ஜான் ஹோல்ட் - கல்வி - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
குழந்தைகள் என்ற உடனேயே அது பள்ளிக்கூடம் சார்பாக இயங்குகிற ஒரு இயந்திரமாக நாம் பார்க்கிறோமா? என்பது முதன்மையான கேள்வி. இந்தப் பார்வையிலிருந்து நாம் விடுபடுவதற்கு ஜான் ஹோல்ட் போன்ற சிலர் முதலடியை எடுத்து வைக்கிறார்கள். இதற்கு முன்பு சமூகத்தால் ஜான் ஹோல்ட் அளவிற்கு போற்றப்பட்ட மதிப்பு மிகுந்த ஒரு கல்வியாளர் மரியம் மாண்டிசோரி அம்மையார். அம்மையாரின் கருத்துக்களை நாம் பார்க்கிறபோது பள்ளிக்கூடங்களில் இருக்கக்கூடிய அழுத்தங்கள் குறைப்பதற்கு அம்மையார் வேலை செய்திருக்கிறார்கள் என்று பள்ளிக்கூடங்கள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மையாரினுடைய புத்தகங்களை வாசிக்கிற போதும் அம்மையாரினுடைய செயல்பாட்டுக் கல்வி முறையை நாம் செய்து பார்க்கிற போதும் அது மீண்டும் பள்ளிக்கூடத்தினுடைய வேறொரு சாயலோடு குழந்தையை தயாரிப்பதற்கான வடிவங்களிலேயே எனக்கு கையில் கிடைத்திருக்கிறது. உண்மையிலேயே மாண்டிசோரி அம்மையார் இத்தகைய தன்மையோடு அவற்றை உருவாக்கினார்களா? என்று தீர்க்கமாக என்னால் காண முடியவில்லை. ஆனால் அவர் பேசிய செய்திகளை இன்று இந்த சமூகத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? என்று பார்க்கிறபோது அது பள்ளிக்கூடங்களுக்குள் குழந்தைகளை இலகுவாக படிக்க வைப்பதற்கு, பள்ளிக்கூடங்களில் குழந்தையை இலகுவாக பொருத்துவதற்கு என்ன செய்யலாம்? என்ற சமன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN - EDUCATION - INTRODUCTION - PART 1
இந்த சமன்பாடுகளின் வழியாக கடுமையான செயல்பாட்டு முறை கொண்ட ஒரு கல்வியாளரின் பரிந்துரையும் இலகுவான செயல்பாடு முறை கொண்ட ஒரு கல்வியாளரினுடைய பரிந்துரைகளுமாக மரியம் மாண்டிசோரி அவர்களுடைய சமன்பாடுகளை ஒப்பிட வேண்டியிருக்கிறது. ஆனாலும் மரியம் மாண்டிசோரி அம்மையாரினுடைய கல்வி சார்ந்த சிந்தனைகளை கல்விக்கு வெளியில் குழந்தை நலம் குறித்து பேசுவோர்களை பார்க்கிறபோது அவர்களோடு உரையாடுகிற போது குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று மாண்டிசோரி அம்மையார் அக்கறைப்படுகிறார் என்று அவருடைய கருத்துக்களை பதிவு செய்கின்றனர். நம்மோடு உரையாடும்போது வெளிப்படுத்துகின்றனர். உண்மையிலேயே மாண்டிசோரி அம்மையாரினுடைய கருத்துக்கள் ஆரம்பத்தில் இத்தகைய தன்மையோடு இருந்ததாகவும் நாம் அவர் பதிவுகளில் பார்க்க முடிகிறது.
ஆனாலும் அந்தப் பதிவுகள் வழியாக குழந்தைகள் இயல்பாக ஒன்றை கற்றுக் கொள்ளட்டுமே என்று அவர் ஆதங்கப்படுவதும் கற்றுக்கொள்ள வேண்டும், இயல்பாகவே அந்த கற்றல் நிகழ வேண்டும் என்று அவர் விரும்புவதும் அவரது எழுத்துக்களின் வழியாக நாம் பார்க்க முடிகிறது. பின்பு அதை உருவாக்குகிறார். அந்த உருவாக்கத்தின் விளைவுகளை பள்ளிக்கூடங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. பள்ளிக்கூடங்களின் கைகளுக்கு அம்மையாரின் கருத்துக்கள் வந்தவுடன் மீண்டும் தேர்ச்சி விகிதத்தையும் குழந்தையினுடைய செயல்பாட்டு வழியாக கற்றல் வேகத்தையும் அதிகமாக்குவதற்கு அம்மையாரினுடைய கருத்துக்கள் பயன்படுத்தப்படுகிற எதார்த்தத்தை நாம் பார்க்கிறோம்.
ALSO READ: குழந்தையின் மொழி
அரவிந்தோ பள்ளிக்கூடங்கள் இந்திய சமூகத்தில் ஒரு மாற்று விசாலமான பார்வையை கொண்டிருக்கிற பள்ளிக்கூடங்களாக இருக்கின்றன. இந்தப் பள்ளிக் கூடங்களுக்குள் இருக்கிற கல்விமுறைகள் அரவிந்தர் கல்வியைக் குறித்து பேசுகிறபோது அரவிந்தரினுடைய கல்விச் சிந்தனைகளில் நாம் பார்க்கிற போது ஆன்மீகத்தை மையப்படுத்திய குழந்தைகளினுடைய உயிர்ப்பு நிலையை மையப்படுத்திய ஒன்றைக் குழந்தைகள் புதிதாக படித்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை மேலோட்டமாகவும் ஆழமாக ஒரு குழந்தை தன்னளவில் தன்னியல்பாக இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை அவர் தன் வாய்மொழி வழியாக, எழுத்துக்களின் வழியாக, பிரசங்கத்தின் வழியாக வெளிப்படுத்துகிறார். இந்த வெளிப்பாடுகளில் அவர் ஒவ்வொன்றையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குறார். பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிற கற்றல் முறை, பள்ளிக்கூடங்களில் நினைவாற்றல் சார்ந்து இயங்குகிற கல்விமுறை இவை எல்லாமும் கூட குழந்தைகளை சோர்வுக்கு உள்ளாக்குகின்றன என்று விமர்சிக்கிறார் அரவிந்தர்.
இந்த அரவிந்தரினுடைய கல்விமுறையை பின்னாளில் அவர் காலத்திற்குப் பிறகு கல்விக்கூடங்கள், நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்ட பிறகு அரவிந்தரின் கல்விமுறையும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு உரிய குழந்தையாக மாற்றுவதற்கும் அல்லது சமூகத்தில் வெற்றியாளராக மாற்றுவதற்கான கல்வி முறையாகவும் கையில் எடுத்துக் கொள்கிற நிகழ்வை நாம் பார்க்க முடிகிறது. இன்னும் உலகப்புகழ்பெற்ற 1950-60களில் ஆழமான தத்துவ உரையாடலை உலகம் முழுவதும் வேறு வேறு தளங்களில் செய்து பார்த்த ஜே.கிருஷ்ணமூர்த்தியினுடைய கல்வி பரிந்துரை கவனத்துக்குரியதாக இருக்கிறது. கல்வி பரிந்துரையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி மிகத்துல்லியமான சில செய்திகளை தொட்டுப் பேசுகிறார். அவரது உரையாடலின் வழியாக மனிதனினுடைய மனம் எவ்வளவு சிக்கலாக இருக்கிறது, சிக்கலில்லாத மனதை உருவாக்குவது அல்லது மனதினுடைய சிக்கலை முழுவதுமாக கலைத்துப் போடுவது, மனம் கடந்து மனிதனினுடைய உயிர்ப்பு நிலையை பேசுவது என்கிற எல்லா நிலைகளிலும் அவரது பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார்.
ALSO READ:குழந்தை(CHILD)
கல்விக்குள்ளும் கல்விசாலைக்குள்ளும் மனிதர்களைப் பொருத்த வேண்டும் என்று ஒரு உரையாடல் தொடங்குகிற போது கிருஷ்ணமூர்த்தியினுடைய பரிந்துரை என்பது அமைப்புகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் எவ்வாறு இருக்கிறான் என்பதை கண்டுபிடிப்பது முதன்மையானது. ஒரு மனிதனினுடைய ஆழமான அமைதியான பகுதியில் அவன் பயணிக்கிற போது எந்த ஒன்றையும் எளிமையாக கற்றுக் கொள்கிற, உள்வாங்கிக் கொள்கிற திறன் படைத்தவராக அந்த மனிதன் மாற முடியும் என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு மனிதனினுடைய உள்ளுணர்வை, அக வளர்ச்சியை அழுத்தமாகப் பதிவு செய்கிறார், பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் கல்வி குறித்து கிருஷ்ணமூர்த்தியினுடைய கல்வி அமைப்பு குறித்து மேற்கொண்டு செயல்படுபவர்கள் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடங்களில் மாணவர்களை மாணவர்களாக தயார் செய்கிற நிலையை இன்று பார்க்கிறோம்.
இந்த மாற்றுக்கல்வி, அகம் சார்ந்த கல்வி
இந்த கல்விக்குள் குழந்தைகளை இணைக்கிறபோது இந்த கல்விக்கூடங்கள் இரண்டு வேலையை செய்கின்றன.
ஒன்று அவற்றை பெரும் மதிப்புமிக்கதாக பொருளாதார தாக்கத்தோடு முன்வைக்கின்றன. அதிக கட்டணமும்
நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது என்ற தன்மையில் பள்ளிக்கூடங்களை, நிறுவனங்களை மாணவர்கள்
முன்வைக்கின்றனர். இதற்கான பெற்றோர்கள் இதற்கு வாய்ப்பிருக்கிற பெற்றோர்கள் குழந்தைகளை
அத்தகைய பள்ளிக்கூடங்களில் சேர்க்கிற தன்மையை நாம் பார்க்க முடிகிறது. இந்தநிலையில்
கல்வியாளர்களினுடைய பார்வை என்பது குழந்தைகளுக்குள் இருக்கிற இயங்கு முறையை எவ்வாறு
பார்க்கிறது? அந்த இயங்கு முறைகள் எவ்வாறு இயங்க வேண்டும்? என்று தீர்மானிக்கப்படுகிறது
என்றெல்லாம் நாம் குழந்தைகள் பற்றி குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற கல்விப் பரிந்துரைகள்
பற்றி பேசிப் பார்க்க வேண்டுமென்று இந்த உரையாடலை நான் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment