நோயற்ற வாழ்வு
![]() |
Disease-free life |
மருத்துவம் ஒரு தனி மனிதனுக்கு உடல் நலம் சார்ந்து, உளவியல் நலம் சார்ந்து அவர் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவி செய்கிறது. ஒரு மருத்துவமானது தனது கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மனிதனின் அடிப்படை நலம் நோக்கி வகுத்து வைத்திருக்கிறது. ஒரு மருத்துவத்தினுடைய நூல்களை வாசிக்கும் போது எனது பார்வையில் அந்த நூல்கள் தனிமனிதனின் நலம் குறித்தும், அம்மனிதன் தற்கால சூழலிலிருந்து சமூக தடைகளிலிருந்து தமது வாழ்வை மகிழ்வாக உயர்வாக வாழ்வதற்கு உதவி செய்வதாக வரையறுக்கப்படுகிறது. மேலும் ஒரு மனிதன் தான் விரும்புகிற வாழ்வை வாழ்கிற நிலையில் நோய் அற்றவனாக இருக்க முடியும் என்று உளவியல் மருத்துவங்கள் பரிந்துரை செய்கின்றன. ஒரு மனிதனுக்கு விருப்பமான வாழ்க்கை முறை ,விருப்பமான வாழ்க்கை முறை மீது ஏற்படுகிற சமூக தடை, அந்த தடைகளை உடைத்துக் கொள்ள முடியாத இயலாமை, இவற்றின் மடைமாற்றப்பட்ட வேறு வடிவமாகவே நோய்கள் உருவாகின்றன என்றும் மருத்துவ உளவியல் சார்ந்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை பொருத்தமானதாகவும் இருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நோயற்ற வாழ்வு என்பது அவன் தன்னளவில் விருப்பமாக இணக்கமாக இயல்பாக வாழ்கிற போது அமையக்கூடிய நிலையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற நோய் என்பது அவன் விருப்பத்தின் பாற்பட்டு வாழ்கிற வாழ்க்கை முறையின் மீது சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிற தடைகள் சார்ந்து இருக்கிறது. மிக எளிமையான நோயிலிருந்து விடுதலை செய்வதற்கான விடுதலை ஆவதற்கான வழி, தான் விரும்புகிற வாழ்வை தனக்கு விருப்பமான வாழ்வை இணக்கமான வாழ்வை மேற்கொள்வது எப்படி என்கிற தன்மையில் அமையும் என்றால் அந்த மனிதன் தன்னளவில் நோய் இல்லாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ALSO READ: நரிகள் வடை சாப்பிடுவதில்லை
பரிந்துரைகளும் நோய்களும்
நலமான வாழ்வை உருவாக்கி கொடுப்பதற்கு சமூகம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு விருப்பம் கொள்கிற மனித மனோபாவம் இருக்கிறது. ஒரு தனிமனிதனுக்கு நலமான வாழ்வை உருவாக்கி கொடுக்கிற வாய்ப்பு சமூகத்திற்கு எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. சமூகம் இந்த வாய்ப்பின் வழியாக நலமான வாழ்வை உருவாக்கிக் கொடுக்கும் என்றால் எனக்கு மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தொடர்ந்து சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற நலமான வாழ்வு வளமான வாழ்வு நோயற்ற வாழ்விற்கான வழிமுறைகளை ஒரு தனிமனிதன் பின்பற்றி கொள்கிறபோது அதுவே அவருக்கு நோய் உருவாவதற்கு காரணமாகிறது. எந்த புரிதலும் இல்லாமல் ஒரு தத்துவத்தை ஒரு மனிதன், ஒரு மதக்கோட்பாட்டை ஒரு மனிதன் ஒரு சமூக பரிந்துரையை ஒரு மனிதன் பின்பற்றுவார் என்றால் அவர் நோய்க்கு உட்பட தயாராகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாக உடலை நலமாக்கிக் கொள்கிற அறிவும் இயந்திரத் தன்மையும் அவரது சிந்தனை ஓட்டத்திற்கு அப்பாற்பட்டு அமையப் பெற்றிருக்கிறது. அந்த மனிதன் தனது சிந்தனை ஓட்டத்தில் இருந்து அந்த உடலை இயக்க முற்படுகிறார். அந்த சிந்தனை ஓட்டத்தில் இருந்து இயக்க முற்படுகிற ஏற்படுகிற, ஏற்படுத்திக் கொள்கிற தடைகளே உடலுக்கு தொந்தரவாகவும் நோயாகவும் மாறுகிறது. சமூக வரையறை, சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிற சம்பிரதாயங்கள், கோட்பாடுகள் ஒரு தனி மனிதனின் உடல் அளவிலும் உடல் இயக்க அளவிலும் தடையாகவே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த கோட்பாடுகளும் சம்பிரதாயங்களும் சமூக தத்துவங்களும் ஒரு குழுவிற்காக உருவாக்கப்பட்ட அடிப்படையில் அவை மேம்போக்கானது. ஒரு தனிமனிதனுக்கு அவற்றைப் பயன்படுத்தும்போது தனி மனிதனுடைய உடற்கூறில் இருந்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் இருந்து சமூக தடைகளுக்கு அப்பாற்பட்டு அவர் அந்த கோட்பாடுகளை பயன்படுத்தவோ பின்பற்றுவோ வேண்டும். அவ்வாறு பின்பற்றுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அவருக்கு ஆலோசனைகளும் விழிப்புணர்வும் அவசியமாகிறது. இந்த ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மனிதனுக்கு சமூக வரையறைகள் சரியாக இருந்தாலும் கூட அவரது உடல் அளவில் முரண்பட்டதாகவே இயங்குகிறது. இதை அவர் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ கூடும். ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உடலளவில் இயற்கையோடு இயைந்து பயணிக்கிற இயங்கு தன்மை இருக்கிற போது அவருக்கு சமூகம் கொடுக்கிற நலவாழ்வு சார்ந்த எந்த பரிந்துரையும் அவசியமில்லை. எந்த பரிந்துரையும் அவருக்கு அவருடைய இயங்கு தன்மைக்கு நேரெதிராக இயங்குவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.
அக உணர்வின் மீது மருத்துவரின் பொறுப்பு
மனிதனுக்கு நோய்கள் இரண்டு விதமாக ஏற்படுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒன்று புறத்திலிருந்து பெற்றுக் கொள்கிற நோய்கள். ஒரு மனிதனுக்கு புறச் சூழலில் இருந்து ஏற்படுகிற விபத்தின் காரணமாக நோய் உருவாகக் கூடும். இவை தோற்றம் சார்ந்தது. புறச் சூழலில் இருந்து ஏற்படுகிற மாற்றத்தின் காரணமாக, சூழல் மாற்றத்தின் காரணமாக, பருவ நிலை மாற்றத்தின் காரணமாக, உடல் செய்கிற எதிர்வினைகள் கூட நவீன மருத்துவத்தில் நோய்களாக கணக்கிடப்படுகிறது. பருவநிலை மாற்றங்களையும் சூழல் மாற்றங்களையும் உடல் எதிர்கொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றுகிற செயல்பாடுகளை நோய்களாக கருதக்கூடாது என்று பாரம்பரிய மருத்துவங்கள் பதிவு செய்திருந்தாலும் கூட நவீன மருத்துவத்தினுடைய இந்த கோட்பாடுகளும் நியாயமாக சமூகத்தில் கருதப்படுகிறது. இவை புறம் சார்ந்து புறத்தின் பாற்பட்டு மனிதனுக்குள் ஏற்படுகிற நோய்களும் எதிர்வினைகளும் கலந்த வடிவமாக இருக்கின்றன. இவை எல்லாம் புறவயமான நோய்கள். மனிதனுக்குள் இருக்கிற மன ஓட்டத்தின் வடிவத்தில் உருவாகிற நோய்களும் இருக்கின்றன. இவை ஒரு மருத்துவரின் பார்வையில், ஒரு மருத்துவர் அறிந்து வைத்திருக்கவேண்டிய குறிப்புகளில் மிக முதன்மையானதாக நான் கருதுகிறேன். ஆழ்ந்த விழிப்புணர்வு உள்ள ஞானம் உள்ள மனிதனை சமூக தளத்தில் இருந்து இன்னும் நுட்பமான இயல்பான உயர்வான தலம் நோக்கி நகர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கிற நபர்கள் மனிதனை இவ்வளவு துல்லியமாக பார்ப்பதை நாம் காண முடிகிறது. ஒரு புத்தரால் மனிதனுடைய அக உணர்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய நோய்களால் பிறழ்வுகளால் நடக்கும் எதிர்வினைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இயேசு கிறிஸ்துவால் அது சாத்தியமாகிறது. ஒரு மனிதன் புறவயமாக தாக்கப்படும்போது ஏற்படுகிற எதிர் வினை யாவும் சீராக்கிக் கொள்ள கூடியது, எளிமையானது. மருத்துவ அளவிலும் மனிதனுடைய விழிப்புணர்வு அளவிலும் அக உணர்வில் ஏற்படுகிற மாற்றங்களை புரிந்து கொள்வதும் பிறழ்வுகளை எதிர்கொண்டு சீர் செய்து கொள்வதும் அவ்வளவு எளிமையானது அல்ல. ஆனால் நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவம் பற்றிய தற்காலிக குறிப்புகளும் கூட தற்காலத்தில் மனிதனினுடைய அக உணர்வு சார்ந்த பார்வையை முழுமையாக பதிவு செய்யவில்லை. ஒரு மனிதன் புறவயமாக ஏற்படுகிற நோய்கூறுகளுக்கு நோய் காரணிகளுக்கு காரணியாக கருதப்படுகிற வினைகளுக்கு எவ்வாறு எதிர் வினை புரிகிறார் என்பதை வைத்துக்கொண்டே அவருக்கு எவ்வளவு நோய் தாக்கம் இருக்கிறது என்று கணக்கிடும் முறை நடப்பில் இருக்கிறது. இது சமகாலத்தில் இருக்கிற தற்காலிக தீர்வு முறை. இது மனிதனின் ஆழமான பகுதிகளில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. இது மனிதனுக்கு எவ்வளவு உதவும் என்பது பற்றி தற்கால மருத்துவர்களுக்கும் மனிதனை ஆய்வு செய்கிற மருத்துவ ஆய்வாளர்களுக்கும் முன் இருக்கிற கேள்வியாகவும் சவாலாகவும் இருக்கிறது. பொறுப்புள்ள மருத்துவரும் மருத்துவ ஆய்வாளர்களும் மனிதனின் மீது அக்கறை கொண்டு இந்த அகம் சார்ந்து மனிதனின் உணர்வு சார்ந்து ஏற்படுகிற செய்திகளை சீராக்க வேண்டிய தேவை இருக்கிறது. மிக அவசரமாக கூட அதை கருதிக் கொள்ள வேண்டுமென்று நான் பரிந்துரைக்கிறேன். ஒரு மனிதன் புறவயமாக நோய்பட்டு இருப்பதை விடவும் அகவயமாக இருக்கிற நோய் தன்மையை சுமந்துகொண்டு இருப்பது என்பது அவரது ஆரோக்கியத்தின் மிக கனமான பகுதி. அந்த மிக கனமான பகுதியை சீர்தூக்கிப் பார்த்து இலகுவாக மாற்றும் பொறுப்பு மனிதர்களுக்கு, மனிதகுலத்தை ஆய்வு செய்பவர்களுக்கு, ஆன்மீகம் பேசுபவர்களுக்கு, இருப்பதை விடவும் ஒரு மருத்துவருக்கு அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment