குழந்தைக்கான கல்வி
![]() |
education for the child |
குழந்தைகளின் நலம் குறித்து
இந்த சமூகம் நிறைய திட்டங்களை
வகுத்து வைத்திருக்கிறது. ஒரு குழந்தை எவ்வாறெல்லாம்
இருக்கவேண்டும், எவ்வாறெல்லாம் இருக்கக்கூடாது என்பதாக அந்தக் குழந்தைக்கு
ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த சமூகம் ஏற்பாடு
செய்து கொண்டே இருக்கிறது. இத்தகைய
குழந்தைகளுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் உள்ளடக்கிய திட்டங்களே
பாடத்திட்டங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. தற்காலத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற கல்வி போதனை என்பது
ஒரு குழந்தை எவ்வாறு வளரவேண்டும்?
என்று அந்தக் குழந்தையை சுற்றி
இருக்கிற பெற்றோரும் அந்தக் குழந்தை
வழிபடுகிற சமயக் கோட்பாடுகளும் அந்தக் குழந்தை சார்ந்திருக்கிற தேசிய அரசியலமைப்பும்
அந்தக் குழந்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பளிக்கிற சமூக சார்புடைய நிறுவனங்களும் தீர்மானிக்கின்றன.
ஒரு கல்வி என்பது அப்படிப்பட்டதாக இப்போது இருக்கிறது.
ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை
உண்மையிலேயே கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு, கல்வி
கற்பிக்கப்பட வேண்டியதாக இருப்பதில்லை. கற்றுக்கொள்ளும் என்கிற வார்த்தைக்குள் இருக்கிற
நுட்பமான பொருள் இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று எவற்றிலிருந்தாவது கற்றுக்கொள்வது,
எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொள்வது என்ற வகையிலான கற்றுக்கொள்ளும் தன்மை. இன்னொன்று
வழிகாட்டுதலின் அடிப்படையில் சமன்பாடுகளையும் வாய்ப்பாடுகளையும் மறை இலக்கியங்களையும்
பரிந்துரையின்படி கற்றுக்கொள்வது. இந்த இரு வேறு பொருள்களும் இரு வேறு தன்மைகளும் கற்றுக்கொள்ளலைப்
பொருத்தவரை கற்றுக் கொள்வோருக்கு இணக்கமானதாக
இருப்பதில்லை. கற்றுக் கொள்பவர் குழந்தையாகவோ, பதின்பருவ வயது உடையவராகவோ இன்னும் அதிக
வயதுள்ளவராகக் கூட இருக்கலாம். கற்றுக் கொள்ளல் என்பது அவர்களின்
படைப்பாற்றலை வெளிப்படுத்தும் முகத்தோடு, வெளிப்படுத்துவதற்காக தனது கலைத்திறனை படைப்புத்திறனை
பிறருக்கு புரிகிற வரையில் பிறருக்கு புரிகிற தன்மையில் மாற்றி பகிர்ந்து அளிப்பதற்கான
ஒரு முயற்சியின் அடிப்படையில் கற்றல் என்பது நிகழவேண்டும்.
ALSO READ:குழந்தை(CHILD)
ஒரு குழந்தை தனக்கே உரிய வெகுளித்தனத்தோடு இயற்கை
சார்ந்து பிறக்கிறது. இயற்கை வழங்கியிருக்கிற நுட்பங்களை இயல்பாகவே கொண்டிருக்கிறது.
அந்தக் குழந்தைக்கும் இயற்கைக்குமாக இருக்கிற இணைவில் அந்தக்குழந்தை புரிந்து கொள்கிற,
புதிதாக படைக்கிற தன்னைச் சுற்றி இருக்கிற இந்த உலகத்திற்கு இயற்கைக்கு தான் கண்டுகொண்டுள்ளவற்றை
விளக்கி சொல்வதற்காக விளக்கு முறையும் விளக்கு முறைக்கான ஒரு கருவியும் மொழியின் வடிவத்திலோ
பொருளின் வடிவத்திலோ தேவைப்படுகிறது. தனது உள்ளார்ந்த படைப்பாற்றலை அக உலகில் அந்தக்
குழந்தையை பெற்றுக் கொண்ட அனுபவங்களை அந்தக் குழந்தையின் விருப்பத்தின் பொருட்டு தன்னைச்
சுற்றி இருப்பவரின் மீது உள்ள அக்கறையின் பொருட்டு
அந்தக் குழந்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று விரும்பினால் அப்போது அந்தக் குழந்தைக்கு
மொழி என்பது கற்றுக்கொள்ளும் தேவையாக மாறுகிறது. இப்படித்தான் அந்த குழந்தைக்கு மொழியின்
தேவை இருக்கிறது.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
ஆனால் சமூக அளவில் நடப்பு முறையில் நடப்பு காலத்தில்
இத்தகைய நுட்பமான பார்வை கற்றுக் கொடுப்பவரிடம் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்படுகிற
ஆய்வாளர்களிடம் இந்தக் கல்விமுறையை தீர்மானிக்கிற கல்வியாளர்களிடம் என்று எந்த தளத்திலும்
காணமுடியவில்லை. ஆனால் அனைவரின் நோக்கமும் அந்தக் குழந்தையின் இயல்பாக இருக்கிற படைப்புத்
திறனை அந்தக் குழந்தைக்குள் ஒளிந்திருக்கிற ஆற்றலை வெளிக் கொண்டுவரும் முயற்சி என்கிற
விருப்பத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படியான முயற்சியும் இயக்கமும் அதன்
பாற்பட்டு நிகழ்த்தப்படுகிற அணுகுமுறைகளும் அந்தக்குழந்தையின் மெய்யான படைப்புத்திறனை
உள்ளாற்றலை வெளியில் கொண்டுவருவதற்கு எந்த
விதத்திலும் உதவி செய்வதில்லை, செய்ததில்லை.
ALSO READ:குழந்தையின் மொழி
ஆக, ஒரு குழந்தைக்கு கல்வி என்பது தொடர்பு சாதனமாக
உருவகப்படுத்துகிற போது அந்தக் குழந்தை தனக்குள் மலர்ந்து இருக்கிற மலர்ச்சியை, தனக்குள்
விரவி இருக்கிற வாசனையை, அக்கறையின் பாற்பட்டு தனக்கு பக்கத்தில் இருக்கிற ஒருவருக்கு
பகிர்ந்து அளிப்பதற்காக தேவைப்படுகிற ஒரு பாலத்தை கற்றுக் கொள்ளல் மூலம் உருவாக்கிக்
கொள்கிறது உருவாக்கிக் கொள்ள வேண்டும். உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தில்
இருந்து தன் படைப்பாற்றலை இயற்கை தனக்கு வாய்த்த அளித்திருக்கிற ஏகாந்தத்தை வாசனையை
பகிர்ந்து கொடுக்கிற வெகுளித்தனத்தோடு அந்த குழந்தைக்கு மொழியோ உரையாடலோ தொடர்பு கொள்ளும் ஏதோ ஒரு கருவியோ தேவைப்படுகிறது.
அந்த தேவைதான் அந்தக் குழந்தையின் கற்றலுக்கு காரணமாகிறது. இந்தத் தன்மையில் கற்றல்
முறை என்பது அணுகப்பட வேண்டும். இந்தத் தன்மையில் அணுகப்படாத கற்றல் முறைகள் இந்தத்
தன்மையில் விசாரிக்கப்படாத கற்கும் வழிகாட்டுதல்களும் பாடத்திட்டங்களும் அந்த குழந்தைக்கு
உதவி செய்வதில் வெற்றி பெற முடியாது.
ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்
இன்றைக்கு உலகம் முழுவதும் ஏராளமான கல்விமுறைகள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கப்பட்டிருக்கிற கல்விமுறைகள் அனைத்தும் ஒரு குழந்தையை
மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை விடவும் உருவாக்கப்பட்டிருக்கிற சமூகத்தை
மையப்படுத்தி கல்விமுறை வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த சமூகம் எவற்றையெல்லாம் வெற்றி
என்று கருதுகிறதோ அவற்றை கல்வி முறைக்குள் வைத்திருக்கிறது. அந்த சமூகம் எவற்றையெல்லாம்
நன்மை என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் கல்வி முறைக்குள் வைத்திருக்கிறது. அந்த சமூகம்
எவற்றையெல்லாம் முன்மாதிரி என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் கல்வி முறைக்குள் வைத்திருக்கிறது.
இப்படித் தான் சமூகம் எவற்றை நன்மை என்றும் தீமை என்றும் கருதுகிறதோ அவற்றை கல்வி முறைக்குள்
நன்மையாகவும் தீமையாகவும் வடித்து வைத்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
உண்மையிலேயே ஒரு பெரும்பான்மையான மனிதக் கூட்டம்
நம்புகிற பின்பற்றுகிற சமூகம் என்கிற தன்மையிலிருந்து பெற்றுக் கொள்கிற சரியும் தவறும்
இந்த இயற்கைக்கு, இயற்கை நியதிக்கு உட்பட்டு சரியாகவோ தவறாகவோ இருக்கிறதா? என்று நாம்
தேடிப் பார்க்கவேண்டும் உரையாடி பார்க்கவேண்டும். சமூகம் முன்வைக்கிற சரிகளும் தவறுகளும்
சமூகம் முன்வைக்கிற மெய்மைகளும் பொய்மைகளும் இயற்கையினுடைய அளவுகோலின்படி எப்போதும்
பொருந்துவதாக இருப்பதில்லை. இயற்கை அதற்கே உரிய தனிப்பட்ட நியதிகளை வைத்து இயங்குகிறது.
அந்த நியதிக்கு உட்பட்டு சமூக நியதிகள் பொறுத்தமாகவும் மாறுபாடாகவும் இருக்கக்கூடும்.
அதே நேரத்தில் சமூகமும் இயற்கையும் இணைந்து பயணிக்கிற, சமூகமும் இயற்கையும் நேர்கோட்டில்
நிற்கிற எல்லாவித சாத்தியங்களும் கற்பனையாகவே இருக்கிறது. இப்படியான கற்பிதங்களின்
அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிற கல்வித்திட்டம் என்பது சமூகத்தின் வெற்றி கோட்பாடுகளையும்
முன்மாதிரி கோட்பாடுகளையும் இலக்குகளையும் தீர்மானிக்கின்றன. அவை சமூகத்தை மையப்படுத்திய
குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை மையப்படுத்திய நிறுவனங்களை மையப்படுத்திய மதங்களை மையப்படுத்திய
அரசியலை மையப்படுத்திய கல்விமுறையாகவே இருக்கிறது அது குழந்தைகளை மையப்படுத்திய கல்வி
முறையாக இருக்க வேண்டும்.
ALSO READ: உணவு(food)
இயற்கையாகவே வெகுளியாக பிறந்த வெகுளியாக தன் தாயின் மார்பில் உணவருந்திய தன்னுடலை தேவையின் பொருட்டு இயக்கி வளர்ந்த ஒரு குழந்தையை மையப்படுத்திய கல்விமுறை என்பதே அந்தக் குழந்தைக்கான ஆகச் சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும். அது சமூகம் வெளியிலிருந்து கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவேளை சமூகம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று சொன்னால் எந்த சமரசமும் இல்லாமல் அந்த குழந்தையை தனக்கான கல்விமுறையை தானே தீர்மானித்துக் கொள்ளும் திறன் உடையது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment