Sunday, December 20, 2020

.CHILD HEALTH PART - 3 குழந்தைகள் நலம் பகுதி -3

                                 குழந்தைகள் நலம் பகுதி -3

www.swasthammadurai.com


    ஒரு குழந்தை நாம் பெரிய வீடு கட்ட வேண்டும் என்று தன் அப்பாவிடம் கேட்டுக்கொண்டது. அப்பா சரி என்று சொன்னார். அந்தப் பெரிய வீட்டில் அனைவருக்கும் ஒவ்வொரு தனித்தனி அறை நாம் கட்ட வேண்டும் என்று சொன்னது. அதற்கும் அப்பா சரி என்றார். அப்படியே  அந்த சுவர் ஓரத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிற எறும்பைப் பார்த்து அப்பாவிடம் அந்த எறும்பை காண்பித்து அந்த குழந்தை சொன்னது, "அப்படியே இந்த எறும்புகள் வந்து போவதற்கும் ஒரு தனி அறை கட்ட வேண்டும்" என்று, அதற்கும் அப்பா சரி என்றார். இப்படி ஒரு கதை நான் படித்திருக்கிறேன். தனக்கு ஒரு வீடு கட்டவேண்டும், தன் தந்தைக்கு ஒரு வீடு கட்ட வேண்டும், அதில் தாய்க்கும் தந்தைக்கும் சகோதர சகோதரிகளுக்கும் ஒவ்வொரு அறை வைக்க வேண்டும். அதேபோல் தன் வீட்டில் வாழ்கிற, வந்து போகிற எறும்புகளுக்கும் ஒரு அறையும் பாதையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரிவாக பார்க்கிற பார்வை குழந்தைகளுக்கு இருக்கிறது. இந்த பார்வையோடு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை குழந்தை மீது அக்கறை கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த பார்வை மிக இயல்பானது. குழந்தைகளினுடைய இந்த பார்வையை நாம் ஏன் போற்ற வேண்டும்? என்பதற்கு காரணம் இருக்கிறது. இந்தப் பார்வை ஒரு புனிதரின் பார்வை போன்றதாக நான் நினைக்கிறேன்.

ALSO READ:பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

      ஒரு தத்துவத்தில் ஒரு ஆன்மிகத்தில் ஒரு அறிவு மிகுந்த ஒரு புனிதரினுடைய ஒரு தீர்க்க தரிசனமான பார்வையாக இந்தப் பார்வையை நாம் பார்க்கவேண்டும். ஏதோ ஒரு வீதியில், மேற்குவங்க கல்கத்தா வீதியில், அங்கு இருக்கிற நோய்வாய்பட்டவர்களுக்காக, நோய்வாய்ப்பட்டவர்கள் மீது ஏற்பட்டிருக்கிற அன்பிலிருந்து நிதி திரட்டும் போது ஒரு அவமானத்தை அன்னை தெரசா சந்தித்ததாக குறிப்புகள் இருக்கின்றன. அந்த குறிப்புகளில் அன்னை தெரசா அன்பின் பொருட்டு சில செய்திகளை பதிவு செய்து வைத்திருக்கிறார். ஒருபோதும்  பேதம் கொண்டு யாவரையும் பார்க்காதீர்கள் என்று அந்த குறிப்புகளில் ஒன்று சொல்கிறது. அன்னை தெரசாவின் குறிப்பு. அன்பாக இருக்கிறவருக்கு பேதம் கொண்டு பார்க்க முடியாது என்று அன்பின் பாற்பட்டு சொல்லப்பட்ட அந்த குறிப்பு குழந்தைகள் விஷயத்தில் மிகக் கச்சிதமாக பொருந்தும் தன்மையோடு இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். எனவே குழந்தைகளை பற்றி நாம் அதிகமாக பேச வேண்டி இருக்கிறது.  இந்த உலகம் அமைதி குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிற வேளையில் இது.இந்த உலகம் வன்முறைகள் இல்லாமல் நகர்ந்து விட வேண்டும். நாளைய பொழுது பேரமைதியாக இருந்துவிட வேண்டும் என்று பார்க்கிற, தேடுகிற வேளை இது. இதற்கு  மிக எளிமையான வாழ்க்கை சாட்சியாக குழந்தைகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். பேரமைதியாக, ஒருவருக்கொருவர் அன்பாக, அனைவரும் இணக்கமாக, ஒருவரோடு ஒருவர் எந்த முரண்பாடும் இல்லாதவராக, ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொண்ட தன்மை உள்ளவராக, இதையெல்லாம் இன்று உலகம் மனிதகுலத்திற்கு வைத்திருக்கிற இலக்கு. நீங்கள் அன்பாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.  ஒருவரிடம் ஒருவர் திருடக்கூடாது. இவையெல்லாம் இன்று உலகம் மனிதனுக்கு மிக சுத்தமான மனிதனாக ஒரு மனிதன் மாற வேண்டும் என்பதற்கு தீட்டி வைத்திருக்கிற இலக்குகள்.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

     இன்றும்கூட நீங்கள் வணிக நிறுவனங்களிலோ நீங்கள் சந்திக்கிற புத்தகங்களிலோ தமிழ் புத்தகங்களில் நிறைய பார்க்கமுடிகிறது. உறவு மேம்பட என்று ஒரு பத்து பதினைந்து கட்டளைகளை வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவரோடு பேசுகிறபோது விவாதம் செய்யாதீர்கள். அன்பாக இருங்கள். அவரை விட்டுக் கொடுங்கள். உங்கள் உறவு மேம்பட, உங்களுடைய வாழ்க்கை மேம்பட, இப்படியான மனிதனுக்கு இலக்கான மனிதனுக்கு ஒரு மனிதனின் இலக்காக வாழ்வின் அமைதிக்குரிய இலக்காக  வைத்திருக்கிற ஏராளமான கட்டளைகளை இன்று மனித சமூகம் ஆங்காங்கே தொகுத்து ஒட்டி வைத்து இருக்கறது. புத்தகங்களிலும் கடைகளிலும் தனது நிறுவனங்களிலும். இத்தகைய கட்டளைகள் சொல்லப்படாமலேயே அமைதியான வாழ்க்கை முறையை தனக்குள் பொருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிற ஜீவன்களாக இருப்பது குழந்தைகள். அந்த குழந்தைகளுக்கு அன்பாக மட்டுமே இருக்க தெரியும். அந்தக் குழந்தைகளுக்கு இன்னொருவரோடு எவ்வாறு இசைந்து போவது? இணைந்து போவது என்பது தெரிந்திருக்கிறது. வெளியில் நடக்கிற ஒரு முரண்பட்ட சூழலுக்கு தான் எவ்வாறு தகவமைத்துக் கொள்வது? என்பது அந்தக் குழந்தைக்கு தெரிந்திருக்கிறது. இப்படி ஒரு மனிதன் உச்சபட்சமாக எவற்றையெல்லாம் அடைய வேண்டுமென்று  இந்த மனித சமூகம் தத்துவத்தில் ஆய்வு செய்து,  அறிவியலில் ஆய்வு செய்து, பொருளாதாரத்தில் ஆய்வு செய்து தொகுத்து கட்டளைகளாக மாற்றி வைத்திருக்கிறதோ  அத்தனை செய்திகளையும் அத்தனை கட்டளைகளையும் குழந்தைகள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதாலேயே குழந்தைகள் மரியாதைக்குரியவர்கள். அவர்களை அப்படியே நாம் பேண வேண்டும் என்று நாம் பேசுகிறோம்.

ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை

      நாம் குழந்தைகள் குறித்து பேசுவதற்கு மிகுந்த முக்கியமான, முதன்மையான காரணம் இதுதான். குழந்தைகள் அத்தகைய தன்மை உள்ளவர்கள். குழந்தைகளுக்கு திருடுவதற்கும் பொய் சொல்வதற்கும் தெரியாது.  எல்லாம் மறை நூல்களும் ஒரு மனிதன் திருடக்கூடாது என்று சொல்கிறது. எல்லா மறை நூல்களும் ஒரு மனிதன் பொய் சொல்லக்கூடாது என்று சொல்கிறது. எல்லா வேத நூல்களும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இவை மிக முக்கியமாக மனிதனினுடைய வாழ்க்கை நலமாக மாறுவதற்கு, இறைவனை அடைவதற்கு என்றுவரை மறை நூல்களும் வேத நூல்களும் தத்துவ நூல்களும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இத்தனை தத்துவ நூல்களிலும் வேத நூல்களிலும்  மனிதனின் இலக்காக, மனிதனின் அடையாளமாக, மனிதனுக்கு கிரீடமாக சொல்லப்படுகிற, எல்லா குணாம்சங்களும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே இருக்கின்றன. எனவே குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் நலம் குறித்து நாம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தத் தன்மையில் நாம் பார்க்கவேண்டும் என்று உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். நாம் இதைத்தான் பேச வேண்டி இருக்கிறது. குழந்தை பற்றி பேச வேண்டும் என்றவுடன் குழந்தைகள் எவ்வாறு ஓடுகிறார்கள். என் குழந்தை சிவப்பு நிறத்தை எப்போதும் ஏன் தேர்வு செய்கிறது? என் குழந்தை எப்போதும் இறுக்கமான ஆடைகளை ஏன் அணிந்து கொள்கிறது? என் குழந்தை எப்போதும் நகம் கடித்துக் கொண்டே இருக்கிறான். என்ன காரணம்? என் குழந்தை கணக்கில் மட்டும் அதிக மதிப்பெண் பெற வேண்டும், என் குழந்தை அறிவியலில் மட்டும் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று நமது சிந்தனையை குழந்தையினுடைய அடிப்படையைக் காணாமல் சமூகத்தோடு அவர்கள் எவ்வாறு பொருந்த வேண்டும்? என்கிற தளத்திலேயே விரையம் செய்து கொண்டிருக்கிறோம்.

ALSO READ:உணர்வும் உணவும்

     இந்த சமூகம் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, கண்டுபிடித்து, ஆய்வு செய்து, செய்து பார்த்து, ஒரு உண்மையை புரிந்து கொள்ளும். அந்த உண்மை மனிதன் அமைதியாக இருக்க வேண்டும். மனிதன் அன்பாக இருக்கவேண்டும். மனிதன் பரபரப்பு இல்லாமல் இருக்கவேண்டும். மனிதன் இசைவாக இருக்க வேண்டும். மனிதன் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற ஒரு பத்து பதினைந்து கட்டளைகளை உருவாக்கும். இந்த ஒரு நூறு ஆண்டு ஆயிரம் ஆண்டு காலம் கழித்து ஒரு ஆன்மீகவாதியும் ஒரு தீர்க்கதரிசியும் ஒரு புனிதரும் வந்து சொல்கிற இந்த பத்து கட்டளைகள் குழந்தைகள் பிறப்பிலேயே பெற்றிருக்கிறார்கள். இந்தப் பத்துக் கட்டளைகளும் 15 கட்டளைகளும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. இந்தப் பேரன்பை இந்தப் படைப்புத் திறனை குழந்தைகளுக்குள் இருக்கிற இசைவான இலகுவான குணங்களை நாம் பேணுவதும் பாதுகாப்பதும் அதை விரிவு செய்வதும் குழந்தைகள் மீது நாம் வைத்திருக்கிற அக்கறையின் அடையாளம். இந்த அக்கறையோடு குழந்தைகளை நாம் அணுக வேண்டும் என்பதற்காகவே இந்த உரையாடலை நாம் செய்து பார்க்கிறோம். இது மிக முக்கியமான உரையாடலாக நான் பார்க்கிறேன். நாம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமூகம் குழந்தைகள் பற்றி விதவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறது. சமுதாயத்தில் இருப்பவர்கள் குழந்தைகள் குறித்து என் குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்று குழந்தை பிறப்பதற்கு முன்னே கற்பனைகளும் விருப்பங்களும் அடுக்கப்பட்டு அலமாரிகளில் இருக்கின்றன. ஒரு குழந்தை நான்கு வயதில் எவ்வாறு விளையாட வேண்டும்? மூன்று வயதில் எவ்வாறு விளையாட வேண்டும்? இரண்டு வயதில் எவ்வாறு இருக்க வேண்டும்?. ஒரு வயதில், குப்புற விழும் போது, நிற்கும் பொழுது, இப்படியெல்லாம் பெற்றோர்கள் கற்பனை செய்யவேண்டும் என்று இந்த சமூகம் பெற்றோர்களை பழக்கி வைத்திருக்கிறது. அந்த பழக்கத்தின் பாற்பட்டு பெற்றோர்களும் அவ்வாறே இருக்கின்றனர். இதன் விளைவாக குழந்தைகள் தடுமாறுகிற, தடம் மாறுகிற, அழுத்தத்திற்கு உள்ளாகிற, நிறைய கதைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது ஒரு புறம் இருக்கிறது. இருக்கட்டும். ஆனால் குழந்தைகள் பற்றி என் குழந்தைக்குள் இருக்கிற ஒரு அசைவு மேன்மையானதாக தெரிகிறது. என் குழந்தை ஏதோ ஒரு விதத்தில் சிறந்த படைப்பாளியாக, சிறந்த புத்திசாலித்தனம் உள்ளவராக நான் பார்க்கிறேன் என்று பார்க்கிற, பார்க்க விரும்புகிற பெற்றோர்களுக்கான உரையாடல் இது.

                                                தொடரும்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...