Tuesday, November 24, 2020

The natural way of treatment followed by Gandhiji - காந்தியடிகள் பின்பற்றிய இயற்கை வழி சிகிச்சை முறை

 

                     காந்திய சிகிச்சை முறை

traditional treatment - swasthammadurai


     மரபு மருத்துவங்கள்  குறித்தான உரையாடல் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து மரபு மருத்துவங்கள் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிற செய்திகளும் மரபு மருத்துவத்தினுடைய மிக முக்கியமான பயன்பாட்டு தேவையும் இந்த உரையாடலினுடைய அடிப்படையான நோக்கமாக இருக்கிறது. மனித சமூகத்தினுடைய வளர்ச்சியில் மருத்துவம் என்பது மிகப்பெரிய பயன்பாட்டு பங்களிப்பை செய்துள்ளது. இது மனித சமூகம் நோய்களிலிருந்து விடுதலையாவதற்கும் கடுமையான கொடுமையான நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்குமான நோய் எதிர்ப்பு முயற்சிகளை செய்து புறவயமாக செய்து வைத்திருக்கிற பதிவுகளிலிருந்து மட்டும் நாம் பார்த்து விடக்கூடாது. உதாரணமாக, வரலாற்று நெடுகிலும் ஒரு சமூகத்தில், ஒரு நாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக ஒரு நோய் ஏற்பட்டு அந்த நோய் ஒரு குறிப்பிட்ட வகையான குறிகளை மனிதர்களில் வெளிப்படுத்தி ஒரு குழுவிற்கு அதிகமான காய்ச்சல், ஒரு கூட்டத்திற்கு தொடர்ந்த வயிற்றுப்போக்கு, ஒரு பகுதி மக்களுக்கு தொடர்ந்த கண் பாதிப்பு, உடல் அவயங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாறுபாடு இப்படியான ஒரு கூட்டத்திற்கு, ஒரு குழுவிற்கு, ஒரு சமூகத்திற்கு நிகழ்ந்துள்ள உடல் ரீதியான மாற்றங்களை தடுப்பதற்காக அந்த நோய் ஏற்பட்ட காலத்தில் மருத்துவம் எவ்வாறு உதவி செய்திருக்கிறது? அந்த நோய்களில் இருந்து அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு விடுதலை ஆகி இருக்கிறார்கள்? என்கிற ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு பேசுவது ஒரு பகுதி.

ALSO READ:SUICIDE(தற்கொலை)


                காலரா, வயிற்றுப்போக்கு, போலியோ போன்ற அந்த காலத்தில் மனிதனுக்கு மிகுந்த சவாலாக இருந்திருக்கக்கூடிய கொள்ளை நோய்கள் உள்ளிட்ட விதவிதமான உடல் உபாதைகளில் இருந்து அந்தக் காலத்தில் மனித சமூகத்தை பாதுகாப்பதற்காக மருத்துவங்கள் வேலை செய்திருக்கின்றன  என்ற ஆவணங்களை தொகுத்து வைத்துக் கொண்டு மட்டும் ஒரு மருத்துவத்தின் தன்மையை பேசுவது என்பது வரலாற்று அடிப்படையில் போதுமானது. தத்துவார்த்த அடிப்படையில் அந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோய்களை அதற்கு முன்பும் அதற்கு பின்பும் அந்த நோய்க்கு உதவிய மருத்துவங்கள் எவ்வாறு பார்க்கின்றன? என்பதும் அந்த காலத்தில் சமகால மருத்துவ முறைகளாக இருந்த, இருக்கின்ற மருத்துவங்கள் அதே கொள்ளை நோய்களை எவ்வாறு பார்க்கின்றன? என்பதும்  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஒரு கொள்ளை நோய்க்கு புறவயமாக ஏற்பட்டிருக்கக் கூடிய ஆரோக்கிய தாக்குதலுக்கு ஒரு மருத்துவம் தன்னளவில் எவ்வித விளக்கத்தை  வைத்திருக்கிறது? அவற்றை எவ்வாறு வெல்வது? என்பது பற்றி அந்த மருத்துவம் என்ன பரிந்துரைகளை செய்கிறது? என்பது சற்று ஆழமான உரையாடல்.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)

                அத்தகைய ஆழமான உரையாடலும் நாம் பேசுகிற மரபு மருத்துவங்கள் பற்றிய உரையாடலுக்கு அவசியமானது. நேச்சுரோபதி -  இயற்கை மருத்துவம் என்று வளர்ந்த நாடுகளில் 1940-45 காலகட்டத்தில் உருவான இயற்கையினுடைய இயல்பு தன்மையிலேயே நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற ,வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகிற  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கூட நவீன மருத்துவத்தை, கண்டுபிடிப்புகளை, பரிசோதனைகளை கணக்கில் வைத்துக் கொள்ளாமல் உடல் தன்னளவில் சரி செய்து கொள்ளக்கூடிய ஆற்றல் உடையது. உடலை புரிந்து கொள்வதன் வழியாக உடலினுடைய இயல்புகளை கண்காணிப்பதன் வழியாக, ஏற்றுக் கொள்வதன் வழியாக, உடலை அதன் போக்கில் அனுமதிப்பதன் வழியாக, உடல் தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நோய்களை சீரமைத்துக் கொள்ளும் என்கிற புரிதலில் இருந்து பார்க்கிற இயற்கை சார்ந்த, இயற்கை மருத்துவம் என்று அப்போது  அந்த மருத்துவத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இயற்கை சார்ந்த மருத்துவ முறைகள் இந்த கொள்ளை நோய்களை எவ்வாறு ஆவண படுத்துகின்றன? இந்தக் கொள்ளை நோய்களுக்கு எம்மாதிரியான விளக்கங்களை தொகுத்து வைத்திருக்கின்றன? இந்தக் கொள்ளை நோய்களிலிருந்து விடுதலையாவதற்கு எவ்வகை பரிந்துரைகளை முன் வைக்கின்றன? என்கிற தளத்திலும் நாம் மரபு மருத்துவங்களை பார்க்கவேண்டி இருக்கிறது.

                இயற்கை மருத்துவம் என்பது மனித உடல் ,உடலுக்கு இருக்கிற குணப்படுத்தும் அறிவு, அந்த அறிவை ஒத்து இயங்குகிற இயக்குகிற மன ஓட்டம், இவற்றிலிருந்து அந்த உடல் தேர்வு செய்கிற உணவு முறை ,வாழ்க்கை முறை என்று மனிதனின் மரபுசார்ந்த தன்மையிலிருந்து தனது மருத்துவ அணுகுமுறையை வைத்திருக்கிற மருத்துவம். இயற்கை மருத்துவம் இன்றளவும் கூட இந்தியா மாதிரியான ஒரு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிற நாடுகளில் முக்கியமான காலகட்டங்களில் குறிப்பாக தேசிய விடுதலை இயக்கங்கள் மேலோங்கி இருந்த காலகட்டங்களில் அந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை வகித்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான காந்திஜி இந்த இயற்கை மருத்துவத்தை தனது வாழ்வில் மிக முக்கியமான மருத்துவ உதவியாக பரிந்துரைக்கிறார். அவரது கருத்தோட்டத்தில் பார்க்கிறபோது இந்தியா என்பது  பலதரப்பட்ட மக்களின் சேர்மானம். அதிகமான மக்களும் வெவ்வேறுபட்ட இனக்குழுக்களும் வேறு வேறு வாழ்க்கை முறையை தனது பண்பாட்டுக் கூறாக வைத்திருக்கிற வேறுபட்ட பண்பாடுகளும் கலந்திருக்கிற ஒரு பரந்த பூமி இந்தியா என்று அவர் புரிந்து வைத்திருக்கிறார். அவரது புரிதல் சரியானதும் கூட. அந்தப் புரிதலின் அடிப்படையில் அவர் இந்தியாவில் இருக்கக்கூடிய மரபுகளை மாண்புகளை உடல் சார்ந்த அறிவினை போற்றவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்கிற தன்மையில் இருந்தும் அவர் இந்தியாவின் மரபுகளை, மரபு மருத்துவங்களை ஏற்றுக்கொண்டதாக ஒரு கருதுகோள் உண்டு.

ALSO READ:Will Practice Give Happiness - 2 பயிற்சியால் மகிழ்ச்சி வருமா?

                மேலும், இந்திய சமூகத்தினுடைய அரசியல், பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குகிற திட்டத்தோடு அயல்நாட்டு அரசு அமைப்பு இயங்குகிறது. வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்திய மண்ணை ஆள்கிறார்கள் .அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. அவர்களுக்கு ஒரு மருத்துவ முறை இருக்கிறது. எவ்வாறு நாம் வெளிநாட்டு மக்களினுடைய வெளிநாட்டு ஆட்சியாளர்களினுடைய அரசியலமைப்பு திட்டங்களை எதிர்க்கிறோமோ அந்த மறுப்பின் அடிப்படையிலேயே மருத்துவ முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் நாம் மறுக்கவும்  மாற்று சொல்லவும் வேண்டும் என்கிற  அடிப்படையிலும் காந்திஜி அவர்கள் இயற்கை மருத்துவத்தை தன் வாழ்நாளில் கடைபிடித்ததாக ஒரு கருதுகோள் உண்டு. அதுவும் ஏற்புடையதே. வெளிநாட்டுக்காரர்களினுடைய ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வது போல, அயல்நாட்டு மருத்துவ முறையும் எங்களுக்கு வேண்டாம் என்கிற அயல்நாட்டு எதிர்ப்புகளிலிருந்து ஒரு மருத்துவத்தை காந்தியடிகள் தீவிரமாக கடைப்பிடித்தார் என்று அவரைப் பார்க்க முடிகிறது. இது மறுப்பின் அடிப்படையில் பார்த்தால் பொருத்தமானதுதான். ஆனால் காந்தியடிகள் மறுப்பதை முதன்மைப்படுத்தாமல் இந்தியா போன்றதொரு தேசிய மக்களின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற உடலியக்க முறையை ஏற்றுக்கொள்வதும் அந்த இயக்க முறையின் பாற்பட்டு உருவாகி இருக்கிற மருத்துவங்களை செய்து பார்ப்பதும் கடைப்பிடிப்பதும் ஒரு வாழ்க்கைமுறை சார்ந்த இணக்கமான நிலை என்று தன் மருத்துவம் பற்றி எல்லா பதிவுகளிலும் குறிப்பிடுகிறார்.

                காந்தியடிகளின் ஆய்வு தொகுப்பை, அவர் வாழ்க்கை பற்றி சேகரித்து வைத்திருக்கக் கூடிய நூல்களை வாசிக்கிற போதும் அவரைப்பற்றிய ஆய்வாளர்களின் ஆய்வுரையை படிக்கிற போதும் அவரே எழுதி வைத்திருக்கிற  சுய குறிப்புகளை படிக்கிற போதும் மருத்துவம் பற்றி பேசுகிற எல்லா இடங்களிலும் அவர் மனித உடலுக்கு இணக்கமான மருத்துவ முறையை பின்பற்றுகிறார் என்று பார்க்க முடிகிறது. நீர் சிகிச்சையை பரிந்துரைக்கிறார். அவரது ஆசிரமங்களில் இருக்கிற அவரது உதவியாளர்களுக்கு அவரை பின்பற்றுவோருக்கு அவரது கொள்கையை ஏற்றுக் கொண்டோருக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்படும் என்றால் உடனடியாக அவர்களை முழுவதும் பட்டினி இருக்க வலியுறுத்துகிறார். காந்தியடிகள் எவ்வாறு பட்டினி இருக்க வேண்டும்? என்று சொல்லலாம் என்று கேட்பவர்களுக்கு காந்தியடிகள் சொல்கிற பதில் இந்திய மரபில் இருந்து பட்டினி தான் சிறந்த மருந்து என்கிற இந்திய மரபு சார்ந்த ஒரு பரிந்துரையை தருகிறார்.

ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

     இவ்வாறு ஒருவருக்கு தீவிரமான விஷக் காய்ச்சல் ஏற்பட்டால் அவருக்கு என்ன செய்வது? அவருக்கு காந்தியடிகள் பரிந்துரைக்கிற பரிந்துரை  நீர் சிகிச்சை, எளிமையான திரவ உணவு உள்ளிட்ட பரிந்துரைகள் அவருக்கு காந்தியடிகளின் கண்காணிப்பிலேயே தரப்படுகிறது. இப்படியான பதிவுகளும் மரபு மருத்துவம் குறித்த காந்தியடிகளின் பார்வையில் நாம் பார்க்கிறோம். உலக வரலாற்றில் மனித சமூகத்தினுடைய விடுதலை இயக்கங்களில் இன்றும் உலகத்திற்கு அமைதியான முறையில் ஒரு மனிதனை அணுக முடியும் என்கிற நம்பிக்கைக்கு சாட்சியாக ஒருவர் உண்டு என்றால் எந்த எதிர்க்கருத்து இருப்பவர்களுக்கும் மறுக்கமுடியாத குறியீடு காந்தியடிகள். கொள்கையில் ஆன்மீக அணுகுமுறையில் அரசியல் நிலைப்பாடுகளில் வெவ்வேறு  கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும் காந்தியடிகள் கைகொண்ட சமத்துவ முறையும் அஹிம்சா முறையும் எவர் ஒருவராலும் மறுக்க முடியாது. இனி எதிர்வரும் காலத்திலும்கூட மறுக்க முடியுமா? என்று தெரியாது என்கிற அளவிற்கு காந்தியடிகளின் தத்துவ கோட்பாடுகளும் அணுகு முறைகளும் மிக முக்கியமானதாக இந்த உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

                அரசியல் தன்மையிலிருந்து பார்க்கிறோம் என்றால் இதன் ஆழம் நாம் உணர்ந்து கொள்ள முடியும் அதன் முக்கியத்துவம் தெரிந்துகொள்ள முடியும். மேற்கு நாடுகளில் கருப்பு வெள்ளை இனப் பிரச்சினைகள் ஏற்படுகிற போதும் சரி, ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு பாராட்டப்படுகிறது என்ற போதும் சரி, காந்தி வாழ்ந்த காலத்திலேயே ஆப்பிரிக்க நாடுகளில் தொழிலாளர்களுக்கும் வேறு மக்களுக்கும் தன் நாட்டு மக்களுக்கும் வேறுபாடுகள் பாராட்டப்படுகிறது என்று பார்க்கிற போதும் சரி, ஒவ்வொரு காலகட்டங்களிலும் காந்தியடிகளின் அணுகுமுறை பொருத்தமானதாகவும் வெற்றிக்குறியதாகவும் இருந்திருக்கிறது. இது அரசியல் தளத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று நமக்கு இருக்கிற விமர்சனம், அல்லது எனக்கு இருக்கிற விருப்பம் இன்று உலகம் முழுவதும் அமைதியான சூழலில் இந்த உலகத்தை நாம் உருவாக்க வேண்டும் என்று பாடுபடுகிற விரும்புகிற ஒவ்வொருவரும் அவர்கள் உலகத்தை பாதுகாப்பதற்கு பத்து பதினைந்து கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள், தீர்மானிக்கிறார்கள் என்று சொன்னால் அந்த பத்து கோட்பாடுகளில் 15 கோட்பாடுகளில் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும் காந்தியடிகளின் அகிம்சையும் சமத்துவமும் இருக்கும். மீதிக் கோட்பாடுகளை தற்காலத்திற்கு தகுந்தாற்போல சேர்த்துக்கொள்ள முடியும். அவ்வளவு தவிர்க்கமுடியாத இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட அன்பை பற்றி பேசவேண்டும், அரசியல் வரலாற்றில் அகிம்சை பற்றி பேசவேண்டும் என்று ஆய்வு செய்து பார்ப்பார்கள் என்றால் அதில் காந்தியடிகளுடைய  அரசியல் தளத்தில் அன்பு, அகிம்சை, பொய் சொல்லாமை, மாமிசம் உண்ணாமை இப்படி பல்வேறு அவரது வாழ்க்கை முறைக்குள் நிகழ்ந்த தொகுப்புகளை அவர்கள் பார்க்க முடியும்.

ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)

                காந்தியடிகளினுடைய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ளாமல் அரசியல் தளத்தில் ஒரு புதிய கொள்கையை ,அமைதியை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாத அளவிற்கு காந்தியடிகள் அரசியல் களத்தில் பணியாற்றி இருக்கிறார் என்பது ஒரு புறம். இத்தகைய அரசியல் அறிவும் அணுகுமுறையும் கொண்ட மனிதன் தனது வாழ்வில் கடைப்பிடித்த ஒரு மருத்துவம் இயற்கை சார்ந்த மரபு சார்ந்த மருத்துவம்.

                                                                                                                            தொடரும்....

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...