வீட்டு வழி பாடசாலை
![]() |
HOME SCHOOLING |
குழந்தையின் கற்றல் திறன் குறித்தும் கற்பிக்கும் திறன் குறித்தும் பேசுகிறபோது நான் யோசிக்கிற கல்வி முறை என்பது வீட்டு வழி கல்வி. HOME SCHOOLING என்று சமூகம் கணக்கிட்டு வைத்திருக்கிற வீட்டு முறை கல்வி அல்ல. இது நுட்பமான வேறுபாடுகளை உள்ளடக்கியது. HOME SCHOOLING என்பது வீட்டிலிருந்து படிப்பதாக பொருள் கொள்ளப்பட்டு குழந்தைக்கு பரிந்துரை செய்யப்படுகிற நவீனகால கல்வி முறை தன்மையோடு இதைப் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். என்னை பொருத்தவரை HOME SCHOOLING என்பது நேரடியாக அந்த சொல்லின் பொருளில் இருந்தே துவங்குவது. வீட்டிற்குள் பள்ளிக்கூடம், வீட்டிற்குள் பாடசாலை.
ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
வீட்டிற்குள் பாடசாலை என்றால் அந்த வீட்டில் இருக்கிற ஒவ்வொருவரும் மாணவர்தான். அந்த வீட்டில் வயது முதிர்ந்த ஒருவரும் அந்த வீட்டில் பிறந்து மூன்று மாதங்களே ஆன நாய்க்குட்டியும் கூட எனது பரிந்துரை ஹோம் ஸ்கூலில் மாணவர் தான். வயது முதிர்ந்த ஒருவரிடமிருந்து ஒரு குழந்தை ஒரு பாடத்தை ஒரு அனுபவத்தை கற்றுக்கொள்ளவேண்டும், கற்றுக்கொள்ள முடியும். ஒரு நாய் குட்டியை இயற்கை வாழ்க்கை முறையை வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கற்றுக்கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் பார்க்கிறேன். அந்தவகையில் வழக்கத்தில் இருக்கிற வீட்டுமுறை பாடசாலை தன்மையை விடவும் முறையை விடவும் நான் முன்வைக்கிற வீட்டு பாடசாலை என்பது இன்றைய குழந்தைகளுக்கு கற்பவருக்கு மட்டுமல்லாமல் யாவருக்கும் முக்கியமானதாக கருதிக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிற்குள் பாடசாலை இருக்கிறது என்றால் ஒரு வீட்டிற்குள் கற்கும் முறை நிகழ்கிறது என்றால் அந்த வீட்டில் இருக்கிற ஐந்து உறுப்பினர்களோ ஆறு உறுப்பினர்களோ அனைவரும் அந்தப் பாடசாலையில் பாடம் படிப்பவர்கள் ஆக மாற வேண்டும்.
ALSO READ:குழந்தை(CHILD)
ஒரு நேரத்தில் ஒருவர் கற்றுக் கொடுப்பவராகவும் பிறர் கல்வி பெறுபவராகவும் இருக்கலாம். இன்னொரு நேரத்தில் இன்னொருவர் கற்றுக் கொடுப்பவராகவும் இன்னொருவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொடுப்பவராகவும் பிறர் அனுபவங்களைப் பெற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் தமது அனுபவங்களை பகிர்ந்து அளிக்கும் ஆசிரியர்களாகவும் பிறரின் அனுபவங்களை படைப்பாற்றலை பிறரது அக உலக சாதனைகளை பெற்றுக் கொள்கிற மாணவர்களாகவும் மாறிக் கொள்கிற பாடத்திட்டம் தான் நான் பார்க்கிற HOME SCHOOLING METHODOLOGY. இது மிக அவசியமானதாக நான் கருதுகிறேன்.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு நடத்தப்படுகிற பாடத்திட்டங்கள் இந்த சமூகம் வைத்திருக்கிற சமூகத்திற்கு எது பயன்பாடு என்று சமூகம் விரும்புகிற தன்மைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மிக உன்னதமான வெற்றியாளர் கூட இந்த சமூகத்தினுடைய வெற்றி இலக்கை தொடுவதிலிருந்தே அடையாளம் காணப்படுகிறார். இந்த சமூகம் வைத்திருக்கிற வெற்றி இலக்கு கடந்து ஒரு மனிதனுக்குள் ஒரு குழந்தைக்குள் இருக்கிற சொந்த படைப்பு திறனை உள அமைதியை பெற்றுக்கொண்ட இயற்கை சார்ந்த அனுபவங்களை பிறருக்கு பகிர்ந்து அளிக்கவும் அக்கறை கொள்ளவுமான தன்மையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த HOME SCHOOLING முறையை நான் பார்க்கிறேன். இது சமூக வெற்றியிலிருந்து நேர் எதிரானது.
ALSO READ:குழந்தையின் மொழி
வழக்கமாய் இருக்கிற வீட்டு வழி கல்வி முறை என்பது பள்ளிக்கூடங்கள் தீர்மானித்து வைத்திருக்கிற பாடத்திட்டங்களை அப்படியே ஒரு அறைக்குள் ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் தன்மையில் அமைந்திருக்கிறது. நான் பரிந்துரைக்கிற ஹோம் ஸ்கூலிங் என்பது அப்படிப்பட்டது அல்ல. இதில் யாவரும் ஆசிரியர்கள் யாவரும் மாணவர்கள். இதுவரை சமூகம் வைத்திருக்கிற கற்றலுக்குரிய எல்லா விழுமியங்களையும் எல்லா சமன்பாடுகளையும் எல்லா சம்பிரதாயங்களையும் களைத்துவிட்டு யாவரும் ஆசிரியராகவும் மாணவராகவும் மாற்றிக் கொள்ளக்கூடிய வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துகிற பாடசாலை. இன்றைய கல்வி முறை முழுக்க முழுக்க போட்டியிடுபவர்களை தயார் செய்து இருப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து போட்டிபோடும் மனோநிலையில் மாணவர்களை தயார் படுத்துகிற ஆயத்தம் செய்கிற முயற்சியில் முதன்மையில் இருப்பது கல்விசாலைகள்.
ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை
போட்டியாளராக இருப்பதற்கு எவரொருவரும் இந்த உலகில் வருவதில்லை என்று கிழக்கத்திய தத்துவங்கள் முன்வைக்கின்ற அம்சத்தோடு நான் முழுவதுமாக உடன்படுகிறேன். எந்த குழந்தையும் போட்டி போடுவதற்காக இந்த உலகத்தில் வரவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கே உரிய அழகையும் தனக்கே உரிய வியப்பான அனுபவங்களையும் அனுபவிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இருக்கிற தகுதியோடு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய முயற்சியோடு இந்த உலகத்தில் நுழைகின்றன. இத்தகைய குழந்தையின் மனோபாவத்தில் இருக்கும் வெகுளித்தனங்களை அப்படியே பரவலாக்கவும் அந்த வெகுளித்தனத்தில் வெளியிடப்படுகின்ற படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் யாவரும் பெற்றுக்கொள்ளவும் இந்த வீட்டு வழி பாடசாலை உதவி செய்யும். இன்னும் அழுத்தமாக நான் குறிப்பிட விரும்புவது இப்படியான பாடத்திட்டங்கள் தான் கற்கும் முறைகள் தான் எதிர்காலத்தில் ஆக்கமான சமூக மனிதர்களை சமூகத்திற்கு அமைதியை உருவாக்குபவர்களை சமூகத்திற்கு ஞானத்தை பகிர்ந்து கொடுப்பவர்களை உருவாக்கும். உருவாவதற்கு உதவிசெய்யும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
No comments:
Post a Comment