வீட்டிற்குள் பாடசாலை
![]() |
home schooling |
பள்ளிக்கூட வரலாறு, கல்விக்கூடங்களுக்குள் கல்வி முறைகள் துவங்குவதற்கான தேவைகள் என்று பார்க்கிறபோது கல்வி என்பது கற்றுக் கொள்ளும் முறை சார்ந்து தன்னை பரிசீலனைக்கு உட்படுத்தி, கற்றுக் கொள்ளும் நிலை வரை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அறிவாளிகளின் வழியாக முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. கிரேக்க நாகரிக வளர்ச்சியில் சாக்ரடீஸ் போன்ற தத்துவ ஞானிகளால் சமூக தர்கங்களை மையப்படுத்திய தத்துவப் பள்ளிகள் இருந்திருக்கின்றன. அந்த தத்துவ பள்ளியில் கல்விக்குரிய தரம் என்பது விசாரணைகளாகவும் வியாக்கியானங்களாகவும் விளக்க உரைகளாகவும் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை நாம் வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது.
ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும் வளர்ச்சியும் கொண்ட கிழக்கத்திய சமூகங்களில் குருகுலக்கல்வி நடந்திருக்கிறது. இந்த குருகுல கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட நபர்கள் குறிப்பிட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு சிறப்பான பரிந்துரைகளுக்கு ஆட்பட்ட பின்பு கல்வி பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவராக இந்த கல்விமுறைகள் நடந்திருக்கின்றன. குறிப்பிடத்தகுந்த இந்த இரண்டு கல்வி முறைகள் நாகரீக வளர்ச்சியில் கல்வி வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக நான் கருதுகிறேன். இந்த கல்விமுறைகள் தத்துவமும் தர்க்கமும் மையமாகக்கொண்ட கிரேக்க கல்விமுறையும் கிரேக்க பாடசாலைகளும் அங்கு கற்ற மாணவர்களை வரலாறு முழுவதும் இன்றுவரை தத்துவ ஞானிகளாக அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)
குருகுலக் கல்வி முறையில் கற்றுக் கொண்ட நுட்பங்களும் சிந்தனா முறைகளும் பிரமிக்கத்தக்க சமூக வளர்ச்சியையும் கலைகளையும் விட்டுச் சென்றிருக்கின்றன. இப்படியானதொரு கல்விமுறை என்பது இன்றும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு உரையாடலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இராஜராஜ சோழனின் கோவில்களும் சிற்பங்களும் எத்தகைய பொறியியல் அறிவைக்கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் என்று வியந்து பேசும் பொறியியல் அறிவாளிகளை நாம் இன்று பார்க்க முடிகிறது. இன்னும் தொன்மையான நாகரிகங்களில் உருவாக்கப்பட்ட உலகளாவிய கட்டடங்களும் அணைக்கட்டுகளும் இன்றைய பொறியியல் அறிவுக்கு பிடிபடாத வகையில் அனேக நுட்பங்களையும் சிறப்புத் தன்மைகளையும் பெற்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கின்றன என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க வேண்டியிருக்கிறது.
தத்துவ பள்ளிகளை பொறுத்தவரை சாக்ரடீசும் அவருக்கு பின்னால் வந்த பள்ளி மாணவர்களும் வரலாறு முழுவதும் பெரும் தத்துவ ஞானிகளாக இருந்து வந்துள்ளனர். இவ்வாறு மனித சமூகத்திற்குள் ஒரு பெரும் வளர்ச்சியை மாற்றத்தை உருவாக்கிய கல்வி முறை என்பது ஒரு கல்விமுறை வரலாற்றை நாம் ஆய்வு செய்கிற போது அதிக கவனத்தோடு பரிசீலிக்க வேண்டிய பகுதி. என் குழந்தைக்கு வேலை வாங்கிக் கொடுக்கிற கல்விமுறை போதுமானது என்று பெற்றோர்கள் நினைப்பார்கள் என்றால் அவர்கள் குழந்தைக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களது சிந்தனை மிகுந்த வளர்ச்சி குறைவானதாகவும் இருக்கிறது என்று பார்க்க வேண்டி உள்ளது. சமூக வளர்ச்சியில் கற்கிற கல்வி முறை என்பது நுட்பமானதாகவோ இயற்பியல் சார்ந்ததாகவோ இரசாயனம் சார்ந்ததாகவோ தத்துவ அறிவாகவோ இருக்கலாம். அவை ஒரு குழந்தைக்கு அந்த குழந்தையினுடைய அக வளர்ச்சியில் இருந்து நகர்ந்து செல்லக்கூடிய சாத்தியங்களை பெற்றிருக்க வேண்டும்.
ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை
இன்று முன்வைக்கப்படுகின்ற கல்விமுறை முழுவதும் வளர்ச்சி என்பதே பொருளாதாரமாகவும் தோற்றமாகவும் ஏற்படுகிற மாற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு கல்வி முறையை தீர்மானிக்கிற சிக்கலை இந்த சமூகம் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சிக்கல் என்பது உடனடியாக விவாதிக்கப்பட வேண்டியது. உண்மையிலேயே கல்விமுறைகள் கற்கும் அவசியம், கற்பித்தலுக்கான நோக்கம் இவை அனைத்தும் ஒளிந்திருக்கிற, இவை அனைத்திற்கும் மையமாய் இருக்கிற ஒற்றைப் புள்ளி கற்பவரின் அக உலகை படைப்பாற்றலை இலகுவாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் சாத்தியங்களை உருவாக்குவது என்பது என்பதே.
கல்வி முறை பற்றி ஆய்வு செய்கிற விவாதிக்கிற ஒவ்வொரு உரையாடலிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக விவாதிக்கப்பட வேண்டிய செய்தியாக நான் விரும்புவது அந்த கல்விமுறை அந்த குழந்தைக்கும் இயற்கைக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டியதாக இருக்க வேண்டும். மேலும் ஒருவேளை அந்தக் கல்வி முறையில் அந்த குழந்தையினுடைய இயற்கை சார்பு வாழ்க்கை முறையை இயற்கை சார்ந்த இயங்கு முறையை வலியுறுத்துவதன் வழியாக கற்றுக்கொள்ளும் செய்தி என்பது தடையாக மாறும் என்றால் அந்த குழந்தைக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கிற இடைவெளியை குறைப்பதாக கல்வி முறை அமைய வேண்டும். அந்த குழந்தை எந்த சூழலில் எந்த வெப்பநிலையில் எந்த நீர்த் தன்மையில் எந்த காற்றை சுவாசித்து எந்த மலை உச்சியில் விளையாண்டு தன் வாழ்க்கை பயணத்தை நகர்த்துகிறதோ அத்தகைய நகர்வோடு அந்த கல்வி முறை என்பது வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
ALSO READ:குழந்தை(CHILD)
ஒரே மாகாணத்தில் இருக்கிற ஒரே மொழி பேசுகிற இருவேறு பகுதிகளில் வாழ்கிற குழந்தைகளுக்கு ஒற்றை கல்வி முறை என்பது பொருந்தாது என்று நான் கருதுகிறேன். தமிழகத்தில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கிற மலைவாழ் பள்ளிக்கூடங்களும் கடலுக்கு மிக அருகில் இருக்கிற கடற்கரை பள்ளிக்கூடங்களும் ஒரேவிதமான கல்வியை போதிப்பது குழந்தைகளுக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். ஆகச்சிறந்த பொருளாதார வளர்ச்சியில் இருக்கிற ஒரு நாட்டின் கல்வி முறையும் மிதமான பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கிற ஒரு நாட்டின் கல்வி முறையும் ஏழ்மையான பொருளாதார வளர்ச்சியில் தத்தளிக்கிற ஒரு நாட்டின் கல்வி முறையும் பொருளாதாரத்தின் பாற்பட்டு அளவு செய்யப்படுகிற தீர்மானிக்கப்படுகிற தீர்மான முறைகள் இன்று இருப்பதை காண முடிகிறது. இந்த தீர்மான முறைகளை களைத்துவிட்டு ஒரு குழந்தையினுடைய இயற்கை சார்பு வாழ்வியலை மையப்படுத்திய இயற்கை சார்ந்த இயக்கத்தை மையப்படுத்திய நகர்வை மையப்படுத்திய கல்வி முறையை கண்டுபிடிப்பதற்கு கல்வியாளர்கள் முன்வர வேண்டும். ஆய்வாளர்கள் முன்வர வேண்டும்.
உண்மையிலேயே கல்விக்காக நாம் அக்கறைப்படுகிறோம் என்று முயற்சிகளை மேற்கொள்ள ஏதாவது செய்தோம் என்றால் நாம் துவங்க வேண்டிய இடம் குழந்தைக்கும் இயற்கைக்குமாக இருக்கிற இடைவெளியை குறைப்பது, அந்தக் குழந்தை இயற்கையோடு இயங்குவதற்கு தனது படைப்பாற்றலையும் சிந்தனா முறையையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு விரைவாகவும் அதிகமாகவும் இருக்கும் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதுதான். அப்படியான கல்வி முறையை தீர்மானிப்பதுதான் அந்த குழந்தைக்கு கல்வி குறித்து நாம் செய்ய வேண்டிய ஏதாவது ஒன்று.
ALSO READ:குழந்தையின் மொழி
குழந்தைகள் பற்றி பேசுவதற்கும் கல்வி முறை பற்றி பேசுவதற்கும் மிக அடிப்படையான ஒரு தகுதியும் ஆர்வமும் மதிப்பீடுகளும் என்று விவாதிக்கிற போது இந்த சமூகத்தில் மிக அதிகமாக உரையாடப்படக் கூடிய பொருளாக குழந்தையினுடைய நலம் இருக்கிறதை பார்க்க முடிகிறது. ஒரு குழந்தை பற்றி யார் வேண்டுமென்றாலும் பேச முடியும் என்கிற அதிகாரத்தை இந்த சமூகம் அனைவருக்கும் வழங்கி இருக்கிறது. உண்மையிலேயே ஒரு குழந்தை குறித்து யார் வேண்டுமென்றாலும் பேச முடியும் என்பது அக்கறை சார்ந்ததாக இருக்கும் என்றால் அவற்றை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் குழந்தை மீதான அக்கறை கொண்ட ஒரு சமூகமாக பொருளாதாரத்தை மையப்படுத்தி இயங்குகிற ஒரு சமூகத்தில் வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்த சமூகம் குழந்தைகள் பற்றி பேசுவது அபத்தமானதாகவும் ஆபத்தானதாகவும் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு கல்வி முறை குறித்து இந்த சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை நலன் சாராத ஒருவர்கூட குழந்தை பற்றி குழந்தை கற்கும் முறை பற்றி தீர்மானிக்கிற பரிந்துரைகளை செய்ய முடிகிறது. இந்த சமூகம் போற்றத் தகுந்த அரசியலையோ மதத்தையோ ஆரோக்கியத்தையோ பரிந்துரைக்கிற யார் ஒருவரும் குழந்தை குறித்து குழந்தைகளின் அக உலகம் குறித்து கல்விமுறை குறித்தான ஆய்வுகள் மீது எந்த விசாரணையும் செய்யாமல் புதிய கல்வியையோ புதிய கற்கும் முறையையோ பரிந்துரைக்கிற வேலையை செய்ய முடியும். அத்தகைய சிக்கலான வாய்ப்புகளை இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவை அனைத்தும் குழந்தைகளின் நலன் குறித்து இயங்கும் என்றால் அது உரையாடலுக்கு தகுந்தது.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
ஆனாலும் சமூகம் அங்கீகரிக்கிற வெவ்வேறு தளங்களை பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளின் மீது கல்வி குறித்த பரிந்துரைகள் வழி காட்டப்படும் என்றால் கல்வி குறித்த திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் வலியுறுத்தப்படும் என்றால் அது மீண்டும் குழந்தைகளின் கற்றல் திறனில் நடைபெறுகிற வன்முறையாகவும் திணிப்பாகவுமே பார்க்கத் தோன்றுகிறது. ஒரு குழந்தை எப்படி வேண்டுமென்றாலும் கற்கட்டும் என்கிற மனோபாவம் கற்பிக்கின்ற ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒரு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கவிதை மேற்கத்திய மொழிபெயர்ப்பில் உருவான கவிதை இது. பள்ளிக்கூட சுவர்களை இடித்து விடுங்கள். பாடப்புத்தகங்களை எரித்து விடுங்கள். பாவம் குழந்தைகள் கற்கட்டும். என்று அந்தக் கவிதை முடிந்திருக்கும். இந்த கவிதையில் முழுமையாக உடன்படுகிறேன். இந்த சமூகம் கட்டி வைத்திருக்கிற பள்ளிக்கூட சுவர்களும் சுவர்களுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க பாடப்புத்தகங்களும் அவர்கள் கற்றலுக்கு எதிரானதாக இருக்கிறது என்ற தன்மையில் இருந்து ஒரு புதிய கல்வி முறை வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கப்படுகிற புதிய கல்வி முறை மீண்டும் ஒரு சுவரையும் மீண்டுமொரு அடுக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் தரும் என்றால் அந்த குழந்தை எந்த சிக்கலில் இருந்ததோ அதே சிக்கலை மீண்டும் தருவதாகவே பொருள் கொள்ளப்படும். அந்த வகையில் ஒப்பிடுவதற்கு ஏதும் இல்லாத புதிய நுட்பமான அக உலகத்தை படைப்பாற்றலை உயர்த்திப் பிடிக்கிற ஒரு கல்வி முறையை இந்த குழந்தைகளுக்கு இந்த சமூகம் வழங்க வேண்டும் என்றும் மேலும் அந்தக் கல்வி முறை அந்த குழந்தைகளை புதிய தளத்திற்கு புதிய மனிதர்களாக புதிய தலைமுறையினராக உருவாக்கும்; உருவாக்க வேண்டும் என்ற தன்மையிலும் கல்வி முறையானது சீரமைக்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்பட வேண்டும். உருவாக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment