Tuesday, December 8, 2020

Different dimensions of medicine - part 2 மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள்

                மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள்

www.swasthammadurai.com


    மனிதன் அன்றாடம் புழங்குகிற, வளர்ச்சிக்குறியதாக நம்புகிற எல்லா தளங்களிலும் சிந்திக்கிற வேகமும் சிந்திக்கிற சிந்தனை ஓட்டமும் அடர்த்தியாய் இருக்கிற காலத்தில் மருத்துவம் குறித்து ஒரு விரிவான சிந்தனை செய்யப்பட வேண்டும் என்பதிலேயே இந்த உரையாடல் மையம் கொண்டுள்ளது. அப்படித்தான் சிந்திக்க வேண்டும், அப்படித்தான் மருத்துவம் குறித்து மனித சமூகம் உரையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மருத்துவங்களைப் பற்றி பேசுகிற எல்லோரிடத்திலும் நான் பார்க்கிற விமர்சனத்திற்கு உரிய பகுதி, மருத்துவத்தை ஒரு அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிற பலசரக்கு சாமான் போல் கருதுகிற மனோபாவம். மருத்துவம் அப்படியானதாக இருக்கிறதா? என்றால் மருத்துவத்தின் ஆவணங்களும் மருத்துவத்தின் நூல்களும் அவ்வாறு சொல்லவில்லை. எல்லா மருத்துவ நூல்களும் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. அவை மார் மரபு சார்ந்த மருத்துவங்களாக இருந்தாலும் நவீன மருத்துவமாக இருந்தாலும் நாட்டுப்புற மருத்துவமாக இருந்தாலும் அந்த மருத்துவம் ஒரு தேவை நிமித்தமாக மனிதனை இயக்குவதாகவோ அல்லது மனிதனின் தேவைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு பலசரக்கு பொருள் போல் மருத்துவம் இருப்பதாகவோ பார்க்க முடியவில்லை

ALSO READ:மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள் மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள்



    மனிதனுக்குள் மருத்துவமானது அவனது தேவையில் இருந்து நகர்ந்து வேறொரு வேலையைச் செய்கிறது என்பதை பார்க்க முடியும், பார்க்க வேண்டும். வெறுமனே மருத்துவங்கள் ஒரு பொருள் சார்ந்த தன்மையோடு இயங்குவதில்லை. இதில் இப்போது இருக்கிற பேச வேண்டிய அவசியம் மருத்துவம் ஒரு பொருள் போல பாவிக்கப்படுகிற, மருத்துவம் ஒரு பொருள் போல நுகரப்படுகிற இடத்திற்கு வந்து சேர்வது என்பது உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக நான் பார்க்கிறேன். மனித சமூகத்திற்கு, சிந்தனை செய்கிற சமூகத்திற்கு உகந்தது அல்ல. நான் மருத்துவத்தினுடைய எந்த புனித கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடித்து மருத்துவத்தை நீங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த பரிந்துரையையும் முன்வைக்கவில்லை. மருத்துவத்தை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும்? எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம்? என்கிற விவாதத்தை மட்டும் நான் உங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று சொன்னால் சகல வியாதிகளும் உங்களிடம் இருந்து விடுபடும் என்றோ, ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தை நீங்கள் தொடர்ந்து மேற் கொள்வீர்கள் என்று சொன்னால் கொடுமையான பக்க விளைவுகளை சந்திப்பீர்கள் என்ற சாபத்தின் தன்மையிலோ இந்த உரையாடல் நிகழ்த்தப்படக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  அப்படியானது அல்ல  நமது உரையாடலின் நோக்கம். மருத்துவங்கள் எப்படி இருக்கவேண்டும்? என்று தன்னை முன்வைக்கின்றனவோ அப்படியாக இந்த சமூகம் மருத்துவத்தை பார்ப்பதில்லை என்பது தான் இந்த உரையாடலின் மையக்கரு. மரபு மருத்துவமோ, நவீன மருத்துவங்களோ மனிதனுக்குள் செய்கிற வேலை எப்படியானதாக இருக்கிறது? மனிதனுக்குள் அவை என்ன வேலை செய்ய வேண்டும்? என்று தமக்குள் சேகரித்து வைத்திருக்கின்றன. ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. அந்த மையப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையிலிருந்து தான் மருத்துவங்கள் பயன்பாட்டிற்கு வருகின்றனவா? அல்லது குறிப்பிட்ட மனநிலையிலிருந்து பிரச்சாரத்தில் இருந்து மருத்துவங்கள் பயன்பாட்டிற்கு வருகின்றனவா? என்கிற கருத்துக்களின் மீது நான் உரையாட விரும்புகிறேன். இந்த உரையாடலின் நோக்கமும் மையமும் அது ஒன்றுதான். ஏனென்றால், மருத்துவம் சந்தைக்கு  வந்திருக்கிற ஒரு பொருள் போல் பாவிக்கிற, பார்க்கப்படுகிற நிலை சிந்தனை செய்கிற சமூகத்திற்கு அழகானதாக இல்லை என்பதை விடவும் ஆபத்தானதாக மாறிவிடக்கூடாது என்கிற தன்மையில் இந்த உரையாடலை நாம் செய்கிறோம்

ALSO READ:ஒவ்வொரு மருத்துவத்திற்கும் மனிதனை குணப்படுத்தும் வல்லமை இருக்கிறது

    ஆக, ஒரு மருத்துவத்தை மனிதர்கள் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? என்பது நிதானம், மன அமைதி, முடிவுகள் இல்லாமல் பார்க்கிற பார்வை, உள்ளிட்ட ஒருமை நிலையிலிருந்து தான் மருத்துவத்தின் மீதான  செம்மையான பார்வையை மனித சமூகம் பெற்றுக் கொள்ள முடியும். அச்சம் கொள்கிற ஒருவரால் அன்பு செலுத்த முடியாது என்று ஒரு கிழக்கத்திய மறை வாக்கியம் இருக்கிறது. அச்சம் கொள்கிற ஒருவரால் அன்பு செய்ய முடியாது என்று சொல்லப்படுகிற மறை வாக்கியம் பயப்படுகிறவர்கள் சாமி கும்பிட முடியாது. சாமியை நம்ப முடியாது என்கிற இறை நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட வாக்கியம். இது ஒரு நாட்டுப்புற வழக்கு மொழி. அப்பாவுக்கு பயப்படுகிற ஒரு குழந்தை அப்பாவிடம் அன்பாக இருக்க முடியாது என்பது அந்த நாட்டுப்புற வழக்கு மொழியின் சுருக்கமான பொருள். இந்த நாட்டுப்புற வழக்கு மொழி இறைநம்பிக்கை மீதும் இறைவனிடம் பயப்பட வேண்டியதில்லை. இறைவனிடம் பயப்படக்கூடாது இறைவனும் பக்தனும் மிக அன்பாக உறவாடி கொள்ள முடியும், உரையாடிக் கொள்ள முடியும் என்கிற கோணத்தில் இந்த நாட்டுப்புற வழக்கு மொழி இருக்கிறது. இந்த நாட்டுப்புற வழக்கு மொழிக்குள் இருக்கிற செய்தியை நிறுவனமாக்கப்பட்ட மதங்களிலிருந்து பார்த்தோமென்றால் அது பொருந்தாது. நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் இறைவனைக் கண்டு பயப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பயம்தான் ஞானத்தின் துவக்கம் என்று கிறிஸ்தவ மதம் தனது மறைநூலில் பதிவு செய்கிறது. எனவே நிறுவனமாக்கப்பட்ட மத மறைநூல்களில் சொல்லப்படுகிற பொருள்களிலிருந்து இந்த நாட்டுப்புற வழக்கு மொழியை நாம் புரிந்துகொள்ள முடியாது

ALSO READ:மருத்துவம் மனிதனை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதில்லை 

    தென் தமிழகப் பகுதியில் நாட்டுப்புற வாழ்க்கைமுறையை மேற்கொள்கிற இறைநம்பிக்கையாளர்கள் மத்தியில் இன்றும் நம்மால் காண முடிகிற காட்சி ஒன்று இருக்கிறது. ஒரு கிராமத்து கற்சிலை முன்பு சடங்குகள் செய்து கொண்டிருக்கிற போது திடீரென்று ஒருவருக்கு இறையருள் கிடைக்கும். உடனே அவர் இரண்டு கண்களையும் இறுக்க மூடிக் கொண்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு சத்தமாக, விகாரமாக பேசத் துவங்குவார். அந்தப் பேச்சில் அந்த ஊரில் இருக்கிற யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவர் பேசுவார். மிக எளிமையான அந்த கிராமத்து மக்களின் மொழியிலேயே அந்த உரையாடல் நடக்கும். அந்த கிராமத்து மக்கள் அந்த சாமியோடு நேரடியாக பேசுவார்கள். "இந்த வருஷம்   எனக்கு ஏன் எனக்கு படையல் செய்யல?" என்று அந்த கடவுள் கேட்கிறபோது, மிகுந்த கோபத்தோடு அங்கிருக்கிற விவசாயி "மழ கிளுகிளுனு பேஞ்சுருச்சாக்கும்" என்று சாமியை பார்த்து கேட்கிற மொழி உரையாடலை கிராமத்து நாட்டுப்புற வழக்கில் பார்க்க முடியும். இது அன்பின் வெளிப்பாடாக இந்த வார்த்தை -  "அச்சப்படுகிற  ஒருவரால் அன்பு செலுத்த முடியாது" என்கிற நாட்டுப்புற வழக்கு இறை மார்க்கத்தில் சொல்லப்பட்ட செய்தி. இந்த செய்தி, இந்த வழக்கு மொழி  ஒரு இறைமை செய்திக்காக வழங்கப்பட்டாலும் கூட இதற்குள் இருக்கிற பொருள் மருத்துவத்திற்கும் பொருத்தமானதாகவே இருப்பதை  நான் பார்க்கிறேன். ஒருவர் பயப்படுகிற மனநிலையிலிருந்து ஒரு நல்ல மருத்துவத்தை பெற்றுக்கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் முடியாது என்பது எனது பார்வை. யார் ஒருவரும் பயப்படுகிற மனநிலையோடு மருத்துவத்தை பார்ப்பார் என்றால் மருத்துவத்தோடு ஏதாவது தேடுவார் என்றால் அவரால் மருத்துவத்தினுடைய உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள முடியாது. அது பயம் உருவாக்குகிற ஒரு அவசரத்தில் இருந்தே அந்த பயணம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த பயத்தை சுற்றியே அந்த மருத்துவத்தின் பயன்பாடுகள் வரையறுக்கப்படும். இது பயம் என்ற ஒற்றை உணர்வு மட்டுமின்றி, இறுக்குமாகவோ, தயக்கமாகவோ,  கவலையாகவோ, கோபமாகவோ இன்னபிற எல்லாம் எதிர்மறை உணர்வுகளும் கூட ஒரு துல்லியமான மருத்துவப் பண்பை கண்டுபிடிப்பதற்கு தடையாகவே இருக்கின்றன என்று நான் பார்க்கிறேன். சமூகம் முழுவதும் இந்த தடை ஏற்படுத்தக்கூடிய பண்புகள் விரவிக்கிடக்கின்றன

ALSO READ:HOME REMEDIES - வீட்டு வைத்தியம்

    ஒரு மனிதனுக்குள் ஏராளமான கோபக் கூறுகளும் ஒரு மனிதனுக்குள் கவலைக் கூறுகளும் சங்கடமான மன ஓட்டங்களும் நிரம்பி வழிகின்ற போது அப்படியான மனிதர்கள் இந்த சமூகம் முழுவதும் நிறைந்திருக்கும் போது இந்த மனிதர்களால் நல்லதொரு மருத்துவத்தை கண்டுபிடிப்பது என்பது வாய்ப்பில்லாமல் போகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் எவ்வாறு இந்த நிலையை மாற்றுவது? என்கிற பொருண்மையோடு நாம் இந்த உரையாடலை செய்து கொண்டிருக்கிறோம். மருத்துவம் என்பது மனிதர்களுக்கு பயன்படும் பொருள் போல அல்லாமல் அவை மனிதனுக்குள் இருக்கிற ஒரு ஆழமான உயிர்ப்பு நிலையை, உயிர் நிலையை நகர்த்தி விட ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முயற்சியோடு இயங்குகிற ஒரு கலை. மருத்துவம் என்பது மனிதர்களை, ஒரு மனிதனை ஏதாவது ஒற்றைப் புள்ளியில் சுருக்கி விடுகிற சுருக்கமான வரையறை அல்ல. மனிதனுக்குள் இருக்கிற மன அளவிலும் குண அளவிலும் பொருள் அளவிலும் பொருள் கடந்த அளவிலும் மனிதனைச் சுற்றி இயங்குகிற எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் பேரன்போடு இருக்கிற ஒரு கலை மருத்துவக்கலை. இந்த மருத்துவக் கலையினுடைய மெய்ப்பொருளை மருத்துவக்கலைக்குள் இருக்கிற மனிதன் பாற்பட்ட அக்கறையை, மருத்துவக்கலை இதுவரை மனிதக் கூட்டத்திற்கு செய்து வந்திருக்கிற அளப்பரிய பணிகளை, அந்தப் பணி நிமித்தமாக கிடைக்கப் பெற்ற அனுபவங்களை, அந்த அனுபவங்களை தொகுத்து வைத்திருக்கிற ஆவணங்களை உள்ளடக்கி பார்க்கிறபோது மருத்துவம் மிகப்பெரிய பங்களிப்பை மனித சமூகத்திற்கு செய்திருக்கிறது என்பதை நாம் மிக எளிமையாக உணர்ந்து கொள்ள முடியும்.மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியும். இத்தகைய எளிமையான உணர்தலையும் மறுப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளுதலையும் இந்த மனித சமூகம் முழுவதும் பார்க்கவும் பரிசீலிக்கவும் வேண்டும் என்கிற தன்மையில் இருந்து இந்த உரையாடல் நிகழ்த்தப்படுகிறது.

                                                     தொடரும்....


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...