளவில் உடல்நலத்தை பேணுதற்கு உதவினாலும் அதைப் பரிமாறும் உணர்வையும் இணைத்துக் கொள்கிறது. உணர்வு நிறைவைப் பெற்ற நிலையில் பாரிமாறப்படும் ஒவ்வொரு பொருளும் அதிக பலனளிக்கும் பண்டமாக மாறிக் கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணவுக்கும் பரிமாறும் உணர்விற்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள நவீன அறிவியல் சார்ந்தவர்கள் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர். நல்ல இசையில், தண்ணீரில், உணவுப்பொருட்களில் செடிகளில், கொடிகளில் ஆய்வு மேற்கொண்டு இவற்றின் வளர்ச்சி மாறுபாட்டை பரிசோதிக்கின்றனர். இந்த பரிசோதனையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆதாரங்களை தொகுத்து பார்க்கிற போது வரும் வியப்பை பதிவு செய்வதும் நிகழ்ந்து வருகிறது. உணவிற்க்கும் உணர்வுக்குமிடையே உள்ள தொடர்பு எத்தகைய வளமையானது, செறிவானது என்ற புரிதல் ஏற்படும்போது வருகிற வியப்புத் தருணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.உணவென்பது வெறுமனே உடல்நலம் சார்ந்ததல்ல. நீங்கள் உணவு குறித்து யோசிப்பீர்களானால் உணவிற்குள் உணர்வை கண்டுகொள்ள முடியும்.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
No comments:
Post a Comment